Wednesday, December 27, 2023

திருவாதிரை களி/ஏழு காய் கூட்டு

 27.12.23 புதன் கிழமை ஆருத்ரா தரிசனம்* அன்று இறைவனுக்கு இந்த களி நைவேத்தி யமாக படைக்கப் படும்.

அன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 200 கிராம்
துருவிய தேங்காய் - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
நெய் - ¼ கப்
ஏலக்காய் பொடி - கால் மேசைக் கரண்டி

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ½ கப் தண்ணீரை எடுத்து தனியே வைத்து விடவும்.

கொதிக்கும் தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும். 

அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். 

இவ்வாறு கிளறும் போது, களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ¼ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்து பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும். 

பிறகு, அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளற வேண்டும்.

மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும், அதை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

இதில் ஏலப் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்ற வற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும். 

இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.

இப்போது சுவையான திருவாதிரை களி ரெடி.

திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்ட போல, எளிமையாக செய்யலாம்.

திருவாதிரை நாளில் செய்யப்படும் ஏழு காய் கூட்டு

தேவையான பொருள்கள்

 ஏழு கறிகாய்கள்– பூசணிக்காய், பரங்கிக் காய், அவரைக்காய், சேனைக்கிழங்கு, மொச்சை, வாழைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு

மேலே சொன்ன அத்தனை காய்களும் நறுக்கியது  – 5 கப்
துவரம் பருப்பு (வேக வைத்தது) – ½ கப்
சாம்பார் பொடி – 1½ கரண்டி
உப்பு – தேவையான அளவு
தனியா – ¼ கப்
மிளகாய் வத்தல் – 6
கடலைப்பருப்பு – ¼ கப்
பெருங்காயம் – சிறிய கட்டி
தேங்காய் (துருவியது) – ¼ கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
வெல்லம் – சிறிதளவு
அரிசி மாவு – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1

திருவாதிரை 7 கறி கூட்டு செய்வது எப்படி?

முதலில் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல், தேங்காய், பெருங் காயம் போன்ற வற்றைச் சேர்த்து எண்ணெயில் வறுத்துப் மிக்சியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

தண்ணீரில் காய் கறிகளைப் போட்டு, பிறகு உப்பு, சாம்பார் பொடி போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

அதன் பின்னர், தனியா, கடலைப் பருப்பு உள்ளிட்ட வற்றைச் சேர்த்து செய்த பொடியைப் போட வேண்டும்.

இதில் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். இது கொதித்த பின்னர் சிறிதளவு வெல்லம் போடவும்.

பிறகு கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

இதில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

கடைசியாக இதில் அரிசி மாவைக் கரைத்து ஊற்ற வேண்டும்.

அதன் பின்னர், மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.

இப்போது, திருவாதிரை ஸ்பெஷலான ஏழு கறி கூட்டும் தயாராகி விட்டது.

No comments:

Post a Comment