பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி14
(sujatha&venkatesan)6381369319
மணி பன்னிரண்டாகி நல்ல வெயில் ஏறி அழகர் மலை,கள்ளழகர் கோயில் எறங்கறோம். வாசலில் பதினெட்டாம்படி கருப்பன் வரவேற்கிறார்.
கூகுளில் பார்த்து விட்டு கோயில் வரலாறு சொல்றார். ….
இந்த மலையில் திருமால், ”அழகர்”ன்ற பெயரில்கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.
இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இம்மலையில் பலவகை மரங்களும், செடிகொடிகளும் பச்சைப்பசேலெனக் காட்சியளிக்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை, திருமாலிருஞ்சோலை, வனகிரி, எனச் சொல்லப்படுகிறது.
திருக்கோவிலை குலசேகர பாண்டியனின் மைந்தனான மலையத்துவஜா பாண்டியன் புதுப்பித்தாக வரலாற்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. அதன்பிறகு கி.பி1251 முதல் 1270 வரை மதுரையை ஆண்ட ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கோவிலுக்கு பொன்னாலான விமானத்தை அமைத்தாராம். அதன்பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மதுரை வந்தபோது, கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் பல புணரமைப்பு பணிகள் செய்து, ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தாராம். அதன்பின் ஆட்சி செய்த நாயக்கர்கள் அழகர் கோவிலை பாண்டிய, விஜயநகர மன்னர்களைப் போல நன்றாக பராமரித்தார்கள். அதன்பிறகு கிபி 1558 முதல் 1563 வரை ஆண்ட விஷ்வநாத நாயக்க மன்னன் இந்தக் கோவிலில் பல திருப்பணிகளை செய்தாராம். சங்க சிறப்புப் பெற்ற இத்தலத்தைப் பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாடலில் குறிப்பிட்டுள்ளனர். நக்கீரர் உள்பட பல புலவர்கள் அழகர் கோவிலைப் பற்றி பல பாடல்கள் இயற்றியுள்ளனர்.
எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது இக்கோவில். மிகவும் பழைய தமிழ் நூல்களிலும், வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை சொல்லப்பட்டு இருக்கு. இங்கே உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகியவை பற்றிய வராக புராணம், பிரம்மாண்டமான புராணம், வாமன புராணம், ஆக் நேய புராணம் முதலியவற்றிலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து "விருஷ பாத்திரி மகாத்மியம்" என்ற ஸ்தல புராணத்தில் இத்தலத்தின் புராணப் பெருமைகளை விரிவாக எடுத்து சொல்லப்பட்டு இருக்கு. இங்குக் கோயில் கொண்டு உறைகின்ற இறைவன் அழகர் என்று சொல்லபடுகிறார். இவரே வடமொழியில் சுந்தர ராஜன் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த திருத்தலம் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டு இருக்கு. கோயில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியங் கோட்டை எனவும், வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டை எனவும் சொல்லப்படுகிறது. நாட்டுப்புறப் பாடல்களில் உட்கோட்டையை நலமகராசன் கோட்டை என்று இத்தலத்தினைப் பெரியாழ்வார் பாடுவதால் அவர் காலத்திலேயே இக்கோயிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டுமென தோன்றுகிறது. இங்குள்ள வெளிக்கோட்டை கி.பி. 14 - ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை அரசாண்ட வானாதிராயர்களால் கட்டப்பட்டது.
பெரியாழ்வார் குறிப்பிடும் மதில் இரணியம் கோட்டை எனப்படும் உட்கோட்டை மதிலாகும். இதற்குள் பண்டைக்காலத்தில் பிள்ளைப் பல்லவராயன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட அக்கிரஹாரம் ஒன்று இருந்தததாம். அது சமாந்தநாராயண சதுர்வேதமங்கலம் என்ற பெயருடன் அழைக்கப்பட்டதாம். வெளிக்கோட்டைப் பகுதியில் தேர் மண்டபம் இருக்கு.
தேர் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் உட் கோட்டையின் தெற்கு வாசலான இரணியம் வாசலை அடையலாம். இவ்வாசலை தாண்டி உள்ளே நுழைந்தால் இடப்புறம் இருப்பது யானை வாகன மண்டபம். இந்த மண்டபத்தின் வடக்கே கோபுரம் அமைந்திருக்கிறது. இந்த கோபுரவாசலில் உள்ள கல்வெட்டுகளில் கி.பி. 1513 - ல் ஆண்ட விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவ மகாராஜாவின் கல்வெட்டே முக்கியமானதாகும். எனவே இக்கோபுரம் 16 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இக்கோபுர வாசலை மக்கள் பயன்படுத்த முடியாது. எப்போதும் அடைத்தேக் கிடக்கும். இதற்கு முன்னர் பக்கச் சுவர்களோடு கூடிய இரட்டைக் கதவுகள் உள்ளன. இவையே பதினெட்டாம் படிக் கருப்பணசாமியாக வழிப்படப்படுகிறது.
இதன் எதிரில் உள்ள பதினாறு கால் மண்டபம் ஆண்டாள் மண்டபம், அல்லது சமய மண்டபம் எனப்படுது. ஆடி, சித்திரை, திருவிழாக்களில் இக்கோயில் ஆச்சாரியர்களான ஆண்டாள் இம்மண்டபத்தில் வீற்றிருப்பார். இதற்கு வடப்புறத்தில் உள்ளது கொண்டப்பநாயக்கர் மண்டபமாகும். இதற்கு வடப்புறம் சென்று மேற்கே திரும்பினால் வண்டிவாசல் என்ற வாசல் காணப்படுகிறது . இதன் வழியாக நுழைந்து மேற்கு நோக்கி சென்றால் எதிராசன் திருமுற்றம் என்று வழங்கப்படும் பரந்த வெளியை அடையலாம்.
