87. பாட்டி (சிசீ6) #ganeshamarkalam
அப்பத்தா பேர் அம்சவல்லி. யாராச்சியும் கேட்டா அம்சான்னும். முழுப்பேர் பிடிக்காது. எங்ககிட்ட பிரியமா இருக்கும். பிடிவாதம் வந்திச்சுன்னா பாத்ரகாளிதான்.
சேர்ந்துதே வாள்ந்தம். சீத்தாராம்பாளயத்திலே. எங்கேன்னு கேப்பீக. திருச்செங்கோடுகிட்டே. டவுன் போலீஸ் ஸ்டேஷன்லேந்து வடக்க 1.5 கிமீ போனா வரும். அங்கே என்ன விசேசம்பீங்க. ஒண்ணுமில்லை.
எங்கப்பா கூடப் பொறந்தவங்க 2 பேர். இவுகதே சின்னவரு. எல்லாருக்கும் கண்ணாலம் ஆகி இங்கிட்டுதான் வாசம். ஆனா பாருங்க எல்லாருக்கும் தலா 2 பசங்க. அம்சாவுக்கு இதில் பெரீய வருத்தம். “எனக்கும் எல்லாமும் ஆம்பள்ள புள்ளயாப் போச்சுது, அதுகளுக்கும் பசங்களா?” புலம்பிட்டே இருக்கும். இளையவனோடத்தான் இருப்பேன்னுட்டு எங்க கூடவே தங்கிடிச்சு. அப்பப்ப போவும், உடனே வந்திரும். “வீட்டுக்கு வந்தது சொன்ன பேச்சக் கேக்க மாட்டுது!” யாரச் சொல்லுதாகன்னு தெரியும். கேட்டிட்ட எங்கம்மா மொகத்தை சுளிச்சு வச்சிக்கும். உடனே அப்பத்தா “என் கடைசீ மருமவதான் சொல்பேச்சு கெட்டு நல்ல படியா குடும்பம் நடத்துது”. உடனே அம்மா “களைப்பா வந்திருக்கீக சுக்கு காபி போட்டுத் தாரேன்!” எளுந்து போய் அடுப்ப பத்த வைக்கிம்.
எங்கம்மாகிட்டே அப்பத்தா ஏன் இம்புட்டு ஆசையா இருக்குன்னு ஒருநா தெரிஞ்சிக்கிட்டம். எப்படியாவது இவ தனக்கு ஒரு பேத்திய பெத்துத் தருவான்னுதே. ஏன் பெரியம்மாங்க செய்ய மாட்டாகளான்னா தெரியலை. விவரம் புரிஞ்சதும்தான் அவிங்க ரெண்டுக்கப்பரம் வேண்டாம்னு கருத்தடை செஞ்சு கிட்டாங்கன்னு. அப்பத்தாக்கு அங்கே போய் தங்கி ஓண்ணும் ஆப்போரது இல்ல. எங்க காது கேக்க, அப்பால அவிங்களுக்குள்ள தனியா பேசிக்கிம். “என் வாயில் எப்படி வெல்லச்சக்கரை போடுதே?” “உங்க புள்ளகிட்டே சொல்லுங்க. நாமட்டுமா செய்ய முடியர காரியம்? அடுத்தநா அப்பா மாட்டிக் கிடுவாக. “என்னால் முடியாதும்மா. மூணூ வச்சு கஷ்டம், சிலவு எப்படி சமாளிக்க?” “அதெல்லாம் மகமாயி பாத்துக்கிடிவா”. “மகமாயி செல் நம்பர் வச்சிருக்கியா என்ன?”
