#ரகோபதேஸம்தொடர்ச்சி
#ரகோபதேஸம்தொடர்ச்சி_3
By Bhaskar Satya
சில நாட்கள் மீண்டும் மடத்திற்கு செல்லவில்லை. காரணம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறப்பு, புது வகுப்புகள், சில புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் ... இப்படி இவைகளை சற்று அதிகம் ரசித்துக் கொண்டு இருந்தால் மடத்திற்கு செல்வதில் நாட்டம் இரண்டாம் பட்சமாக இருந்தது.
எதேச்சையாக ஒருநாள் ஆசானை கடைத்தெருவில் பார்த்தேன்.
'என்ன பாஸு... மடத்துப் பக்கம் ஆளையே காணோம்.'
'ஸ்கூல் தொறந்தாச்சு மாமா. அதான்.'
'பாஸ் பண்ணிட்டியா? இந்தக் கேள்வியே உன் கிட்ட கேழ்க்கறது தப்பு. இருந்தாலும் சம்பிரதாயமா கேட்கணுமோன்னோ? இப்ப எத்தனாவது கிளாஸ்?'
'எட்டாவது மாமா. சாயந்திரம் மடத்துக்கு வரேன் மாமா நமஸ்காரம் பண்ண.'
'அஞ்சு மணிக்கே வந்துடு. சாயந்திர பூஜைகள முடிச்சுட்டு வெளியே போனாலும் போவேன்.'
சொன்னபடியே மறக்காமல் ஐந்து மணிக்கு டாண் என்று ஆஜரானேன். 'முதல்ல நமஸ்காரம் பண்றேன். ஆசீர்வாதம் பண்ணுங்கோ.'
அவரை நமஸ்கரிக்கிறேன். ஆசிகளோடு ஒரு பென்சில் ஒரு ஸ்கேல் மற்றும் ஒரு பென்சில் சீவும் மிஷின் (ஷார்ப்னர் என்ற பெயர் எப்போது எனக்கு தெரியாது. பென்சில் மிஷின் என்று மட்டுமே தெரியும்).
'எட்டாம் கிளாஸ் வந்துட்ட. பெரிய பையனா ஆயிண்டு வர. படிப்புல நன்னா இனிமே கவனம் செலுத்தணும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்க வந்துண்டு போயிண்டு இரு. ரெண்டு நாளைக்கு ஒரு தடவை உன்ன பாக்காம இருந்தா நோக்கு எப்படியோ எனக்கு வருத்தமாத்தான் இருக்கு.'
'உங்கள பாக்க வராம இருப்பேனா மாமா. கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி வாரத்துல ரெண்டு தடவையாவது நான் வந்துடறேன். நீங்க எங்கேயோ வெளியே கிளம்பணும்னு சொன்னேளே?'
'ஏழு மணிக்கு மேல தான். ஆறு மணிக்கு சந்யாவந்தனம் பண்ணிட்டு பாண்டுரங்கனுக்கு தீபாரதனை காமிச்சிட்டு கிளம்ப வேண்டியதுதான்.'
'மாமா, சந்தியாவந்தனத்த பத்தி சொல்லிக்கொடுத்தேள். பரிசேஷனம் பத்தியும் க்ளாஸ் எடுத்தேள். எனக்கு ஒரு ஆசை. சமிதாதானம் பத்தியும் தெரிஞ்சுக்கணும்னு.'
'இன்னமும் பண்ணிண்டு இருக்கியா ஸமிதாதானம்?'
'அதை ஏன் மாமா கேக்கறேள்? ஆசையாத்தான் இருக்கு தினமும் பண்ணனும்னு. சில சமயம் தூங்கி லேட் ஆயிடறது. பூணூல் போட்டு ஒரு வருஷம் எல்லாம் நன்னாத்தான் ஓடித்து. நீங்களும் ஆத்துக்கு வந்து சொல்லிக் கொடுத்துண்டு இருந்தேள். எப்ப நீங்க 'இனிமே நீயா பண்ணிக்கோ' அப்படின்னு சொன்னேளோ அந்நிலேந்தே அஸிரத்த.'
