Thursday, December 21, 2023

வசந்த காலம் வருமோ?-48

 வசந்த காலம் வருமோ?-48

By N Krishnamurthy 

பொங்கலுக்கு ஒரு நாள் முன்பு சாரங்கன், மைதிலி,ம்ருதுளா, பாண்டியன் எக்ஸ்பிரசில் பயணித்து மதுரையில் இறங்கி, தல்லாகுளம் அழகர்கோவில் சாலையிலிருந்த பத்மநாபன் வீட்டை அடைந்தார்கள். வீட்டின் உள்ளே நுழைந்தவுடன், ஹாலின் ஒரு ஓரத்திலிருந்த டைனிங் டேபிள் மேல் இருந்த காபியை, ஆற்றி குடித்துக்கொண்டிருந்த சக்ரவர்த்தி "கோமளா,ரங்கநாயகி, மெட்ராஸ்லேந்து சாரங்கன் வந்தூட்டான் பார்" என்று குரல் கொடுத்தார்.

உள்ளேயிருந்து வந்த கோமளா "வாடா சாரங்கா.வாம்மாமைதிலி,ம்ருது.பிரயாணம் சௌர்யமா இருந்ததா" என்று சொல்லி விட்டு,"பல் தேச்சுண்டு வாங்கோ காபி சாப்டலாம்" என்றாள்.

" அக்கா எங்கம்மா " என்றான் சாரங்கன்.        " தோ.பக்கத்ல இருக்க நாடார் கடைக்கு கறிகா வாயிண்டு வர போயிருக்கா" என்றாள் கோமளா.

" பாட்டி. கல்யாண பொண்ணு எங்க காணோம் " என்றாள் ம்ருது.

"வசு குளிச்சிண்டிருக்கா" என்றாள் கோமளா. மூவரும் பல் துலக்கிய பின் கோமளா கொடுத்த காபியை அருந்திக்கொண்டிருந்தபோது, வசு குளித்து, முடிந்த தலையுடன் ஹாலுக்கு வந்து " ம்ருது" என்று சொல்லி ம்ருதுளாவை கட்டிக்கொண்டாள்.

" உன்னை பாத்ததுக்கப்றம்தான் உசுரே வந்தது. ரவிக்கையெல்லாம் தைக்க கொடுக்கணம். நீயும் கொஞ்சம் கூட மாட ஹெல்ப் பண்ணயான நண்ணாயிருக்கும்" என்றாள்.

ம்ருது உடனே ட்ராமாவில்பேசற மாதிரி "இளவரசி.தங்கள் சித்தம் என் பாக்யம்" என்றாள்.

இதைக்கேட்ட வசுமதி "பாட்ல கொடு கட்டி பறக்கற. ட்ராமாவுலயும் அடி எடுத்து வெச்சுடுவ போலயிருக்கே" என்றாள்.

" ட்ராமாவுக்கும், நேக்கும் ரொம்ப தூரம்" என்றாள் ம்ருதுளா.பின்பு இருவரும் வசுமதியின் ரூமுக்கு சென்றார்கள்.

ஐந்து நிமிடத்தில் கையில் ஹிந்து பேப்பருடன் வந்த பத்மநாபன்" வாப்பா சாரங்கா,மைதிலி.

எங்க ம்ருது" என்றார்.

"ம்ருது வசுமதியோட அவ ரூமுக்கு போய்ட்டா" என்றான் சாரங்கன்.

அப்போது கையில் கறிகாயால் கனத்துப்போயிருந்த நைலான் வலைப்பையை சுமந்து வந்த ரங்கநாயகி, உள்ளே வரும்போதே" இன்னும் கொற நாளும் எப்படி குடும்பம் நடத்தறதோ தெரியல.கறிகா எல்லாம் யான வெல குதர வெல விக்கறது" என்று சொல்லிக்கொண்டே வந்தாள். பத்மநாபன் 

" ஏன் வீணா கெடந்து பொலம்பற. அதுக்கோசரம் கறிகா வாங்காம இருந்ததூடவயா. யார் வந்திருக்கா பார் " என்றார். சாரங்கன், மைதிலையை வரவேற்ற ரங்கநாயகி " ம்ருது எங்கே " என்றாள். ம்ருது வசுமதியின் ரூமுக்கு சென்றிருக்கிறாள் என்று அறிந்ததும் அவள், " அவ்வளவு தான்.இன்னமே ரெண்டு பேரையும் பிடிக்கமுடியாது" என்றாள். பின்பு குளித்துவிட்டு வந்த மைதிலி சமையல் அறைக்குள் புகுந்து கோமளாவிற்கு ஒத்தாசையாக சமையல் வேலையை கவனிக்கத்தொடங்கினாள். ரங்கநாயகி கல்யாண வேலைகளில் விட்டுப்போனவைகளை நினைவில் கொண்டுவந்து, அவைகளை ஒன்றொன்றாக செய்யத்தொடங்கினாள்.

" என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் கருரிலேந்து காலைல பஸ்ஸுல கெளம்பியிருக்கா.பன்ரெண்டு மணிக்கு சென்ட்ரல் பஸ் ஸ்டேண்ட் போய் ஆவாள அழசிண்டு வரணம் " என்றார் பத்மநாபன்.

" நான் ஆத்துல வெட்டியாதானே இருக்க போறேன்.நானும் உங்க கூட வரேன்" என்ற சாரங்கனிடம் பத்மநாபன்" பேஷா வா. போய்ட்டு வரலாம் " என்றார். பின்னர் அவர் ரங்கநாயகியை பார்த்து ",அவாளுக்கும் சேத்து சமைக்கணம். ஞாபகம் இருக்கோன்னோ" என்றார். ரங்கநாயகி சலிப்புடன் " ஏன் ஞாபகம் இல்லாமா.இத்தோட பத்து தரம் இத சொல்லீட்டேள்" என்றாள்.

No comments:

Post a Comment