வசந்த காலம் வருமோ?-55
By N Krishnamurthy
சங்கர க்ருஷ்ணன் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, ராஜேஸ்வரியும்,
ம்ருதுளாவும் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் ஏறி அமர்ந்ததும், வண்டி கிளம்பி பழமுதிர் சோலையை நோக்கி பயணம் ஆனது.
ட்ரைவரை பார்த்து ராஜேஸ்வரி 'முதலில் அழகர் கோவிலுக்கு போக வேண்டுமா அல்லது பழமுதிர்சோலைக்கு போக வேண்டுமா' என்று கேட்டாள். அதற்கு டிரைவர் பழமுதிர்சோலை முடித்துவிட்டு, பின்பு திரும்பி வரும்போது அழகர் கோயில் கள்ளழக பெருமாளை தரிசனம் பண்ணி கொண்டு வந்து விடலாம்மா" என்றார்.
" சரி அப்படியே செய்வோம்" என்றாள் ராஜேஸ்வரி.
ட்ரைவர் ராஜேஸ்வரியிடம் "என்னம்மா பையனையும், பொண்ணயும் கல்லாணத்துக்கு முன்னாலா சாமி கும்புட கூப்டுட்டு போறேங்களாக்கும் ",என்றார். இதைக்கேட்டு மனதிற்குள் மகிழ்ந்த ராஜேஸ்வரி "அப்படி எல்லாம் இல்லங்க" என்றாள். ம்ருதுளா தர்ம சங்கடத்தில் நெளிந்தாள். சங்கர க்ருஷ்ணன், நல்ல வேளை, ட்ரைவர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.புரிந்து கொண்டிருந்தால், அவன் வானில் நீந்திக்கொண்டிருக்கும் புள்ளினங்களோடு சேர்ந்து மிதந்து கொண்டிருப்பானோ என்னவோ?
வழி நெடுகிலும் ராஜேஸ்வரி ம்ருதுளாவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தாள். "டிகிரி முடித்ததும் என்ன செய்யப்போற" என்று ராஜேஸ்வரி ம்ருதுளாவிடம் கேட்டபோது அவள் ",இன்னும் தீர்மானம் பண்ணல மாமி. ஆனா மாஸ்டர்ஸ் படிக்க இஷ்டம் இல்ல. முழு நேரம் சங்கீதத்ல ஈடுபடணம்னு பாக்கறேன்" என்றாள்.
அதற்கு ராஜேஸ்வரி " நான் உன்னை டிஸ்கரேஜ் பண்றேன்னு நினைச்சுக்காத. பொண்ணா பொறந்தவளுக்கு ஒரு சமயம் வரை தான் ஃபிரீடம் இருக்கும். கல்யாணம்ன்ற கால் கட்டு போட்ட உடனே நிறைய பேர் அவா இஷ்டப்பட்டதை செய்ய முடியறதில்ல" என்று கூறிவிட்டு " டிகிரி முடி!ச்சதும் அனேகமா நோக்கு கல்யாணம் பண்ணீடுவான்னு நெனைக்கிறேன்" என்றாள். இதற்கு ம்ருதுளா ஒன்றும் பதில் தரவில்லை . " உறவுல யாராவது பையன் இருக்கானா" என்றாள் ராஜேஸ்வரி. அதற்கு ம்ருதுளா " நேக்கு தெரிஞ்ச வரைக்கும் இல்ல மாமி" என்றாள். இந்த பதிலைக் கேட்டதும் ராஜேஸ்வரிக்கு மனதில் சிறிது தெம்பு வந்தது. இதற்குள் கார் அழகர் கோயிலை தாண்டி பழமுதிர்சோலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது.
ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவு தாண்டியதும் பழமுதிர்சோலை முருகன் கோவில் கண்ணில் தென்பட்டது.
முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடான பழமுதிர்சோலையை முதன்முதலாக ராஜேஸ்வரியும்,சங்கர க்ருஷ்ணனும் பார்க்க இருந்தார்கள்.வள்ளி தேவயானை சமேத வெற்றி வேல் முருகனின் கண்கொள்ளா தரிசனம் கிடைத்தது. குருக்கள் இவர்களிடம் " முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான்.
இங்குள்ள தல விருக்ஷமான நாவல் மரத்தின் பழத்தைத்தான், முருகன் சுட்ட பழம் வேண்டுமா,சுடாத பழம் வேண்டுமா என அவ்வையிடம் கேட்டான்" என்றார்.
பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரம் மேல் ஏறிச் சென்றார்கள். வேடுவர்களின் குலதெய்வமான ராக்காயி கோவில் பக்கத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததான, நூபுர கங்கை நீரை தலையில் தெளித்துக் கொண்டார்கள்.
அங்கிருந்து கிளம்பி,108 வைணவ திவ்வியதேசங்களுள் ஒன்றான, அழகர் கோயில் எனும் திருமாலிருஞ்சோலையை அடைந்தனர். சுந்தரவல்லி சமேத சுந்தரராஜபெருமாளின் திவ்ய தரிசனம்கிடைத்தது.
"நீங்கள் எல்லாம் எங்கிருந்து வரேள்" என்று கேட்ட பட்டர் அவர்களிடம்"கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஜ்வாலா யோக நரசிம்மர் ரொம்ப பிரசித்தி . அவர தரிசிக்காம போகாதேங்கோ.அவர் உக்கிர ரூபத்தில் இருக்கறதால நரசிம்மரின் உக்கிரத்தை தணிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவை கொண்டு திருமஞ்சனம் செய்யறா.யோக நரசிம்மரின் கோபத்தைத் தணித்து சாந்தி அடையற்துக்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நெலைல வெச்சிருக்கா. மீதீ பெருமா கோயிலில்ல நரசிம்மர், மூலவரின் இடது ஓரத்தில் இருப்பார். இங்க நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் இருக்கார்" என்றார். அவரையும் மூவரும் தரிசித்தார்கள்.
No comments:
Post a Comment