நூலறுந்த பட்டம் -7
ஒரு நாள் ராதா மரகதத்திற்கு போன் செய்து, சுகுணா ஆபீசுக்கு போய் விட்டாள் என்று அறிந்து கொண்டு மரகதத்தின் வீட்டை அடைந்தாள். குழந்தைக்கு ஒரு புது துணியும், கொஞ்சம் ஸ்வீட்டும் வாங்கிக் கொண்டு சென்று இருந்தாள்.குழந்தையை பார்த்ததும் ராதாவுக்கு பரவசம் தொற்றிக் கொண்டது.தன் ரத்தமல்லவா?
குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு, பழைய சட்டையை கழட்டிவிட்டு தான் கொண்டு வந்த புது சட்டையை போட்டு அழகு பார்த்தாள். தான் கொண்டு வந்திருந்த ஸ்வீட்டில் ஒரு துளி எடுத்து குழந்தையின் நாக்கில் தடவினாள். குழந்தை மகா சப்பு கொட்டினாள். ஆறு மாதத்திற்குமாக சேர்த்து ராதா குழந்தையை கொஞ்சினாள். குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும் போது, தன் புடவை சூடாகி விட்டதை உணர்ந்தாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மரகதம்
" உங்க புடவையை நனைச்சூட்டாளா" என்று கூறி "புடவை மாத்திக்கோங்க" என்று சொல்லி வேறு ஒரு புடவையை எடுத்துக் கொடுத்தாள். புடவையை மாற்றிக்கொண்ட ராதா தன் ஈர புடவையை எடுத்து மடித்து வைக்க பார்த்தாள்.
"அதெல்லாம் வேண்டாம். குடுங்க .அத நான் வாஷ் பண்ணி கொண்டு வந்து கொடுக்கறேன்" என்றாள். "சரி" என்று ராதா அந்த புடவையை அங்கே விட்டுவிட்டாள். மாலை 5 மணி வரை அங்கே இருந்து விட்டு பின்பு வீட்டை அடைந்தாள் ராதா.ஏழு மணிக்கு ஆபீசிலிருந்து திரும்பி வந்த சுகுணா, முகம் கழுவ பாத்ரூமுக்கு சென்றபோது அங்கிருந்த புடவையை பார்த்து விட்டாள். அது மாமியார் புடவை என்று தெரிந்தது. அவ்வளவுதான். வெளியில் வந்தவள் மரகதத்திடம் ருத்ர தாண்டவும் ஆடிவிட்டாள். கூச்சல் போட்டாள்.
"என் மாமியார் வந்திருந்தார்களா. அவர்களாக வந்தார்களா? நீ வரச் சொல்லி வந்தார்களா? நான் வேணாம் வேணாம் என்று பாக்கறேன். நீ உறவு வேணும்னு ஈஷிக்கற. உனக்கு மகளும், பேத்தியும் வேணுமா சம்பந்தி வேணுமான்னு தீர்மானம் பண்ணிக்கோ. இந்த மனநிலையை நீ மாத்திக்கலேன்னா நானும், மகாவும் எதாவது ஹாஸ்டல்ல சேர்ந்து கொள்வோம்" என்று கூறினாள். சுகுணாவின் பிடிவாதத்தை முற்றிலும் அறிந்து கொண்டிருந்த மரகதம் 'நான் வர சொல்லலைடி அம்மா.அவங்களே வரும்போது நான் எப்படி மறுப்பு சொல்ல முடியும்"என்று சொல்லி அப்போதைக்கு சமாளித்தாள்.
No comments:
Post a Comment