Friday, December 15, 2023

வசந்த காலம் வருமோ?- 43

 வசந்த காலம் வருமோ?- 43

By N Krishnamurthy 

அடுத்த நாள் மாலை ரங்கநாயகி போன் செய்தாள்.  கோமளா போனை எடுத்தவுடன் அவள் " அம்மா வெள்ளிக்கிழமை நைட் பாண்டியன்ல  கெளம்பி சனிக்கிழமை காலைல மெட்ராஸ் வரோம். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ரெண்டு நாளுக்குள்ள  ஜவுளி எல்லாம்  எடுத்து முடிக்கணம்னு    பாக்கறோம். உனக்கும் , சாரங்கனுக்கும் சௌர்யப்படுமா" என்று கேட்டாள். "அதுக்கு என்னடி. அப்படியே பண்ணிடலாம்" என்றாள் கோமளம். பின்பு அவள் சாரங்கனிடம் விஷயத்தை சொன்னாள்.

" சரிம்மா .சனிக்கிழமை  ஒரு நாள் நான் லீவு போட்டுடறேன்" என்றான். சாரங்கனுக்கு சனிக்கிழமைகளில் ஆபீஸ் உண்டு.

சனிக்கிழமை காலை பாண்டியன் எக்ஸ்பிரஸில் மாம்பலத்தில் இறங்கிய ரங்கநாயகி, அவளுடைய கணவர் பத்மநாபன் மற்றும் வசுமதி ஆகியோர் சாரங்கன் வீட்டை  அடையும்  போது காலை ஏழே கால் மணி இருக்கும். அவர்கள் வந்த ஆட்டோ வீட்டு வாசலில் நிற்கும் போதே, வீட்டிலிருந்து  வெளியில் வந்த சாரங்கனும் மைதிலியும், "வாங்க அக்கா.வாங்க அத்திம்பேர்,வாம்மா வசு"  என்று வரவேற்றார்கள். மூவரும் உள்ளே நுழைந்தனர்.

கோமளம் ஹாலில் ஒரு மூலையில் நாணி கோணி நின்று கொண்டு (மாப்பிள்ளைக்கு மரியாதையாம்)  "வாங்கோ" என்று எல்லோரையும் பொதுவாக வரவேற்றாள்.

ரங்கநாயகி, பையின் மேலே பத்திரமாக வைத்திருந்த ஐந்து முழம் மதுரை  மல்லியையும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பாக்கட்டையும் கோமளத்திடம் கொடுத்தாள்.

வசுமதி "எங்கே ம்ருதுவை காணோம்" என்று கேட்டாள். "ம்ருது பிரஷ் பண்ணிண்டிருக்கா. தோ வந்துடுவா" என்றாள் மைதிலி.

சக்கரவர்த்தி அப்பொழுது தான் பல் துலக்கி விட்டு ஹாலுக்கு  வந்தார். அவர்களை பார்த்தவுடன்" ரங்கநாயகி வா. மாப்பிள்ளை சௌக்யமா. வசு குட்டி சௌக்கியமா கல்யாணம் வராப்ல இருக்கு" என்றார் அவர்.  இதைக் கேட்ட பத்பநாபன்" ஆமாம் வசுவுக்கு கல்யாணம். நீங்க எல்லாம் வந்து நடத்தி கொடுக்கணும்" என்றார்."அதுக்கு என்ன பேஷா  பண்ணிடலாம்" என்றார் சக்கரவர்த்தி.

ம்ருதுளா பல்துலக்கிய பின்  ஹாலுக்கு வந்தாள்."அக்கா" என்று சொல்லி வசுமதியை கட்டிக்கொண்டாள். "என்ன ம்ருது. கச்சேரியெல்லாம் எல்லாம் கலக்கற போல இருக்க.எங்க காலேஜ்ல உன்ன பத்தி சொல்லி பெருமைப்பட்டிண்டிருக்கேன். கொஞ்ச நாள்ல நீ பெரிய ஸ்டார் ஆயிடுவ போலிருக்கு"என்றாள்.

