Tuesday, December 19, 2023

வசந்த காலம் வருமோ?-45

 வசந்த காலம் வருமோ?-45

By N Krishnamurthy 

மறு நாள் காலை பத்து மணிக்கு சாப்பிட்டு விட்டு பத்மநாபன்,ரங்கநாயகி,சாரங்கன் மூவரும் தி.நகர் சென்று ரங்கநாதன் தெருவில் ஒரு கடையில், ரவிக்கை பிட் மற்றும் சில ஐட்டங்களை வாங்கியபின், மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் போய்,ட்ரெயின் பிடித்து, பீச் ஸ்டேஷனில் இறங்கினார்கள். அங்கிருந்து ஆட்டோ பிடித்து , குடோன் தெருவில் உள்ள M.K.M பேப்ரிக்ஸ்ஸில் நுழைந்தார்கள்.

( ஒரு வேளை இவர்கள் அந்த இரண்டு கி.மீ தூரத்தை  நடேந்தே கடந்திருந்தால் சைனா பஜாரின்(இப்போதையை NSCB ROAD) நடைபாதை வழியாக செல்லும் சுகமான அனுபவம் கிடைத்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஆதலால் நடைபாதையில் நிறைய கடைகள் இருந்திருக்காது. மற்ற நாட்களில் துணிமணி, பழம், பூ கடைகள் ஏராளமாக இருக்கும்.பொருள்களும் சல்லிசாக (தமிழில் சொல்லப்போனால் 😁 Cheap ஆக) கிடைக்கும்.

என்னைப்பொறுத்தவரை சென்னையில் உங்களுக்கு பிடித்த இடம் கடற்கரையா அல்லது சைனா பஜாரா என்றால் நான் பின்னதை தான் துளி கூட  தயங்காமல் தேர்ந்தெடுப்பேன்.

இப்போது மெட்ரோவில் சொகுசாக பயணித்து ஹைகோர்ட்டில் இறங்கிக்கொள்ளலாம்.

இந்த ஏரியாவில் கிடைக்காத பொருட்களே இல்லை. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று கிடைக்கும்.

 *பெருமாள் முதலி தெரு* வில் வண்ண கண்ணாடி வளையல்கள் கொட்டிக்கிடக்கும்.

*குடோன் தெரு* 

ஜவுளிக்கான மையமாகும். புடவைகள், ஆயத்த(Ready made) ஆடைகள், துணிகள் ஏராளமாக கிடைக்கின்றன.

*நாராயண முதலி தெரு* 

அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் ரசாயனங்களுக்கு பெயர் பெற்றது.

*தேவராஜ முதலி தெரு* வில் கண்ணாடி பொருட்கள், செயற்கை வண்ணங்கள் மற்றும் சாயங்கள், படச்சட்டங்கள் ஆகியவை கிடைக்கும்.

*பண்டர் தெரு(பந்தர்தெரு* என்றால் தான் நிறைய பேருக்கு புரியும்)ஸ்டேப்லர்கள், ஸ்டிக்கர்கள், ஜிப் பூட்டுகள், பிளாஸ்டிக் கவர்கள், கைவினைப் பொருட்களுக்கும் பெயர் பெற்றது. 

ஈவினிங் பஜாரில் வீட்டு உபயோகப் பொருட்கள், பாத்திரங்கள், மற்றும் கட்லரிகளுக்கு பிரசித்தி பெற்றவை. 

*ஆடியப்ப நாய்க்கன் தெரு* 

உலர் பழங்கள் மற்றும் மசாலாப் பொருட்களுக்கான தெரு . முந்திரி, அக்ரூட் பருப்புகள், அத்திப்பழம் மற்றும் பாதாம் ஆகியவற்றை மொத்தமாக வாங்கலாம். இப்போது உலர் பழங்கள்(Dry Fruits) கோவிந்தப்ப நாய்க்கன் தெரு ஆரம்ப கடைகளில் கிடைக்கின்றன.

காசி செட்டி தெரு

இறக்குமதி பொருட்களுக்கு பிரபலமானது. பொம்மைகள், பரிசுப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கைப்பைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், கேமராக்கள் ஆகவற்றின் இருப்பிடம். மேலும் இங்கு பொம்மை வீடுகள், விளையாட்டு ஜிம்கள் மற்றும் இசை பொம்மைகள் ஏராளமாக கிடைக்கின்றன.

