🙏 நமஸ்காரம்
57. திருப்புட்குழி
மூலவர் - விஜயராகவப் பெருமாள் (நான்கு புஜங்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.)
தாயார் - மரகதவல்லி (தனிக்கோவில்)
உற்சவர் - ஸ்ரீ ராமபிரான்
விமானம் - விஜயவீரகோடி விமானம்
தீர்த்தம் - ஜடாயு தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ விஜயராகவாய நமஹ
வழித்தடம்:
காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் சாலையில் 12 கீ.மீ தொலைவில் பாலுசெட்டி சத்திரம் என்ற ஊரில் இறங்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தின் அருகாமையிலேயே திவ்யதேசம் அமைந்துள்ளது.
பாசுரம்:
அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும்
புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக்கண்ணி
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே
- பெரியதிருமொழி 2-7-8 (1115)
திருமங்கை தன்னையே தாயாகவும் மகளாகவும் பாவித்துக் கொண்டார். மகள் படும் பாட்டைத் தாய் முறையிடுவது போல எம்பெருமானிடம் முறையிடுகிறார். எம்பெருமானே என்மகள் நின்மீது கொண்ட காதல் கொஞ்சமும் குறையவில்லை பித்துப் பிடித்து அலைகிறாள். சொல்லொனாக் காமமுற்று திகழ்கிறாள். அழகு பொருந்திய தடக்கைகள் கொண்ட ஆயனாக வந்த கண்ணபிரானின் ஆம்பல் நிற வாயைச் சுவைக்கவே என்னுள்ளம் அழிகிற தென்கிறாள். திவ்ய தேசத்து எம்பெருமானின் பேரழகையெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறாள். பல திவ்ய தேசத்து எம்பெருமான்களை நினைத்துப் பார்க்கிறாள். திடீரென அவளுக்கு புட்குழியெம்பெருமானின்நினைவு வருகிறது திருப்புட்குழி எம்பெருமானை வாயாரப் பாடுகிறாள். அக்கணமே திருநீர் மலை எம்பெருமானின் நினைவு வருகிறது. திருநீர் மலைக்குப் போக மாட்டேனோ என்று பொருமுகிறாள். கொல்லிமலைப்பாவை போன்றல்லவா இவள் இருக்கிறாள் (கொல்லிப்பாவை - தேவ மகளிருக்குச் சமமாக கொல்லி மலையில் இருந்த ஒரு பெண் காண்போரை யெல்லாம் மோகிக்கச் செய்தவள்) கோமள வதனமும், கொடியிடையும் மழைமேகம் போன்ற கூந்தலில் அழகிய மலர்களைச் சூடி எழில்கொஞ்சும் தோள்களைக் கொண்டு கொல்லியம் பாவை போன்ற பேரழகுபொருந்திய இவள் பொருட்டு நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தன் மகள் பொருட்டு தாயொருத்தி கேட்பது போல் திருமங்கை கேட்டு மங்களாசாசனம்.
பாசுரம் பதவுரை:
இடவெந்தை எந்தை பிரானே!-;
அலம் கெழு தடகை ஆயன் வாய் ஆம்பற்கு என் உள்ளம் அழியும் என்னும் - ‘கலப்பை விளங்குகின்ற பெரிய திருக்கையை யுடையனான கோபால க்ருசணனுடைய திருப்பவளத்தில வைத்து ஊதுகிற இலைச்சூழலோசைக்கு என்னெஞ்சு அழிகின்றது’ என்கிறாள்;
புலம் கெழு - மநோஹரமான
பொரு நீர் - அலையெறிகின்ற நீர்ப்பெருக்கையுடைய
புட்குழி - திருப்புட்புழி விஷயமாக
பாடும் - பாட்டுகள் பாடாநின்றாள்;
நீர்மலைக்கு போதுமோ என்னும் - திருநீர்மலைக்குப் போவோமென்கிறாள்;
குலம் கெழு கொல்லி கோமள வல்லி - மிகச்சிறந்த கொல்லி மலையிலுள்ள பாவை போன்றவளும்
கொடி இடை - வஞ்சிக்கொடிபோன்ற இடையையுடையவளும்
நெடு மழை கண்ணி - பெருமழைபோலே நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற கண்களை யுடையவளும்
இலங்கு எழில் தோளிக்கு - விளங்குகின்ற அழகிய தோள்களையுடையவளுமான இப்பெண்பிள்ளை திறத்திலே
என் நினைந்திருந்தாய்!-.
