🙏 நமஸ்காரம்
48. திருப்பாடகம்
மூலவர் - பாண்டவ தூதர். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம். மிகப் பிரம்மாண்டமான திருமேனி.
தாயார் - ருக்மணி சத்தியபாமா
உற்சவர் - பாண்டவதூதர்
விமானம் - பத்ர விமானம், வேத கோடி விமானம்
தீர்த்தம் - மத்ஸய தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமாதேவீ ஸமேத ஸ்ரீ பாண்டவதூதாய நமஹ
வழித்தடம்:
காஞ்சிபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். காஞ்சிபுர பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அடையும் வண்ணம் அமைந்துள்ளது.
பாசுரம்:
நின்றதெந்தை யூரகத்தி ருந்ததெந்தை பாடகத்து
அன்றுவெஃக ணைக்கிடந்த தென்னிலாத முன்னெலாம்
அன்றுநான்பி றந்திலேன்பி றந்தபின்ம றந்திலேன்
நின்றதும் மிருந்ததும்கி டந்ததும்மென் நெஞ்சுளே - (815)
- திருச்சந்தவிருத்தம் - 64
பெருமானின் நின்ற திருக்கோலம் திரு ஊரகத்தில் இருந்த திருக்கோலம் திருப்பாடகத்தில், கிடந்த திருக்கோலம் திருவெஃகாவில். இத்தலங்கள் எல்லாம் நான் ஜென்மம் எடுப்பதற்கு முன்பாகவே எம்பெருமான் அர்ச்சா ரூபியாக எழுந்து அருளிய திருத்தலங்களாகும். எம்பெருமான் அர்ச்சா மூர்த்தியாகி இங்கு எழுந்து அருளிய காலங்களில் நான் பிறந்ததில்லை. இப்போது பிறந்துவிட்டேன். இந்த மூன்று திருக்கோலங்களையும் என் நெஞ்சினுள்ளேயே பெருமாளுக்கு அமைத்துக் கொண்டேன். அதனால் நான் இனி மறந்திலேன். அமர்ந்திருந்து கிடந்த மூன்று திருக்கோலங்களும் என் நெஞ்சைவிட்டு நீங்காதவைகள். எனவே இத்திருக்கோல எம்பெருமான்களை விட்டு எனது நினைவு அகலாது. இந்த எண்ணமான ஞானம் வருவதற்கு முன்பு பிறந்தும் நான் பிறவாதவனாக இருந்தேன். இந்த ஞானம் பிறந்த பின் (ஞானத்திலே ஆத்ம சொரூபம் கண்டு தன்நிலை இழந்து எம்பெருமான் கைங்கர்யமே பிரதானமானது போல) நான் மறந்திலேன் என்பதும் ஓர் பொருள். இவ்விதம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்
பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய நால்வரால் 6 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.
பாசுரம் பதவுரை:
எந்தை - எம்பெருமான்
ஊரகத்து - திருவூரகத்திலே
நின்றது - நின்றருளினதும்
பாடகத்து - திருப்பாடகத்திலே
இருந்தது - வீற்றிருந்ததும்
வெஃகனை - திருவெஃகாவில்
கிடந்தது - திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம் - நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று - அப்போது
நான் பிறந்திலேன் - நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்தபின் - அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன் - மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே - ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.