“ஏண்டா உன்னால் முடியாமப் போச்சுதா?” “பொறப்பது பொட்டப் புள்ளயாத்தான் இருக்கும்னு எப்படி சொல்லுதே? தினம் வீட்டுக்கு வந்தா துன்பப் படித்துதே, ஓடிப் போயிக்கரேன்”. “ஒரு பேத்திய என் மடீலே போட்டிட்டி எங்கே வேணும்னாலும் போய்க்கி”. வீட்டுக்குள்ளேந்து வந்த அம்மா “இப்பவே பேச்ச நிப்பாட்டல யாருக்கும் சோறு கிடையாது”. அப்பத்தா வெளீலேதான் படுக்கும். கூட என்னையிம், அண்ணனையிம் பிடிச்சுப் போட்டு தூங்க வைக்கிம். அது தூங்காது. ராத்திரி முளிச்சிருந்து வூட்டுக்குள்ளாந்தி எதுனாச்சியும் சத்தம் வருதான்னு ஒட்டுக் கேக்கும். என் வயசுக்கு என்ன சத்தம் எதிர்பாக்குதுன்னு தெரியாது. சிலது காதில் விள அப்பாடான்னு நெஞ்சை ஒருக்கா தொட்டு கும்பிட்டுட்டு திரும்பிப் படுத்து தூங்கிடும். எனக்கு தூங்க ரெம்ப நாளியாகிம்.
நான் கண்ணன் 4ஆப்பு, அண்ணன் முகிலன் 6ஆப்பு படிக்கப்போ எங்கம்மாவுக்கு இன்னொரு ஆம்பளப் பிள்ள பொறந்திச்சு. நர்ஸாயா வந்து சொன்னதும் அப்பத்தா கதிகலங்கிப் போச்சு. நர்ஸுக்கும் வார்ட் பாயிக்கும் காசு தர மாட்டேன்னு உக்காந்துகிச்சி. அப்பிரவு என்ன நினைச்சுச்சோ அம்மாவப் பாக்க மூஞ்சில சிரிப்ப வரவளைச்சிட்டு எங்களையும் கூட்டிட்டு போச்சு. அம்மாவ மகராசின்னு சொல்லிட்டு கூடவே ஒண்ணு சொல்லீச்சு, “அடுத்தது பேத்தியாத்தே இருக்கோணும், சொல்லி புட்டேன். அம்மா அளக்கிளம்பிச்சு. அப்பா சமாதானப்படுத்த சமாளிச்சம்.
தம்பிக்கு சுந்தர்னு பேரு. அப்பத்தாதான் பாத்துகிச்சு. எங்களை எப்படி கொண்டாடிச்சோ அதேபோல் தம்பியையும். குற வைக்கல. ஆனா மடீலே போட்டு கொஞ்சரப்ப என் செல்லம் சுந்தரீங்கிம். பொட்டப் பிள்ளைக்கு செல்லப்பேர் வச்சு கூப்பிடுதாப்போல் செய்யும். ஸ்கூல் விட்டதும் அப்பத்தாவும் “சுந்தரியும்” குலாவதை பாக்க பொளுது போயிடிம்.
வெள்ளிக்கிளமை வந்திச்சுன்னா சுந்தர எண்ண தேய்ச்சு அப்பத்தா குளிப்பாட்டும். பிள்ளய எடுத்துட்டி போவப்போ பின்னாடியே அம்மா வந்து திட்டும், நாளைக்கி குளிச்சிக் கிடலாம், இன்னிக்கி வேணாம்னு. அப்பத்தா கேக்காது. அது கையிலேந்து குளந்தய பிடிங்கவா முடியிம்? தாண்டவம் ஆடிக் காட்டிடிம். ஒரு வெள்ளிக்கிளமை யாரோ அரசியல்வாதி செத்துட்டாகன்னு ஸ்கூல் லீவி. நானும் அண்னணும் தம்பி படப்போர பாட்ட முளுசா பாத்திடணிம்னு கொல்லப் பக்கம் வந்து நின்னம்.
