நூலறுந்த பட்டம் -10
ஆதித்யாவின் வீட்டிற்கு போய் வந்த பிறகு குழந்தை மகா அடிக்கடி அவள் அப்பாவை பற்றி கேட்டு சுகுணாவை தொந்தரவு செய்தாள். ஏதோ சொல்லி சமாளிக்க பார்த்தாள்.சுகுணாவின் பிடிவாதம் கொஞ்சமாவது மகாவிற்கு இருக்காதா என்ன.
ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்த மகா மிகவும் சோகமாக இருந்தாள். சுகுணா ஆபீஸிலிருந்து வந்ததும் "ஏண்டி ஒரு மாதிரியா இருக்கே" என்று மகாவை கேட்டாள் சுகுணா."அம்மா வர சனிக்கிழமை பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்கு. எல்லோரும் அவங்க அப்பா, அம்மா கூட வராங்க. நானும் என் அப்பா,அம்மா கூட தான் வரேன்னு என் பிரண்டு சுனிதா கிட்ட பிராமிஸ் பண்ணி இருக்கேன்" என்று கூறினாள். "அப்படி முடியாதுடா செல்லம். இந்த தரம் நா ஒண்டி வரேன். அப்பா வருவாங்களான்னு தெரியாது" என்றாள். குழந்தை மகா " அப்பா நீ கூப்பிட்டா நிச்சயம் வருவாங்க அம்மா" என்றாள். அடுத்த இரண்டு நாட்களில் குழந்தையின் பிடிவாதம் அதிகமானது. சுகுணாவிற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு ஆபீசில் இருந்தபடியே ஆதித்யாவை கூப்பிட்டாள் சுகுணா. ஆதித்யாவிற்கு சுகுணாவின் நெம்பரை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. போனை எடுத்தவன் "என்ன சுகுணா.என்ன வேண்டும் சொல்" என்றான்.சுகுணா தயங்கி தயங்கி அவனிடம் விஷயத்தை கூறினாள்." எனக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லை.நான் ஸ்கூலுக்கு வரது உனக்கு ஏதாவது ப்ராப்ளம் இல்லாம இருந்தா சரி" என்றான். "சரி. நீங்க காலைல என் வீட்டுக்கு வந்துடுங்க. நாம் இரண்டு பேரும் குழந்தையுடன் சேர்ந்து போய்விடலாம்" என்றாள். இதைக் கேட்ட ஆதித்யா "அதெல்லாம் வேண்டாம்.நான் நேராக ஸ்கூலுக்கு எட்டரை மணிக்கு வந்து விடுறேன்" என்று கூறி பின் போனை துண்டித்தான். அதன் பிறகு மாலை 5 மணிக்கு ஆதித்யா சுகுணாவிற்கு ஃபோன் செய்தான். " தோ பார் சுகுணா. நீ சொன்னதை யோசித்துப்பார்த்தேன். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல கணவன், மனைவி என்ற உறவு இல்லாத நிலைமையில், இது ஒரு பிசினஸ் டீல் மாதிரிதான் எனக்கு தோணறது. நீ சொல்றத நான் ஒத்துக்குற மாதிரி, நான் இப்ப சொல்ல போறதே நீ ஒத்துக்கணும்.அப்படி இருந்தா தான் நான் நாளைக்கு பேரண்ட் டீச்சர் மீட்டிங் வரமுடியும்" என்றான் கண்டிப்பாக. சுகுணாவுக்கு பகீர் என்றது." என்ன சொல்லப் போகிறானோ" என்று நினைத்தவள் "சரி. என்ன வேணும் சொல்லுங்க"என்றாள். "ஒண்ணும் அதிகமாக வேண்டாம்.இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் குழந்தை என்னுடன் இருக்க நீ அனுமதிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு கொண்டு வந்து விட்டு விடு .இரவு எட்டு மணிக்கு நானே அவளை உன் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறேன் .சரியா" என்றான்."பார்க்கலாம். யோசித்து சொல்கிறேன்" என்றாள் சுகுணா." அப்ப சரி யோசித்து உன் முடிவை சொல்லு.நீ கேட்ட மாதிரி நானும் நாளை வருவதை பத்தி யோசிக்கிறேன்" என்று கூறி ஃபோனை வைத்து விட்டான். ஐந்தே நிமிடத்தில் சுகுணா திரும்பிக் கூப்பிட்டு "நீங்க சொன்னபடியே செய்யலாம்" என்றாள். அடுத்த நாள் காலை பள்ளிக்கு நேராக போனான் ஆதித்யா சுகுணாவுடன் சேர்ந்து பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்கில் பங்கெடுத்தான்.இதைப் பார்த்த மகாவின் தோழிகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் பக்கத்தில் எப்போது உட்காரும் வினயா" ஏய் மகா. உங்க டாடி ரொம்ப அழகா இருக்காங்கடி. இவ்வளவு நாள் ஏண்டி அவங்க ஸ்கூலுக்கு வரல"என்று கேட்டாள். அதற்கு மகா" அவங்க வேலை விஷயமாக ஃபாரின் போயிருந்தாங்க டீ" என்றாள் பெருமையாக.
இதைத் தொடர்ந்து எல்லா வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகா ஆதித்யாவின் வீட்டில் ஆஜராகி விடுவாள். அந்த ஒரு நாளுக்காக ஆதித்யா அந்த வாரம் முழுதும் காத்திருப்பான். காமிக்ஸ் புக்ஸ்,Puzzle,சாக்லேட் என்று விதம் விதமாக வாங்கி குவித்திருப்பான். காலையில் உணவு உண்ட பிறகு இருவரும் விளையாடுவார்கள். மதிய உணவை முடித்துக்கொண்டு பீச், பார்க் என்றெல்லாம் சென்று விட்டு வருவார்கள்.எட்டு மணிக்கு மகாவை கொண்டு விட்டு விடுவான். மரகதம் அவனைப் பார்த்து "ராத்திரி இங்க சாப்பிட்டு போய் விடலாமே மாப்பிள்ளை" என்பாள் ."இல்லம்மா. பரவாயில்லை. நான் வெளியில் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சென்று விடுவான்(தொடரும்)
No comments:
Post a Comment