வசந்த காலம் வருமோ-34
By N Krishnamurthy
சுப்புலக்ஷ்மிக்கு போன் செய்து ஞாயிற்றுக்கிழமைக்கு என்னென்ன பாடாலாம் என்று ம்ருதுளா கேட்டபோது "இதெல்லாம் இனிமே என்ன அதிகம் கன்சல் பண்ண வேண்டாம். உனக்கே ஒரு அளவுக்கு மெச்சூரிட்டி வந்திருக்கு. நீயே செலக்ட் பண்ணிட்டு என்ன பாட போறேன்னு என்கிட்ட சொல்லு. ஏதாவது மாத்தலாமா நான் சொல்றேன். இந்த கச்சேரில ரொம்ப பிரமாதமான சங்கீத ரசிகர்கள் எல்லாம் இருக்க மாட்டா. இசையை விரும்புற நிறைய பாமர ஜனங்க இருப்பா. அதனால நிறைய தமிழ் பாட்டு பாடினேன்னா கேட்கறவாளுக்கு சந்தோஷமா இருக்கும்" என்றாள்.
" சரி மாமி.நான் அப்படியே ஒரு லிஸ்ட் தயார் பண்ணி உங்களுக்கு சொல்றேன். அத நீங்க அப்ரூவ் பண்ணிடுங்க" என்றாள் ம்ருதுளா. பின்னர் சுப்புலக்ஷ்மியிடம் ம்ருதுளா பாட்டு லிஸ்ட்டை வாசித்துக் காட்டியதில்,அதில் ஏதும் திருத்தம் இல்லாமல் சுப்புலக்ஷ்மி அப்ரூவ் செய்தாள்.
வெள்ளிக்கிழமை நல்ல மழை. மழை வரும் என்று தெரியாததால், வெளியில் போகும் போது குடை எடுத்துக் கொண்டு போகாமல் போயிருந்தாள் ம்ருதுளா. வீட்டுக்கு திரும்பும் போது கொஞ்சம் மழையில் நனைய வேண்டியதாகி விட்டது. சனிக்கிழமை காலை எழுந்தது முதல் சிறிது இருமலுமலுடன், காய்ச்சலும் இருந்தது. மைதிலி பதறிப் போனாள். கோவில் கச்சேரி செய்ய முடியாது போனால், சன்மானம் இல்லாததால் தான் செய்ய மறுக்கிறாள் என்று அவப்பெயர் வந்துவிடுமே என்று பயந்தாள். உடனே சுப்புலக்ஷ்மிக்கு போன் செய்தாள். சுப்புலக்ஷ்மி அவளிடம்" ஒன்றும் கவலைப்படாதே. கொஞ்சம் நெலவேம்பு கஷாயம் குடிக்க சொல்லு. சாயங்காலத்துக்குள்ள சரியா போயிடும்" என்றாள். நிலவேம்பு கஷாயம் குடிக்க படாத பாடுபட்டாள் ம்ருதுளா. பிறகு அதில் தேனை சேர்த்ததும் தான் தொண்டையில் இறங்கியது.
சுப்புலக்ஷ்மி சொன்ன மாதிரி, சாயங்காலம் ஜுரம் கட்டுக்குள் வந்தது.ஆனால் தொண்டை கட்டியிருந்தது . அதற்கு அதிமதுரம் பொடி செய்து, அதை தேனில் குழைத்து இரண்டு முறை எடுத்துக் கொண்டாள் ம்ருதுளா. அன்று இரவு சூடான மிளகு ரசம் சாதமும், சுட்ட அப்பளமும் சாப்பிட்டாள். மறுநாள் காலை எழுந்தவுடன் குரல் ஓரளவுக்கு நன்றாக மாறி இருந்தது. இதை மைதிலியிடம் அவள் சொன்னபோது "நல்ல வேளை. கடவுள் தான் காப்பாற்றினார்" என்றாள் மைதிலி.
நேரம் ஆக ஆக தொண்டை முழுவதும் சரியானது.
மாலை மணி இருக்கும். வாசலில் காலிங் பெல் அழுத்திய சத்தம் கேட்டது.மைதிலி உடனே சென்று வாசல் கதவை திறந்தாள். வாசலில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. வாசல் படிக்கட்டில் ராஜேஸ்வரியும், சங்கரக க்ருஷ்ணனும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் மிகவும் பரபரப்புடன் மைதிலி "உள்ளே வாங்க" என்று அழைத்துச் சென்றாள். ஹாலில் அவர்களை உட்கார வைத்தாள். ராஜேஸ்வரி அவளிடம் "சாரி மாமி. உங்க கிட்ட முன்கூட்டியே சொல்லாம வந்துட்டோம். உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன். இவன்தான் இன்னைக்கு வயிலின் வாசிக்க போறான். இவன் ம்ருதுளாவை கச்சேரி விஷயமா கன்சல்ட் பண்ணணம்னு சொன்னான். அதனாலதான் முன்னாடி வந்துட்டோம்" என்றாள். "அதனால என்ன " என்று கூறிய மைதிலி" சாப்பிட காபி கொடுக்கட்டுமா" என்றாள்." எனக்கு முக்கால் டம்ளர் காபி, சர்க்கரை இல்லாமல், சங்கர க்ருஷ்ணனுக்கு அரை டம்ளர் சூடா பாலும் கொடுங்க" என்றாள் ராஜேஸ்வரி. மைதிலி ம்ருதுளாவின் ரூமுக்கு சென்று அவர்கள் வந்திருக்கும் விஷயத்தை கூறிய பின், சமையலறைக்குச் சென்று பாலை சுட வைத்து ராஜேஸ்வரிக்கு காபியும், சங்கர க்ருஷ்ணனுக்கு பாலும் தயார் செய்து கொடுத்தாள் . ம்ருதுளா ரூமில் இருந்து வெளியே வந்து இருவருக்கும் வணக்கம் சொன்னாள். சங்கர க்ருஷ்ணன் சிறிது ச்ரமத்துடன் தமிழில், "நீ என்ன பாட போறேன்னு தெரிஞ்சா வயலின் வாசிக்க நேக்க சௌகர்யமா இருக்கும்" என்றான்.ம்ருதுளா அவனிடம் பாடப்போகும் பாடல்களைப்பற்றி கூற, அப்பொழுது சங்கர க்ருஷ்ணன் ஒன்று, இரண்டு ராகங்கள் தான் இன்னும் பழகவில்லை, அதனால் அதை மாற்றி வேறு ஏதாவது சேர்க்க முடியுமா என்று கேட்டுக் கொண்டான்.அவன் கேட்டுக் கொண்ட படி, அவனுக்கு பழக்கமில்லாத இரண்டு ராக பாடல்களை நீக்கிவிட்டு, ஆரபி, காப்பி ராக பாடல்களை அந்த லிஸ்டில் சேர்த்துக் கொண்டாள் ம்ருதுளா.
அப்பொழுது ஃபோன் அடித்தது. சுப்புலக்ஷ்மி தான் பேசினாள்.
"நானும், ராதிகாவும் நேர கோயிலுக்கு வந்துடறோம். நீங்களும் வந்துடறேங்களா" என்று கேட்டாள். மைதிலி ராஜேஸ்வரி, சங்கர க்ருஷ்ணன் அங்கு வந்திருப்பதை கூறி
" நாங்கள் வந்து விடுகிறோம்" என்று கூறினாள்.
No comments:
Post a Comment