Tuesday, October 17, 2023

ரகோபதேஸம்தொடர்ச்சி_8

 #ரகோபதேஸம்தொடர்ச்சி

#ரகோபதேஸம்தொடர்ச்சி_8

By பாஸ்கர் சத்யா

அடுத்த நாள் பாண்டுரங்க மடத்தில்.  இருக்கைகள் ஏற்பாடு.  நமஸ்காரம் அபிவாதனம் ஆசீர்வாதம் பரிமாற்றங்கள்.

'என்ன பாஸூ.  பிரம்ம யக்ஞ மந்திரங்களுக்குள்ள போகலாமா?  நேத்திக்கு சொன்னதெல்லாம் ஓரளவு ஞாபகம் இருக்கோன்னோ?  சந்தேகம் இருந்தா முதல்ல அதை தீர்த்து வைக்கறேன்.'

'ஒண்ணுமில்ல மாமா.'

'நேத்திக்கு சொல்லும் போது யக்ஞம் என்ற சொல்லுக்கு யாகம்னு ஒரு பொருளும் வழிபாடு அப்படிங்கிற அர்த்தமும் உண்டு அப்படின்னு பார்த்தோம் இல்லையா?'

‘யஜ்’ என்ற வேர்ச் சொல் வழிபடுவது, பக்தி செலுத்துவது என்று அர்த்தத்தை கொடுக்கறது. பரமாத்மாவிடமும், தேவதைகளிடமும் ப்ரீத்தி பூர்வமான உணர்ச்சியுடன் ஒரு வழிபாடாகச் செய்யப்படுகிற கர்மமே யக்ஞம்.'

“மனனாத் த்ராயதே இதி மந்த்ர:” என்பது மந்திரத்துக்கு ஏற்பட்ட லக்ஷணம் அதாவது டெஃபனிஷன்.  அதாவது, “மனனம் செய்தால் எது காப்பாற்றுகிறதோ அதுவே மந்திரம்” என்பது லக்ஷணம். ‘த்ராணம்’ என்றால் காப்பாற்றுவது. “பரித்ராணாய ஸாதூனாம்” என்ற கீதா வாக்கியம் நோக்குதான் தெரியுமே.  விஷ்ணு ஸகஸ்ர நாமத்துல கடைசியில கூட வருமே?  அதுல வருகிற த்ராணாய என்று சொல்லுக்கு காப்பாற்றுவதற்காக அப்படின்னு பொருள்.  யாரை காப்பாத்த?  நல்லவர்களை காப்பாத்த.  அதாவது நல்லவர்களை காப்பாத்த நான் அவதாரம் எடுப்பேன் என்று கிருஷ்ண பரமாத்மா சொல்ற கீதை மந்திரம் இது, இல்லையா?'

'மனனம் செய்வதால் த்ராணம் தருவதே அதாவது காப்பு தருவதே மந்த்ரம். மனனம் என்றால் மனசுக்குள் உருட்டிக் கொள்றதுதான். வாய்விட்டுச் சொல்லக்கூட வேண்டாம். மனசுக்குள் மந்திர சப்தங்களைச் சொல்லிக் கொள்வதாலேயே உள்ளுக்குள்ளே க்ஷேமகரமான வைப்ரேஷன்கள் அதாவது நாடி சலனங்கள் உண்டாகும். அதையே வாய்விட்டு வேத கோஷமாகப் பண்ணினால், அர்த்தம் புரியாவிட்டாலும் அதன் காம்பீர்யமே கேட்கிறவர்களுக்கெல்லாம் ஒரு திவ்ய ஆனந்தத்தைத் தருகிறது. அந்த சப்தங்களுக்கு லோக க்ஷேமத்தை விளைவிக்கக் கூடிய சக்தியும் இருக்கிறது.'

'மனனமாக, மானஸிகமாக இருப்பது வாசிகமாக வாக்கில் வெளிவருவதோடு, காயிகமாக காயம் எனப்படும் சரீரத்தால் ஒரு கர்மாவோடு சம்பந்தப்பட்டு வருகிறபோது மனோ, வாக்கு, காயம் மூன்றும் வேதத்தில் அர்ப்பணிக்கப்பட்டதாக ஆகறது. இப்படிப்பட்ட வேத கர்மாக்களில் முக்கியமானதுதான் யாகம் எனப்படுகிற யக்ஞம்.'

