மாற்றான் தோட்டத்து மல்லிகை -4
By N.Krishna Murthy
கொஞ்ச நாட்களாகவே ஜாஸ்மினுக்கு மனதில் பெரும் கவலை இருந்து கொண்டிருந்தது. ஜாஸ்மின் மருத்துவக் கல்லூரி படிக்கும் போது, அவளை விட ஒரு வருடம் சீனியரான ராபர்ட்டிடம் மனதை பறிகொடுத்து இருந்தாள். இருவரும் வெகு நெருக்கமாக பழகினார்கள்.இந்த நெருக்கம் ஜாஸ்மினை கருக்கலைப்பு வரை கொண்டு சென்றது. தொடர்ச்சியாக பல பாடங்களில் அரியர்ஸ் வைத்துக் கொண்டிருந்ததாலும், கல்லூரியில் ஒரு பேராசிரியரை அடித்ததாலும் ராபர்ட்டை கல்லூரியை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள்.
ராபர்ட் வேலை ஏதும் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தான்.
ஜாஸ்மின் தான் தன்னால் முடிந்த அளவு அவனுக்கு அப்போதைக்கப்போது பண உதவி செய்து வந்தாள்.
ஜாஸ்மின் கல்லூரி படிப்பை முடித்தவுடன், வேறு வழி இல்லாமல், ராபர்ட்டை திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ ஆரம்பித்தாள். இடைப்பட்ட இரண்டு மூன்று வருடங்களில் ராபர்ட்,
குடி மட்டுல்லாமல் ,கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கும் அடிமையானான். முதலில் இதைப்பற்றி அறியாத ஜாஸ்மின் பின்னர் தெரிந்து கொண்ட போது,அவனிடம் எவ்வளவோ தூரம் எடுத்துக் கூறினாள்.
ராபர்ட் திருந்துவதாக இல்லை.
துபாயில் ஒரு வேலை வாய்ப்பு வந்த போது அதை ஏற்றுக் கொண்டு அவனை பிரிந்து துபாய் சென்று விட்டாள்.அவளை விட்டு பிரிந்து இருந்த மூன்று வருடங்களும் ராபர்ட், நண்பர்கள் உதவுயுடன்,சிறு திருட்டுகளில் ஈடுபட்டு காலம் தள்ளிக் கொண்டு இருந்தான்.
மீண்டும் ஜாஸ்மின் இந்தியாவிற்கு திரும்பி மதுரையில் வேலைக்கு சேர்ந்த விவரம் அவன் காதை எட்டியது. அவளை நேரில் சந்தித்து அவளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தான்.
ஜாஸ்மின் அவனிடம் விவாகரத்து வேண்டும் என்று கெஞ்சி கூத்தாடினாள்.
"சரி.விவாகரத்து கொடுக்கிறேன். ஆனால் எனக்கு 25 லட்ச ரூபாய் எனக்கு கொடுக்க வேண்டும். அதை வைத்து ஒரு வியாபாரம் செய்து நான் பிழைத்துக் கொள்வேன்" என்று கூறினான். ஒருவழியாக பேரம் பேசி 25 லட்சத்தை 15 லட்சம் என்ற ஆக்கி, கையில் இருந்த சேமிப்பிலிருந்து ஐந்து லட்சத்தை எடுத்துக் கொடுத்தாள் ஜாஸ்மின். இன்னும் பத்து லட்சம் பணம் தர வேண்டி இருந்தது. இதைப் பற்றி சுதாகரிடம் விரிவாக பேசி அந்த பத்து லட்சத்தை அவனிடமிருந்து வாங்கி ராபார்ட்டிடம் கொடுத்து விட வேண்டும்,அதன் பிறகு சுதாகரை மணந்து கொண்டு விடலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தாள் ஜாஸ்மின்.
சனிக்கிழமை அன்று நிரஞ்ஜனா சுதாகரின் 15வது திருமண ஆண்டு நிறைவு நாள் வர இருந்தது. அதை விமர்சையாக கொண்டாடி, சுதாகரை தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று படாத பாடுபட்டுக் கொண்டிருந்தாள் நிரஞ்ஜனா. ஜாஸ்மின் மயக்கத்தில் இருந்த சுதாகருக்கு திருமண நாள் ஞாபகத்திலேயே இல்லை. திருமண நிறைவு நாள் அன்று அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று நிரஞ்ஜனா அவனிடம் திருமண நாளை பற்றி ஞாபகப்படுத்தவே இல்லை. அவனுக்கு பிடித்த பிரவுன் கலர் பேண்ட்டும், ஸ்கை ப்ளூ கலர் ஃபுல் ஹேண்ட் ஷர்ட்டும் வாங்கி வைத்திருந்தாள்.
வியாழக்கிழமை இரவு கிட்டத்தட்ட 8 மணிக்கு தான் சுதாகர் நர்சிங் ஹோமிலிருந்து திரும்பி வந்தான்.வழக்கமாக காப்பி சாப்பிட வரவில்லை. பதிலாக தன் அறைக்குச் சென்று, இருபது நிமிடம் கழித்து தான் திரும்பி வந்தான்.
அவன் முகம் வெளிறி போய் இருந்தது. அவனைப் பார்த்து நிரஞ்ஜானா "ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்" என்று கேட்டாள்.
" நான் சாதாரணமாகத்தான் இருக்கிறேன்"என்றான் அவன். ஆனால் அவன் பேசும் போது ஒரு படபடப்பு தெரிந்தது.
பிறகு அவனுக்கு காபி கொண்டு வந்தாள் நிரஞ்ஜனா." காபி வேண்டாம்,நிரா. இன்னும் அரை மணி நேரத்தில் சாப்பிட்டு விடுவேன்" என்றான். இரண்டு சப்பாத்தியும், தக்காளி சட்னியையும் சாப்பிட்டுவிட்டு கை கழுவிக் கொண்டான் சுதாகர்."என்ன ரொம்ப குறைவா சாப்பிடுகிறீர்கள்.இது போதுமா" என்றாள் நிரஞ்ஜனா. "எனக்கு அவ்வளவு பசியில்லை. அரை மணிக்கு கழித்து சூடாக ஒரு டம்ளர் பால் கொடு. அது போதும்" என்று படுக்கை அறைக்கு சென்று விட்டான். அவன் கேட்டுக் கொண்டபடி அரைமணி கழித்து அவனுக்கு பாலை கொண்டு போய் கொடுத்தாள் நிரஞ்ஜனா .பாலை குடித்த 15 நிமிஷத்தில் அவன் அடித்துப்போட்ட மாதிரி உறங்க ஆரம்பித்து விட்டான். வெகு நேரம் முழித்துக் கொண்டிருந்த நிரஞ்சனா படுக்கப் போகும்போது மணி பன்னிரண்டை தொட்டது. படுப்பதற்கு முன் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். வெகு நேரம், தான் எடுத்த முடிவை மனதில்
அசை போட்டு கொண்டிருந்தாள் .
"அதை மறுபரிசீலனை செய்வதற்கு ஒன்றுமே இல்லை .இரண்டு குழந்தைகளின் நலனை ஒட்டியே நான் முடிவெடுத்திருக்கிறேன்.
நான் இதில் உறுதியாக இருக்க எனக்கு நீ தான் துணை செய்ய வேண்டும்"என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.(தொடரும்)
No comments:
Post a Comment