Saturday, December 9, 2023

வசந்த காலம் வருமோ?-37

 வசந்த காலம் வருமோ?-37

By N Krishnamurthy 

அடுத்த அரைமணியில் சாப்பாடு ரெடியானது. சக்ரவர்த்தியும்,கோமளாவும் சாயங்காலமே செய்து வைத்திருந்த அரிசி உப்புமாவை சாப்பிட்டு விட்டிருந்தார்கள்.

ஹாலில் ஒரு மூலையில் ஒரு பாயை விரித்து, அதன் முன்புறம் இரண்டு இலைகளை போட்டு ராஜேஸ்வரியையும், சங்கர க்ருஷ்ணனையும் அமரச்சொன்ன மைதிலி "எங்காத்ல டைனிங் டேபிள்ள சாப்படற பழக்கம் கெடையாது" என்றாள்.

"அதனாலென்ன.ஆதில நம்பெல்லாம் இப்படிதானே சாப்பிட்டோம்"என்றாள் ராஜேஸ்வரி. 

சங்கர க்ருஷ்ணன் பக்கத்தில் சாரங்கன் தட்டும் வைக்கப்பட்டது.பேன்ட் அணிந்திருந்த சங்கர க்ருஷ்ணன் தரையில் அமர சிரமப்படுவதை பார்த்த சாரங்கன்" வேஷ்டி தரட்டமா.கட்டிகரயா" என்றார். "No uncle.i will manage" என்று கூறி சங்கர க்ருஷ்ணன் பாயில் அமர்ந்தான்.

மைதிலி பறிமாற, ம்ருதுளா அவளுக்கு உதவி செய்தாள். சின்ன வெங்காய சாம்பார் மணம் சாப்பிடுவர்களை சுண்டி இழுத்தது.  வெண்டைக்காய் கரமது சுவை சொல்லி மாளாது.

நெய் தாளித்த தக்காளி  ரசம் சுவையா அல்லது சின்ன வெங்காய சாம்பார் சுவையா என்று பட்டி மன்றமே வைக்கலாம் போலிருந்தது. கச்சேரியின் முடிவில் வரும் ரசமான  துக்கடா போல, கெட்டி தயிரும், வாய்பாட்டிற்கு அனுசரணையாக அமையும் ம்ருதங்கம் போல மாஇஞ்சி ஊறுகாய் தயிர் சாதத்துக்கு அமைந்தது.

மைதிலி பாடுவதிலும் மட்டுமல்லாமல் சமையலிலும் எக்ஸ்பர்ட் என்று புரிந்தது.

அவர்கள் சாப்பிட்டு முடிக்கையில் மைதிலி"சமையல் எப்படி இருந்தது. உப்பு, காரமெல்லாம் திட்டமா தான் போட்டிருந்தேன்" என்றாள்.

" உண்மையை சொல்லணம்னா ரொம்ப நாள் கழிச்சு இவ்வளவு டேஸ்ட்டான சமையலை சாப்பட்றேன். அதனால ஒரு பிடி கூடவே சாப்டூட்டேன்." என்றாள் ராஜேஸ்வரி. சங்கர க்ருஷ்ணன் "இது போல சாப்பாடு கெடச்சா நான் இங்கே தங்கிடுவேன்" என்றான்.

அவர்கள் கை அலம்பிக்கொண்டு வந்ததும் ஒரு  தட்டில் கும்பகோணம் கொழுந்து வெற்றிலையும், ரசிக்லால் பாக்கும்,சுண்ணாம்பும் வைத்து ராஜேஸ்வரியை பார்த்து "போட்டுகோங்கோ"என்றாள் மைதிலி. ராஜேஸ்வரி அவளிடம் "எனக்கு வெத்தல பாக்கு போடற பழக்கமே இல்லை" என்றாள்.

இதைக்கேட்ட சாரங்கன் "மன்னார் குடி சொந்த ஊராயிருந்தாலும், வெத்தல பாக்கு  பழக்கம் இல்லேன்றது ஆச்சர்யமா இருக்கு" என்றான். இதற்கு ராஜேஸ்வரி ஒரு புன்னகையே பதிலாக தந்தாள்.

பின்பு ராஜேஸ்வரி "ம்ருதுளா சமைப்பாளா?" என்று கேட்டாள். அதற்கு மைதிலி " சாதாரண அயிட்டம் எல்லாம் சமைக்க கத்து கொடுத்திருக்கேன். ஸ்பெஷல் ஐட்டங்கள் சமைக்க  இன்னும் பழக்கவில்லை. கல்யாணத்துக்கு முன்னாடி அதையும் பழக்கி விடணும் என்று பாத்திண்ருக்கேன்" என்றாள்.

அப்போது அங்கே தண்ணீர் குடிக்க வந்த சக்ரவர்த்தி "மகாத்மா காந்திக்கும்,லால்குடி ஜெயராமனுக்கும்  ஒரு கனக்ஷன் இருக்கு.நோக்கு தெரியுமா?" என்றார் ராஜேஸ்வரியை பார்த்து. சற்றே  யோசித்த ராஜேஸ்வரி " தெரியலையே மாமா" என்றாள். சக்ரவர்த்தி

"மகாத்மா காந்திக்கு வயலன்ஸ் பிடிக்காது,லால்குடி ஜெயராமனுக்கு வயலின்ஸ்னா பிடிக்கும் " என்றார். இதை கேட்டு சிரித்த  ராஜேஸ்வரி "ரொம்ப நண்ணா இருக்கு" என்றாள். சக்ரவர்த்தி உற்சாகமாகி "இன்னும் இது போல கைவசம்நெறைய இருக்கு வயசானதால ஞாபகத்துக்கு வர மாட்டேங்கறது" என்று சொல்லிவிட்டு நடையை கட்டினார்.

பின்பு ராஜேஸ்வரியும்,சங்கர க்ருஷ்ணனும் விடை பெற்று சென்றார்கள்.மைதிலை ராஜேஸ்வரியிடம் " அடிக்கடி வந்து போயிண்டிருங்கோ" என்றாள்.இதற்கு ராஜேஸ்வரி "இப்பொதான் நெருங்கி பழகீட்டம்.இன்னும் கொஞ்சம் நெருங்கீட்டமான சௌகர்யமா இருக்கும் என்றாள். ராஜேஸ்வரியின் இந்த பேச்சின் உள் அர்த்தம் மைதிலிக்கு விளங்கவில்லை.

No comments:

Post a Comment