Tuesday, October 17, 2023

மாற்றான் தோட்டத்து மல்லிகை -12

 மாற்றான் தோட்டத்து மல்லிகை -12

அடுத்த ஒரு வாரத்திற்குள் ஜாஸ்மின், ராபர்ட், மற்றும் ஜோசப் குருவில்லாவின் வழக்குகள் ஒரு வழியாக போலீசாரால் முன்னெடுத்து செல்லப்பட்டன.

தான் பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தது சுகுமாருக்கு நன்றாக புரிந்தது. இனி இதுபோல சபலத்துக்கு தான் அடிமையாகக் கூடாது என்று மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.

அன்று மாலை வீடு திரும்பியதும் அவன் நிரஞ்ஜனாவிடம் "சாரி நிரா. எதோ சபலத்தில் நான் பெரிய தப்பை செய்ய இருந்தேன். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நீ இவ்வளவு நாள் இருந்தது உன்  பெருந்தன்மையை காட்டுகிறது. நம் குழந்தைகள் மேல் சத்தியமாக நான் இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன்" என்று  அவள் கைகளை பிடித்துக்கொண்டு கூறினான். நிரஞ்ஜனா

"உங்களுக்கு நான் என்ன குறை  வைத்தேன். இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு இருந்தீர்களே"

என்று  சொல்லுவாள் என்று அவன் எதிர்பார்த்தான். நிரஞ்ஜனா அப்படி சொல்லவில்லை. "நீங்கள் நடந்து கொண்டது  உங்களுக்கே  நியாயமாக இருக்கிறதா?

 நீங்கள் உங்கள் மனசாட்சிப்படி நடக்க வேண்டாமா?

நம் இருவருக்கும் வளர்ந்து வரும் குழந்தைகள் இருக்கிறார்கள். சமுதாயத்தில் அவர்களுக்கு உங்களால் அவப்பெயர் வர வேண்டுமா,வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" என்று கூறினாள். இதற்கு I am sorry  என்று  பதில் அளித்தான் சுகுமார்(இக்கட்டான சூழ்நிலையில் தமிழை விட கை கொடுப்பது ஆங்கிலமே).  பின்பு அவளிடம்"நாம் இப்போது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் முருகன் இட்லி கடையில் இரவு சாப்பாட்டை  முடித்துக் கொண்டு வரலாமா" என்று கேட்டான். நிரஞ்சனா இதை கேட்டு மிகுந்த சந்தோஷம் அடைந்தாள்.

"எனக்கு 15 நிமிஷம் டைம் கொடுங்கள். நான் ரெடி ஆகி விடுகிறேன்" என்று கூறி, அதே மாதிரி பதினைந்து நிமிடத்தில் அவள்  ரெடியானாள். அவள் அணிந்திருந்த கரும்பச்சை பட்டு புடவையும்,மேட்சிங் ரவிக்கையும், தலையில் வைத்திருந்த ஜாதி மல்லியும் அவளை ஒரு தேவதை ரேஞ்சுக்கு உயர்த்தி காட்டியது.

இரண்டு குழந்தைகளுக்கு அவள் தாய் என்று நம்ப முடியாதபடி அவ்வளவு திருத்தமாக இருந்தாள். தனது மனைவி இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று ரொம்ப காலம் கழித்து தான் அந்த முட்டாளுக்கு புரிந்தது. 

நால்வரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு, இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

மறுநாள் காலை எட்டு  மணிக்கு பிரக்பாஸ்ட்டை முடித்துக் கொண்ட சுகுமார், நிரஞ்ஜனாவிடம்  சொல்லிக்கொண்டு, நர்சிங் ஹோமுக்கு புறப்பட்டு சென்றான். அவன்  போன அரை மணிக்கு பின் நிரஞ்ஜனா அவளது தங்கை ஷோபனாவுக்கு போன் செய்து எல்லா விஷயத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். அதைக் கேட்ட ஷோபனா "பரவாயில்லை நிரா. தலைக்கு வந்தது தலைப்பாயோடு போயிட்டது . சுகுமார் பாவ மன்னிப்பு கேட்டது நிஜமாகவும் இருக்கலாம் .எதற்கும் இனிமே நீ கொஞ்சம் கவனமாக இருக்கணும் .ஆண்களை கொஞ்சத்துல நம்ப கூடாது" என்று கூறி அட்வைஸ் செய்தாள். "ஓ.கே. ஷோபி நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி போனை வைத்தாள் நிரஞ்ஜனா.

மதியம் 2 மணிக்கு மேல் கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான் சுகுமார். அப்போது அறை கதவைத் தட்டி உள்ளே நுழைந்த சீப் டாக்டர் சபேசன் தனது அருகில் இருந்த லேடி டாக்டரை  காண்பித்து "டாக்டர் சுகுமார்.இவுங்க  டாக்டர் ரோஜா. யூ எஸ்ல ஐந்து வருடம் பணியாற்றி விட்டு இந்தியாவுக்கு திரும்பி இருக்கிறார்.

இவங்களை டாக்டர் ஜாஸ்மினுக்கு ரீப்ளேஸ்மென்ட்டா எடுத்திருக்கு. இவர் உங்களுக்கு கீழே வேலை செய்யப் போகிறார்.You have to take care of her " என்று அறிமுகப்படுத்தினார். டாக்டர் ரோஜா  அவன் கைகளை குலுக்க, தன் கையை நீட்டினாள். சுகுமார் அவள்  கையை பிடித்து குலுக்கினான். அவளது உள்ளங்கை ஜாஸ்மினுடைய கையை விட மிகவும் மிருதுவாக இருந்ததை உணர்ந்தான்.

அப்பா சுகுமாரா. உனக்கு அனந்த கோடி  நமஸ்காரங்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகை எழுதிய என்னை   அடுத்தபடி மற்றான் தோட்டத்து ரோஜாவை எழுதச்செய்யாதே.

 **முடியும்** என்று போடத்தான் நினைத்தேன். சில விஷயங்களை தெளிவு படுத்த வேண்டி இருப்பதால், அடுத்த பதிவோடு *முடியும்* .

No comments:

Post a Comment