பஞ்சரங்க தலங்கள்!
காவிரி நதி பாயும் பரப்பின் கரையில் அரங்கனின் ஆலயங்கள் அமைந்த ஐந்து மேடான பகுதிகள் - தலங்கள் -
*பஞ்ச அரங்க தலங்கள்*!
*ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம்*
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது.
இங்குள்ள ரங்கநாதஸ்வாமி கோயிலே *ஆதிரங்கம்* எனப்படுகிறது.
சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர் இங்கு தவமிருந்து எம்பெருமானை *புஜங்க சயனத்* திருக்கோலத்தில் காணும் பாக்யம் பெற்றார்.
முனிவரின் வேண்டுதலின்படி, அதே திருக்கோலத்தில் இங்கு ஸேவை சாதிக்கிறார்!
*மத்தியரங்கம் - ஸ்ரீரங்கம்*
காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் - மத்தியரங்கம் (அனந்தரங்கம் என்றும் அழைப்பதுண்டு)!
முதல் திவ்யதேசமான இங்கே பெரியபெருமாள் *புஜங்க சயனத் திருக்கோலத்தில்* தெற்கு நோக்கி ஸேவை சாதிக்கிறார்!
மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்த ஒரே திவ்யதேசம் இதுவாகும்!
*அப்பாலரங்கம் - திருப்பேர்நகர்*
(கோவிலடி)
இது கொள்ளிடம் ஆறு இரண்டாகப் பிரியும் இடத்தில் *இந்திரகிரி* என்றழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது!
உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தைப் பெற்றதால், இத்தல எம்பெருமானுக்கு *அப்பக்குடத்தான்* என்ற திருநாமம்!
இங்கு பெருமாள் *புஜங்க சயனத் திருக்கோலத்தில்* மேற்கு நோக்கி ஸேவை சாதிக்கிறார்!
பெருமாள், இங்கு இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேய மஹரிஷிக்கு எமபயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாப விமோசனமும் அளித்த தலமாகும்!
நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருத்தலம் இது!
*சதுர்த்தரங்கம் - கும்பகோணம்*
காவிரி - காவிரி, அரசலாறு என இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருமிடமான கும்பகோணம் *சதுர்த்தரங்கம்* ஆகும்!
இங்கு பெருமாள் சங்கு, சக்கரம் மற்றும் சார்ங்கம் என்னும் வில் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி *உத்தான சயனத் திருக்கோலத்தில்* ஸேவை சாதிக்கிறார்! எனவே இவருக்கு *சார்ங்கபாணி* என்ற திருநாமம்!
இத்தலத்தின் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்!
*பஞ்சரங்கம் - திருஇந்தளூர்*
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம், பஞ்சரங்க தலங்களில் *பஞ்சரங்கம்* மற்றும் அந்தரங்கம் என்று போற்றப்படுகிறது!
இத்தலத்தில் அருளும் "பரிமள ரங்கநாதர்" ஆதிசேஷன் மீது *சதுர்புஜங்களுடன்* கிழக்கு நோக்கி *வீரசயனத்தில்* ஸேவை சாதிக்கிறார்!
கோயிலின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது விசேஷமானதாகும்!
பரிமள ரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜனும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து பூஜித்து வருவதாக ஐதீகம்!
சந்திரன், இங்குள்ள சந்திரபுஷ்கரணியில் நீராடி சாபம் நீங்கப் பெற்றமையால் *திருஇந்தளூர்* எனப்பெயர் பெற்றது!
திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்!
🙏🙏
No comments:
Post a Comment