நூலறுந்த பட்டம் - 4
தேன் நிலவுக்கு சென்று திரும்பி வந்த ஆதித்யாவும், சுகுணாவும் தத்தம் ஆபிசுக்கு சென்று வரலானார்கள். சுகுணா காலை ஆபீஸ் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்னாடி தான் எழுந்திருப்பாள். எழுந்து, குளித்து, ரெடி ஆகி, காலை உணவு உட்கொண்டவுடன் ஆபீஸ் சென்று விடுவாள். மாலை வருவதற்கு ஏழு மணி ஆகிவிடும். வீட்டுக்குள் நுழையும் போதே "அப்பா ரொம்ப டயர்டா இருக்கு இன்னைக்கு" என்று சொல்லிக் கொண்டே வருவாள். ராதாவும் மாட்டுப்பொண்ணை பார்த்து' மூஞ்சிய கழுவீட்டு வாம்மா. டிபன் சாப்பிடலாம்" என்று சொல்வாள். கிடுகிடுவென முகம் கழுவிக்கொண்டு வந்து சுகுணா இரவு டிபனை முடித்துக் கொண்டு பெட் ரூமுக்குள் புகுந்து விடுவாள் . ஆக மொத்தம் அவள் ராதாவிற்கு எந்த விதத்திலும் உதவியாக இருந்ததில்லை. ராதா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே செய்து கொண்டு இருந்த வேலைகளை தான் அவள் தொடர்ந்து செய்து வந்தாள். ஒரே ஒரு வித்தியாசம். முன்னர் இரண்டு பேருக்கு உண்டான வேலைகள் இருந்தன. இப்போது மூன்று பேருக்கு உள்ள வேலைகளாக ஆகிவிட்டன.
சுகுணா ஒரு நாள் ஆதித்யாவிடம்
"இந்த டூ பெட் ரூம் வீட்டை விட்டு விட்டு, ஒரு த்ரீ பெட்ரூம் வீட்டுக்கு வாடகைக்கு போகலாமா" என்று கேட்டாள்.அதற்காக அவன் "ஏன் .இந்த இடம் சரியாகத்தானே இருக்கிறது" என்றான். "ஒரு பெட்ரூம்ல உங்க அம்மா இருக்காங்க. இன்னொரு பெட்ரூமை. நம்ப பயன்படுத்தறோம். எங்க அம்மா வந்தா அவளுக்கு பெட் ரூமே கிடையாதே "என்றாள். "உங்க அம்மா என்னைக்காவது வரும்போது, எங்க அம்மா கூட அவங்க ரூம்ல இருந்துட்டு போகட்டுமே"என்றான் அவன். சுகுணா மிகவும் கடுப்பாகி "அது எப்படி. அதெல்லாம் சரிப்படாது" என்றாள். வேறு வழியாமல் ஆதித்யா மூன்று பெட்ரூம் கொண்ட அப்பார்ட்மெண்ட்டை பார்க்க ஆரம்பித்தான். நல்ல வேளையாக இப்போது இருந்த வீட்டுக்கு அருகிலேயே, இப்போது கொடுக்கும் வாடகை விட ஒன்றரை மடங்கு வாடகையில் இடம் கிடைத்தது. நல்ல நாள் பார்த்து பால் காய்ச்ச வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ராதா சுகுணாவிடம் "பால் காய்ச்ச உங்க அம்மாவை வரச்சொல்லும்மா" என்று சொன்னாள். ஏற்கனவே சுகுணா அவள் அம்மாவை அழைத்திருந்தது ராதாவுக்கு தெரியாது. பால் காய்ச்சி சாப்பிட்ட அடுத்த ஞாயிற்றுக்கிழமை புது வீட்டிற்கு குடி பெயர்ந்தார்கள் .
அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை சமையல் வேலையை செய்து முடித்துவிட்டு ராதா,மாலை வருவதாக சொல்லிவிட்டு, அவளுடையமைத்துனர் வீட்டுக்கு சென்று விட்டாள். சுகுணாவுக்கு ஆதித்யாவிடம் பேச நிறைய நேரம் கிடைத்தது. சுகுணா ஆதித்யாவிடம்
" இன்னும் எவ்வளவு நாள் உங்க அம்மா இது போல கஷ்டப்பட போறாங்க" என்றாள். ஆதித்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது "இவ கூட நம்ம அம்மாகிட்ட கருணை காட்றாளே என்று.
"எதுக்கு கேக்கற" என்றான் ஆதித்யா. "இல்லைங்க .அவங்க சமைச்சு போட்டூட்டு வீட்டு வேலை எல்லாம் பாக்குறாங்க.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.எனக்கு ஒரு யோஜனை இருக்கு. சொல்லலாமா" என்றாள். "சொல்" என்றான் ஆதித்யா." நான் சொல்லி முடித்ததும் நீங்க கோபித்துக் கொள்ள கூடாது" என்றாள்." நான் கோபித்துக் கொள்ளும் அளவுக்கு நீ சொல்ல வேண்டாம்" என்றான் சிறிது காட்டமாக.
" பாருங்க. ஆரம்பிச்ச வுடனே உங்களுக்கு புர்ன்னு கோவம் வருகிறது" என்றாள். "பரவாயில்லை சொல்லு" என்றான் ஆதித்யா.
"உங்கள் அம்மா இப்படி கஷ்டப்படுவதை விட்டுவிட்டு, ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.அதுக்கு தான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல ஹோம் இருக்கு .அங்கு வயதானவர்களை நல்லா கவனிச்சுகராங்க .அங்க அம்மாவை சேர்த்துவிட்டா அவங்களுக்கு வேலை சுமை இருக்காது. ஃப்ரீ டைம் நிறைய இருக்கும். நம்ப வாரம் ஒரு தரம் போய் பார்த்து விட்டு வந்துவிடலாம்" என்றாள். இதைக் கேட்ட ஆதித்யாவிற்கு அடி வயிற்றிலிருந்து கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. சிரமப்பட்டு அடக்கி கொண்டான் "நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியும்"என்றாள் சுகுணா." நான் என்ன நினைக்கிறேனாம்" என்றான் ஆதித்யா. "அம்மாவை அதுபோல ஹோமுக்கு அனுப்பீட்டா நாம் இங்கு எப்படி காலம் தள்ளுவது என்று தானே" என்று கேட்டாள் அவள். ஆதித்யா இதற்கு பதில் சொல்லவில்லை. சுகுணாவே அவனிடம் "பெண்ணை பெத்த கடனுக்கு எங்க அம்மா நம்ம கூட வந்து இருக்கட்டும். எல்லா வேலையும் எங்க அம்மா தலையில் கட்டிவிடலாம் " என்றாள்,ஏதோ சாமர்த்தியமாக பேசுவதாக. சுகுணாவின் திட்டம் இப்பொழுது ஆதித்யாவுக்கு முழுதும் புரிந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதித்யா,மிகுந்த கோபத்துடன் பாதியிலேயே எழுந்து கை கழுவிக்கொண்டு வெளியில் சென்று விட்டான். மாலை அவன் திரும்ப வரும்போது ராதாவும் அவன் வருவதைக் கண்ட சுகுணா .,அவனும் சித்தப்பா வீட்டுக்கு போய் விட்டு வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.தான் சொன்னதை மாமியாரிடம் சொல்லி இருப்பானோ என்று யோசிக்க ஆரம்பித்தாள். பிறகு மனதுக்குள்
" சொல்லிவிட்டு போகட்டுமே. ஒரு வேளை என் மாமியார் கூட இதை ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளலாம் "என்று நினைத்துக் கொண்டாள்.(தொடரும்)
No comments:
Post a Comment