பாசுரம் விளக்க உரை:
ஆம்பல் என்ற சொல் பலபொருள்களுடையது; இங்கு இசைச் சூழலென்னும் பொருளது. குழலூதுபவன் கண்ணபிரானாயிருக்க, அலங்கெழுதடக்கையாயன் என்று ஹலாயு தனான பலராமனைச் சொல்லிற்றென்னென்னில்; 1. “ மீனோடாமை கேழலரிகுறளாய் முன்னு மிராமனாய்த்தானாய்ப், பின்னுமிராமனாய்த்தாமோதரனாய்க் கற்கியுமானான்” என்ற ஒற்றுமை நயம்தோற்றச் சொன்னபடி 2 “ அலம்புரிதடக்கையாயனே !” என்றார் கீழும்; 3. “அலமுமாழிப் படையுமுடையான்” என்பர் மேலும். குலங்கெழுகொல்லிக் கோமளவல்லி ஸ்ரீ ‘கொல்லி’ என்பதற்கே இலக்கனையால் கொல்லிமலையிலுள்ள பாவைபோன்றவள் என்று பொருள் கொள்ளலாம்; அன்றி, கொல்லி, சொல்லிமலையிலுள்ள, கோமளவல்லி--அழகிய கொடிபோன்ற பாவையையொத்தவள் என்றும் உரைக்கலாம், (கொல்லிப் பாவையைப்பற்றின விவரணம்; இத்திருப்பதிகத்தின் முதற்பாட்டினுரை யிற் காணத்தக்கது.)
நெடுமழைக்கண்ணி = பரமபக்தர்களின் நிலைமையைச் சொல்லுமிடத்து. “ஆஹ்லாதசித நேத்ராம்பு:” (குளிர்ந்த ஆநந்தபாஷ்பம் தளும்பப்பெற்றவன்) என்று சொல்லியிருக்கிறபடியே
எப்போதும் ஆழ்வார் பகவத்குணங்களை நினைந்து கண்ணுங்கண்ணிருமா யிருக்குமிருப்பைச் சொல்லுகிறது. பிள்ளை திருவுள்ளம்.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
ஸ்தல வரலாறு:
இத்தலத்திற்கு கூறப்படும் அதே வரலாறு அப்படியே புள்ளம் பூதங்குடி ஸ்தலத்திற்கும் கூறப்படுகிறது. இதில் எது உண்மையானது என அறியுமாறில்லை.கற்றறிந்த பெரியோர்களையும் வைணவ ஆராய்ச்சியில் மிக்கோரையும் இந்த பேதங் குறித்து வினவுமிடத்து ஆமாம் அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது. என்கின்றனரேயன்றி எந்த தலத்திற்கு கூறப்பட்ட வரலாறு உண்மை என தெளிவுபடுத்துகிறார்களில்லை. இத்தல வரலாறு இவ்வாறு பேசப்படுகிறது. சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனையெதிர்த்து போரிட்ட ஜடாயு இராவணனால் வெட்டப்பட்டு இவ்விடத்தில் வீழ்ந்து பின் ஜானகியைத் தேடி அவ்வழி வந்த இராமனிடம் விவரங்களைத் தெரிவித்துவிட்டு உயிர் நீத்தார். ராமன் அவருக்கு மோட்சமளித்து தனது கரங்களால் அந்திமச் சடங்குகளை இங்கு (இத்தலத்தில்) செய்வித்தார். எனவே இத்தலத்திற்கு திரு + புள் + குழி என்ற பெயருண்டாயிற்று (வட மொழியில் க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம் எனப்படுகிறது)
