🙏 நமஸ்காரம்
49. திரு நிலாத்திங்கள் துண்டம்
மூலவர் - நிலாத்திங்கள் துண்டத்தான். சந்திரசூடப் பெருமாள் என்பது வடவாணர் மொழிவர். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார் - நேரொருவர் இல்லா வல்லியென்றும், நிலாத்திங்கள் துண்டத்தாயார் என்னும் திருநாமம்.
விமானம் - புருஷ ஷீக்த விமானம் (ஆர்ய விமானம்)
தீர்த்தம் - சந்திர புஷ்கரணி
நாமாவளி - ஸ்ரீ நேரொருவரில்லா வல்லீ ஸமேத ஸ்ரீ நிலா திங்கள்துண்டத்தான் ஸ்வாமிநே நமஹ.
வழித்தடம்:
காஞ்சிபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அடையும் வண்ணம் அமைந்துள்ளது இந்த திருத்தலம்.
பாசுரம்:
நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துரை நீர் வெஃகாவுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய் பெருமானுன் திருவடியே பேணினேனே
- திருநெடுந்தாண்டகம் - 8 (2059)
திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பிலிட்ட பாடலால் மங்களாசாசனம்.
பாசுரம் பதவுரை:
நீரகத்தாய் - நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே!
நெடு வரையின் உச்சி மேலாய் - திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே!
நிலாத் திங்கள் துண்டத்தாய் - நிலாத்திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே!
நிறைந்த கச்சி ஊரகத்தாய் - செழிப்புநிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருவ்வதியிலுள்ளவனே!
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் - அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
உள்ளுவார் உள்ளத்தாய் - சிந்திப்பாருடைய நெஞ்சி லுறையபவனே!
உலகம் ஏத்தும் காரகத்தாய் - உலகமெல்லாம் துதிக்கும்படி யான திருக்காரகயத்திலுள்ளவனே;
கார்வானத்து உள் ளாய் - திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே!
கள்வா - கள்வனே!
காமரு - விரும்பத்தக்கதாய்
பூ - அழகியதான
காவிரியின் - திருக்காவேரியினது
தென் பால் - தென் புறத்திலே
மன்னு - பொருந்தியிருக்கிற
பேரகத்தாய் - திருப்பேர்நகரில் உறை பவனே!
என் நெஞ்சில் பேராது உள்ளாய் - எனது ஹ்ருதயத்திலே பேராமலிருக்பவனே!
பெருமான் - ஸர்வஸ்வாமியானவனே!
உன் திரு அடியே - உனது திருவடிகளையே
பேணினேன் - ஆசைப்படா நின்றேன்.
பாசுரம் விளக்க உரை:
பல திருப்பதிகளையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்.
நீரகத்தாய் = திருக்கச்சிமாநகரில் திருவூரகமென்று ப்ரஸித்தமான ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஸந்நிதியிலுள்ள திருநீரமென்கிற திவ்யதேசம்; அவ்விடத் தெம்பெருமானை விளித்தபடி. நீரின் ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குந் தலமாதல்பற்றி இத்தலத்திற்கு நீரக மென்று திருநாமமாயிற்றென்பர். நீர்க்கும் எம்பெருமானுக்கும் ஸ்வபாவ ஸாம்யம் பலபடிகளாலுண்டு. அது நமது ஸ்வாதேசார்த்த ஸாக ரத்தில் காணத்தக்கது.
நெடுவரையீனுச்சிமேலாய்=பூமண்டலத்திலுள்ளார் அநுபவிப்பது மாத்திரமன்றியே மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கலாம்படி ஓங்கியுள்ள திருமலையிலே நின்றருள்பவனே! “வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“ “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“ “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற அருளிச் செயல்களறிக.
நிலாத்திங்கள் துண்டத்தாய் = தொண்டை நாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டினுள் ‘நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது ஒரு திருப்பதி; இது பெரிய காஞ்சீபுரத்தில் தேவதாந்தா ஆலயத்தினுள் உள்ளது.
நிறைந்தகச்சியூரகத்தாய்=ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி. எம்பெருமான் உரகரூபியாக இத்தலத்தில் ஸேவை ஸாதிப்பதனால் ஊரகமென்று திருநாமமாயிற்றென்ப.
