Saturday, December 16, 2023

வசந்த காலம் வருமோ?-44

 வசந்த காலம் வருமோ?-44

By N Krishnamurthy 

நல்லி சில்க்ஸை அடைந்ததும் நான்கு பெண்களும் உள்ளே நுழைய முற்பட்டனர். தயங்கி நின்று கொண்டிருந்த பத்மநாபனையும், சாரங்கனையும் பார்த்த ரங்கநாயகி அவர்களைப்பார்த்து" நீங்களும் உள்ளே வாங்க" என்றாள்.

அதற்கு பத்மநாபன்" தோ பார். உள்ள ஒரே பொம்னாட்டிகள் கூட்டமாயிருக்கு.

போறாதைக்கு பொடவையைப்பத்தி எங்களுக்கு அதிகமா தெரியாது.நாங்க வெளில இருக்கற நாற்காலில உக்காந்திண்டிருக்கோம்.நீங்கள் செலக்ஷன் பண்ணி முடிஞ்சதும் வசு கிட்ட சொல்லி அனுப்புங்கோ.நாங்க அப்ரூவ் பண்ணி, பே பண்ணிடறோம்" என்றார். ரங்கநாயகி சலித்துக்கொண்டே" இது வழக்கமா நடக்கறது தானே" என்று கூறி மைதிலி,வசுமதி,ம்ருதுளா புடை சூழ கடைக்குள் சென்றாள்.

பத்மநாபனும் சாரங்கனும் வெளியில் போடப்பட்டிருந்த நாற்கலிகளில், மற்ற பாவப்பட்ட(!) மனிதர்களைப்போல, அமர்ந்தார்கள். சாரங்கன் பத்மநாபனிடம் கல்யாண பட்ஜட் மற்றும் பல கல்யாணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கேட்டு அறிய முற்பட்டான். பின்னர் அவன் " அத்திம்பேர்

அக்கா சொல்லியிருப்பான்னு நெனக்கறேன்.என்னால வசு கல்யாணத்துக்கு இருபதாயிரம் தான் கொடுக்கு முடிஞ்சது " என்றான். இதைக்கேட்ட அவர் அவன் இரு கைகளை பிடித்துக்கொண்டு" தோ பார் சாரங்கா, இதுவே எதேஷ்டம்.பெருமாள் தயவால நான் ஏற்கனவே வசு கல்யாணத்துக்கு வேண்டிய பணம் சேத்து வெச்சிருக்கேன். உன்னோட இந்த பணத்துக்கு தேவையே இல்லை. உன்மனசு புண்படக்கூடாதேன்னு தாற் நான் இதை வாங்கிக்கலாம்னு ரங்கநாயகி கிட்ட சொன்னேன்" என்றார்.

"ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு " என்றான் சாரங்கன். அதற்கு அவர் " கிட்டின சொந்தம்ன்றது நம்பளா ஏற்படுத்திகிறதா நம்பதான் முட்டாள்தனமா நம்பிண்டிருக்கோம். எல்லாம் அந்த பெருமாளா பாத்து அமைச்சு கொடுக்கறது. சொந்தங்களை பந்தபாசம் மூலம் உறுதி படித்திக்கணமே தவிர பணத்தால வளர்க்க முடியாது" என்றார்.

" சென்ட் பர்சன்ட் கரெக்ட் அத்திம்பேர்" என்றான் சாரங்கன். அவர்களது பேச்சு வசுமதி கல்யாணத்தை தாண்டி, ம்ருதுளா படிப்பு முடிவு, அவள் கல்யாணம் ஆகியவைகளை தொட்டு அரசியல் பக்கமும் திரும்பியது. கிட்டத்தட்ட மணி இரண்டே முக்காலுக்கு வசு பத்மநாபனிடம் "அப்பா,நீங்க இப்போ வரலாம்.செலக்ஷன்லாம் முடிஞ்சது" என்றாள். இருவரும் உள்ளே சென்றனர். செலக்ட் பண்ணியிருந்து புடவை மற்றும் இதர துணிமணிகளை பார்த்து " எல்லாமே நண்ணாயிருக்கு.பில் போட்டூட சொல்லலாம்" என்றார் பத்மநாபன். பில் வந்ததும் கேஷ் கட்டிய பிறகு வெளியே வந்தனர். நிறைய அமௌண்டுக்கு வாங்கியதால், பிரம்பு பிடி போட்ட கட்டப்பை கிடைத்தது. அது, வாங்கிய துணிமணிக்குண்டான காசில் கால் சதவீதம் கூட பெறாது. ஆனால் அது கிடைப்பதற்கரிய பெரும்பேறாக நம்மில் பலர் எண்ணி மகிழ்கின்றனர். நிறைய நடுத்தர வர்கத்தினர் இது போன்ற ஒன்றுக்கும் உதாவாத இனாம்களால் அகமகிழ்ந்து போகின்றனர்.

வெளியே வந்ததும் வசுமதி ரங்கநாயகியின் காதை கடித்தாள். ரங்கநாயகி பத்மநாபனிடம் " ஏன்னா.உங்க பொண்ணுக்கு பசிக்கறதாம்.லேசா சாப்படணம்ன்றா" என்றாள்.

 "அக்கா.சப்பாத்தி,சமோசோ போல அய்ட்டம்  ஓகே வா" என்று ம்ருதுளா வசுமதியை கேட்க அவள்  " ஏதோ ஓண்ணு.ஆனா டேஸ்டியா இருக்கணம்" என்றாள்." அப்போ மன்சுக் போலாம்" என்றாள் ம்ருதுளா. அவர்கள்

பொடிநடையாக ராமசாமி தெருவிலுள்ள மன்சுக்கை அடைந்தார்கள். ஆளுக்கு ஒரு ப்ளேட் சாப்பாத்தியும், மசாலா டீயும் ஆர்டர் செய்தார்கள்.

" இங்க டேபிள் சர்வீஸ் கெடையாது.நம்பதான்போய் கலக்ட் பண்ணிக்கணம் " என்றாள் ம்ருதுளா. சாப்பிட்டுமுடித்து, ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தபோது மணி நாலறை ஆகிவிட்டது. கோமளா ரங்கநாயகியிடம் " எல்லா பர்சேஸும் ஆச்சா" என்றாள். அதற்கு ரங்கநாயகி " முக்காவாசி முடிஞ்சது. நாளைக்கு  வேஷ்டி,துண்டு,ரவிக்கை பிட் வாங்கணம்" என்றாள்.

No comments:

Post a Comment