Monday, December 25, 2023

வசந்தகாலம் வருமோ?-51

 வசந்தகாலம் வருமோ?-51

By N Krishnamurthy 

கல்யாண நாள் நெருங்கிக் கொண்டு வந்தது. நடுவில் ஒரு முறை பத்மநாபனும், சாரங்கனும் கல்யாண மண்டபத்திற்கு சென்று பார்த்துவிட்டு வந்தார்கள். உறவினர்கள் தங்குவதற்காக மண்டபத்துக்கு அருகே உள்ள ஒரு லாட்ஜில் பத்து ரூம்கள் புக் செய்தார் பத்மநாதன்.

சமையலுக்கு கேட்டரிங் கான்ட்ராக்ட் ஏற்பாடு செய்திருந்ததால், பூக்கள் மட்டும் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு பூக்கடையில் ஆர்டர் கொடுத்து, அட்வான்ஸ் செய்தார்.

அந்த வருடம், ஜனவரி 25, வெள்ளிக்கிழமை அன்று வந்தது. கல்யாணத்திற்கு முதல் செவ்வாய் அன்று மாலை,எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, ருக்மணி தன் பையனிடம்" பத்து.  நோக்கு இருக்கறது ஒரே பொண்ணு. பாத்து பாத்து கல்யாணம் பண்ற. கல்யாணத்ல ஒரு கச்சேரி ஏற்பாடு பண்ணி இருக்கக் கூடாதா" என்றாள். "பண்ணி இருக்கலாம்மா. தோணாத போய்ட்த்து. இனிமே என்ன பண்றது சொல்லு"  என்றார். 

" இப்ப கூட ஒண்ணும் குடி முழுகி போயிடல. இப்போ நீ நெனைச்சாலும் கச்சேரி அரேஞ்ச் பண்ணலாம்" என்றாள் ருக்மணி. "என்னம்மா சொல்ற நீ. இனிமே நான் எப்டி  பாட்டுக்காராள தேடிண்டு போக முடியும்" என்றார்  பத்மநாபன். 

" கையில வெண்ணைய வச்சுண்டு  நெய்யுக்கு அழற கதையா இருக்குடா. நம்ம கண்ணெதிர்ல  குத்து கல்லாட்டம் ம்ருதுளா இருக்கா . அவள விடவா ஒசத்தியா  வேற ஒருத்தர் வந்து பாட போறா.அவ ஈசியா ஒரு மணி நேரம் கச்சேரி பண்ணிடுவோ. என்ன சொல்ற நீ" என்றாள் ருக்மணி. "இதுவும் நல்ல ஐடியாவாதான் இருக்கு " என்ற பத்மநாபன், ம்ருதுளாவை பார்த்து "என்னம்மா   நோக்கு இது ஓகே வா" என்று கேட்டார்.  ம்ருதுளா "நேக்கு இது  ஓகே தான். ஆனா....." என்று இழுத்தாள்.

" எதுக்கு ஆனா ஆவன்னான்னு இழுக்கற " என்றாள் ரங்கநாயகி." இல்ல அத்தை. ம்ருதங்கம், வயலின்  இல்லாம வெறும் பாட்டு சோபிக்காது. அதுக்குதான் என்ன பண்றதுன்னு பாக்கறேன்" என்றாள். "ம்ருதங்கத்தை பத்தி கவலை இல்லை. என் ஆஃபீஸ் ரெண்டு வரதனோட   பையன் மிருதங்க கத்துண்டு, இப்போ வர வர கச்சேரிக்கெல்லாம் வாசிக்கறான். அவன கேட்டா ஒத்துப்பான்" என்றார் பத்மநாபன்.

 'அப்ப சரி. வயலினுக்கு  என்ன பண்றது" என்றாள் மைதிலி. உடனே  ம்ருதுளா,  மைதிலியின்  அருகில் சென்று , அவள் காதில் ஏதோ சொன்னாள். அதற்கு மைதிலி" அவாள்ளாம்  இதுக்கு ஒத்துப்பாளான்னு தெரியாது. அத்தோட  அவா இங்க இருக்காளோ, அமெரிக்கா போயிட்டாளோ" என்று சொன்னாள் மைதிலி.

சாரங்கன் "யார் நீ, சங்கரா க்ருஷ்ணன சொல்றயா" என்றான். ஆமாம் என்பதற்கறிகுறியாக  தலையாட்டினாள் ம்ருதுளா. "அவ சொல்றது நல்ல ஐடியாவா இருக்கு. உங்கிட்ட ராஜேஸ்வரி மாமி போன் நம்பர் இருக்கா" என்று கேட்டான் சாரங்கன்.

" இருக்கு .நான் டைரீல குறிச்சு வச்சிருக்கேன்" என்று சொல்லி மைதிலி, தன் டைரியில் இருந்த ராஜேஸ்வரி போன் நம்பரை சாரங்கனிடம் கொடுத்தாள்.

 "அத்திம்பேர் மெட்ராஸுக்கு  ஒரு  எஸ்.டி.டி பண்ணிக்கறேன்" என்றான் சாரங்கன். "இதுக்கெல்லாம் எதுக்குடா என்கிட்ட பர்மிஷன் கேக்கற.தாராளமா பண்ணிக்கோ" என்றார் பத்மநாபன். சாரங்கன் போனை எடுத்து ராஜேஸ்வரி நம்பரை  டயல் செய்த இரண்டு நிமிடத்தில் ராஜேஸ்வரி லைனில் வந்தாள். புது நம்பராக இருக்கவே யார் என்று தெரியாமல்" யார் பேசறது" என்று கேட்டாள் ராஜேஸ்வரி.

No comments:

Post a Comment