சீலய முட்டிக்கி மேல் வளிச்சு நளுவிடாம இருக்க முளங்கால் இடைலே பிடிச்சிகிடிச்சி. தோளில் அளுதிட்டே இருந்த சுந்தரை குப்பர பாதத்துப் பக்கமா தலை போட்டு அவன் குண்டீலே ரெண்டி தட்டு தட்டிச்சி. அப்பரம் கிளக்கே திரும்பி உக்காந்து கிடிச்சு. என்னத்தே விரகடுப்புல கொதிச்சிட்டிருந்த நீர எடுத்தாந்து டப்புலெ ஊத்தச் சொல்லி, அதில் வெதுவெதுப்பா நீர் சேர்த்ததும் நல்லெண்ணய அப்படியே இவன் மேல் கொட்டி உடம்ப நீவி விட சுந்தர் தூங்கிட்டே! தூங்கர பிள்ளய எப்படி குளிப்பாட்டும்? அதுதே அப்பத்தா சாமர்த்தியம்!
பாத்திட்டிருக்கப்பவே எல்லாம் நடந்திச்சு. எண்ண தடவிப் பிட்டு லெசா நீர் ஊத்தப்ப முளிச்சிட்டான். தூக்கின தலய தட்டி அமுக்கிட்டு சீவக்காப் பொடியை குளச்சு வரவரன்னு தேய்க்க திரும்பவிம் தூங்க, அப்பரமா சுடச்சுட நீர் விடப்ப எளுந்து சத்தமா அளக்கிளம்ப, அப்பத்தா கண்டிக்கிடலை. நிமித்திப் போட்டுக்கரா. இப்ப தலை துடையில். ஆனா அப்பத்தாவ அவன் கண் பாத்திடிச்சு. இன்னும் சத்தமா கத்த அம்மா ஒடிவர, “ஒண்ணுமில்ல நீ போய்க்கிடு,” இவன் முகத்தில் சீயக்கா போட கண்ணுல பட்டு இன்னும் அள, நாங்க நினெச்சுகிடுதம். நம்பளையும் இப்படித்தானே செஞ்சிருக்கும்!
குளிச்சு முடிக்கையில், எங்களுக்கு செய்யாதத அப்பத்தா சுந்தருக்கு செஞ்சா. இடுப்பில் முடிச்சி வச்சிருந்த மஞ்சக் கிளங்க எடுத்து தரைலே நசநசன்னு தேச்சு அதில் வலது கைல வளிச்செடுத்து அவன் முகத்தில், அக்குளில், கக்காவுலே .தடவி அப்பால இன்னும் வென்நீர வுட்டு முடிக்க, சுந்தர் சுந்தரியாப் போனதை பாத்துகிடுதம். “அம்மாகிட்டே சொல்லாதீக. முட்டாய் தாரேன்”. எனக்கு மின்னே முகிலம் சரீன்னு தலயாட்டிட்டான்.
ஒருநா அது மாரியாத்தா கோவிலுக்குப் போயிருக்கப்ப, அம்மாகிட்டே அப்பத்தா செஞ்ச கூத்தெயிம் விவரமா சொல்லிட்டம். அது அப்பாவ மடிக்கிச்சு. அப்பா “நான் என்ன செய்யன்னு மட்டும் சொல்லு”. “ஆமா! உங்ககிட்டே வந்து சொல்லுதேன், அதுக்கு மரத்துலே முட்டிக் கிடலாம்”. ஆம்பிளை பிள்ளய பொம்பிளயா மாத்த முடுயுமா? இதிதான் வேணிம்னு ஏன் ஆசைப்படுதாக? ஒருநா ஸ்கூல் விட்டு வரப்ப நாங்க பாத்தது அதிர்ச்சியாப் போச்சி.
கவர்மென்ட் பாய்ஸ் ஸ்கூல். அதுலேந்து சங்ககிரி போவுர ரோட்டில் வந்தா 2 கிமீலே சீத்தாரம்பாளயம். நடந்தே வந்திடிவம். 330 இருக்கிம் எதுத்தாப்புல பஸ் ஸ்டாப்பில் அப்பத்தா. இடுப்பில் 3 வயசு பொம்பளப் பிள்ள ஒண்ண பிடிச்சிட்டு கையக் காட்டி ஷேர் ஆட்டோல ஏறிக்கிடத பாக்கம். அண்ணனை கேக்குதேன், “அப்பத்தாகூட யார் அந்த பிள்ள?” பட்டுப் பாவாடை, தலைலே ஹேர்கிளிப். நெத்தீலே ஸ்டிக்கர் பொட்டு. காலில் கொலுசும். “என்னடா லூசு! தம்பிய அடையாளம் தெரியாமப் போச்சுதா?”