(உரகம்-ஆதிசேஷன்) நிறைந்த கச்சி யென்றது திவ்ய தேசங்களால் நிறைந்த காஞ்சீ க்ஷத்ரமென்றபடி. திருவூரகத் தெம்பெருமான் தன் திருமேனியொளியாலே திருக்கச்சிமாநகர் முழுவதையும் நிரப்பியிருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்.
ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்=இவ்விடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியமான வாக்கியங்களின் பரம போக்யதை காண்மின் ;- “திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண்வளர்ந்தருளினவனே!. அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே அழகிய துறை யென்கிறது. தத்ஸம்பந்தத்தாலேயிறே அத்துறையைப்பற்றிக் கிடக்கிறது. (கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா- துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்.”- “கணிகண்ன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணி வண்ணா! நீ கிடக்க வேண்டும் – நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன், பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.” என்ற விடுதிப் பாசுரங்களைத் திருமழிசைப்பிரான் வைபவத்திற்காண்க. ஆச்ரிதன் போனபோது அவன் பின்னேபோயும் அவன் வந்தவாறே வந்து கால்நடை தலைமாடாக் கிடந்தும் இப்படியிறே அங்குத்தை ஆச்ரித பாரதந்திரிய மிருப்பது. ‘இந்த வூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார்கொலோ‘ என்று வைஷ்ணவனிருந்த தேசம் வைஷ்ணவனுக்கு உத்தேச்யமாயிருக்குமாபோலே ஆச்ரித ஸ்பர்சமுள்ளதொருதுறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யமா யிருக்கிறபடி.
உள்ளுவபருள்ளத்தாய்! – காஞ்சீக்ஷரத்தில் ‘உள்ளுருவாருள்ளம்‘ என்று ஒரு திவ்யதேசம் நிலாத்திங்கள் துண்டம்போலவே தேவதாந்திர ஆலயத்தின் உள்ளிருப்பதாகவும், அத்தலத்து எம்பெருமானையே இங்கு ‘உள்ளுருவாருள்ளத்தாய்!‘ என விளித்திருப்பதாகவும் பலர் சொல்லிப் போருவதுண்டு ; இஃது ஆதாரமற்ற வார்த்தையாகும். பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் இங்ஙனே காணவில்லை யென்பதுந்தவிர, பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளின நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் உள்ளுவாருள்ள மென் றொரு திருப்பதி பாடல் பெற்றிராமையும் நோக்கத்தக்கது. தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருக்குமவனே! என்றபடி. எம்பெருமானுக்கு, பரமகதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்ய மென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகிறானென்றும் நம் ஆசார்யர்கள் நிர்வஹித்தருள்வது இங்கு உணரத்தக்கது.
உலகமேத்துங் காரகத்தாய் = காரகமென்கிற திவ்யதேசமும் திருக்கச்சிமாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கியது. மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் வாழுமிடமாதல் பற்றி இத்தலத்திற்குக் காரக மென்று திருநாமமாயிற்றென்பர். எம்பெருமானுக்கு மேகத்தோடு ஸாம்யம் பலபடிகளால் உய்த்துணரத்தக்கது. (இதுவும் நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விசதம்.)
கார்வானத்துள்ளாய்! = கார்வானமென்பதும் தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று; இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கிய திவ்யதேசங்கள் நான்கிலொன்று. கள்வா! = ‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்திலுறைபவனே : பிறர் அறியாதபடி காரியஞ் செய்பவனைக் கள்வனென்பது; எம்பெருமானும் ‘இராமடமூட்டு வாரைப்போலே உள்ள பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரு‘ மவனாகையாலே கள்வனென்ப்படுகிறான்.
