Saturday, October 14, 2023

ரகோபதேஸம்தொடர்ச்சி_7

 #ரகோபதேஸம்தொடர்ச்சி

ரகோபதேஸம்தொடர்ச்சி_7

by பாஸ்கர் சத்யா

அன்று அமாவாசைக்கு முதல்நாள்.

'மாமா வந்துட்டேன் பாடம் கத்துக்க.  நாளைக்கு அமாவாசை.  எனக்கு நீங்க இன்னிக்கு கண்டிப்பா அமாவாசை தர்ப்பண மந்திரங்களோட அர்த்தங்கள சொல்லித் தந்தே ஆகணும்.  எத்தனை நாளா கேட்டுண்டு இருக்கேன் உங்கள.'

'சொல்லித்தராம எங்க போப்போறேன்?  ஆனா இன்னிக்கு இல்ல.'

'ஏன் மாமா எனக்கு தர்ப்பணத்த பத்தி சொல்லிக் கொடுக்க இவ்வளவு தயங்கறேள்?'

'ஒவ்வொரு தடவயும் நோக்கு தர்ப்பணம் பண்ணி வைக்கும்போது நேக்கு ரங்கன் ஞாபகம் வந்துடறது.  பித்ரு காரியம் பண்றதுக்குன்னே உன்ன இப்படி பகவான் படச்சிருக்கானேன்னு .....'

அவர் தான் சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்வதுக்குள்ளேயே கண் கலங்குகிறார்.  எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  மௌனம் சற்று இருவரிடத்திலும்.

'சரி மாமா உங்கள இனிமே தர்ப்பண மந்திரங்கள் பத்தி நச்சரிக்கவே மாட்டேன்.  போதுமா?'

'பாஸு,‌ நோக்கு உங்க அப்பா ஞாபகம் வருமோன்னோ?'

'உங்க கிட்ட ஏன் மறைக்கணும் மாமா? எனக்கு நினைவு தெரிஞ்ச நாளுலேந்து என்னோட ஆசைகளையும் தேவைகளையும் அம்மாவே பாத்துண்டுடறதால எனக்கு அப்பா ஞாபகம் வர்றதில்ல.   அது மாத்திரம் இல்ல மாமா. எதேச்சையா அம்மா கிட்ட அப்பாவ பத்தி ஒரு நாள் கேட்கப்போய் ரொம்ப அழுதா அம்மா.  அதுலேந்து நான் அப்பாவ பத்தி நினைக்கறது கூட இல்ல.  என் ஃப்ரெண்ட்ஸ் யாராவது அவா அப்பா பத்தி பேசினாலே அங்கேந்து கிளம்பிடுவேன்.  இந்த விஷயத்துல உங்கள சமாளிக்கறதுதான் நேக்கு கஷ்டமா தெரியறது.'

'நானும் கூடாதுன்னு தான் பார்க்கறேன்.  வருஷங்கள் ஓடினாலும் உன்ன பாக்கறச்சேல்லாம் ரங்கன் ஞாபகத்துக்கு வந்துடறான்.'

'வருத்தப் படாதீங்கோ மாமா.  நானே வருத்தப்படல.'

நான் இப்படி சொன்னதும் கொஞ்சம் தன்னை ஆஸ்வாசப் படுத்திக் கொள்கிறார்.

'ஏதேது பெரிய மனுஷ தோரணையெல்லாம் எங்க பாஸுக்கு வந்துடுத்தே.  நேக்கே ஆறுதல் சொல்றையே?'

'சரிடா பாஸூ.  இன்னோரு நாளைல கண்டிப்பா தர்ப்பணத்த பத்தி சொல்றேன்.  வேணும்னா இன்னிக்கு பிரம்ம யக்ஞம் பத்தி பேசலாமா?.'

'தர்ப்பணம் முடிஞ்ச கையோட பண்ணுவோமே.  அதுதான மாமா.  அது கூட தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப நாள்‌ ஆசை மாமா.'

'சரி, சொல்லித்தரேன்.  ஆசனங்கள ரெடி பண்றையா?'

வழக்கமான ஏற்பாடுகள் தானே.  செய்து முடிக்கிறேன்.  அவரும் வகுப்பை துவங்குகிறார்.

'பிரம்மயக்ஞம் அப்படின்னு 

சொல்லும்போதே அதுல பிரம்மம் யக்ஞம் அப்படிங்கற ரெண்டு வார்த்தைகள் அடங்கி இருக்குன்னு புரியறதோல்யோ? பிரம்மம் ...  யக்ஞம் ... இல்லையா?'