பாசுரம் விளக்க உரை:
உலகத்திலே ஒருவனுக்கு ஒருவன் கடன்கொடுத்திருந்தால் அந்தக் கடனைத் திருப்பிவாங்கிக் கொள்வதற்காகக் கடனாளி வீட்டிலேவந்து கேட்கும்போது முதலில் சிலநாள் நின்றுகொண்டே கேட்டுவிட்டுப் போய்விடுவன்: அவ்வளவில் காரியம் ஆகாதே; மறுபடியும் வந்து சிலநாள்வரையில் திண்ணைமீது உட்கார்ந்து கொண்டு கடனை நிர்பந்தித்துப்போவன்; அவ்வளவிலும் கைபுகாவிடில் ‘கடனைத் தீர்த்தாலொழியப்போல தில்லை’ என்று படுக்கைபடுத்து நிர்ப்பந்திப்பன்; இப்படியாகவே எம்பெருமானும் அஸ்மதாதிகள் செலுத்தவேண்டிய கைங்கரியக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக ஓரிடத்தில் நின்று பார்க்கிறான். மற்றோரிடத்தில் வீற்றிருந்து பார்க்கிறான்; இன்னுமோரிடத்தில் சாய்ந்து பார்க்கிறான்- திருவூரகத்திலே நீற்கிறான், திருப்பாடகத்திலே இருக்கிறான்; திருவெஃகாவிலே கிடக்கிறான்; இப்படி நிற்பது இருப்பது கிடைப்பதாகிறவிவை எப்போதென்னில்; நான் ஆபிமுக்யம் பண்ணப்பெறாத காலத்திலேயாய்த்து, உபயவிபூதிநாதனான தான் ஸம்ஸாரியான வெனக்கு ருசிபிறவாதகாலமெல்லாம் ருசிபிறக்கைக்காக நின்றா னிருந்தான் கிடந்தான்; எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அளவுக்கு ருசிபிறக்கைக்காக நின்றானிருந்தான் கிடந்தான்; எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அவனுக்கு ஸாத்யம் (பலன்): அதற்கு ஸாதகம்- நிற்றவிருத்தல் கிடத்தல்கள், பலன் கைபுகுந்தவாறே திவ்ய தேசங்களிலே நிற்றலிருத்தல் கிடத்தல்களைத் தவிர்த்து (“அரவத்தமணியினோடு மழகிய பாற்கடலோடும். அரவிந்தப்பாவையுந்தானு மகம்படி வந்து புகுந்து” என்னுமாபோலே) அவ்விருப்புகளையெல்லாம் எனது நெஞ்சிலே செய்தருளினானென்கிறார்.
இரண்டாமடியில், நானிலாத என்ன வேண்டுமிடத்து என்னிலாத என்றதை வடமொழியில் ஆர்ஷப்ரயோகங்களைப் போலவும் சாந்தஸப்ரயோகங்களைப்போலவும் கொள்க: ‘அப்பனையென்று மறப்பன் என்னாகியே” என்ற திருவாய்மொழிப் பிரயோகமும் நோக்கத்தக்கது.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
ஸ்தல வரலாறு:
எம்பெருமான் கிருஷ்ணவதாரத்தில் பாண்டவர்கள் பொருட்டு துரியோதனன் சபைக்கு தூது சென்றான். இந்தக் கண்ணன்தான் பாண்டவர்களின் பெரிய பலம். இவனை அழித்துவிட்டால் பாண்டவர்களை எளிதில் வென்றுவிடலாம். என்று எண்ணிய துரியோதனன், கண்ணன் அமரக்கூடிய இடத்திற் கருகில் ஒரு நிலவறையை உண்டாக்கி அதன்மீது பசுந்தலைகள் இட்டு மூடி அதன் மீது ஒரு ஆசனத்தை அமைத்தான். இதில் கண்ணன் அமர்ந்தவுடன் இந்த ஆசனம் நிலவறைக்குள் விழுக அங்கிருக்கும் மல்லர்கள் கண்ணனை கொன்றுவிட வேண்டும் என்பது துரியோதனன் திட்டம். துரியோதனன் திட்டப்படி நிலவறை சரிந்துவிழ உள்ளே விழுந்த கண்ணன் நொடிப்பொழுதில் மல்லர்களை மாய்த்து விஸ்வரூபனாய் நின்றார். பாரத யுத்தம் முடிந்த பிறகு வெகுகாலத்திற்குப் பின் ஜெனமேஜெய மகராசன் வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக்கேட்டு வரும்போது ஸ்ரீகிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் இருந்து தூது சென்றவிடத்து எடுத்த பிரம்மாண்ட திருக்கோலத்தை மகாபாரதம் கை செய்த மாவுருவத்தை தானும் சேவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்கு உபாயம் கேட்க சத்தியவிரத ஷேத்ரமான காஞ்சிக்கு சென்று அஸ்வமேதயாகம் செய்து யாகத்தின் முடிவில் நீ விரும்பிய திருக்கோலத்தைக் காணலாமென்று முனிவர்கள் கூற மன்னன் அவ்விதமே செய்தான். யாகத்தின் திரண்ட பயனாக பிரம்மாண்டமான கண்ணன் யாக வேள்வியில் தோன்றி மன்னருக்கும் ஹாரித முனிவர்க்கும் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு.