. மூலவர் ஸ்ரீ பரமஸ்வாமி நின்ற திருக்கோலத்தில் கல்யாண சுந்தரவல்லி தயார் வலப்புறத்திலும் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் இடப்புறத்திலும் புடைசூழ சேவை சாதிக்கிறார். மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது. தூங்கானை (கஜப்ருஷ்ட) விமான அமைப்பு இக்கோவிலின் சிறப்பாகும். அதிஷ்டானம் முதல் பிரஸ்தாரம் வரை கல்லால் அமைக்கப்பட்டது. இதற்கு மேல் பொன்வேய்ந்த சிகரம், ஸ்தூபி ஆகிய எல்லாம் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தைச் சுற்றி திருச்சுற்று மண்டபம் அமைந்துள்ளது. மூலவரின் வேறு பெயர்கள் கள்ளழகர், மாலங்காரர், மாலிருஞ்சோலை நம்பி என்பனவாகும்.
இந்தக் கோவிலின் முக்கிய தெய்வமாகக் கருதப்படும் பரமஸ்வாமி சிலையும், உற்சவர் சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர் சிலையும் தங்கத்தினால் ஆனதாகும். பெருமாளுக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரவல்லியும், இடப்புறமாக ஆண்டாளும் காட்சி தருகிறார்கள். ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்ததாக புராணங்களில் சொல்லப்படுகின்றது. இக்கோவிலில், சுதர்சனனார், யோக நரசிம்மர், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி கருவறைகள் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கடைசியாக பெருமான் சந்நதி ...
தாயார் கல்யாண சுந்தரவல்லி என்ற ஸ்ரீதேவி தனிக்கோயிலில் குடிகொண்டுள்ளதால் தனிக்கோவில் தாயார் என்று பெயர். கல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது. இங்கு மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.
முதல் பிரகாரத்தில் சுதர்சனர் (சக்ரத்தாழ்வார்), யோக நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கருப்புச்சாமி சன்னதியில் உள்ள விமானம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. ஜ்வால நரசிம்மர் சன்னதி முதல் பிரகாரத்தில் மூலவர் சன்னதிக்கு நேர் பின்னால் அமைந்துள்ளது. இவர் உக்ர நரசிம்மர் ஆவார். இவர் உக்கிரம் தணிக்க தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்நெய், தேன் போன்றவற்றால் திருமஞ்சனம் நடைபெறுகிறது . இவருடைய சன்னதிக்கு மேல் உள்ள அடிக்கூரை திறந்து வைக்கப்பட்டுள்ளதால் இவர் உக்கிரம் தனியும் என்பது நம்பிக்கை. வெளிப் பிரகாரத்தில் தும்பிக்கை ஆழ்வார் மற்றும் சேனைமுதலியார் சன்னதிகள் உள்ளன. இந்த தளத்தின் ஷேத்ரபாலகர் வைரவர் ஆவார்.
அடுத்து வருவது எதிராசன் திருமுற்றம். இம்முற்றம் ஸ்ரீ ராமானுஜர் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த முற்றத்தின் நடுவில் திருக்கல்யாணமண்டபம் உள்ளது. பங்குனி உத்திரத்தில் இங்குதான் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெறுகிறது. இம்மண்டபத்தை விஜயநகர மன்னர் காலச்சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டு பார்ப்பதற்கு கலைநயத்தோடு இருக்கிறது . இத்திருமுற்றத்தில் பல மடங்கள் சமயப் பணியாற்றின. அதில் முக்கியமானது இராமானுஜர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமாலிருஞ்சோலை ஜூயர் மடம் இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்து பல ஜீயர்கள் இங்கே தொண்டாற்றினார்களாம்.
திருக்கல்யாண மண்டபத்தை அடுத்துள்ள தொண்டைமான் கோபுரம், செல்வத்தூர் காதியந்தர் மகனான தொண்டைமான் என்பவரால் கட்டப்பட்டுள்ளன என்பதற்கு கல்வெட்டு குறிப்புகள் இருக்கு. இந்த கோபுரவாசலை அடுத்து உள்ளே காணப்படும் மண்டபத்தை சுந்தரபாண்டியன் கட்டினான் என்றும், அதனால் இவருக்கு பொன் மேய்ந்த பெருமாள் என்றும் அழைக்கபட்டாராம்.
கொடிக்கம்பத்தை அடுத்து இருக்கும் கருடமண்டபம், ஆரியன் மண்டபம் என்றழைக்கப்படுகிறது. இதற்கு படியேற்ற மண்டபம் என்றும் பெயர் உண்டு. இந்த மண்டபத்தை தோமராச அய்யன் மகனான ராகவராஜா என்பவர் கட்டி முடித்தாராம். படியேற்ற மண்டபத்தை அடுத்துள்ளது முனைய தரையன் திருமண மண்டபமாகும். இதற்கு அலங்கார திருமண மண்டபம் என்றும் ஒரு பெயர் வழங்கப்படுகிறது. இம்மண்டபத்தைக் கட்டியவன் ”மிழலைக் கூற்றது நடுவிற் கூறு புள்ளுர்க் குடி முனையதரையனான பொன் பற்றுடையான் மொன்னப் பிரான் விரதம் முடித்தப் பெருமான்” என்று கல்வெட்டுக்கள் மூலம் சொல்லப்பட்டு இருக்கிறது.
மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் இங்கு அமர்ந்தக் கோலத்தில் காட்சித் தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விகனேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் .சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.
கோயிலின் பெருமையையும் பழமையையும் நினைத்து ஆச்சர்யப்பட்டு உள்ளே நுழைகிறோம்….
தொடரும்




No comments:
Post a Comment