Tuesday, October 17, 2023

மாற்றான் தோட்ட மல்லிகை - 1

 மாற்றான் தோட்ட மல்லிகை - 1

By N. Krishnamurthy 

நான் எழுதப்போகும் கதை உங்களுக்கு தெரிந்து ஏதோ உண்மையில் நடந்த நிகழ்ச்சி மாதிரி இருக்கலாம்.ஆனால் உண்மை அப்படி இல்லை. இது ஒரு கற்பனை கதை தான். இந்தக் கதையும் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் கற்பனை உருவங்களே. ஒரு வித்தியாசத்துக்கு வேறு மாதிரி கதை எழுதிப் பார்க்கலாமே என்ற அசட்டு தைரியத்தின் விளைவே இந்த கதை.

நீங்கள் மதுரை வாசியாக இருந்தால் உங்களுக்கு கார்டியாக் சர்ஜன் சுகுமாரை தெரியாமல் இருக்க முடியாது. மதுரையில் உள்ள பிரபல இருதய மருத்துவமனையில் சீஃப் கார்டியாக் சர்ஜனாக இருக்கிறார். வயது இப்பொழுது தான் நாற்பதின் தொடக்கம்(நாற்பதில் நாய் குணம் என்ற பழமொழி ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது!)

சுகுமார் பெயரைக் கேற்ற மாதிரி அழகான தோற்றம்.படியை வாரி விடப்பட்ட தலை. கூர்மையான ராசி.ஒளி உமிழும் கண்கள். நீங்கள் மட்டும் அவரைப் பார்த்தால், அவரது வயது 25 லிருந்து 30 க்குள்தான் இருக்கும் என்று கணிப்பீர்கள். அழகான மனைவி நிரஞ்ஜனா. ஆஸ்திக்கு  ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும் கொண்ட அழகான குடும்பம்.ஆஸ்திக்கு பரிக்ஷிஷத் .இவன் தான் பெரியவன் .இவனுக்கு அடுத்தவள்,ஆசைக்கு,

பரிமளா. வயது முறையே 12,9.

சுகுமாரன் நிரஞ்சனாவை திருமணம் செய்து கொண்டதே ஒரு பெரிய கதை.நிரஞ்சனா பார்மசி டிப்ளமோ படித்துக் கொண்டிருந்தாள். அவளது கல்லூரியில் ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது.எல்லா கல்லூரியிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.நவீன மருத்துவம் உடலுக்கு நன்மை செய்கிறதா? ஊறு விளைவிக்கிறதா என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி.(இதை பேசித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?)

பல மாணவர்கள் பேசினார்கள். நிரஞ்சனாவும் பேசினாள். மேடையில் ஏறி, மைக் பிடித்த உடனேயே, எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து விட்டாள் .தோற்றத்தில் தேவதையை போலவே இருந்தாள். சபை கூச்சமே இல்லாமல் கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாள். இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சுகுமார் வந்து பேச ஆரம்பித்தான். அவனது பேச்சும் நன்றாக இருந்தது.அநேகமாக  இவர்கள் இருவரில் ஒருவர் முதல் பரிசை தட்டிக் கொண்டு செல்வார்கள் என்று  அங்கிருந்த பலருடைய அனுமானமாக இருந்தது. நடுவர்கள் மொத்தம் ஆறு பேர். கடைசியில் இரண்டு மார்க் வித்தியாசத்தில் நிரஞ்சனா முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டாள். இரண்டாம் பரிசு சுகுமாரனக்கு.

அதிலிருந்து சுகுமாரனுக்கு நிரஞ்சனா மேல் ஒரு கண்.(மற்றொரு கண்ணுக்கு என்னவாயிற்று?)

மதம்,ஜாதி, இனம், மொழி  போன்றவைகள் எல்லாம் ஒத்துப்போகவே சுகுமாரனின் காதல் சுலபமாக வெற்றி அடைந்தது. எம்.டி  படிப்பை முடித்து வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் சுகுமாரன் நிரஞ்சனாவை கைப்பிடித்தான்.ஜோடி பொருத்தத்தை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பார்த்தவர்கள் எல்லோரும் 'மேட் பார் ஈச் அதர்' என்று சொன்னார்கள். திருமணம் ஆகி இரண்டு வருடம் ஓடியது. முதல் குழந்தை பரிக்ஷித் பிறந்தான். அதன் பின்பு மூன்று வருடம் கழித்து பரிமளா பிறந்தாள். நிரஞ்ஜனா  சுகுமார் மேல் உயிரையே வைத்திருந்தாள்.

எல்லாமே இப்படி சீராக போய்க் கொண்டிருந்தால் அந்த கடவுளுக்கு பொறுக்குமா, இல்லை நமக்கு தான் கதை கிடைக்குமா?

(தொடரும்)

No comments:

Post a Comment