Thursday, December 14, 2023

வசந்தகாலம் வருமோ-42

 வசந்தகாலம் வருமோ-42

By N Krishnamurthy 

மீண்டும் நான்கு நாள் கழித்து ரங்கநாயகி போன் செய்து தை பன்னிரெண்டாம்  தேதி முகூர்தத்திற்கு சரியாக இருப்பதாக ஆத்து வாத்தியார் கூறினார் என்றாள். பையனாத்துக்கு இதை  தெரியப்படுத்தி விட்டதாகவும், அவர்களும் சரி என்று சொல்லிவிட்டதாகவும் கூறினாள்.

பிறகு தொடர்ந்த ரங்கநாயகி ஜவுளி எடுப்பதற்காக இன்னும் பத்து நாளில் மெட்ராஸ் வரப்போவதாக கூறினாள்.

 கைவசம் இருக்கும் சில பாத்திரங்களுக்கு பாலிஷ் போட்டு அவைகளை கொடுத்து விடப் போவதாகவும், மேல் கொண்டு வாங்க வேண்டிய பண்ட , பாத்திரங்களை மதுரையிலே வாங்கிக் கொள்ளப் போவதாதாகவும் கூறினாள்.

கோமளா அவளிடம் "சமையலுக்கு என்ன பண்ண போற" என்று கேட்டாள்.

அதற்கு ரங்கநாயகி" நம்ப கிட்ட சரியான ஆள், அம்பு இல்லம்மா. சாமானை எல்லாம் வாங்கி கொடுத்து நிர்வாகம் பண்ணி, நம்பளே சமைக்கிறது முடியும்னு தோணல. இப்பெல்லாம் கேட்டரிங் சர்வீஸ்னு புதுசா ஆரம்பிச்சிருக்கா.ஸ்ரீ வில்லிபுத்தூர் கிருஷ்ணய்யங்கார்ன்றவர் கேடரிங் சர்வீஸ் ஆரம்பிச்சிருக்காராம். அவர் வந்து சமச்சு கொடுக்கிறாராம்.

சமைக்கறதோடு இல்லாம,  அவருடைய ஆட்களையே வச்சி பந்தியில் பரிமாறரது, பந்தி விஜாரண  செய்றது எல்லாம் செய்யறாளாம்.

முதல்ல நம்ம கிட்ட வந்து  என்னென்ன பண்ணனும்னு கேட்டுண்டு போயிட்டு, அதுக்கப்புறம்  கால்குலேஷன் பண்ணி, நம்ம கிட்ட வந்து அமௌண்ட்ட சொல்லி ஒப்புதல் வாங்கறாளாம்.

அட்வான்ஸா, ஒத்துண்ட தொகயில கால் வாசி  வாங்கிகறாளாம்.  இப்படி சமையல ஒருத்தர் கிட்ட ஒப்படைச்சுட்டோமானா, நம்மளுக்கு கொஞ்சம் ரிலீஃபா இருக்கும். இரண்டாவது பந்தி விஜாரணை பத்தி நம்ம கவலைப்பட வேண்டியது இல்லை" என்று கூறினாள். இதைக் கேட்ட கோமளா "என்னடி அதிசயமா இருக்கு. நான் இதுவரை இதுபோல கேள்விப்பட்டதே இல்லையே" என்றாள்.

" இல்லம்மா. இவர் ஆபீஸ்ல வேலை செய்யற வரதன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணச்சே அந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணய்யங்கார் கேடரிங்க தான் ஏற்பாடு பண்ணினாராம். நம்பளே பாத்து, பாத்து, சாமன வாங்கி போட்டு சமைக்றத விட, கொஞ்சம் தான் கூட ஆச்சாம்

கல்யாணத்துக்கு வந்தவா,  சாப்பாட்ட அப்படி புகழ்ந்தூட்டு  போனாளாம்.எங்க ஆத்துக்காரர் அது போலே பண்ணிடலாம் னு  அபிப்பிராயப்படறார்" என்றாள்  ரங்கநாயகி" சரிடி. என்னமோ செய்யுங்க" என்று சொன்ன கோமளா" நக நட்டுக்கெல்லாம் என்ன பண்ண போற. மெட்ராஸ் வந்துடறயா. இங்க பாத்துகலாம்" என்றாள். "இல்லம்மா. திருச்சியில சின்ன கட தெருவுல,இவருக்கு தெரிஞ்ச ஒரு கடைல தங்க நகைகள் எல்லாம் தரமாகவும், சல்லிசாவும் கெடைக்கறதாம். அங்கே வாங்கிடலாம்னு இவர் சொல்றார். மெட்ராஸ் வரதுக்கு எப்படியாவது எட்டு மணி நேரத்துக்கு மேல ஆறது .திருச்சி நாலு மணி நேரத்துல போய் சேர்ந்துடலாம். நேக்கும் அதான் சரின்னு படுறது" என்றாள். தொடர்ந்து பேசிய ரங்கநாயகி "திருமாங்கல்யம் வாங்கும் போது பையனாத்துக்காராளும் கூட இருப்பா.டிசைனை பாத்து அவாளும் ஒப்துக்கணம். அதனால்தான் நகையெல்லாம் திருச்சியிலே வாங்கிக்கலாம்னு இருக்கோம்" என்றாள்.

No comments:

Post a Comment