பித்ருக்களின் மனம் குளிரவைக்கும் திலா ஹோமம்
********
(பல ஆயிரக்கணக்கான சித்தர்களின் குரல் அன்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க அவர்கள் வாழ்வில் நிச்சயமாக ஒரு மலர்ச்சியை ஏற்படுத்த , அந்த சர்வேஸ்வரனை முழு மனதாய் தியானித்து - திலா ஹோமம் , ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ரு வழிபாடுகளின் மகத்துவத்தை பற்றி ஒரு முழு விளக்கக் கட்டுரை நம் சித்தர்களின் குரலில் பதிவிடுகிறேன்.)
சில அடிப்படையான விபரங்களை நம் மதத்தில் உள்ளவைகளை நாம் அறிந்து கொள்வதில்லை, நம் முன்னோர்களும் தெளிவுபட நமக்கு சொல்லவில்லை, ஒரு புறம் நாத்திகம், மறுபுறம் கேள்விகள் கேட்பவரிடம் பதில் முறையாக சொல்லபடுவது இல்லை என்று சொல்ல வேண்டும்.
இந்த பதிவில் பல ரகசியமான தகவல்கள் உங்களுக்கு புரிய வைப்பதற்காகவே ஆழமாக பகிர்கிறேன்.
நான் என் வேத வாத்தியார் கும்பகோணம் ராஜ கோபால கனபாடிகளிடம் வேதங்களை பயின்ற காலத்தில் பல குழப்பங்கள் எனக்கு அடிக்கடி வந்தது உண்டு. ஒரு முறை அவர் காவேரி ஆற்றங்கரை அய்யாளம்மன் படித்துறையில்
உள்ள இடத்தின் அருகே அமர்ந்து சில வித்யாசமான ஹோமத்தை செய்து விட்டு அதை காவேரி ஆற்றில் சேர்த்துவிட்டு வந்த பொழுது நான் அவரிடம் ஏன் மாமா நீரில் விட்டு விட்டீர்கள்? என்றதும் அவர் என்னிடம்
சனி, அல்லது மாந்தி கிரகத்தின் உதவியுடன் செய்யப்படும் பூசைகள், ஹோமங்கள் எல்லாம் ஆற்றில் கரைத்து விடவேண்டும் என்றார். மேலும் காளிதேவி, கால பைரவரின் ஒரு சில அபூர்வ மந்திரங்களை எல்லாம் உச்சரிக்கும் பொழுது ஓடும் ஆற்றில் தொப்புள் முழ்கியபடி அமர்ந்து சொல்லவேண்டும் என்பார்.
இதை போல ஒரு மாந்திரிகர் என்னிடம் சொன்னது சில ஏவல், செய்வினைகள் நீரில் கரைத்து விடுவது ஒரு வகை. நெருப்பில் எரித்து விடுவது ஒருவகை. நீரில் கரைப்பதே கருப்புசாமி ஆசைகளை எளிதில் கிடைக்க வழி செய்யும் என்பார்.
பஞ்ச பூதத்தில் மிகவும் முக்கியமானது நீர். நீர் நிறைந்த குடத்தில் (கரு) உள்ளே வளர்ந்து போதிய அளவு வளர்ச்சி பெற்றதும் குடம் உடைத்து யோனி வழியாக பிறப்பு எடுத்தவர்கள் தான் நாம் என்பதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இறந்த பின்பு மண் பானையில் நீர் நிரப்பி வாரிசின் கைகளில் கொடுத்து 3 முறை சுற்றி வரசொல்லி 3வது முறை பானையில் துளையிட்டு முன்றாவது
சுற்று முடிந்த பொழுது பானையை உடைத்து விடுவார்கள்.
தண்ணி குடத்தின் வழியாக வந்த நாம் குடத்தை உடைத்து போல பாவித்து நம்மை நெருப்பின் முலமாக விண்ணிற்கு அனுப்பப்படும் செயல் தான் இது .(விண்ணிற்கு நெருப்பு முலம் அல்லது நீரின் முலம் செல்லலாம்)
நீருக்கு அதிபதி வருணன் என்ற தேவர் என்று நம் நூல்களில் சொல்லபடுகிறது . இவர் அஷ்ட திக்கு பாலகர்களில் ஒருவர். ஜோதிட ரீதியாக கவனிக்கும் பொழுது கும்ப, மகரம் ராசிகளுக்கு அதிபதி. திசைகளின்(மேற்கு) சொந்தக்காரர்.
