Friday, December 1, 2023

வசந்த காலம் வருமோ?-29

 வசந்த காலம் வருமோ?-29

By N Krishnamurthy 

ஒரு நாள் ரங்கநாயகியை 

போனில் கூப்பிட்டு கோமளா, சுப்புடு கல்கியில் ம்ருதுளாவின் பாட்டை விமர்சனம் செய்திருப்பதை கூறினாள். ஏற்கனவே அதை படித்திருந்த ரங்கநாயகி, படிக்காத மாதிரி, கோமளாவிடம்" அப்படியாம்மா. என்ன எழுதியிருக்கார்" என்றாள். கோமளா விஷயத்தை சொன்னதும் "சரிம்மா.அவர் அன்னிக்கு ஏதோ நல்ல மூடில் இருந்திருப்போல் இருக்கிறது" என்று கூறி " ம்ருதுளாவிற்கு என் பாராட்டை தெரிவி " என்றாள். கோமளா" அத உன் வாயாலே உன் மருமா கிட்ட சொல்ல கூடாதோ " என்று கூறி, ம்ருதுளாவை கூப்பிட்டு, அத்த பேசணமாம் என்று போனை கொடுத்தாள்.


" சொல்லுங்க அத்த" என்ற ம்ருதுளாவிடம் ரங்கநாயகி," கச்சேரி நண்ணா யிருந்ததாமே.சுப்புடு சார் கூட பாராட்டி எழுதியிருந்தாராமே.ரொம்ப சந்தோஷமா இருக்குடி" என்று கூறி , தனக்கும் ராகம் தெரியும் என்று காட்டிக்கொள்ள வேண்டி ஆமாம்.நீ ஏன் லலிதாவ பாடின.கரகரபிரியா பாடியிருக்கலாமோன்னோ.அதல பாட்டு ஏதும் பாடம் பண்ணலயோ " என்று கேட்டாள்.

"இல்ல அத்தை. பாட்டு டீச்சர் தான் லலிதா பாடினா நண்ணா இருக்கும்னு சொன்னா.அடுத்த கச்சேரில கரகரபிரியா பாடறேன்" என்று கூறினாள். அதற்கு ரங்கநாயகி "யாரு அந்த சுப்புலக்ஷ்மியா? தோ பார் ம்ருது. அவ சொல்றதெல்லாத்தையும் கேட்டுக்கணம்னு அவசியமில்ல. சிலத நம்பளோ சொயமா செய்யணம். அப்போதான் நீ பெரிய பாடகியாக முடியும்" என்று அட்வைசை வாரி வழங்கினாள். ம்ருதுளா அவளிடம் "சரி அத்த. அக்கா எப்படி இருக்கா. அக்கா கிட்ட பேசலாமா" என்று கேட்க அதற்கு ரங்கநாயகி "அவ படிச்சிண்டிருக்கா. அப்றமா பேச சொல்றேன்" என்றாள்.

அந்த வாரத்தில் வாரத்தில் ஒரு நாள் மாலை, கிருஷ்ணகான சபா செகரெட்ரி சபேசன் சுப்புலஷ்மிக்கு போன் செய்து, டிசம்பர் 24 அல்லது 25 தேதிகளில் ம்ருதுளாவுக்கு 4:30 - 6:30 கச்சேரி பாட சௌகர்யபடுமா என்று கேட்டார்.

ம்ருதுளாவை கேட்டுவிட்டு பதில் சொல்வதாக சுப்புலஷ்மி அவருக்கு பதிலளித்தாள்.

பின்னர் சுப்புலஷ்மி மைதிலி வீட்டிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னதும், இரண்டு நாளும் ஓ.கே என்றாள் மைதிலி. சுப்புலஷ்மி அவளிடம் டிசம்பர் 25 க்ருஸ்த்மஸ். அன்று லீவாதலால் நல்ல கூட்டம் வரும். நல்ல ரீச் கிடைக்கும் என்று எடுத்துச்சொன்னதும், டிசம்பர் 25 அன்றே வைத்துக்கொள்ளலாம் என்றாள் மைதிலி.