வரட்டும் கேப்பம். பாவாடை கட்டிவிட்டது அம்மாக்குத் தெரியிமா? போய் சொல்லிடலாமா? எங்கேயோ தனியா கூட்டிட்டு போகுதேன்னி கவலை அப்பிகிச்சு. வந்ததும் ரோட்டில் பாத்ததை சொல்லிட்டம். “அச்சச்சோ, கிளவி சும்மா இருக்காதா, இப்ப என்னாவும்? வேலைக்குப் போயிருக்க அப்பாவ செல்லில் கூப்பிட்டு விசயத்தை சொல்லிடுங்கடா, அவகளாச்சி அவிங்க ஆத்தாவாச்சு, எனக்கு என் குளந்த முளுசா திருப்பித் தந்திடணிம். சொல்லிப் பிடுங்க அம்புட்டுதே”. முளிசா கூட்டியாராம எப்படி கூட்டியாரும் அப்பத்தா? சடடுன்னு அம்மா விசனம் புரிஞ்சிச்சு. எங்களுக்கிம் பயம் தொத்திகிடிச்சு. “வா திருச்செங்கோடு போய் பாப்பம்.” போட்டது போட்டபடி விட்டிட்டு பூட்டிட்டு கிளம்பிட்டம். அப்பா, கருவேப்பம்பட்டி போனவரு “சைக்கிளில் வந்திடுதேன், கைலாசநாதர் கோவில் வாசலில் சந்திச்சுக் கிடலாம்.”
அப்பத்தா சுந்தரோட கோவிலுக்குத்தே போகும். எல்லா கோவிலுக்கும் போய்த் தேடலாம்னி. முளுசா 3 மணிநேரம் ஊரில் இருக்கிம் எல்லா இடமும் தேடியாச்சி. மலைமேல் உச்சிப் பிள்ளையார், அர்தநாரீ, அப்பரவு கீழே மாரியம்மன் ஆஞ்சநேயர்னு ஒரு இடம் விடலை. அப்பத்தாவக் காணம். “குளந்தைக்கு அப்பத்தா ஒண்ணும் செஞ்சிடாது.” ஆறிதல் சொல்லீட்டு வீட்டுக்கு வந்திட்டம்.
வந்தா “எங்கே வீட்ட பூட்டிட்டு எல்லாரும் போயிட்டீக, வந்து 1 மணி நேரமா இருக்கம், பிள்ளைக்கு பசி வந்திடிச்சு. வாளப்பளம் கொடுத்தே. அம்மா எங்கேன்னு கேட்டிச்சு. போவதுன்னா சொல்லீட்டுப் போமாட்டீகளா?” அப்பத்தாவோடா சுந்தரை முளுசா பாத்ததில் அம்மாக்கு ரெம்ப சந்தோசம். பிள்ளய தன் கையில் வாங்கி பிடிச்சு யாரும் பாக்காதப்ப தடவிப் பாத்துகிடிச்சு. அப்பத்தா அப்படி ஏதாவது செய்யுமா என்ன? இருந்தாலும் டவுட். அப்பா “ஏம்மா இவகிட்டே சொல்லாம பிள்ளய தூக்கிட்டு கிளம்பின?” “இவகிட்டே சொல்லிட்டுத்தே எல்லா வேலையும் செய்யணுமா. மலைக் கோவில் போயிட்டு வரேன், 3 மணிக்கு கிளம்பி நடந்தே போயிரலாம்னு. முடியலை, ஷேர் ஆட்டோ பிடிச்சு சாமி கும்டிட்டு வந்தாச்சி. கதவத் தொற பாத்ரூம் போகணிம். ரெம்ப நேரமா வயித்தில் வச்சுகிட்டு”. அப்பா தொறக்கல