விண்ணில் மேகமாக இருக்கும் இவர் பூமிக்கும் விண்ணுக்கும் தொடர்பு தந்து எல்லா உயிர்களுக்கும் சக்தி தருபவர் என்று எல்லோருக்கும் அறிந்த விவரம். ஆனால் மேலான விவரம் இவர் உயிர்களின் தர்மம் , சத்தியம், நேர்மை மற்றும் மனிதர்களின் நல்லொழுக்கம் போன்ற செயல்களின் அதிபதி.
எங்கே தர்மம், சத்யம், நேர்மை, நல்லொழுக்கம் ஓங்கி இருக்கிறதோ அங்கே இவரால் மேகம் சூழ்ந்து மலை பொழியும். இவைகள் எல்லாம் எங்கே கெட்டு மாறுகிறதோ அங்கே மழை பெய்யாது. சமீபத்தில் மழை பெய்து மக்களை பாதித்தது என்று தான் எல்லா செய்திகளிலும் நாம் கவனித்தோம். இது வருணனின் கோபம் இந்த வருணனே உருவாக்கும் தன்மையும் அழிக்கும் உடையவர் என்று யாரும் புரிந்து இருக்கவில்லை.
வருனணனால் பிரளயமும், பஞ்சமும் உண்டாகி உலகை அழிக்க முடியும். இங்கே ஒரு கேள்வி சிவ பெருமானை மிஞ்சிய தேவரா இந்த வருணன்?என்பதை கவனித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமானின் பலவிதமான அம்சம்களிலும் வருண அம்சம் ஒரு விதம். பஞ்ச பூதம்களில் வருண அம்சம் மிகவும் முக்கியமானது.
இதை அஷ்ட மஹா சிம்மாஹசன சிவ மந்திரத்தில் "சர்வாய" என்று குறிபிடுவார்கள்.
கோள்களில் சனி உயிர் நிலைகளையும் கர்மத்தை பற்றியும் குறிக்கும் என்று சோதிட நூல்கள் சொல்லும். வருணன் சனிக்கு எதிர்மறையாக செயல்படுவார் என்று எந்த நூல்களிலும் சொல்லப்படவில்லை . சனியின் குருநாதர் கால பைரவர், சனி தோஷம், சங்கடம் தீர சனிக்கிழமை அல்லது அஷ்டமியில் பைரவர் பூசை /வழிபாடு செய்தால் போதுமானது என்று நூல்களில் சொல்லபடுகிறது.
ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய எல்லையில் உள்ள ஆற்றை/கடலை கடந்து சென்று விட்டால் சனியின் தோஷம் நம்மை தாக்காது.
எனது நண்பர் ஒருவர் மலேசியாவுக்கு திருமண நிமித்தமாக அவருடைய மனைவியுடன் சென்றார். அங்கே சென்று இறங்கியதும் அவர் மனைவியின் கால்களில் அடிபட்டது
என்று அங்கே மருத்துவம் பார்த்து விட்டு ஒரு சோதிடரை பார்த்து கேட்டு பொழுது அவர் இவர்களின் கோள்கள் கணக்கை பார்த்து விட்டு எல்லையை தாண்டி செல்லும் பொழுது சனிதேவரின் கோபம் கால்களை காயபடுத்தி விட்டது என்றும், சொந்த எல்லைக்கு சென்றது சரியாகிவிடும் என்றாராம்.
அதாவது வாழும் எல்லையில் சனியின் பலம் கர்மத்தின் கணக்கு படி நடக்கும். நாம் விலகி தாண்டும் பொழுது சில பாதிப்புகளை கொடுத்து விலகிவிடும். தன்னுடைய எல்லைய விட்டு வெளிநாடு சென்று நல்ல வருமானத்தில் வாழ்ந்து ஒரு காலத்தில் தன் சொந்த எல்லைக்கு திரும்பி பலவிதமான இன்னல்களை அனுபவித்த ஒரு சிலரை நான் கண்டது உண்டு. இந்த பலன்கள் அவர்களின் கர்மவினைகளை பொருத்து மாறும்.