'இங்கே ‘பிரம்ம’ என்றால் வேதம் என்று அர்த்தம். அகண்ட தீபம் போல் மந்திர சக்தியானது நம்மிடம் அணையாதிருக்க நாம் அதைச் செய்யணும். நாம் அத்யயனம் பண்ணவேண்டிய சாகையின் மஹரிஷி எவரோ அவருக்குத் தர்ப்பணம் பண்ணணும். பண்ணி விட்டு இரண்டு அக்ஷரமாவது வேத அத்யயனம் பண்ணணும். அதுவும் முடியாவிட்டால் காயத்ரி மந்திரம்.'

'இந்த பிரம்ம யக்ஞத்துல காயத்ரி மந்திரத்தையும் பிராணாயாமத்தையும் பிரிச்சு பிரிச்சு கோர்த்து கொடுத்திருக்கா.  ரிக் யஜூர் சாமம் அதர்வணம் என்று நான்கு வேதங்களின் ஆரம்ப மந்திரங்களை சேர்த்துருக்கா.  தேவர்கள் ரிஷிகள் மற்றும் பித்ருக்கள் ஆகியவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக தர்ப்பணம் செய்யறத சேர்த்துருக்கா.'

'இந்த பிரம்ம யக்ஞத்த நித்தியகர்மாவாக அனுஷ்டிச்சிண்டு வரணும்னு சொல்லப்பட்டிருக்கு இல்லையா?'

'அப்ப பிராமணன் அனு தினமும் அனுஷ்டிக்க வேண்டிய பஞ்ச யக்ஞங்கள்ல தேவ யக்ஞம் ரிஷி அல்லது பிரம்ம யக்ஞம் மற்றும் பித்ரு யக்ஞம் என்ற மூன்றும் இந்த பிரம்ம யக்ஞ மந்திரங்கள்ல சேர்க்கப்பட்டு கடமையாக அனுஷ்டிக்க கட்டளையிடப்பட்டிருக்கு.  அதிதிகளுக்கான மனுஷ யக்ஞமும் விலங்குகளுக்கான பூத யக்ஞமும் இந்த பிரம்ம யக்ஞத்தை முடித்துக் கொண்டு தினந்தோறும் செஞ்சிண்டு வந்தோமானால் நாம் இந்த பஞ்சயக்ஞங்கள  அனுஷ்டித்த பலன்களை பெற முடியும்.'

'சரி இப்ப பிரம்ம யக்ஞ மந்திரங்களுக்குள்ள போகலாம்.'

'முதல்ல ஆசமனம், கணேச வந்தனம், பிராணாயாமம் அதுக்கப்புறம் சுருக்கமான சங்கல்பம்.  அதாவது பிரம்ம யக்ஞம் கரிஷ்யே அப்படின்னு சொல்லுகிற சின்ன சங்கல்பம்.'

'அதுக்கப்புறம் வித்யுதஸி என்று ஆரம்பிக்கிற மந்திரங்கள‌ சொல்லிண்டே ஜலத்தை தொட்டு கைகளை அலம்பி மூன்று முறை ஆசனம் செய்து இரண்டு முறை உதடுகளை துடைத்து ஒரு தடவை ஜனத்தை தொட்டு இடது கையையும் பாதங்களையும் ப்ரோக்ஷித்து தலை கண்கள் மூக்கு காது மார்பு இவைகளை தொடணும்.  ப்ரம்ம யக்ஞம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நான் உடலாலும் தூய்மையானவனாக இருக்கிறேன் என்பதை தேவதைகளுக்கும் ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் bபாவணையாக தெரிவிக்கும் ஒரு வெளிப்பாடாக இந்த செயல்பாடு அமஞ்சிருக்கு அப்படின்னும் புரிஞ்சுக்கலாம்.'

'ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ

'இதுக்கு மேலோட்டமான அர்த்தம் என்னன்னா ....  பரம்பொருளே நீ மேகத்தினிடையில் பிரகாசிக்கும் மின் கொடிபோல இருக்கிறாய்.  என்னுடைய பாவத்தை நீ அறிவாய்.  உன்னுடைய லீலா விபூதியினின்று அதாவது சத்தியமாகிய நித்திய விபூதியை நாடுகின்றேன்.  அதாவது சட்டுனு மின்னல் கொடி வருவது போல என் பாவத்தை நீக்கிவிடு என்பது உள்ளர்த்தம்.'