“எதுக்கு இன்னைக்கி கோவில்? நம்மூர் கோவிலிம் மலையிம் ஓடிப்போப் போவுதா என்ன? நானும் வந்ததும் எல்லாரும் சேர்ந்து போயிருக்கலாமில்ல?” அலய விட்ருச்சே அப்படீன்னு அப்பாக்கு கொவம். காமிச்சுக்காம, வூட்டுக்காரி மின்னாடி அப்பத்தாவ திட்ட வேண்டாம்னி. “இல்லைடா! இந்த சுந்தரிய வச்சிட்டு மனசு அலை பாஞ்சிச்சு. அதான் நம்மூர் தெய்வம் அர்தநாரிய போய் பாத்திட்டு அங்கே குறி சொல்லுதாக இதை வச்சி கேட்டுப் புடணிம்னி. என்ன சும்மா ஃபிலிம் காட்டுதே? உம்பிள்ளய தூக்கிட்டு ஓடிடுவேன்னு நினைக்கியா? நீயா நினைக்கியா இல்லை அது ராத்திரி அப்படி சொல்லிக் குடுக்கா?” கரெக்டா அந்த டயத்திள் அம்மாவிம் பேச்சில் பூந்துகிட்டி. “ஆமாம் செஞ்சாலும் செய்வீக!” அப்பத்தா அளக் கிளம்பிடிச்சு. அளுதுகிட்டே சொல்லுது
“இங்கே வாடி பிள்ள. நடந்ததைச் சொல்லுதேன். மலைமேல் அர்தநாரிகிட்டே என் குறைய வச்சேன். பேரப்பிள்ள பொம்பளைக் குட்டியா வேணிம், அதைப் பாத்திட்டுத்தே என் மூச்சு போகணும்னி. இந்த சுந்தரி மாதிரி ஒண்ணு என் பையன்கிட்ட வாங்கித்தான்னு. தெய்வம் வந்து பெசிச்சுடீ.” “ஆண் என்ன பெண் என்ன, எல்லாமும் சமம்னு காட்டத்தானே நான் இப்படி பப்பாதியா நிக்குதேன். ரெண்டையும் ஒண்ணா பாவிச்சு இதையும் நல்லா வளர்த்துப் போடு. அப்படித்தான் செய்யுதேன் ஆனா என் மனக்குறை தீரலைன்னவே, சரி வெள்ளிக்கிளமை மட்டும் பாவாடை மாட்டு, சொச்ச நா உன் பேரனுக்கு மாட்டிக்கிட நல்ல ட்ரவுசர் சட்டை புதுசா வாங்கிட்டுப் போ. உன் பிரார்த்தனை பலிச்சிடும். அடுத்தது பேத்திதான்னு சொல்லி எதையும் அதை பெத்தவளுக்கு பிடிக்கலைன்னா செய்யாதேன்னும் சொல்லீச்சு. இதைப் பாரு 3 செட் பசங்க உடுப்பு வாங்கியாந்தேன் சுந்தருக்காக.” ஆப்பத்தா பின்னாடி வச்சிருந்த பைய எடுத்துக் எல்லாம் காட்டிச்சு.
எல்லாரும் உள்ளே வந்துகிடுதம், அப்பத்தா மட்டும் வாசல்லேயே கிடக்கு. பாத்ரூமிம் போகல. அடக்கி வச்சிகிட்டிச்சான்னு தெரியல.
அண்ணந்தான் “வா அப்பத்தா உள்ள!” கூப்பிட மொள்ள எளுந்து வந்திச்சி. அன்னைக்கு ராவுக்கு பசியில்லைன்னு சாப்பிடாம தூங்கிடுச்சு. யாரும் பேசிக்கிடலை. நாங்களிம்தான். காலேல நாங்க எந்திரிச்சம், அது எந்திரிக்கல. கூட்டியாந்த டாக்டர் மூச்சு இல்லைன்னு சொல்லிட்டி போனாரு. எல்லாரும் இடிஞ்சி போயிட்டம்.
அந்த ஒத்தப் பாவாட பீரோவில் பத்திரமா. அதைப் பாத்தா அம்மா இன்னைக்கிம் அளுதிடும்.
No comments:
Post a Comment