இதுபோல விண்ணில் இருக்கும் ஆன்மாக்களுக்கு நாம் செய்யும் செயல்கள் /ஹோமங்கள் விண்ணை ஆட்சி செய்யும் வருணனுக்கும், இந்திரனுக்கும் என்று நாம் புரிந்து புரிந்து கொள்ளவேண்டும். அறிவியல் கண்களோடு பார்த்தால் நீர் வெப்பத்தால் சூடாகி விண்ணிற்கு சென்று மேகமாகி மழை பொழிகிறது.
இது ஒரு பார்வை. மற்றது வேதத்தில் வருணனே பூமியையும் காற்றையும் உண்டாக்கியவர் என்றும், விண்ணில் உள்ள சட்டம் இவரால் படைக்கப்பட்டது என்றும், எவர் ஆண்டவனின் சட்டத்தை மதிக்காமல் மீறி செயல்படுகிறார்களோ அவர்களுக்கு இவர் தண்டனை தருவார் என்றும் சொல்லபடுகிறது.
இறந்த ஆன்மாக்கள், உடலில் உள்ள ஆன்மாக்கள் என்று பிரித்து பார்க்காமல் அவைகளுக்கு விண்ணில் தொடர்பை ஏற்படுத்தவது வருணன்
வருணனின் ஆசிகள் சனி தேவரை(கர்மத்தை) நம்மிடம் இருந்து விலக்கி விட்டு, நமது ஆன்மாவை ஈசனிடத்தில் சேர்க்கும் தன்மை உடையது என்பதனை சிவ பெருமான் கங்கை நீரின் அடியில் இருப்பதை கவனித்தால் புரியும்.
இந்த பதிவை படித்து விட்டு சில அன்பர்கள் எந்த நூலில் இந்த தகவல் உள்ளது. அவைகளை தெரியபடுத்தினால் நல்லது என்று என்னிடம் கேட்டனர். சோதிடம் பற்றிய நூல்கள் பல உள்ளன. நம் சமய நூல்களும் பல உள்ளன. இன்று ஒரு பிரச்சனை என்ன வென்றால் இருந்த /எழுத பட்ட பழைய நூல்களை படித்து அதை அப்படியே புதியதாக மாற்றும் நபர்கள் /எழுத்தாளர்கள் தங்களுடைய கருத்துகளை /சிந்தனைகளை அதில் புகுத்தி சில மாற்றம் செய்து பதிகிறார்கள். எனக்கு பழைய சோதிட நூல்களை தந்தவர் என் அன்பிற்குரிய காளியூர் நாராயணன் ஐயா அவர்கள். அதை படித்து விட்டு அதன் பின் பதிந்து வந்த பல நூல்களில் படிக்கும் பல மாற்றம் செய்து உள்ளார்கள். மேலும் மந்திரம் சார்ந்த நூல்கள். அவைகளால் செய்யப்படும் காரியங்கள் (ஏவல்,சூன்யம்) போன்ற தகவல்கள் நூலில் உள்ளது போல உண்மையில் இருக்காது. சோதிடம், மந்திரம், வாஸ்துவின் உச்சம் சித்தர்கள் வகுத்த நூல்கள் மட்டுமே.
சித்தர்கள் கொடுத்த நூல்கள் சுவடிகளாக பூமியில் உள்ளது. இவர்களை புரிந்தவர்களை மட்டும் இவர்கள் தேர்வு செய்து அவர்கள் முலமாக நமக்கு உணர்த்துகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. இப்படி சுவடிகளை படிக்கும் பொழுது கிடைத்த தகவல்கள், மற்றும் என் அனுபவத்தில் ஏற்பட்ட சில சம்பவங்களை வைத்து தான் இந்த பதிவுகள் பதிக்கபடுகிறது என்று குறிப்பிட்டு கொள்கிறேன்.
நான் கோவிலுக்கு செல்லும் பொழுது மிகவும் கவனித்து பார்ப்பது உண்டு. அப்படி என் எண்ணில் எழுந்த மிக முக்கியமான கேள்வி நாழி கிணறு. திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்த கிணறுகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்த விவரம்.