'இதுக்காகத்தான் காஞ்சிபூரம் பெரியவா பூணூல் போட்ட ஒரு வருஷமாவது குழந்தைகளை ஸமிதாதானம் பண்ண ஊக்குவிக்கணும்னு பெற்றோர்களுக்கு அறிவுரையா சொல்லிண்டு வரா. என்ன பண்றது? கால மாற்றங்களால ஒவ்வொண்ணையா கைவிட்டுண்டு வரோம்.'
'முயற்சி பண்றேன் மாமா. ஆனாலும் தொடர்ச்சியா பண்ண முடியல.'
'யதேச்சையா நீ ஸமிதாதானம் பத்தி சொல்லிக் கொடுக்க சொல்லி கேட்டதால பாடம் எடுக்கறேன். அதுக்கப்பறமாவது நோக்கு ஒருவேளை ஆர்வம் வரலாமில்லையோ தொடர்ந்து பண்றதுக்கு?
'மாமா நாளைக்கு வரட்டுமா கத்துக்குறதுக்கு?'
'நாளைக்கே ஆரம்பிக்கிறேன். அதுக்கு முன்னாடி ... கேட்டது தான் கேட்டே, அக்னி தேவரப் பத்தி சில விஷயங்களை இப்ப நோக்கு சொல்றேன்.'
'அக்னி தேவர் ஹிந்துக்கள் நாம வணங்கற தெய்வங்கள்ல ரொம்ப முக்கியமானவர். ரிக் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்து அதிக பாடல்கள்ல இவரோட முக்கியத்துவத்த நிறையவே சொல்லி இருக்கா. வேதப்பாடல்கள்ல் இருநூறுக்கு மேல பாடல்கள் அக்கினியைப் பத்தி இருக்கு. அரணிக்கட்டைகளே இவனது உறைவிடம் என்றும் பிறந்ததும் ஆயிரம் நாக்குகள் கொண்டவன் என்றும் செந்நிற மேனி உடையவன் என்றும் வர்ணிக்கப்படுகிறார். வேள்விகளில் அதாவது யாகங்கள் பண்ணும்போது இடப்படுகின்ற ஆஹுதிப் பொருடள்கள தேவர்கள் கிட்ட கொண்டு சேர்ப்பிப்பவனாக விளங்குவதால் இவருக்கு புரோகிதன்னு பெயர்.'
பதினெட்டு புராணங்கள்ல ஒன்றான அக்னி புராணம் அக்கினி தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அஷ்ட திக் பாலகர்கள்ல தென்கிழக்குத் திசைக்கு இவர்தான் அதிபதி. அக்னி தேவனுக்கு மூணு உருவங்கள் .. நெருப்பு, மின்னல், சூரியன். சூரியனின் ஆற்றலாக அக்னிதேவர் இருக்கார். அக்னி மற்ற தேவர்களைப் போல என்றும் இளமை உடையவராக கருதப்படுகிறார். இவர் சுயம்புவாக பிறந்தவர். அதாவது தானாகவே பிறந்தவர். இந்த தானாகவே பிறந்த விதத்தை குறிக்கும் வகையில தான், குச்சிகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து கடைந்து நெருப்பை உருவாக்கும் அக்னிமத்தனம் என்ற நடைமுறை சில ஹிந்து சடங்குகள்ல இருக்கு.'
இதிகாச புராணங்களில் கூட அக்கினியோடு தொடர்புடைய பல்வேறு உப கதைகள் இருக்கு. கந்தப்பெருமானின் தோற்றம், தேவி பாகவதம் கூறும் 'மாயாசீதை' கதை முதலான சிலவற்றை குறிப்பா சொல்லலாம்.'