இதே வரலாறுதான் புள்ளம் பூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது. இவ்விதம் ஒரே வரலாறு இரண்டு ஸ்தலங்கட்கு கூறப்பட்டுள்ளது. இவ்விதம் ஒரே வரலாறு இரண்டு ஸ்தலங்கட்கு கூறப்படுகிறதே, இதில் எதை உண்மையானதாகக் கொள்ளலாமென பண்டித சிரோண்மணி தஞ்சை என்.எஸ்.தாத்தாச்சார்யாருக்கு கடிதம் எழுதியதில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
தலபுராணங்கள் பெரும்பாலும் பிர்ம்மாண்ட புராணங்கூறும் தகவல்கள்தான். அவைகளில் பெரும்பாலும் நமக்கு குழப்பத்தையும், ஐயத்தையும், தரும் கருத்துக்கள் ஒன்றேபோல் பல தலங்களுக்கும் குறிப்பிட்டிருக்கும். அதை அந்தந்த தலத்துடன் புகழ்ந்து கூறி நிறுத்த வேண்டியதுதான். அதில் அதிக ஆராய்ச்சி கூடாது எவ்வாறாயினும் இரு ஸ்தலங்கட்கும் ஒரே வரலாறு பேசப்படும் போது எது உண்மை அல்லது எதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளதென ஆய்தல் கடமையாகும். இது ஆய்வுக்குரிய விஷயமுமாகும்.
திருப்புட்குழியைவிட, புள்ளம் பூதங்குடி திவ்யதேசத்திற்கே ஜடாயு தொடர்பான ஆதாரங்கள் அதிகம் இருப்பதாக ஒருவாறு தலைக்கட்டலாம்.
1. சீதையைத் தேடிவந்த இராமன் புள்ளம் பூதங்குடியில் ஜடாயுவின் நிலையைக் கண்டு விபரந் தெரிந்து கொண்டபின் அந்திமச் சடங்குகளை நிறைவேற்ற சீதையில்லையே (பக்கத்தில் பிராட்டியில்லையே) என்று நினைத்தவுடன் பூமாதேவியே பிராட்டியாக வந்தார் என்பர். ஆனால் திருப்புட்குழியில் இரண்டு தேவிமார்கள் சூழ அமர்ந்துள்ளார். சீதையைப் பிரிந்து நின்ற ராமனின் தோற்றமும் ஜடாயுவுக்கு அந்திமச் சடங்குகள் செய்ய பிராட்டியில்லையே என்று நினைத்தமாத்திரம் பூமாதேவி வந்துற்றதுமான இந்த நிகழ்வுகள் திருப்புட்குழியில் (ஸ்தல வரலாற்றில்) இல்லை.
2. ஸ்ரீ இராமன் இலங்கைக்குச் சென்றதாகக் கூறப்படும் பாதை சோழநாட்டுக்கு உட்பட்ட பகுதியாக இருக்கலாமென எண்ணலாமே தவிர காஞ்சியிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையாக இருக்க இயலாது.
3. புள்ளம்பூதங்குடியில் ராமன் வல்வில் இராமன் என்று திருநாமம் பூண்டுள்ளார். இந்த வில்கொண்ட ராமன்தான் ராமாயணம் காட்டும் ராமனாவான் ஆனால் திருப்புட்குழி யெம்பெருமானுக்கோ விஜயராகவப்பெருமாள் என்பது திருநாமம். ராகவம் என்னும் சொல் இராமனையே குறித்தாலும், குறிப்பாக வல்வில்ராமன் என்று அடையாளமிட்டு குறிக்கும் அழகே தனி. இந்தத் தத்துவம் புட்குழி யெம்பெருமானுக்கு இல்லை.
4. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் புள்ளம் பூதங்குடி பெருமாளை வல்வில் இராமன் எனக் குறிக்கிறார். ஆனால் புட்குழியெம்பெருமானின் விஜயராகவத் திருநாமத்தை மங்களாசாசிக்கவில்லை. புட்குழி என்று மட்டுமே மங்களாசாசனம் செய்கிறார். மேலும் புள்ளம் பூதங்குடிக்கு இவர் அருளிய 10 பாசுரங்களில் இராமாயணக் காதையை நினைவு கூர்கிறார்.
‘வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாளரக்கன் தலைவன்றன்
வற்பார் திரன் தோளைந் நான்கும் துணித்த வல்வில் இராமனிடம்’
என்ற இந்த வல்வில் இராமனுக்கும் இராமாயணத்திற்கும் உள்ள தொடர்பை தெளிவுபடுத்துகிறார்.
5. இராமாயணத்திலும் ஜடாயுவுடன் தொடர்புள்ளதாக இத்தலம் பேசப்பட்டுள்ளது.
பூதபுரி ஷேத்ரே வந்தே புன்னைவன ஸம்ஸ்திதம் ஸௌமித்ரேகா காஷ்டாநி நிர்மதிஷ்யாமி பாவகம் க்ருதமாறும் தித்சஷாமி மத்க்ருதே நிதநம்கதம்
(ஸ்ரீராம. ஆரண் 68-27)
இச்சுலோகத்தில் பூதபுரி சேஷத்ரம் என்று குறிக்கப்படுகிறது புள்ளம் பூதங்குடியே அன்றி திருப்புட்குழியன்று என்பது வெள்ளிடைமலை. மேலும்,
விமாநே ஸோபநே அம்புஜஸ்ரீ.. ஸஸ்மாசர்தம் க்ருதராஜம் புஷ்கரிணி தீரே லஷ்மனோ லஷ்மி ஸம்பன்ன
(ஆரண் 68 33)
என்னும் வரிகளும் இத்தலத்தின் விமானம் தீர்த்தம் போன்றவற்றைக் குறிக்கப்படுவதுடன் இலக்குமணனுடன் இராமன் மட்டும் வந்துற்றதையும் தெளிவு படுத்துகிறது.
எனவே ஜடாயுவுக்கு மோட்சமளித்த ஸ்தலம் புள்ளம் பூதங்குடியே என்று கொள்ளலாம். அவ்வாறாயின் திருப்புட்குழியின் ஸ்தலவரலாறு யாதென ஆராயவேண்டும்.
சிறப்பு:
ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப் புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸமஸ்காரம் செய்யும் பாவணையில் அமர்ந்துள்ளார். இந்த தாபத்தைத் தாங்க முடியாமல் இடம், வலமாகமாறி எழுந்தருளியுள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய ஸ்ரீதேவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே.
இங்கு பெருமாள் வெளியே புறப்பட்டு திருவீதி கண்டருளும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதைகளும் உண்டு.
இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி இரவில் மடியில் (பெண்கள்) வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும். இங்கு இது அனுபவரீதியாகக் காணப்படும் உண்மையாகும். இதனாற்றான் இந்தத் தாயாருக்கு வறுத்த பயறு, முளைவிக்கும் மரகதவல்லித் தாயார் என்று பெயர் பிரசித்தம்.
இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர் அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. (இராமானுஜரோடு எம்பாரும் இங்குதான் கற்றார்.)
இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர்துறந்தானாம். இவனது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டுத் தெரிவித்து பெருமாள் 8ஆம் உத்சவத்தன்று அவனது வீதிக்கு எழுந்தருளுகிறார்.
நம்பிள்ளையாரின் சீடரான பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த தலம் ஆகும். இராமனுஜரின் குருவான யாதவப் பிரகாசர் வாழ்ந்த ஊர்.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/X_sSX5dZ6do
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/123891296077973/?sfnsn=wiwspmo&extid=ZUkdVaTYDEnA7IQH
No comments:
Post a Comment