'பொதுவா வேதத்தை பிரம்மம் அப்படின்னு சொல்லுவா.  யக்ஞம்னா யாகம் அப்படின்னும் சொல்லலாம் வழிபாடு அப்படிங்கற பொருளுலேயும் சொல்லலாம்.

'மந்திரங்களை வாயால் சொல்லிண்டு, அதோடு கூட அதற்கான ஒரு கார்யத்தையும் அக்னி முகமாக பண்றதுதான் யக்ஞம்.  “யஜ்” என்கிற வேர்ச் சொல்லிலிருந்து வந்தது “யக்ஞம்”. அதனால் ‘யக்ஞம்’ என்பதை விஷயம் தெரிந்தவர்கள் ‘யஜ்ஞம்’.  அதாவது இக்குக்குன்னு இல்லாம இஜ்.   ‘யஜ்’ என்றால் வழிபடுவது, பக்தி செலுத்துவது என்று அர்த்தம். பரமாத்மாவிடமும், தேவதைகளிடமும் ப்ரீதி பூர்வமான உணர்ச்சியுடன் ஒரு வழிபாடாகச் செய்யப்படுகிற கர்மம் தான் யக்ஞம்.'

'இல்லறத்தில் ஈடுபடுபவன் இல்லறத்தை நோக்கி பயணிக்கற பிராமணன் ஒவ்வொருத்தரும் அஞ்சு விதமான யக்ஞங்களை விடாம கடைபிடிக்கணும் அப்படின்னு வேதம் சொல்றது.  சுருக்கமா

பஞ்ச மகாயக்ஞம் அப்படின்னு அந்த யக்ஞங்களுக்கு பேர்.'

'தேவ யக்ஞம், பிரம்மம் மற்றும் ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ யக்ஞம், பூத யக்ஞம் அப்படிங்கறதுதான் இந்த ஐந்து வகையான யக்ஞங்கள்.  அவைகளை தினந்தோறும் அனுஷ்டிக்கணுங்கறது பிராமணனுக்கு விதிக்கப்பட்ட அனுஷ்டானங்கள், சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள், விதிகள் இப்படியெல்லாம் சொல்லலாம்.'

'வேத மந்திரங்கள் ஓதுவது, ஓதுவித்தல். வேதங்கள் ஓதி வேள்வி வளர்த்து தேவர்களை மகிழ்விப்பது ....  இது தேவ யக்ஞம்.'

'உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், திருமறைதிருக்குறள் போன்ற மகான்களின் தெய்வீக நூல்களை பத்தி தெரிஞ்சுக்கறது, அவைகள படித்தல் அவைகள பத்தி சிந்திக்கறது தான் பிரம்ம யக்ஞம்.  ரிஷி யக்ஞம் அப்படின்னும் சொல்லலாம்.'

'நம்மை விட்டுப் பிரிந்த மூதாதையர்கள் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் மகிழ்விப்பது .... இது பித்ரு யக்ஞம்.'

'நம்மாத்த தேடி வரும் வரும் அதிதிகளுக்கு தங்கறதுக்கு இடம் கொடுத்து, அமுது படைத்து விருந்தோம்பல் செய்யறதுக்கு பேர் மனுஷ்ய யக்ஞம்.'

'பசு, காகம் போன்ற விலங்குகளுக்கு உணவு வழங்கறது பூத யக்ஞம்.'