*கோவிந்தப்ப நாய்க்கன் தெரு* வில் மின்சாதன பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன. எலக்ட்ரானிக் மற்றும் மின் கம்பிகள், கம்பி வலைகள், கம்பி வெட்டும் கருவிகள், கேபிள்கள், பேட்டரிகள், மின்சார மோட்டார்கள் மற்றும் கனெக்டர்கள் போன்றவைகள் கிடைக்கும்.

 *பிராட்வே* தெருவில் சைகிள் மற்றும் கண் கண்ணாடி கடைகள் ஏராளம்.

 *ஸ்டிரிங்கர்ஸ் தெரு* முழுதும் காலணி கடைகளால் நிரம்பி வழியும்.

இன்னுமுள்ள நிறைய தெருக்களை பற்றி நான் எழுதவில்லை. இதற்கே மூச்சு முட்டுகிறது.

சாரங்கன்,ரங்கநாயகி மற்றும் பத்பநாபன் M.K.M கடை வாசலில் எவ்வளவு நேரம்தான் நிற்பார்கள்? )

கல்லாவில் இருந்த ஓனர் M. கந்தசாமி முதலியார் அவர்களை வரவேற்றார். கல்யாணத்திற்கு வேஷ்டி வாங்க வந்திருப்பதை அறிந்து ஜரிகை மற்றும் மில் வேஷ்டிகளை சேல்ஸ்மேனை விட்டு  காண்பிக்க வைத்தார். ஒருமணி நேரம் செலவழித்ததில் வேண்டிய எல்லாம் கிடைத்தது. 

சாரங்கன் தேவராஜ முதலி தெருவிலிருந்த சென்னகேசவ பெருமாள் கோவிலுக்கு அவர்களை அழைத்து சென்றான். நடை சாத்தியிருந்ததால் பெருமாளின் தரிசனம் கிடைக்கவில்லை.

வெளியில் இருந்தபடியே சேவித்தார்கள். அங்கிருந்த ஆட்டோவை பேரம் பேசி வீட்டிற்கு இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தனர்.

சாயங்காலம் காபி முடிந்ததும், ரங்க நாயகி கோமளத்திடம் பத்திரிகை அனுப்பவுதற்ககு, தங்கள் பக்க   உறவுகள் யார் யாரென்றும், எங்குள்ளார்கள் என்ற விவரத்தை குறித்துக்கொண்டாள். 

இரவு ட்ரெயின் பிடிக்க வேண்டியிருந்ததால் மாலை ஏழு மணிக்கே சப்பாத்தி,தக்காளி சட்னி தயார் செய்தாள் மைதிலி. கிளம்பு முன் ரங்கநாயகி,பத்மநாபன்,வசுமதி ஆகியோர் சக்ரவர்த்தி, கோமளா ஆகிய இருவரையும் நமஸ்கரித்தார்கள். அது போல மைதிலி, சாரங்கன், ம்ருதுளா மூவரும் ரங்கநாயகி,பத்மநாபனுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.  பத்பநாபனுக்கு தேங்காய், வெற்றிலை,பாக்கு,பழத்தோடு ரூபாய் நூறும்,வேஷ்டி,துண்டும், 

ரங்க நாயகிக்கு குங்குமம், தேங்காய் வெற்றிலை, பாக்கு, பழத்தோடு ரூபாய் நூறும், ரவிக்கை துண்டும் வைத்து கொடுக்கப்பட்டது.

சாரங்கன் ஒரு கவரில் ரூபாய் 20,001 ஐ வைத்து பத்மநாபனிடம் கொடுத்தான். 

ம்ருதுளா வசுமதியை கட்டிக்கொண்டு பிரியா விடை கொடுத்தாள்.

அன்றிரவு பாண்டியன் எக்ஸ்ப்ரசில் மூவரும் மதுரைக்கு ப்ரயாணமாயினர். சாரங்கன் எக்மோர் சென்று அவர்களை வழி அனுப்பி வைத்தான்.

No comments:

Post a Comment