'அக்னி தேவரை பொதுவாக மற்ற தேவர்களை போல் சாதாரணமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அவருடைய உண்மையான உருவம்னு பார்த்தோமேயானால் ஏழு கைகள் இரண்டு தலைகள், மூன்று கால்கள் கொண்டவர். இவருடைய திருவாயிலிருந்து அவருடைய நாக்குகள் தீப்பிழம்பாக வெளி வருகிறது. இவருடைய வாகனம் ஆடு. இவருடைய உடலில் இருந்து ஏழு வித ஒளிக்கிரணங்கள் உதிக்கிறது. அக்னி தேவரின் நிறம் சிவப்பு.'
'ரிக் வேதத்தோட முதல் சுலோகமே அக்னியை குறிச்சுதான்.
அக்னிம் ஈளே புரோஹிதம். யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம். ஹோதாரம் ரத்னதாதமம்
தேவர்களின் புரோகிதனும், நிவேதனங்களை தேவர்களுக்கு அளிப்பவனும், பெரும் செல்வத்தை உடையவனுமான அக்னியை நான் போற்றுகிறேன் ... இதுதான் அந்த ஸ்லோகத்தோட பொருள்.'
'ஏற்கனவே சொன்னேனில்லையா ... அக்னி மனிதர்களுக்கு தேவர்களுக்கும் இடையில் தூதுவராக கருதப்படுகிறார். எப்படின்னா இவரே யாக பொருடள்கள மற்ற தேவர்களிடம் சேர்க்கின்றார். இவர் சடங்குகளை நடத்துபவராக குறிக்கப் பெறுகிறார்.'
'உதாரணமா கணபதி ஹோமம் பண்ணும்போது மகா கணபதிக்கு பிடித்தமான வஸ்துகளை ஆஹுதிகளாக அக்னியில் பக்தி ஸ்ரத்தையோடு போடும் போது அவைகளை ஸ்ரீ கணேசமூர்த்தியிடம் நேராக சென்று அவைகளை நம் சார்பாக அவரிடம் சேர்த்து விடுவார்.'
'இவரோடு தொடர்புடைய வேத சடங்குகள் அக்னிசயனம் மற்றும் அக்னி ஹோத்திரம் ஆகும்.'
'ரிக்வேதத்துல பல இடங்கள்ல அக்னி நீரிலிருந்து எழுபவர், நீரில் உறைபவர் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. தன்ணீரிலிருந்து தீப் பிழம்பாக வெளிவரும் இயற்கை எரிவாயு எண்ணெய் உற்பத்தி இதையெல்லாம் கேள்விப்படறச்சே பாக்கரச்சே ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் உண்மையாத் தானே படறது.'
'பௌத்த மதத்தவா பண்ற ஹோம பூஜைகள்ல கூட இவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கு.'
'பிராமணனுக்கு முதலாவதும் முடிவானதுமான தேவதை அக்னி தேவர் தான். இந்த அக்னியை மையமா வெச்சிண்டே மற்ற தேவதைகளையும் அவன் ஆராதிக்கிறான். அக்னியும் ஜலமும் இயல்பாகவே மிகவும் தூய்மையானவை. தூய்மை அதிகம் உள்ள இடங்களில்தான் தேவதைகளின் அருள் சக்தியும் அதிகம் பரவும். அதனால தான் அக்னி உபாசனை ரொம்ப முக்கியமானது. அக்னியை முன்னிலைப்படுத்தி தான் உபநயனம், விவாஹம், பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மம் என்ற அனைத்துக் கர்மங்களும் நடைபெறுகின்றன. அவனது இறுதியும் அக்னியில் தான்.'
