ரங்கு சித்தப்பா - 1
ராமகிருஷ்ணன் ஆஞ்சு ஓஞ்சு அப்போது தான் ஆபீஸிலிருந்து வந்திருந்தார். வந்தவுடன் டிபன் பாக்ஸை தொட்டி மித்தத்தில் போட்டுவிட்டு, பேண்ட்,ஷர்ட்டிலிருந்து வேஷ்டி, பனியனுக்கு மாறினர். டைனிங் டேபிள் அருகில் உட்கார்ந்து" சுமதி,காபி கொடு" என்றார். இன்று ஆபீஸில் வேலை மிகவும் அதிகம். ஒரு தனியார் கம்பெனியில் ஜெனரல் மேனேஜராக இருக்கிறார் ராமகிருஷ்ணன். தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு டெஸ்பேச் செய்தாக வேண்டும். காலையிலிருந்து கண் குத்தி பாம்பாக பார்த்துக் கொண்டிருந்தால் தான் மாலையில் டார்கட்டை தொடமுடியும். ஒவ்வொரு நாளும் டென்ஷன் தான், முதல் பிரசவம் மாதிரி. மாலை வீட்டிற்கு எப்போது போகப் போகிறோம் என்று இருக்கும். வீட்டுக்கு வந்து முகம் கழுவி கொண்டு, சுமதி கையால் ஒரு ஸ்ட்ராங் காப்பி குடித்தால் தான் அவர் சகஜ நிலைமைக்கு திரும்புவார் .இன்றும் அப்படித்தான்.
காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவர் அருகில் நின்றாள் சுமதி. அவள் முகத்தை பார்க்கும் பொழுது அவருக்கு என்னமோ அவள் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது தெரிந்தது. காபி குடித்து முடித்ததும் அவளை பார்த்து "என்ன ஒரு மாதிரியா இருக்க. ரஞ்சனி நார்மலா தானே இருக்கா" என்றார். ரஞ்சனி அவருடைய மூத்த பெண். திருமணமாகி ஒன்றரை வருஷமாகிறது. எட்டு மாதம் கர்ப்பம். பிரசவத்திற்கு தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள். "ரஞ்சனி நன்றாக தான் இருக்கா" என்றாள் சுமதி. "வினய் ஏதாவது தகராறு பண்ணினானா" என்றார் அடுத்து. வினய் அவருடைய பையன். ரஞ்சனியை விட நாலு வயது சின்னவன்
.இரண்டாவது வருடம் இன்ஜினியரிங் படிக்கிறான். நான்காவது செமஸ்டர் பரிட்சைக்கு தயார் செய்து கொண்டிருக்கிறான். "வினய் அவன் பாட்டுக்கு தன் வேலைய பாத்துண்டு இருக்கான்" என்றாள் சுமதி.
" அப்போ உன் பிராப்ளம் என்ன.உன் உடம்புக்கு ஏதும் பண்றதா சொல்லேன்" என்றார்.
அதற்கு சுமதி" பாத்தா எப்படி தெரியறது.நான் கல்லு கொண்டாட்டம் தானே இருக்கேன்" என்றாள்.
"அப்ப என்னதான் பிராப்ளம். சொல்லி தொலையேன்" என்றார் ராமகிருஷ்ணன் பொறுமையிழந்து.
" நான் என்னத்த சொல்லறது. ரங்கு சித்தப்பா ஃபோன் பண்ணினார். இன்னும் ரெண்டு நாள்ல இங்க வருதா இருக்காராம்" என்றாள் சுமதி.
இதைக் கேட்ட ராமகிருஷ்ணனுக்கு தலை மேல் இடி இறங்கியது போல் இருந்தது. சுமதியை பார்த்தவர் "சித்தப்பா கிட்ட வீட்டு நிலைமை நீ சொல்லலையாக்கம்" என்றார் .அதற்கு சுமதி "அதை சொன்னா வேறு வெனயே வேண்டாம். உங்களுக்கு தான் ரங்கு சித்தப்பாவை தெரியுமே" என்றாள்.
ராமகிருஷ்ணன்
" இனிமே பகவான் வீட்டு வழி. வேற என்ன பண்ண முடியும்.நடக்கிற படி நடக்கட்டும்" என்றார் பிலசாபிகலாக.
யார் இந்த ரங்கு சித்தப்பா?
ரங்கு சித்தப்பா வரப்போகிறார் என்பதை கேட்டு ஏன் இவர்கள் இப்படி,கோடை இடி கேட்ட நாகம் போல் பயப்படுகிறார்கள்?
ரங்கு சித்தப்பா வேறு யாரும் இல்லை.
சுமதியினுடைய ஒன்று விட்ட சித்தப்பா. முழு பெயர் ரங்கசாமி. மத்திய அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். கறார் பேர்வழி.அவரது பையன்கள் இரண்டு பேரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். மனைவி தவறி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது.அவர் ஸ்ரீரங்கத்தில் தன்னுடைய அபார்ட்மென்ட்டில் தனியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார். எப்போதாவது இரண்டு மூன்று வருடத்திற்கு ஒரு முறை சுமதி வீட்டிற்கு வந்து பத்து நாள் டேரா போட்டு விட்டு செல்வார். இந்த பத்து நாளும் வீடு அமர்க்களப்படும். என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும், ஏதோ ஒரு விஷயத்தில் சுமதி மாட்டிக் கொள்வாள். பிழிந்து எடுத்து விடுவார் சித்தப்பா. அட்வைஸ் தரேன் பேர்வழி என்று கொஞ்ச நேரம் வினயிடமும்,ரஞ்சனியிடமும் பேசுவார். எப்போது அவர் பேச்சை நிறுத்துவார் என்று இருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ராமகிருஷ்ணன் மாப்பிள்ளையாகையால் அவரை அவ்வளவு தூரம் இம்சிக்க மாட்டார். இவர் இருக்கும் பத்து நாட்களும் ராமகிருஷ்ணன் ஆபீஸில் அதிகமாக வேலை இருக்கிறது என்று இரவு 9 மணிக்கு தான் வருவார்.அப்படி இருந்த போதிலும் ராமகிருஷ்ணனிடம் அரைமணி பேசிவிட்டு தான் ரங்கு சித்தப்பா தூங்குவார்.
இந்த குடும்பம்
சித்தாப்பாவுக்கு துர்வாசர் என்ற பட்டப்பெயர் வைத்திருந்ததை அவர் அறியமாட்டார்.
இந்த முறை என்ன பண்ணப் போகிறாரோ என்று சுமதி பயந்து, நடுங்கிக் கொண்டு இருந்தாள்.
(தொடரும்)
No comments:
Post a Comment