பூமியில் பல இடங்களில் இயற்கையாக நீருற்று இருக்கும். அவைகளை சில இயற்கையாக வெளிப்படும் அல்லது மனிதனின் அறிவால் அதை கண்டு கொண்டு பயன்படுத்துவான். அறிவியல் சான்றோர்கள் சொல்வது இது தான், ஆனால் நம் சமயத்தவர் திருச்செந்தூரில் இதை முருகன் வேலால் கீறி ஒரு கிணற்றை உண்டாக்கினார் என்றும், அதில் வரும் ஊற்று நீர் மிகுந்த சுவை உடையது
என்றும் இதை நாழிகிணறு என்று சொல்லி உள்ளார்கள்.
இதை பற்றி ஒரு சிந்தனை எனக்கு ஏற்பட்ட பொழுது ஒரு விவரம் புரிந்தது. வருணன் கடலின் அடிபாகத்தில் உள்ள நீர் என்ற அவரை பற்றிய நூல் சொல்கிறது. மேலும் பூமிக்குள் இருந்து வரும் ஊற்று நீரும் வருணன் என்றும் இந்த நீரில் நாம் குளித்தாலோ அல்லது உடலில் தெளித்து கொண்டலோ நமது ஆன்ம பரிசுத்தம் அடைகிறது என்று உணரமுடிகிறது. மேலும் நீருக்குள் நாம் இருக்கும் பொழுது நமது ஆன்மா புத்துணர்ச்சியுடன் மலர்கிறது. இப்படி நீரில் நாம் அமர்ந்து சிவ சிந்தனை நாம் செய்யும் பொழுது நமக்கு சிவ கடாட்சம் எளிதில் கிடைக்கும். இப்படி செய்பவர்கள் சைவ சித்தர்கள். (திரிகுடமலையில் இப்படி செய்வார்கள் என்று அறிந்து கொண்டேன் )
சிவனின் கோலமும் இதையே சொல்கிறது. சிவன் பெருமான் தலையில் கங்கையை வைத்து இருக்கிறார். அப்படியென்றால் அவர் தலையில் தண்ணீர் இருக்கிறது ஒரு சாரர். கங்கை ஒரு பெண் அவரின் மனைவி இது மற்ற சாரர்.
சிவனின் முகத்தில் உள்ள சூரிய கலை, சந்திர கலை, அக்னிகலை. மூன்றும் சேர்ந்து சமநிலை அடையும்பொழுது ஏற்படும் அமிர்தம் தான் அந்த நீர். அது சக்தியை தரும். ஒரு பெண் ரூபம் உதாரணம் --இது ஒரு சாரர்.
என்னுடைய கேள்வி ஏன் எல்லோரும் மாற்றி சிந்தனை செய்ய முற்படவில்லை?
தலையில் நீரை பெருமான் கட்டவில்லை. நீரின் கீழ் பரப்பில் அவரின் ஜடாமுடி உள்ளது. அதாவது அவர் நீரின் அடியில் உள்ளார். தவசியாக உள்ளார் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
சித்தர்கள் நீரின் அமர்ந்து தவம் செய்து எளிதில் சிவனை அடைந்தார்கள் என்று இதை கவனித்து பார்த்தல் புரியும் .
நாழி கிணறின் மகத்துவம் இது தான் அந்த கிணற்றின் ஆழத்தில் சித்தர்களும் , தேவர்களும் சிவனை அர்ச்சித்து தவமாக உள்ளார்கள் , அவர்கள் வருணனின் ஆசிகளை எளிதில் பெற்றார்கள்.
மேலும் நீரில் இருக்கும் மீன்களுக்கு உணவு தர சொல்லி கோவிலில் குளத்தை உண்டாக்கி அதில் மீன்களை வளர்த்ததும் இதற்க்கு தான். (சகல முன் ஜென்ம சாபமும், முன்னோர் சாபமும் அழிக்கும் சக்தி மீன்களுக்கு தரப்படும் உணவு தர்மத்தில் அழியும், வாஸ்து படி மீன்கள் வளர்க்க சொல்வது இதெற்கு தான்)
வைணவர்கள் இதை உணர்ந்து பெருமாளின் உடலுக்கு கீழ் பால்கடல் (வெண்மையான நீர் ) உண்டு என்றும்,
நீரில் படுத்து இருக்கும் பெருமாளை காண நாம் சென்றால் நீரில் துளசியை சேர்த்து நமக்கு அடையாளமாக நீரை தருவார்கள்.