'உபனயனமாகி மந்திரங்கள் மூலம் தேவதை அருள்பெறத் தகுதி பெறுபவர் எல்லாருமே அக்னியை வழிபடுகிறார்கள். உபனயனத்தன்னிக்கே பிரும்மசாரி அக்னியை உபாசிக்கத் தொடங்குகிறான். அதைத்தான் ஸமிதாதானம் அப்படிம்பா. கல்யாணம் பண்ணிண்டு கிருஹஸ்தனானாலும் அக்னியை பாரியாள் உதவியோட வழிபடத் தொடங்குகிறான். ப்ரம்மச்சாரி பண்றது சமிதாதானம். க்ரஹஸ்தா பண்றது ஔபாஸனம். க்ரஹஸ்தனாக பட்டவன் மேலும் தகுதிகள வளர்த்துண்டு வேள்விகள் செய்யத் தகுதிவந்ததும் அக்னியை மூணு இடங்கள்ல வளர்த்து வழிபடறான். அதனை அக்னி ஹோத்ரம் என்பர். இப்படி வழிபடுகின்ற அக்னியின் மூலமே அவனது இக-பர நன்மை நாடிச்செய்கின்ற நற்கருமங்கள் முழுமை அடைகிறது.'
'பிரம்மசாரி தான் வழிபட்ட அக்னியிடம் தன் உடல்-உள்ளங்களின் பாதுகாப்பு, வலிவு, தான் நல்வழிபடல், வாழ்வின் மேன்மை , புகழ், செல்வம், கல்வி, அறிவு, மேதை, தத்துவ அறிவு, ஒளிமிக்கதான எதிர்காலம், தனக்குரிய பங்கைப் பிறர் அபகரிக்க முடியாமற் செய்தல் முதலியவற்றை வேண்டி பிரார்த்திச்சுக்கறான். அந்த ஹோம விபூதிய ரக்ஷையா இட்டுண்டு தன்னிடம் எல்லா நன்மைகளும் நிலைத்திருக்கும்படி பாத்துக்கறான். அக்னியே பிரம்மச்சாரிக்கு உபாஸனா தெய்வம். இதோட விரிவுதான் ஒளபாஸனமும் அக்னிஹோத்ரமும். தனக்கும் தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் உலகிற்கும் நன்மையை வேண்டி இவைகள செய்யறான் அப்படின்னு புரிஞ்சுக்கணும்.'
'அக்னியே சாட்சியா வெச்சு செய்யப்படுகிற ஹோமங்கள்லேயும் யாகங்கள்லேயும் நிறைய சட்டதிட்டங்கள் இருக்கு. எதை வேணா அக்னியில் போட முடியாது. உபாசிக்கின்ற தெய்வத்தை பொருத்து ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் மாறுபடும். பொதுவான பொருட்களும் இருக்கு. உதாரணத்துக்கு பசுமாட்டு நெய் அன்னம் இப்படி குறிப்பிட்டு சொல்லலாம்.
'அரசு, புரசு, அத்தி, கருங்காலி, நாயுருவி, எருக்கு, வன்னி இவற்றின் குச்சிகளும் அருகம்புல்லும் தர்ப்பமும் ஹோமத்திற்கான ஸமித்துகளாக சொல்லப்படுபவை. அரசு, புரசு, தர்ப்பை என்ற மூன்றே பொதுவாக எல்லா கர்மாக்களிலும் பயன்படுகிறது. அரச மரத்திலிருந்து தானே ஒடிந்து விழுந்த குச்சியைத்தான் ஹோமத்தில் பயன்படுத்தணும். பயன்படுத்துவர். மற்றவற்றில் புழு துவாரமிட்டது, கோணலானது, இருகிளையுள்ளது, தோலில்லாதது, தானே உதிர்ந்தது, பசை இல்லாதது இத்தகைய சமித்துக்களை பயன்படுத்தக் கூடாது. எதையும் தானே சேகரிச்சு ஹோமம் செய்வது அதி விசேஷம்.'
'ஹோமம் செய்யும் போது அதன் மந்திர உச்சாரணத்தைத் தவிர மற்ற பேச்சுகள் கூடாது.'