'அப்புறம் என்ன பண்றோம்?  உபநயம்போது நடக்கும் பிரமோபதேஸத்தில் சொல்லிய கிரமம் பிரகாரம் காயத்ரி மந்திரத்தையும் பிராணாயாம மந்திரத்தையும் இணைத்து சொல்லணும்.  இது ஒரு அனுஸந்தானம்.  இத பண்ணிட்டு அத்யயன்னத்தை ஆரம்பிக்கணும்.'

'எங்கே அத சொல்லு பார்ப்போம்?'

ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,
ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.

'இதுக்கப்புறம்  ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் ஆரம்ப மந்திரங்களை அத்யன்னம் பண்றோம்.  நான்கு வேதங்களையும் முழுசா சொல்ல ஆரம்பிச்சா நேரம் எடுக்கும் இல்லையா?  அதனாலதான் ஒரு ஸிம்பாலிக்கா வேதங்களோட ஆரம்பத்தையாவது சொல்வத கடமையா வெச்சிருக்கா இந்த பிரம்ம யக்ஞத்துல.'

'அந்த ஆரம்ப மந்திரங்களை ஸ்டான்ஸா ஸ்டான்ஸாவா பொருளோட இப்ப பார்க்கலாமா?'

'எங்கே ...  நீயே ஆரம்பி ....  ஹரிஹி ஓம் .....'

'அவர் இப்படி எடுத்துக் கொடுத்து என்னை தொடரச் சொல்கிறார்.  நானும் கணீர் குரலில் தொடங்குகிறேன்.

'ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய

தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.'

'இது ரிக் வேதத்தோட ஆரம்ப மந்திரம்.  இப்ப இதோட அர்த்தத்தை பார்ப்போம்:

'முன் நின்று அழைத்துச் செல்பவரும் எல்லா யக்ஞத்திலும் முதல் தேவதையும் ரித்விக் வடிவிலும் ஹோதா வடிவிலும் விளங்குபவரும் தலைசிறந்த செல்வத்தை அளிப்பவரும் ஆகிய அக்னியை போற்றுகின்றேன்.'

'ஏற்கனவே நோக்கு சொன்னேனானு தெரியல.  ரிக் வேதத்துல அக்னிக்குத் தான் அதி முக்கியத்துவம் கொடுத்திருக்கா.  நம்முடைய எண்ணங்களையும் விண்ணப்பங்களையும் பரம்பொருள் கிட்ட எடுத்துண்டு போகறது அக்னி தேவர் அப்படின்னு ஏற்கனவே பார்த்தோம் இல்லையா?  முன்னின்று எடுத்துச் செல்பவர் அக்னியை நாம புரோகிதன்னு சொல்வோம் இல்லையா?  இந்த மந்திரத்தில் ரித்விக் ஹோதா அப்படின்னு வரக்கூடிய சொற்கள் அக்னி தேவருடைய ஸ்வரூபங்கள்.  அவரே இந்த இரண்டு ஸ்வரூபங்களையும் ஏற்றுக்கொண்டு உன் யக்ஞத்தை வழிநடத்துகிறார்.  உதாரணமா ஒன்னு சொல்றேன் ...  அக்னி வழிபாடுகள் போது ஆத்து வாத்தியார் இருப்பார்.  அவரோடு கூட குறைந்தபக்ஷம் இரண்டு வாத்தியார்களும் வருவா இல்லையா?  அவாளும் ஆத்து வாத்தியாரோட சேர்ந்து ஆத்து வாத்தியாருக்கு அஸிஸ்ட் பண்ணுவாளோன்னோ?  அவாளும் அந்த சமயத்துல ஆத்து வாத்தியார் ஸ்வரூபம் தான?  இந்த மாதிரி யாகத்தை நடத்திக் கொடுக்கற அஸிஸ்டண்டுகள் மாதிரி தோற்றம் அளிக்கிற அக்னி தேவர் ஸ்வரூபங்கள் தான் இந்த ரித்விக், ஹோதா.  இப்ப நன்னா புரிஞ்சிருக்குமே?'

'அடுத்து வர்றது யஜுர் வேத ஆரம்ப மந்திரம்.  எங்கே ஆரம்பி ஆரம்பிப்போம்!'

ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.'

'இப்ப இதோட பொருளை பார்ப்போமா?'

'பசுக்களே! கன்றுகளே!! அன்னத்தையும் ரஸத்தையும் அளித்து எங்களை தலைசிறந்த கர்மமாகிய பகவத் ஆராதனத்தில் கூட்டி வைக்கும் பொருட்டு நீங்கள் மேயப்போய் திரும்பி வாருங்கள்.  ஸவித்ரு தேவன் உங்களுக்கு நல்ல மேய்ச்சலை அளித்து அருள் புரியட்டும்.'

