வசந்தகாலம் வருமோ?* *-40
By N Krishnamurthy
அந்த வருடம் சங்கீத சீசன் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
ம்ருதுளாவுக்கு மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் மாலை ஒன்றரை மணி நேரம் பாட வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன் படுத்திக்கொண்டாள் ம்ருதுளா. இந்த முறை பிரபல விமர்சகர் S.V.K (S.V.KRISHNAMURTHY) ,
THE HINDU (அன்றைய நாளைய சொரணையுள்ள, பொறுப்புள்ள ஹிந்து நாளிதழ்) வில் ம்ருதுளாவின் கச்சேரியை விமர்சித்து "She is definetly a rising star in carnatic music horizon " என்று முடித்திருந்தார்.
ஒரு நாள் ராஜேஸ்வரி மைதிலிக்கு போன் செய்து "வர சனிக்கிழமை நானும், சங்கர க்ருஷ்ணனும் அமெரிக்கா திரும்பி போறோம்"என்றாள். மைதிலி "அப்படியா. பத்திரமா போயிட்டு வாங்க. மறுபடியும் எப்ப வருவேள்" என்று கேட்டாள். " அனேகமா அடுத்த சங்கீத சீசனுக்கு தான் வருவோம். நடுவுல எதாவது விசேஷம் இருந்தா வர வாய்ப்பு உண்டு. இதுவரைக்கும் அதுபோல் ஏதும் விசேஷம் இருக்கிறதா தெரிய வரல" என்றவள் "ஆமா.ம்ருதுளா எப்போ டிகிரி முடிக்கறா" என்று கேட்டாள். அதற்கு மைதிலி "அடுத்த வருஷத்தோட அவ படிப்பு முடியறது. ஆமாம் எதுக்கு கேக்கறேள்"என ராஜேஸ்வரியிடம் அவள் கேட்டபோது
"சும்மாதான்.தெரிஞ்சிக்கலாமேன்னுதான் கேட்டேன்" என்றாள் ராஜேஸ்வரி.
அந்த புது வருடத்தில் நான்கைந்து மாதங்கள் ஓடி விட்டன.
ஒரு நாள் ரங்கநாயகி போன் பண்ணி கோமளத்திடம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். வேறொன்றுமில்லை வசுமதியின் கல்யாண சமாச்சாரம் தான். வசுமதி ஜாதகத்தை எடுத்து நான்கு மாதங்களுக்கு முன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். குரு பலன் வந்து விட்டதாக ஜோசியர் சொன்னாராம். அவர்களும் நிறைய பையன்களின் ஜாதகங்களை அலசி பார்த்ததில், திருச்சியில் BHEL ல் வேலை செய்யும் ஸ்ரீவத்சன் என்ற இன்ஜினியர் பையனின் ஜாதகம் பொருந்தி இருக்கிறதாம். இன்னும் ரெண்டு நாட்களில் பெண் பார்க்க வருடவதாக தகவல் அனுப்பி இருக்கிறார்களாம். இதைக் கேட்ட கோமளம் "ஏண்டி நான் வேணா ஏதாவது ஒத்தாசைக்கு வரணுமா" என்றாள். "இல்லம்மா.இப்ப வேண்டாம். கல்யாண சமயத்தில நீங்க எல்லாம் வந்த ரொம்ப உபயோகமா இருக்கும்" என்றாள்.
இந்த விஷயத்தை கோமளம் சக்ரவர்த்தி, மைதிலி, சாரங்கனிடமும் பகிர்ந்து கொண்டாள். மைதிலி " ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.வசுமதியை பார்த்து ரொம்ப நாளாச்சு" என்றாள்.
பின்பு மூன்று நாள் கழித்து ரங்கநாயகி மறுபடியும் போன் செய்தாள். "அவாளுக்கு வசுமதியை ரொம்ப பிடிச்சு போயிடுத்து. சீர்,செனத்தியெல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வந்தாச்சு. கல்யாணம் திருச்சியில் வெச்சிக்க முடியுமான்னு கேட்டா. எங்களுக்கு திருச்சி சௌர்ய படாது, மதுரேலதான் வெச்சிப்போம்னு சொல்லிட்டோம்.ஒத்துண்டூட்டா" என்றாள்.
கோமளம் "கையில எவ்வளவு தரேள்" என்றாள்."கையில பத்தாயிரம்.அதை தவிர ட்ரெஸ்ஸுக்கு ரெண்டாயிரத்து ஐனூறு. எச்ம்டி ஆடமேடக் வாட்ச். மோதிரம் வேற போடறதா ஒத்துண்டிருக்கோம்" என்றாள். கோமளா
' இதை தவிர துணிமணி,பண்டம் பாத்ரம்,சாப்பாட்டுசெலவுன்னு ஊர்பட்ட செலவு இருக்கேடி.எப்படிசமாளிக்க போறே" என்றாள்.
ரங்க நாயகி " தோ பார்ம்மா.உன் மாப்ளை " நம்பளுக்கு இருக்கறது ஒரே கொழந்தை. அவளுக்கு செய்யாத வேறு யாருக்கு செய்ய போறோம்றார். பி.எப் லோனுக்கு அப்ளை பண்ணியிருக்கார். ஏந்தா எளச்சா ஒதவட்டும்னு, அரசரடி,சோமசுந்தரம் காலனில அரை க்ரவுண்ட் வாங்கி போட்டிருந்தது. அதை விக்கலாம்னு இருக்கோம். அவருக்கு க்ளோஸ் ப்ரண்ட் ஒத்தாச பண்றேன்னிருக்கார் " என்றாள். கோமளம் " நான் சாரங்கன் கிட்ட கேட்டு பாக்றேண்டி" என்றாள். அதற்கு ரங்கநாயகி " நீயாபோய் அவங்கிட்ட கேக்காத. அவனே மருமாளுக்கு செய்யணோம்னா செய்யட்டும்". ரங்கநாயகி படு கில்லாடி. சைகாலஜி அறிந்தவள். இப்படி, சாரங்கனிடம் உதவி கேட்கவேண்டாம் என்றால், அம்மா முதல் வேலையாக அதை செய்வாள் என அவளுக்குத்தெரியும்.
அந்த காலத்தில் இப்போதெல்லாம் நடக்கறமாதிரி கல்யாணத்திற்கு முன்,தனியாக நிச்சயதார்த்தம் நடத்தப்படுவது இல்லை. கல்யாணத்திற்கு முதல் நாள்மாலை,ஜானவாசத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடத்தப்படும்.
No comments:
Post a Comment