Friday, December 1, 2023

வசந்த காலம் வருமோ?-28

 வசந்த காலம் வருமோ?-28

By N Krishnamurthy 

 அடுத்த நாள் சுப்புலக்ஷ்மி, விசுவநாத சர்மாவுக்கு போன் செய்து"நாங்கள் சுப்புடு மாமாவை பாக்கணம். அவருடைய  நம்பர் கொஞ்சம் கொடுக்க முடியுமா" என்று கேட்டாள்.  "என்கிட்ட அவர் நம்பர் இருக்கும்மா . ஆனா நான் அவர்கிட்ட , உனக்கு  அதை  கொடுக்கலாமான்னு கேட்டுட்டு கொடுக்குறேன்" என்றார் அவர்.

"சரி சார். அப்படியே செய்யுங்கோ" என்றாள் சுப்புலக்ஷ்மி.

அரை மணி போனதும் விசுவநாத சர்மா சுப்புலக்ஷ்மிக்கு போன் பண்ணினார். "சுப்புடு சார் கிட்ட நான் பேசிட்டேன்.உங்க கிட்ட நம்பர் குடுக்கலாம்னு சொல்றார். நீங்க போன் பண்றதுன்னா இன்னிக்கு  மத்தியானம் ரெண்டு மணிக்கு மேல பண்ண சொல்றார்" என்று சொல்லி சுப்புடு சாரின் நெம்பரை கொடுத்தார்.

"சரி சார்.ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் சுப்புலக்ஷ்மி.


மதியம் 2:30 மணிக்கு சுப்புலக்ஷ்மி, சுப்புடு சாரின் நம்பருக்கு போன் அடித்தாள். நான்கைந்து ரிங் போனதும் போன் எடுக்கப்பட்டது.

" சுப்புடு ஹியர்.  நீங்க யாரு பேசறது" என்றார். ",நமஸ்காரம் மாமா.போன ஞாயித்துக்கெழம  ம்ருதுளான்னு  பொண்ணு பாடினா இல்லையா,அவளோடு  குரு பேசறேன்.என் பேர் சுப்புலக்ஷ்மி" என்றாள் சுப்புலக்ஷ்மி. அதைக் கேட்ட சுப்புடு "அப்படியா அம்மா. என்ன வேணும் சொல்லு" என்றார். "ஒண்ணும்  இல்ல மாமா. ம்ருதுளா அவ அம்மா, நான்  எல்லாம் உங்கள பாக்க வரலாம்னு பாக்கறோம்" என்றாள்.

"நான் என்னம்மா பெரிய மந்திரியா? பிரசிடெண்ட் ஆப் இந்தியாவா? என்ன போய் பார்க்க வரேள்" என்றார்.

" இல்ல மாமா. அந்த பொண்ணு உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணணும்னு பாக்கறாள்" என்றாள் சுப்புலக்ஷ்மி.

 "அதுக்கு என்னம்மா. அப்படியே ஆகட்டும். ஒண்ணு  பண்ணுங்க. வர  ஞாயித்து கெழமை நாரத கான  சபாவல ஒரு பஜனை கச்சேரி இருக்கு. நான் தான் அங்க ஹார்மோனிய வாசிக்க போறேன். கச்சேரி சரியா 6 மணிக்கு ஆரம்பிக்கிறது. நீங்க அஞ்சு, அஞ்சு காலுக்காக வந்தூட்டேள்னா ,கிரீன் ரூம்ல உட்கார்ந்து பேசிடலாம்" என்றார்.

 "சரி மாமா .அப்படியே பண்றோம்" என்றாள் சுப்புலக்ஷ்மி.

பின்பு அவள் மைதிலிக்கு போன் செய்து விஷயத்தை கூறினாள். இதைக் கேட்ட மைதிலி மிகவும் சந்தோஷமடைந்தாள். நடந்ததை எல்லாம் அவள் ம்ருதுளாவிடம் கூறினாள். ம்ருதுளா மைதிலியிடம் "நேக்கு அவர பாக்கணும்னு ஆசையா இருக்கும்மா. அவர் நெறைய டிப்ஸ் கொடுப்பார்னு. நெனைக்கறேன் அதெயெல்லாம் எடுத்ததுண்டு  நான் இன்னும் கொஞ்சம் மியூசிக்கை இம்ப்ரூவ் பண்ணலாம்னு நெனைக்கிறேன்" என்றாள்.

 "சரி, அப்போ ஞாயித்து கிழமை போயிடலாம்" என்றாள் மைதிலி.

ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணிக்கு ஆட்டோ பிடித்து மைதிலியும்,ம்ருதுளாவும் சுப்புலக்ஷ்மியின் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு சுப்புலட்சுமி ரெடியாக இருந்தாள். அவளையும் அழைத்துக் கொண்டு, மூவரும் நாரத கான சபா சென்ற போது மணி ஐந்து அடிக்க ஐந்து நிமிடம் இருந்தது. இவர்கள் க்ரீன் ரூம்  உள்ளே  சென்றதும் அங்கே ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார் சுப்புடு. இவர்களை  பார்த்தவுடன் சுப்புடு "வாங்கோ" என்று கூறிவிட்டு, அங்கிருந்த பணியாளிடம் "மூணு சேரை போட்டூடு. அப்படியே கேன்டீன்ல நாலு காபி ஆர்டர் பண்ணிடு. அதுல ஒண்ணு  நேக்கு ஸ்ட்ராங்" என்றார். பின்பு அவர் அவர்களைப்பார்த்து "இந்த பொண்ண கச்சேரில பாத்திருக்கேன். இதுல யார் சுப்புலக்ஷ்மி"என்று கேட்டார். 

சுப்புலக்ஷ்மி"நான் தான் மாமா அது" என்றாள். பிறகு அவள் மைதிலியை காண்பித்து "இது ம்ருதுளாவோட அம்மா  மைதிலி. இவா கூட சங்கீதம் கத்துண்டிருக்கா" என்று கூறினாள். "அப்படியாம்மா. ரொம்ப சந்தோஷம்" என்று கூறினார் சுப்புடு. பின்பு ம்ருதுளா எழுந்து சுப்புடு சாரின் கால்களில் விழுந்தாள். " ஸ்ரேயசா இரும்மா" என்று கூறியவர்" உசந்த சங்கீதம் பாடற நீ .அத அப்படியே கண்டினியூ பண்ணு" என்று சொன்னார். இதைக் கேட்டு சுப்புலக்ஷ்மி "உங்க விமர்சனத்தை கல்கியில் பார்த்தோம் மாமா. அதுக்கு நன்றி சொல்லணும்னு நாங்கெல்லாம்  வந்திருக்கோம்" என்றாள்.

 "இதுக்கு எதுக்குமா நன்றி சொல்லணும். இவ நல்லா பாடினா அதனால நண்ணா  பாடினான்னு சொன்னேன். சரியா பாடலைன்னா சரியா பாடலைன்னு சொல்லி இருக்க போறேன்" என்று கூறினார்.

ம்ருதுளா சுப்புடு சாரிடம்  " மாமா என்னோட  சங்கீதத்தை இம்ப்ரூவ் பண்ணிக்கிறதுக்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்கோ"என்றாள். 

" எங்கிட்ட என்னமா டிப்ஸ் இருக்கு" எனக்கூறிய சுப்புடு சார் "ஒண்ணே  ஒண்ணு மட்டும்  ஞாபகம் வச்சுக்கோ.சங்கீதம்றது தெய்வம் சம்பந்தப்பட்டது. தெய்வீகம் இல்லாம சங்கீதம் இல்ல. தியாகையரே சொல்லி இருக்கார் "சங்கீத ஞானமு பக்தி வினான்னு". எப்ப நீ சங்கீதம் தெய்வீகம்னு உணர்ரயோ, அப்பவே உனக்கு ஒரு பயம் வந்துடும். நீயே ஒழுங்கா பாட ஆரம்பிச்சுடுவ. இப்பவே நீ நல்லா பாடற.எம்.எஸ், டி.கே.பி எம்.எல். வி பாடறதெல்லாம் கேளு. அதே பாணில பாடணம்ன்னு முயற்சி பண்ணாத .உன் சொந்த பாணியே நல்லா இருக்கு. அதுலே நீ பாடணும். எப்பவும்  சுருதி சுத்தம் வேணும். தெலுங்கு ,கன்னடமும் கூட கொஞ்சம் கத்துக்கோ. தெலுங்கு, கன்னட சாகித்தியம் பாடும்போது வார்த்தைகளில் பின்னம் இல்லாமல் பாடணும். எனக்கு என்னமோ நீ இன்னும் கொஞ்ச நாள்ல சங்கீத உலகத்தை ஒரு ரவுண்டு கட்டுவேன்னு  தோணறது" என்றார். இதைக் கேட்ட ம்ருதுளா "ரொம்ப சந்தோஷம், மாமா" என்றாள்.

சுப்புடு அவர்களிடம் "இன்னும் கொஞ்ச நேரத்துல பஜனை ஆரம்பிக்க போறது. உங்களுக்கு இஷ்டம் இருந்தால் கேட்டூட்டு போலாம். எல்லாமே பொம்மனாட்டிகளா இருக்கேள்.வீட்டுக்கு டயத்துல போக வேண்டி இருக்கும். அதனால கொஞ்சமா கேட்டுட்டு கிளம்புங்கோ" என்றார். "அப்படியே பண்றோம் மாமா" என்றாள் மைதிலி. அதற்குள் காபி வந்து விட்டது. 'எடுத்துக்கோங்க " என்று அவர்கள் மூவருக்கும் காபியை கொடுக்க வைத்தார் சுப்புடு அவர்கள். தானும் காபியை எடுத்துக்கொண்டார். அந்த மாபெரும் சங்கீத விமர்சகரை பார்த்து பேசியதில் அந்த மூவருக்கும் பெரும் ஆத்ம திருப்தி கிடைத்தது.

No comments:

Post a Comment