'நம்மளோட அன்றாட வாழ்க்கையில எல்லா வேத நூல்களையும் படிக்கறது, ஓதறது, யாகம் பண்றது, தேவர்கள் வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு இவையெல்லாம் அனுதினமும் கடைப்பிடிப்பதற்கான ஒரு வழிமுறை தான் இந்த பிரம்மயக்ஞம்.  ஆத்துக்கு வர அதிதிகள உபசரித்தல் காக்கா குருவிகள் பசுக்களுக்கு உணவு தர்றது வேணுமானா அம்மா சமச்சத அவாளுக்கு போட்டு யக்ஞம் பண்ணிடலாம்.  ஆனா இந்த உபநிஷத்துக்கள் படிக்கிறது, பிரம்ம சூத்திரம் ஓதறது, வேதங்களை ஓதறது, ப்ரம்ம யக்ஞம் பித்ரு யக்ஞம் செய்யறது இதெல்லாம் அன்றாட வாழ்க்கையில விடாம கடைபிடிக்கிறது அப்படிங்கறது கொஞ்சம் யோஜன பண்ணும்படியாத்தான் இருக்கு.  இதுக்கு தான் இவைகளோட சாராம்சத்த உள்ளடக்கிய ஒரு நடைமுறையை பிரம்ம யக்ஞம் என்ற தலைப்புல வெச்சிருக்கான்னு நெனைக்கிறேன்.  இதுல வேத மந்திரங்களோட ஆரம்ப மந்திரங்கள வெச்சிருக்கா; தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணங்கள் செய்ற மாதிரி வாசகங்கள் வைத்து அவாளுக்கு நன்றிக் கடன் செலுத்தற மாதிரியும் அவாள நினைவு கூறும் வகையிலும் அமைச்சிருக்கா.  இன்னும் சொல்லப்போனா உபநயன  தினத்தில் பிரம்ம உபதேசத்தில் சொல்லக்கூடிய காயத்ரி மந்திரத்தை பிரித்து அனுஸந்தானமா வெச்சிருக்கா.  அதாவது ப்ராணாயாமத்தையும் காயத்ரி மந்திரத்தையும் பிரிச்சு சேர்த்து அழகா கோர்த்து பிரம்மயக்ஞத்துல சேர்த்திருக்கா.  இது ஒரு சக்தி வாய்ந்த ப்ரயோகமாக சொல்லப்படறது.  கொஞ்சம் விளக்கமா அப்புறம் சொல்றேன்.'

இந்த ப்ரம்ம யக்ஞத்துல இன்னொரு அற்புதமான விஷயம்.  நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வணத்தின் ஆரம்ப மந்திரங்களை அற்புதமா சேர்த்திருக்கா.  இதைப் பத்தியும் விவரமா சொல்றேன் பிற்பாடு.'

இப்போது நான் அவரை குறிக்கிடுகிறேன்.

'மாமா,  உபநிஷத், பிரம்ம சூத்திரம் அப்படின்னு சொன்னேளே.  அது கொஞ்சம் சுருக்கமா எனக்கு சொல்றேளா?  எது உபநிஷத்து, எது பிரம்ம சூத்திரம் அப்படின்னு?'

'பேஷ் பேஷ்... இப்படித்தான் குரு கிட்டக்க தெரியாத விஷயங்களை தயக்கம் இல்லாம கேட்டு தெரிஞ்சிக்கணும்.  உன்னோட கேள்விக்கு இப்ப பதில் சொல்றேன்.'

'உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய  தத்துவ இலக்கியமாகும்.  ஹிந்து சமயத்தாரோட ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படறது.  வேதங்கள்ல இவை கடைசியா வந்தவை.   எனவே இதுக்கு வேதாந்தம் அப்படின்னும் பெயர் உண்டு. 

ஸமஸ்க்ருதத்துல  எழுதப்பட்ட இந்த இலக்கியமானது பெரும்பாலும் யோகம் தத்துவம் இவைகளைப் பத்தியே விவாதிக்கறது.   பெரும்பாலும் குரு–சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவைகள் இருக்கு.'

'அடுத்தாப்புல என்ன கேட்டே?  பிரம்ம சூத்திரம், அதான?  சூத்திரம் அப்படின்னாலே சுருங்கச் சொல்லுதல்.  மிகப்பெரிய பொருளை சுருக்கமா சொன்னா அது சூத்திரம்.'

'மாமா எனக்கு இப்ப ரொம்ப நன்னா புரியறது மாமா.  கணக்கு பாடத்துல ஃபார்முலா ஃபார்முலா அப்படின்னு கணக்கு வாத்தியார் சொல்லுவார்.  அவர்கிட்ட நான் இதே கேள்வியை கேட்டேன்.  அப்ப அவர் ஒரு பெரிய கண்டுபிடிப்ப ஞாபகத்துக்காக சுருக்கமா வெச்சிக்கறதுக்கு பேர்தான் ஃபார்முலா தமிழ்ல சூத்திரம் அப்படின்னு சொன்னார்.'

'அதே தாண்டா.  கணக்கில் நோக்கு தெரிஞ்ச ஃபார்முலா சொல்லு பாப்போம்.'