சிறப்பு:
இத்தல இறைவன் கண்ணன் திருக்கோலம் என்பதால், இத்தல இறைவிக்கும், கண்ணனின் மனைவிகளான ருக்மணி தாயார், சத்யபாமா தாயார் என்பதே திருநாமம். தாயார்கள் இருவரும் தனித்தனி சன்னிதியில் அருள்கின்றனர்
எம்பெருமானுக்கு எத்தனையோ திருப்பெயர்கள் இருக்க பக்தர்களின் கைங்கர்யத்திற்காகவே சென்ற பாண்டவ தூதன் என்ற தனது கைங்கர்ய திருநாமத்தையே கொண்டு இத்தலத்தில் இருப்பது ஒரு தனிப்பெருஞ் சிறப்பாகும். இவ்விடத்தில் பிராட்டியும் கம்பீரமாகத் திகழும் பாண்டவதூதரின் திருமார்பை விட்டகலாது கேட் போருக்குப் பயனளிக்க (புருஷாகாரமாக) சிபாரிசு செய்து எழுந்தருளியுள்ளார். எண்ணரும் சிறப்புக் கொண்டதன்றோ இத்தனித்துவம்.
அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட வேறெங்கும் கூட சேவிக்க முடியாது.
கர்ப்பக் கிரஹத்தின் அமைப்பை உற்று நோக்கினால் நிலவறையின் மொத்தப்பகுதியை அப்படியே பெயர்த்து தலைக்கு மேல் குவித்து வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் தோன்றுகிறது. மிக சிறிய அளவில் இச்சன்னதி அமைந்திருந்தாலும், கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது மட்டுமன்றி பேராச்சர்யம் தருவதுமாகும்.
எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்ததெனச் சொல்லலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலம் என்றாலே அது ஊரகம், பாடகம், வெஃகா தான் என்று சொல்லாமல் சொல்வதைப் போலவும், எல்லோராலும் மூன்று திருக்கோலங்கட்கு இந்த மூன்று ஸ்தலங்கள்தான் என்று அறியப்பட்டதாயும், காஞ்சி மண்ணிற்கே தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்றுத் தந்த ஸ்தலங்களாக விளங்குகின்றது என உணர முடிகிறது.
108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்திற்கு வேங்கடமலையானையும், அமர்ந்த திருக்கோலத்திற்கு பத்ரிநாதனையும், கிடந்த திருக்கோலத்திற்கு திருவரங்கத்து அரங்கனையும் தனித்துவம் படுத்தலாமென்றிருந்தாலும் ஆழ்வார்கள், நின்ற, கிடந்த, இருந்த திருக்கோலங்கட்கு காஞ்சியில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களையே குறித்து மங்களாசாசனம் செய்துள்ளனர் என்று கொள்ளலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலமெனில் அவைகள் ஊரகம்,பாடகம், வெஃகாதான் பிறவன்று என்றும் உரைக்கலாம்.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/x02PSTatTAc
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/118830883250681/?sfnsn=wiwspmo&extid=9IkANURlkJbSMMzf
No comments:
Post a Comment