வசந்த காலம் வருமோ?-41
By N Krishnamurthy
ரங்கநாயகி பெண் வசுமதியை பிள்ளை வீட்டுகாரர்களுக்கு பிடித்துவிட்டது என்று கோமளத்திடம் போன் பண்ணி சொன்ன பதினைந்தாவது நிமிடத்தில் கோமளம் சாரங்கனிடம் பேச ஆரம்பித்தாள்.
"சாரங்கா.வசுவை பையனாத்துகாராளுக்கு பிடிச்சு போய்டுத்தாம். அவ அழகுக்கும், அறிவுக்கும் எப்டி பிடிக்காம இருக்கும். நோக்கு இருக்கறது ஒரே அக்கா. அவளுக்கிருக்கறது ஒரேபொண்ணு. கல்யாண பட்ஜட் எக்கச்சக்கமா ஆயிட்டதாம்.எப்படி சமாளிக்க போறாளோ.
அந்த பெருமாளுக்கு தான் வெளிச்சம்" என்றவள் தொடர்ந்து " உன் அக்கா மேல உசுரே வெச்சிண்டிருக்கவன் நீன்னு நேக்கு தெரியும். உன் மருமாளுக்கு நீ எதேஷ்டமா செய்யணம்னு நெனச்சுண்டிருப்பா. இருந்தாலும் இப்போ சொல்ல வேண்டியது என் கடம. என்ன செய்யறதா உத்தேசம்" என்றாள்.
"நீயே எவ்வளவு பண்ணா நண்ணாயிருக்கும்னு சொல்லம்மா" என்றான்.
அதற்கு கோமளம்" என்னடா இப்படி சொல்றா.உன்னால என்ன முடியும்னு நேக்கு எப்டி தெரியும் .அத்தோட நோக்கும் ம்ருது இருக்கா. அடுத்த வருஷம் டிகிரி முடிச்ச கையோட அவளுக்கும் வரன் பாக்கணம்" என்றவள் தயக்கத்துடன், " ஒரு இருபதாயிரம் கொடுக்க முடிஞ்சுதன்னா நண்ணாயிருக்கும்னு படறது"என்றாள்.
சாரங்கன் அவளிடம் "அப்படியே செஞ்சுடலாம்மா" என்றான். உடனே கோமளா அவனிடம் "உனக்கு டைம் கெடக்றச்சே நீயே ரங்கநாயகிக்கு போன் பண்ணி சொல்லீடு. அவ இதை, உன் வாயிலேந்து கேட்டா, ரொம்ப சந்தோஷப்படுவ" என்றாள்.
ஒரு வேடிக்கை என்னவென்றால் இது விஷயமாக மைதிலியை சாரங்கன் கன்சல்ட் செய்யவில்லை. தன்னிடம் இதைப்பற்றி கூறி அவன் ஆலோசனை கேட்பான் என்று மைதிலி எதிர்பார்க்கவும் இல்லை. அவன் என்ன செய்தாலும் சரியாகத்தான் செய்வான் என்று நம்பிக்கை மைதிலிக்கு உண்டு. இதானாலேய அவர்களுக்குள் பரஸ்பரம் அன்னோன்யம் வளர்ந்தது. கோமளாவுக்கும் இதன் காரணமாக மாட்டுப்பெண் மேல் அதிகமான அன்பு ஏற்பட்டது எனலாம். பல சமயங்களில் ரங்கநாயகியிடம் மைதிலியை விட்டுக்கொடுக்காமல் கோமளாவால் பேச முடிந்தது இதை ஒட்டியே.
பின்னர் சாரங்கன் ரங்கநாயகிக்கு போன் செய்தான்.
" அக்கா வசுவுக்கு பிக்ஸ் ஆயுடுத்தாமே.
ரொம்ப சந்தோஷம்"என்றான்.
ரங்கநாயகி"ஆமாண்டாசாரங்கா.நீதான் குடும்பத்தோட வந்து அவ கல்யாணத்த க்ரேண்டா நடத்தி தரணம்.நேக்கு உன்ன வுட்டா யாரிரிக்கா" என்றாள்.
"அக்கா.கவலய வுட்டூடு. கல்யாணத்த பிரமாதமா நடத்திடலாம். நான் இருபதாயிரம் ரூபா கொடுக்கறேன்.
என்னால இப்போதைக்கு முடிஞ்சது இவ்ளவுதான்.
எப்போ கொடுக்கணும்னு சொன்னயானா நானே கொண்டு வந்து கொடுத்துடுவேன்" என்றான் சாரங்கன். இதை கேட்ட ரங்கநாயகி" நோக்கும் ஒரு பொண்ணு இருக்கா. அத ஞாபகம் வச்சுக்கோ. இவ்வளவு தரணமான்னு யோசித்துப் பாரு" என்றாள்.
அதற்கு அவன் " இன்னும் கொஞ்சம் கூடவே செய்யணும்னு தான் நெனைக்கிறேன். இன்னிக்கு நெலைமைக்கு இதுக்கு மேல என்னால் செய்ய முடியம்னு தோணல"என்றான். "இதுவே அதிகம்டா.காசு,பணமா முக்கியம்.ரத்தபாசந்தான் முக்கியம்.நான் உங்க அத்திம்பேரை உங்கிட்ட பேச சொல்றேன்.மைதிலியையும்,ம்ருதுவையையும் கேட்டேன்னு சொல்லு " என்று சொல்லி போனை கட் செய்தாள் ரங்கநாயகி.
No comments:
Post a Comment