சுப்புலஷ்மி சபேசனுக்கு போன் செய்து தேதியை கன்பர்ம் பண்ணிணாள்.

நடுவில் இரண்டு நாட்கள் சுப்புலஷ்மியின் வீட்டிற்கு சென்று பிராக்டீஸ் செய்தாள் ம்ருதுளா. அத்துடன் சாங் செலக்ஷனை பற்றி சுப்புலஷ்மி,ராதிகா,ம்ருதுளா ஆகிய மூவரும் விவாதித்தார்கள். ம்யூசிக் அகாடமியில் பாடிய எந்த பாட்டும் கிருஷ்ணகான சபா கச்சேரியில் பாடக்கூடாது என்பதில் மூவரும் உறுதியாயிருந்தனர்.

ஓரு வழியாக இரண்டு மணி நேரம் கச்சேரியில் பாடுமளவுக்கு பாடல்களை தெரிவு செய்தனர்.

டிசம்பர் இருபத்தைந்து அன்று இரண்டு ஆட்டோக்களில் ம்ருதுதுளா,சுப்பு லக்ஷ்மி,மைதிலி,சாரங்கன் கிருஷ்ணகான சபாவிற்கு மாலை மூன்றறை மணிக்கு போய் சேர்ந்தனர்.

சக்ரவத்திக்கு சிறிது உடல் நிலை சரியில்லாததால் கோமளாவும், சக்ரவர்த்தியும் போக முடியவில்லை.

பாலக்காடு வைத்தா ம்ருதங்கமும், திருவாருர் ஸ்ரீதரன் வயலினும்,மடிப்பாக்கம் ராமன் கஞ்சிராவும் ஏற்பாடாயிருந்தது.

நாலறை மணிக்கு திரை விலகியவுடன் கச்சேரி ஆரம்பித்தது. மேடையின் மேலிருந்த சுப்புலக்ஷ்மி முதல் வரிசையில் இருந்த அமெரிக்கா ராஜேஸ்வரியை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்தாள். அவள் அருகிலிருந்த வாலிபன் அவளுடைய பையனாக இருக்கவேண்டும் என அனுமானித்தாள்.

'வாதாபி கணபதிம் பஜே' வில் தொடங்கி, கோபல கிருஷ்ண பாரதியாரின் "காண வேண்டாமோ"வை பாடி, தேவ காந்தாரியில், தியாகரராஜ கீர்த்தனையான "க்ஷீர சாகர சயனா"வை பாடினாள். கல்யாணியில் "பஜரேரே மானச பாலாம்பிகவை" மெய்ன் ராகமாக எடுத்து பாட , அதை அடுத்து தனி ஆவர்த்தனம் நடந்தது.

பின்னர் ஹரிகாம்போதியில் "தினமணி வம்ச திலக லாவண்ய" வை பாடினாள். பின்னர் சாரங்கா ராகத்தில், பாபநாசம் சிவனின் "ஞான சபையில் தில்லை கானம் தன்னில் நின்றாடும் ஆனந்த நடராஜனே"வை சிறு ஸ்வரங்களுடன் பாடி,அதை அடுத்து, தஞ்சாவூர் சங்கர ஐயரின்"ரஞ்சனி மாலா"வை பாடினாள். அன்று செவ்வாய்கிழமை ஆதலால் தீக்ஷதரின் "அங்காரகம் ஆஸ்ரயாம் அஹம்" பாடி கச்சேரியை நிறைவு செய்தாள். 

சபையிலுள்ளோர் எழுந்து நின்று கைதட்டினர்.

ம்யூசிக் அகேடமி கச்சேரிக்கு வந்த சிலர், எதிர் பார்ப்புடன் இந்த கச்சேரிக்கும் வந்திருந்து,வெகுவாக ரசித்தனர். புதிதாக வந்தவர்கள், இந்த பெண் கச்சேரியை தொடர்ந்து கேட்க வேண்டுமென முடிவெடுக்குமளவுக்கு ம்ருதுளா பாடினாள்.

No comments:

Post a Comment