பிராமணர்கள் நீரில் அமர்ந்து பூசைகள் செய்ய முடியாது என்று மடி என்று குளித்த ஈராமான உடையுடன் பூசை செய்வார்கள். தன்னுடைய ஊரின் ஆற்றை கடந்து வெளியூர் சென்று பிழைப்பது பாபம் என்று எல்லை ஆற்றை கடக்க மாட்டார்கள். (இன்று இவர்கள் இப்படி இல்லை) இது சார்ந்த விவரம்களை பெரியவா நூல்களில் காணலாம்.
மந்திரவாதிகள் வசிய மையை பயன்படுத்தும் பொழுது மழைநீரில் அவைகள் பட்டால் பயன் படாது என்றும்,
இதையவர் உடலில் தடவபட்டதோ அவர்கள் மழையில் நனைந்தால்
வசிய கட்டு பட்டுபோகும் என்பார்கள்.
வருணனின் கோபம் மிக கொடியது. இவரின் ஆசிகளை பெற தர்மம், நல் ஒழுக்கம், இறைவன் நமக்கு வகுத்த நியம, சத்ய வாழ்க்கையை நாம் பின்பற்ற வேண்டும். மேலும் வருணனின் ஆசிகளை பெற நாம் மடியுடன் பக்தியில் ஈடுபடவேண்டும்.
அடுத்து திலா ஹோமம் பற்றி அந்த அன்பர் கேட்ட கேள்விக்கு வருகிறேன்...
தில் என்றால் எள். திலா ஹோமம் ( Thilaa homam ) என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும் , திலா ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திலா ஹோமம் - ராமேஸ்வரம் அல்லது திருப்புல்லாணி ஆகிய இரு இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் - நம் நாட்டின் தொன்மை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் மிக முக்கியமானது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த ராமநாதரால் உலகம் எங்கும் கோடிக்கணக்கான பக்தர்களை வசீகரித்து, பல கோடிக்கணக்கான ஆன்மாக்களின் பாவங்களைக் கரைத்து ஜீவன் முக்தி அடையை செய்யும் தவ பூமி.
திலா ஹோமம் எங்கே செய்வது? ஏன் செய்ய வேண்டும்? யார் யார் கண்டிப்பாக செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்ன பலன்கள் ஏற்படும் என்கிற உங்கள் மனதில் தோன்றும் கேள்விளுக்கு தான் இந்த விளக்கத்தை தருகிறேன்.
நீங்கள் திலா ஹோமத்தை ராமேஸ்வரத்தில் செய்வது தான் முறை. ஒரு சிலருக்கு ராமேஸ்வரத்தில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிப்பதும் வழக்கம்.
திலா ஹோமம் முடித்தவுடன் - சோளிங்கர் சென்று யோக நரசிம்ஹர் ஆலயம் வந்து , தங்களால் முடிந்த அளவுக்கு ( 3 பேருக்கோ, 9 பேருக்கோ, 27 பேருக்கோ) அன்னதானம் செய்வதும் நல்லது. சோளிங்கர் - திருத்தணி , அரக்கோணம் அருகில் இருக்கும் ஸ்தலம். யோக நரசிம்ஹர் ஒரு மலையிலும், ஆஞ்சநேயர் சின்ன மலையிலும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.
பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான். எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் - செயற்கை மரணம் ( கொலை), ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் - விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல், அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சம்பவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது. அந்த ஜாதகர் திலா ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது உரிய நிவாரணம் அளிக்காது.
எவர் ஒருவர் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் - அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு, குழந்தைகள் - பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் - நம் கை நழுவி போகும் நிலை , என்று - திருப்தி அடையாத ஆத்மாக்கள் - அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ - அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து - அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே இந்த திலா ஹோமம்.
ஜாதகப்படி - யார் யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை எப்படி உணர முடியும்?