(வசுமதி குணத்தில் அவளது தந்தை பத்மநாதன்  கொண்டிருந்தாள். கள்ளம் கபடு தெரியாது. அம்மா ரங்கநாயகி போல், உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வார்த்தைகளிள் வேறொன்றே சொல்வதை அறியாதவள் அவள்)

 "அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா. ஏதோ தெரிஞ்சத நான் பாடுறேன்" என்றாள். அவர்கள் இருவரிடமும்

ரங்கநாயகி" என்னடி அக்க, தங்கை வேண்டியிருக்கு. வசு, நோக்கு ம்ருது அம்மங்கா, அவளுக்கு நீ அத்தங்கா. உறவு சொல்லி கூப்பிடக் கூடாதா "என்றாள். இதைக் கேட்ட வசுமதி   "போம்மா .ஏதோ புளியங்கா,தேங்கா,

மாங்கா  மாரி உறவு பேரை சொல்ற. எப்படி கூப்பிட்டா என்னா? உறவு  விட்டு போகாது இல்ல"  என்றாள்.

மைதிலி அவர்களைப் பார்த்து "பிரஷ் பண்ணிட்டு வாங்கோ, காபி கலந்து கொடுத்து டறேன்" என்றாள். 

எல்லோரும் பிரஷ் பண்ணி வந்தவுடன் காபி அருந்தினார்கள். சோபாவில் அமர்ந்து பத்பநாபன்" என்ன சாரங்கா. ஆபீஸ் வேலையெல்லாம்  எப்படி போயிண்டிருக்கு" என்று கேட்டுவிட்டு ம்ருதளாவை பார்த்து "என்னம்மா.கச்சேரிக்கு கச்சேரி உம்பாட்டடால நீ பிரபலமடஞ்சிண்டே வர போல இருக்கே. உன் மொத  கச்சேரியை பத்தி சுப்புடுவே  பிரமாதம்னுஎழுதி இருக்கார் போல இருக்கே. அத படிச்ச போதோ நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன்" என்றார்.  

ரங்கநாயகிக்கு எல்லோரும் ம்ருதுளாவை தூக்கி வைத்து பாராட்டுவது அவ்வளவாக பிடிக்கவில்லை. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என்று  அவள் பேச்சை மாற்ற வேண்டி" என்ன சாரங்கா. நோக்கு இன்னைக்கு ஆபீஸ் இருக்காப்ல இருக்கு" என்றாள். 

" ஆமாக்கா.ஆனா  நான் ஆபீசுக்கு லீவு போட்டுட்டேன்" என்றான். "சரி. நம்ப கட கண்ணிக்கு பத்து மணிக்கு கிளம்பலாமா"  என்றாள் ரங்கநாயகி. அதற்குள் கோமளா " பத்து மணி இரண்டும் கெட்டான் டைம். அத்தோட இல்லாம 9-10:30 ராகு காலம்.  சாப்டூட்டு  11:30 மணிக்கு மேல கிளம்புங்கோ" என்றாள். "ஏம்மா, நீ வரலையா" என்றாள் ரங்கநாயகி. "நான் எதுக்குடி. சாரங்கன், மைதிலி மிருது, அவ கூட நீயும் உங்க ஆத்துகாரும்,வசுவும் போயிட்டு வாங்க. நான் வரல. அப்பா வேறு நடுவில் எதாவது கேப்பார் .நான் ஆத்துலே இருந்துகறேன்" என்றாள். 

அன்றைக்கு வழக்கமாக செய்யும் சமையலுடன் பால் பாயாசம் வைத்திருந்தாள் மைதிலி."என்ன இன்னைக்கு பால் பாயசம், விசேஷம்" என்றாள் ரங்கநாயகி. "என்னக்கா , கல்யாண பொண்ணுக்கு ஸ்வீட் பண்ணி போடக்கூடாதா" என்றாள் மைதிலி.

"ஓ! அப்படியா செய்தி" என்றாள்  ரங்கநாயகி.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்க மணி 11 ஆனது. அதற்குப் பிறகு 30 நிமிட இடைவெளியில் எல்லோரும்ரெடியாக, சாரங்கன், மைதிலி ம்ருதுளா ஒரு ஆட்டோவிலும், பத்மநாபன், ரங்கநாயகி வசுமதி இன்னொரு ஆட்டோவிலும் ஏறி, பனகல்  பார்க் அருகிலிருந்த நல்லி சில்க்ஸ்ஸுக்கு விரைந்தார்கள்.

No comments:

Post a Comment