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்! = ‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளிகொண்டருள்பவனை விளிக்கிறபடி.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
ஸ்தல வரலாறு:
ஒரு சமயம் பார்வதிக்கும், பரமசிவனுக்கும் ஒரு போட்டி ஏற்பட்டு பார்வதி இவ்விடத்தில் ஒரு மாமரத்தின் கீழ் தவம் செய்ய அத்தவத்தை சோதிக்க எண்ணி சிவன் மாமரத்தை நெற்றிக் கண்ணால் தீ ஜ்வாலைகளால் எரிக்க பார்வதி திருமாலைப் பிரார்த்தித்தாள். சங்கு சக்ரதாரியாகத் தோன்றிய திருமால் அம்ருத கிரணங்களால் மாமரத்தை தழைப்பிக்கச் செய்ய பார்வதியின் தாபம் தீர்ந்து தவத்தைத் தொடர்ந்தாள். பார்வதியின் தாபம் தீர்க்கப்பட்டதால் (துண்டிக்கப்பட்டதால்) இப்பெருமானுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயருண்டாயிற்று. நிலவின் குளிர்ந்த கிரணங்களால் பார்வதியின் யாகத்திற்குண்டான தடை துண்டிக்கப்பட்டதால் இப்பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் ஏற்பட்டதென்பர். பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை வழங்கிக் கொண்டே இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம்.
சிறப்பு:
வரலாற்றின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கையில், இத்தல பெருமாளுக்கு புருச சுக்த விமானமும், சந்திர புட்கரணி தீர்த்தமும் இருந்ததாக அறியப்படுகிறது.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் உள்ளது. நிலாவென்றாலும், திங்கள் என்றாலும் ஒன்றுதான். அவ்வாறிருந்தும் நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் எவ்வாருண்டாயிற்று என்று தெரியவில்லை. திருமங்கையாழ்வார் சொற்றொடர் மங்களாசாசனமே வழங்கியுள்ளார். வரங்கள் வேறு யாதும் கொடுக்கவில்லை. நிலாத் திங்கள் துண்டத்தான் என்று வைணவச் சுவையிலிருந்து சற்றே மாறுபட்ட சொல்லைக் கொண்டவன் இப்பெருமாள். அதுமட்டுமன்றி சைவக்கோவில்களுக்குள் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள்கள் எழுந்தருளியிருக்கிறார்கள் என்றால் அது இங்கும் காமாட்சியம்மன் கோவிலுமேயாகும்.
இந்த இரண்டு தலங்களும் (திருநிலாத்திங்கள் துண்டம், திருக்கள்வனூர்) எவ்வாறு சைவக் கோவில்களுக்குள் வந்தன என்பன தொல்லியல் மற்றும் வரலாற்றடிப்படையில் ஆய்ந்து முடிவு செய்யப்பட வேண்டியதாகும். நிலாத்திங்கள் துண்டத்தான் கோவிலும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் எதிரெதிரேயான ஒரே சாயலில் இருந்த சமயம் சுற்று மதில் எழுப்பும்போது இரண்டு கோவில்கட்கும் சேர்த்து சுற்றுமதில் எழுப்பப்பட்டுவிட்டதா, அல்லது சைவ, வைணவ ஒற்றுமை கருதி சிவன் கோவிலுக்குள் ஒன்றுமாக உமையவள் கோவிலுக்குள் ஒன்றுமாக மங்களாசாசனப் பெருமாள்கள் தேவை என்று கருதி கொணரப்பட்டதா என்பது ஆய்ந்து அறிதற்குரியனவாகும். இதே போன்று சோழநாட்டுத் திருப்பதிகளில் திருச்சித்ரக்கூடம், தில்லை நடராஜன் சன்னதிக்குள் அமைந்துள்ளது. இருப்பினும் இவ்விரண்டு ஸ்தலங்களின் அமைப்பையும் உற்று நோக்கினால் முன்னொரு காலத்தில் இரண்டு ஸ்தலங்களும் தனித்தனியே அதே சமயம் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் அமைந்திருந்தன என்று பார்த்த மாத்திரத்திலேயே ஊகிக்க முடிகிறது. பின்னொரு காலத்தில் சுற்று மதில் எழுப்பப்பட்ட போது இரண்டுக்கும் சேர்த்து தற்போதுள்ள மாதிரி பெரிய மதிலை