எல்லோருடைய ஜாதகத்திலும் அவரவர் பிறந்த நேரப்படி லக்கினம் கணிக்கப்படுகிறது. மொத்தம் இருக்கும் பன்னிரண்டு கட்டங்களில் , ஒரு கட்டத்தில் " ல" என்று எழுதி இருக்கும். இது அந்த ஜாதகரின் முதல் வீடு என்று அழைக்கப்படுகிறது . கடிகாரச் சுற்றுப்படி 1 முதல் 12 வீடுகள் எண்ணிக்கொள்ளவும். எவர் ஒருவர் ஜாதகத்தில் - 1 , 5 , அல்லது 9 எனப்படும் திரிகோண வீடுகளில் - சர்ப்ப கிரகங்கள் எனப்படும் இராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் - அது பிதுர் தோசமுள்ள ஜாதகம் என்று கருதப்படுகிறது.
இதைத் தவிர எவர் ஒருவர் ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும் - பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் - பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள்.
இது ஒரு பவர்புல் ஹோமம். முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய தவறினால் அது செய்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போக முக்கியமான விஷயம் - நம் வாழ் நாளில் ஒரே ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும். சரியாக செய்யப்படும் திலா ஹோமம் , ஒரு சந்ததிக்கே நல்ல வழிகாட்டும். இதை செய்த ஆறு மாதங்களில் - நீங்கள் இதைக் கண்கூடாக உணர முடியும். உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனை நிகழும்.
கிட்டத்தட்ட ஐந்து - ஆறு மணி நேரம் இந்த ஹோமம் செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரம் இடுப்பளவு தண்ணீரில் நிற்க வேண்டும். ஆதலால் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நாளில் இதை செய்வது நல்லது. உங்கள் ஜாதகப்படி பலம் பொருந்திய நாளில் இதைச் செய்வது நல்லது. பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் செய்ய ஆரம்பித்தால் , காலை 11 மணி அளவில் தான் முடியும். அந்த தினம் இரவு ராமேஸ்வரத்தில் தங்கி , மறுதினம் நீங்கள் ஊருக்கு கிளம்புவது நல்லது.
யோக பலம் பொருந்திய நாளை எப்படி தெரிந்து கொள்வது ?
உங்கள் லக்கினத்திலிருந்து - 9 ஆம் வீட்டுக்கு உரியவரின் கிழமை உங்கள் வாழ் முழுவதும் - யோகமான நாளாக கருதப்படும். உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், 9 ஆம் வீடு தனுசு. அதற்கு அதிபர் - குரு பகவான். ஆகவே வியாழக்கிழமை - உங்களுக்கு யோகமான நாள்.
ஆகவே மேஷ லக்கினத்தில் பிறந்தவராக இருந்தால் - ஒரு வளர்பிறை வியாழக்கிழமையில், உங்கள் ராசிக்கு சந்திர அஷ்டமம் இல்லாத நாளில் - திலா ஹோமம் செய்து, அன்று இரவு தங்கி, வெள்ளிகிழமை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்புதல் நலம். இதைபோலே , உங்கள் ஜாதகப்படி யோகமான நாளைத் தெரிந்துகொண்டு செயல்படவும்.
ஜாதகப்படி பிதுர் தோஷம் இல்லாதவர்களும், விருப்பம் இருந்தால் - வாழ்வில் ஒரே ஒரு முறை - திலா ஹோமம் செய்து கொள்ளலாம்.
ஒருவருக்கு திலா ஹோமம் செய்ய, கிட்டத்தட்ட சுமார் 7 இலிருந்து 8 ஆயிரம் வரை செலவு ஆகும். எனக்கு தெரிந்து திருப்புல்லாணியில் திரு. லட்சுமண சாஸ்திரி அவர்களும் ராமேஸ்வரத்தில் திரு . ராகவ சர்மா அவர்களும் - உரிய வைதீக முறைப்படி திலா ஹோமம் செய்து வைக்கின்றனர். விருப்பம் உள்ள அன்பர்கள், இவர்களை தொடர்பு கொண்டு, நாள் மற்றும் கட்டண விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு, அதற்கு ஏற்ப பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்.
திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும். இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.
அனைவருக்கும் அந்த சர்வேஸ்வரனின் ஆசிகளும், முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
அன்பர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவு எளிமையாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி
அகத்தியர்
திருமூலர்
காகபுஜண்டர் பெருமானின் அருளாசிகளுடன்.....
No comments:
Post a Comment