'என்னடா இது பசுமாடு கன்னெல்லாம் வருதேன்னு பாக்கறையா?  இப்படித்தான் ஆரம்பிக்கிறது யஜுர் வேதம்.  அடுத்தடுத்து அந்த வேதத்தில் வரக்கூடிய மந்திரங்களோட‌ சேர்த்து படிச்சா நமக்கு விவரங்கள் தெரியும்.  ஏற்கனவே சொன்னேனில்லையா இது ஒரு ஸிம்பாலிக்கா வரக்கூடிய வேத அத்யன்னம்.  பொருளும் நீ தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுக்காக சொன்னேன்.  இந்த அளவுக்கு பிரம்ம யக்ஞம் பண்ணும் போது கத்துண்டா போதும்.'

'அடுத்த ஸ்டான்ஸாவ ஆரம்பிக்கறையா?'

'ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

'இதோட அர்த்தம்.  அக்னியே நீ வரவேண்டும்.  உம்மை துதிக்கும் எங்களுடைய பூஜையை ஏற்றுக் கொள்ளவும் நாங்கள் ஹோமம் செய்வதை தேவர்களுக்கு சிறப்பிக்கவும் அழைக்கப்பட்ட நீர் யாகசாலையில் எழுந்தருள வேண்டும்.'

'இது சாம வேதத்தின் ஆரம்ப மந்திரம்.  ராகமா சொல்லுவா.  பிரம்ம யக்ஞத்துல மந்திர தொனியில சொன்னாலே போதும்.'

'அடுத்து ஸ்டான்ஸா அதர்வண வேதத்துல வருகிற‌ ஆரம்ப மந்திரம்.  சொல்லு ....'

ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

'ஜலாபிமானி தேவதைகளே.  தாக சாந்தியை அளிப்பவர்களாக மட்டும் இல்லாமல் எங்களுக்கு அபீஷ்டங்களையும் நன்மைகளையும் அளிப்பவர்களாக நீங்கள் விளங்க வேண்டும்.  உங்கள் அருளால் எங்கள் துன்பம் விலகி இன்பம் பெருகட்டும்.‌ அபீஷ்டங்கள் அப்படின்னா விருப்பங்கள்.  டிஸையர், விஷ் இப்படி இங்கிலீஷ்ல சொல்லுவாளே அதான்.'

'இதுக்கப்புறம் ஒரு சின்ன பிரயோகம் இருக்கு.  'ஓம் பூர்புவஸ்ஸுவஹ' அப்படின்னு சொல்லிட்டு கையில ஜலத்தை எடுத்துண்டு ‌ தலையை பிரதட்சணமாக சுற்றிக் கொள்ளணும்.  'சத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி'  அப்படி என்ன கைய கூப்பிண்டு சொல்லணும்.ஆத்ம சுத்தியாக‌ இது கருதப்படுகிறது.  புரிஞ்சுதா?'

'நான் ஆரம்பத்துல சொன்னேன் இல்லையா அதையே திரும்ப ஒரு தடவை சொல்றேன்.   மனனமாக, மானஸிகமாக இருப்பது வாசிகமாக வாக்கில் வெளிவருவதோடு, காயிகமாக காயம் எனப்படும் சரீரத்தால் ஒரு கர்மாவோடு சம்பந்தப்பட்டு வருகிறபோது மனோ, வாக்கு, காயம் மூன்றும் வேதத்தில் அர்ப்பணிக்கப்பட்டதாக ஆகிறது. இப்படிப்பட்ட வேத கர்மாக்களில் முக்கியமானதுதான் யாகம் எனப்படுகிற யக்ஞம்.'

'மனசு வாக்கு இவைகளோடு கர்மாவையும் இணைச்சிண்டு செய்யும்போது பலன் அதிகமாக இருக்கும்.  அதுக்காகத்தான் இந்த சின்ன சின்ன பிரயோக மந்திரங்களையும் நடுப்புற நடுப்புற வெச்சிருக்கா.'

'கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டு ஆரம்பிக்கட்டுமா?  அதுவரைக்கும் நான் இப்ப வரைக்கும் சொன்னத ஞாபகப்படுத்துண்டிரு.  சரியா?'

தொடரும்

No comments:

Post a Comment