Tuesday, October 10, 2023

நூலறந்த பட்டம் - 3

 நூலறந்த பட்டம் - 3

சுகுணாவும் அவள் அப்பாவை ஏழு வயதில் இழந்தாள். அப்பா இல்லாத குழந்தையாயிற்றே என்று மரகதம் அவளுக்கு கொஞ்சம் அதிகமாகவே செல்லம் கொடுத்து வளர்த்தாள். இதனால் சுகுணா பிடிவாதக்காரியாக மாறினாள். மேலும் தான் என்ன நினைத்தாலும் அதிலிருந்து பின் வாங்குவது கிடையாது. "சரி. வயதானால் சரியாகி விடுவாள்" என்று மரகதம் நினைத்தாள். ஆனால் மாறாக,வயதாக வயதாக பிடிவாதம் தான் கூடிக் கொண்டு சென்றது.

திருமணம் முடிந்து சுகுணா, ஆதித்யாவின் வீட்டிற்கு வாழ வந்துவிட்டாள். வந்ததிலிருந்து அவளுக்கு மாமியார் ராதா மீது நல்லா அபிப்பிராயமே இல்லை. இதை வளர்க்கும் விதமாக, ஆதித்யா அவளிடம் எப்போது  பேசினாலும் அம்மா பெருமையை பேசிக்கொண்டே இருந்தான்.சுகுணாவிற்கு இது எரிகிற தீயில் எண்ணை விடுவதை போல இருந்தது. 

ஒருநாள் சுகுணா ஆதித்யாவிடம் "உங்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கிறது" என்று கேட்டாள். அவன்  சம்பளத்தைக் கூறியவுடன் "இது மிகவும் குறைந்த சம்பளம் ஆயிற்றே. நீங்க சாப்ட்வேர் லைனுக்கு   மாறினா இதைப்போல  இரட்டிப்பு  சம்பளம் கிடைக்குமே" என்றாள். அதற்கு ஆதித்யா " இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் இதுவரை சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நீ வேற இப்போது சம்பாதிக்கிறாய். எதற்கு இன்னும் அதிகப்படியான வருமானம். இதைத் தவிர முக்கியமான ஒன்று, நான் இப்போது இருப்பது என் மனதுக்கு மிகவும் பிடித்த வேலை. இதை விட்டுவிட்டு அதிகமான சம்பளத்திற்காக மனதுக்கு பிடிக்காத  வேலையில் சேர எனக்கு விருப்பமே இல்லை" என்றான். இது சுகுணா விற்கு அறவே பிடிக்க வில்லை .

திருமணமான உடனேயே அவள் "என்னுடை சம்பளத்தில் பெரும்பகுதியை எங்க  அம்மாகிட்ட  கொடுத்துடுவேன். மீதி இருப்பதை நான் தனியாக சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டில் வைத்துக் கொள்ளப்போகிறேன்"

என்று கூறி இருந்தாள். ஆதித்யா இதற்கு ஏதும் மறுப்பு சொல்லாததோடு" நீ சொல்லுவது நியாயம்தான்.அதன் படி செய் "என்று கூறிவிட்டான்.

சுகுணாவும், ஆதித்யாவும் ஹனிமூனுக்கு எங்கு செல்வது என்ற விவாதத்தில் ஈடுபட்டார்கள்.ஆதித்யா ஊட்டிக்கோ அல்லது கேரளாவை சேர்ந்த சில இடங்களுக்கோ சென்று வரலாம் என்று கூறினான். சுகுணாவிற்கு அது பிடிக்கவே இல்லை. "மொரீஷியஸ், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு போய் விட்டு வரலாம்" என்று கூறினாள். அப்போதுதான் அவள் தன் நண்பர்களிடம் ஹனிமூனுக்காக வெளிநாடு போய்விட்டு வந்ததை சொல்ல முடியும். இதைத்தவிர அவளது பல நண்பிகள், திருமணம் முடிந்தவுடன் ஹனீமூனுக்காக இவ்வாறு வெளிநாடு தான் சென்றிருக்கிறார்கள்.தான் அப்படி  செல்லாவிட்டால், அது கௌரவக்குறைச்சல் என்று நினைத்தாள். ஆதித்யாவிற்கு இது பிடிக்கவில்லை. இதுவரை அவன் அம்மாவை விட்டு  பிரிந்ததே இல்லை. இதை ராதாவிடம் ஆதித்யா கூறிய போது, அதற்கு ராதா "சுகுணா  சொல்லுவது தான் சரி. வெளிநாடு சென்று பார்த்துவிட்டு வாருங்கள்" என்று கூறினாள்.வேறு வழி இல்லாமல் சுகுணாவும், ஆதித்யாவும் ஹனிமூனுக்காக ஒரு வாரம் சிங்கப்பூர் சென்று வர தீர்மானித்தார்கள். டிக்கெட் எடுத்து எடுத்தாகிவிட்டது. கிளம்பும் போது  ஆதித்யா அம்மாவிடம் "பாத்தும்மா ஜாக்கிரதையா இரு. ஏதாவது வேணும்னா போன் பண்ணு" என்று பலமுறை கூறி விட்டான். சுகுணா தனியா இருக்கும் போது அவனிடம் "உங்க அம்மா என்ன சின்ன குழந்தையா.இப்படி சொல்றீங்களே"  என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் " நல்ல வேளை.உங்க அம்மாவுக்கும் டிக்கட் எடுக்காம இருந்தீங்களே" என்று  கிண்டல் அடித்தாள்.

இதைக்கேட்ட ஆதித்யாவிற்கு உள்ளூர கோபம் பொத்துக்கொண்டு  வந்தாலும் அதை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்.(தொடரும்)

No comments:

Post a Comment