அமைத்திருக்கின்றனர் என்பது ஊகிக்க முடிகிறது. பெரிய மதிலாகச்சுற்றி வளைத்து இரண்டு சன்னதிகளையும் ஒரு பெரும் கோட்டைக்குள் வைத்தது மாதிரி அமைத்துவிட்டனர். இந்த மதிலும் திருமங்கையாழ்வாரின் காலத்திற்குப் பின்னால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தில்லை கோவிந்த ராஜன் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குள் உள்ளான் என்று திருமங்கையாழ்வார் ஓரிடத்திலும் சொல்லவில்லை. வைணவத்திருத்தலங்களில் சிவன் (தேவதாந்திரத்திற்கும் எம்பெருமான் இடங்கொடுக்கிற பண்பை) இருப்பதை திருமங்கையாழ்வார் சுட்டுகிறார். உதாரணமாக பாண்டிநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் சிவனுக்குத்தனி சன்னதி உள்ளது. இதனைத் திருமங்கையாழ்வார்
அக்கும் புலியின் அதளும் உடையான் அவரொடு
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர் போலும் - 1798
இவ்விதம் அடையாளங்காட்டும் திருமங்கையாழ்வார் மேற்சொன்ன ஸ்தலங்கள் சைவதலங்கட்கு உள்ளேயோ அன்றி வெகு அருகாமையிலோ இருந்ததாக ஓரிடத்தும் கூறினாரில்லை. எனவே இத்தலங்கள் தனித்து மற்ற வைணவத் தலங்களைப் போலவே வைணவ லட்சணத்தோடு திகழ்ந்திருக்க வேண்டும். காலத்தின் போக்கில் இவ்விதம் ஏற்பட்டிருக்கலாம். எனவே இத்தலங்களின் உண்மையான இருப்பிடம் யாது, அதில் குறிப்பிட்டுள்ள புஷ்கரணி மற்றும் பிறவெல்லாம் எங்கிருந்தனவென்பது ஆய்ந்து காண்டற்குரியனவாகும்.
இப்பெருமாள் பார்ப்பதற்கு பேரழகு பொருந்தியவர். குளிர்ந்த கிரணங்களை வீசிக்கொண்டே இருக்கிறார் என்பதை இவர் முன்நின்ற சிறிது நேரத்திலேயே உணரமுடிகிறது. அவ்வளவு ரம்யமான தேஜஸ் பொருந்திய தண் என்ற நிலவுமுகன். பெயருக்கேற்ற பொருத்தத்துடன் பேரழகு பொலிய நிற்கிறார்.
மாமரத்தை தழைக்கச் செய்த பிறகு பார்வதி மீண்டும் யாகத்தை துவக்க இதனால் மேலும் சினந்த சிவன் தனது தலையில் உள்ள கங்கையை ஏவினார் தமக்கையாயிற்றே என்றெண்ணி தன்யாகத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டாமென்று வேகமாக வந்த கங்கையை வேண்டினாள். கங்கை அதைப் பொருட்படுத்தவில்லை. பார்வதி தனது பக்தி மேலீட்டால் மணலினால் லிங்கம் செய்து தவமிருந்தாள். கங்கையால் அந்த லிங்கத்தைக் கரைக்க முடியவில்லை. இதைக் கண்ட பார்வதி மிக்க சந்தோஷத்துடன் அந்த லிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டாள். இவ்விருவருக்கும் நிலாத்திங்கள் துண்டத்தான் அருள்பாலித்தார். இவ்விதம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒருசேர அருளிய ஸ்தலம் உண்டென்றால் அது இது ஒன்றுதான்.
காஞ்சியில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் அமைந்துள்ள இந்த திவ்ய தேசத்தில் சிவன் கோவில் குருக்களே பூஜை செய்து தீர்த்தம் கொடுக்கின்றார். தமிழ்நாட்டிலுள்ள திவ்ய தேசங்களில் சிவனடியார்களால் பூஜை செய்யப்படும் பெருமாள் உண்டென்றால் அது இவர் ஒருவர் தான்
புராணங்களில் நேர் ஒருவரில்லா வல்லி என்று குறிக்கப்பட்ட இந்தப் பிராட்டிக்கு நிலாத்திங்கள் துண்டத்தானின் திவ்ய தேசத்தில் தனிச் சன்னதி உள்ளதாக அறிய முடிகிறது. இங்கு தற்போது நாச்சியாரில்லை. புராணங்கூறும் புஷ்கரணியில்லை.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/h3DEO3-eB5M
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/119563916510711/?sfnsn=wiwspmo&extid=ETjbKNCLjVVlux9r
No comments:
Post a Comment