'முக்கோணத்துல ஏதாவது ரெண்டு சைடுகளோட அளவுகளின் கூட்டல் தொகை மூன்றாவது சைடோட பெருசாக இருக்கும்.'

'அவ்வளவு தாண்டா.  மூளைய கசக்கி ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச விஷயத்தை சாராம்சமா நாம மனசுல ஏத்திக்கிறதுக்கு இந்த சூத்திரங்கள் உறுதுணையாய் இருக்கு.  உதாரணத்துக்கு எதுவெல்லாம் பகவத் கீதைல பேசப்பட்டதோ அவைகள் எல்லாம் பிரம்ம சூத்திரங்கள் தான்.'

'ஹிந்து தத்துவங்களின் படி பரம்பொருளை விளக்குவதற்காகச் சூத்திரங்கள் எனப்படும் நூற்பாக்களால் ஆனதால் இந்த நூலுக்குப் பிரம்ம சூத்திரம்னு பெயர் வெச்சிருக்கா.  ஏற்கனவே சொன்னேன் இல்லையா ..  வேதத்தின் கடைசி பகுதியாக அதாவது வேதத்தின் அந்தமாகக் கருதப்படும் உபநிஷங்களில் சாரமாக அமைந்திருப்பதன் காரணமாத்தான் இது வேதாந்த சூத்திரம் எனவும், பிரம்ம மீமாம்சை, வேதாந்த தர்சனம், என்கிற பெயர்களால் இது அறியப்படுகிறது. மீமாம்சம் என்றால் ஆழமாக சிந்திப்பது, ஆராய்வது, விவாதிப்பது என்று பொருள்.'

'பிச்சு உதறிட்டேள் மாமா.  இனி டவுட்டே வராது.'

'டீச்சர் கிட்டக்க ஸ்டூடண்ட் நல்ல பேர் எடுக்கறது எவ்வளவு விசேஷமோ அதே மாதிரி ஸ்டுடென்ட் கிட்டக்க டீச்சர் நல்ல பேர் எடுக்கிறதும் விசேஷமாச்சே.'

'போங்கோ மாமா.  என்னை ஏதாவது கிண்டல் பண்ணிண்டே இருக்கணும் உங்களுக்கு.'

வாய்விட்டு சிரிக்கிறார்.  அப்போது என் புன் சிரிப்பையும் இணைத்துக் கொள்கிறேன்.

'சரிடா பாஸு.  இன்னும் ஒரு விஷயத்தை சொல்லிட்டு இன்னிக்கு கிளாஸ முடிச்சுக்கிறேன்.  நாளைக்கு பிரம்ம யக்ஞத்துல இருக்கக்கூடிய மந்திரங்களோட‌ அர்த்தங்கள பாக்கலாம்.'

'சுருக்கமாக சொல்றதுன்னா ப்ரஹ்ம யக்ஞத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். முதலில் வேத அத்யயனம். இரண்டாவது தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம்.'

ப்ரஹ்ம யக்ஞத்துல வரும் பித்ரு தர்ப்பணத்தை பத்தி ஒரு வார்த்தை. அப்பா அம்மா உயிரோட இருக்கறவா இந்த தர்ப்பணத்தை செய்யலாமா செய்யக் கூடாதான்னு பலருக்கு சந்தேகம்.  உண்மைதான். ப்ரஹ்ம யக்ஞத்தில் வரும் பித்ருக்கள் வேற.   நம்மளோட தனிப்பட்ட பித்ருக்களுக்கு உத்தேசித்து செய்யப்படறது இல்ல இதுல வருகிற தர்ப்பணம். ப்ரஹ்ம யக்ஞத்துல வரும் பித்ருக்கள் திவ்ய பித்ருக்கள் அப்படின்னு சொல்லப்படறவா.  ஆகையினால தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் செய்த பிறகு வரும் பித்ரு தர்ப்பணத்தை எல்லோருமே அதாவது தந்தையுள்ளவர்கள் உள்பட எந்த வேறுபாடுமின்றி செய்யலாம்.  தப்பில்ல.'

'சாமர்த்தியமா சில பேர் எங்காத்து வழக்கமில்லன்னு சொல்றா.  என்ன செய்ய?  நாம புரிய வைக்கத்தான் முடியும்.'

இத்துடன் அன்றைய வகுப்பை முடித்துக் கொள்வதாக அவர் கூற நானும் அவரை நமஸ்கரிக்க தயாராகிறேன்

தொடரும்...

No comments:

Post a Comment