'அக்கினிக்கு ஏழுநாக்குகள்னு ஏற்கனவே சொன்னேன் இல்லையா? அக்னி குண்டத்தில் அக்னி பரவியுள்ள நிலையில் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு, நடுப்பகுதி இப்படி ஏழு இடங்கள்ல வெளியாகின்ற ஜ்வாலைகள் தான் அக்னி தேவரின் நாக்குகள். அந்த நாக்குகளுக்கு முறையே வரிசையாக ஸுப்ரபா, அதிரக்தா, கிருஷ்ணா, ஸுவர்ணா, ரங்தா, பஹுரூபா, கனகா என்று தனிப்பெயர்கள் கூட உண்டு.'
'குறிப்பிட்ட பலனைக் கோரிச் செய்வதில் அதாவது காம்ய கருமங்கள் அடிப்படையில் அதற்குண்டான ஜ்வாலையில் ஹோமம் செய்யணும். உதாரணமா ஸ்ரார்த்தம் போன்ற பித்ரு காரியங்கள் நடக்கும்போது தெற்கு ஜ்வாலை பக்கமா ஹோமம் செய்யணும். ஹோமம் செய்யணும் அப்படின்னு நான் சொல்றது அந்தப் பக்கமாக உள்ள ஜ்வாலையில் ஹோமப் பொருட்களை சமர்ப்பணம் பண்ணனும். அதாவது நெய், ஹவிஸ், சமித்துகள் போன்ற பொருட்களை.
'இப்படி நிறைய கோட்பாடுகளே சட்டங்களை வழிமுறைகளை அக்னி தேவரை முன்னிலைப்படுத்தி நடத்தப்படும் ஹோமங்கள்ல கடைப்பிடிக்கணும்.'
'அக்கினியை வலுப்படுத்த வாயால் ஊதக்கூடாது. தமனிக்குழாயின் மூலம் ஊதியோ, விசிறியால் விசிறியோ பெரிசு படுத்தலாம். இது மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள்ல கூட கவனமா இருக்கணும்.'
'நான் இப்ப சொல்றதெல்லாம் நீ யோசிச்சு பார்த்தா அக்னி தேவரருடைய அனுக்ரஹம் எவ்வளவு ஒசந்தது அப்படின்னு புரியும். நம் இஷ்ட தேவதையை ஸ்லோகமா மந்திர ஒலிகளால பிரார்த்திக்கிறது என்பது ஒரு வகை. அதைவிட அக்னிய சாட்சியாகவும் புரோகிதனாகவும் பாவித்து இஷ்ட தெய்வங்கள் கிட்ட வேண்டறது விசேஷம். இஷ்ட தெய்வதம்னு இல்லாம நம்ம விட்டு பிரிஞ்சு போன பித்ருக்களையும் அக்னி தேவர் மூலமாக திருப்திப் படுத்துவது நமக்கு பரிபூரண அமைதிய கொடுக்கக்கூடிய வழி.'
'அக்னியே பத்தி பேசிண்டே போகலாம். ஆனாலும் தேவையான அளவுக்கு மாத்திரம்தான் நோக்கு இப்ப சொல்லிக் கொடுத்திருக்கேன். நாளைக்கு நீ கேட்டியே ஸமிதாதானம் ... அதுல உள்ள முக்கியமான மந்திரங்களுக்கு விளக்கம் சொல்லி புரிய வைக்கிறேன். சரியா?'
'மாமா, அக்னி தேவர் பிரம்மச்சாரியா கிரஹஸ்தரா?'
'நல்ல கேள்வி தான் கேட்டிருக்க. அக்னி தேவருக்கு மனைவி உண்டு. அவருடைய மனைவி பெயர் சுவாகா. இது போதுமோன்னோ? பிள்ளை குட்டிகள் பெயர்கள் எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டாமே?'
நகைச்சுவையோடு வகுப்பு முடித்தது.
நமஸ்காரம் அபிவாதனம் ஆசிகள் ... எல்லா குரு சிஷ்ய சம்பிரதாயங்கள் முடிந்து மடத்தை விட்டு கிளம்புகிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment