#ரகோபதேஸம்தொடர்ச்சி
ரகோபதேஸம்தொடர்ச்சி_15
by பாஸ்கர் சத்யா
வழக்கமான நமஸ்கார ஆசிர்வாத பரிமாற்றங்களுக்குப் பிறகு அன்றைய வகுப்பு துவங்குகிறது.
'மாமா சாம வேதம் .... மாமா சாம வேதம்'
'தெரியும்டா. ஞாபகம் இருக்கு.'
ஒரு சின்ன இழையில் என் உதட்டு சிரிப்பு.
வகுப்பை ஆரம்பிக்கிறார்.
'வேதானாம் சாமவேதோத்யஸ்மி தேவநாமஸ்மி வாசவ: |
இந்த்ரியாணாம் மனஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதனா ||
இது பகவத் கீதைல க்ருஷ்ண பரமாத்மா சொல்வதாக வரக்கூடிய ஸ்லோகம். இதோட பொருள்:
நான் வேதங்களில் ஸாம வேதம்; தேவலோகக் கடவுள்களில் இந்திரன்; புலன்களுக்கு மத்தியில் நான் மனம்; உயிர்கள் மத்தியில் நான் உணர்வு.
க்ருஷ்ணரே சொல்லியாச்சுன்னா அப்பீலுக்கு இடமே இல்லையே? எனவே வேதங்களிலேயே ஸாமவேதம் மிகவும் போற்றுதலுக்குறியதா இருக்கு.
'ஏற்கனவே நோக்கு சொல்லிக் கொடுத்த ஞாபகம். 'ஸாம்' அப்படின்னா மகிழ்வித்தல். பொது வழக்குல இந்த ஸாம வேதம் மூணாவதா சொல்லப்பட்டாலும் புனிதத்துல ரிக் வேதத்திற்கு அடுத்த நிலையில் இருக்கிற வேதமா இத சொல்றா.
'அப்படின்னா மாமா, என்னோட யஜுர் வேதத்துக்கு மூணாவது ரேங்குதானா?'
என்னுடைய இந்த வருத்தத்தில் இருவரிடத்திலும் சற்று ஹாஸ்யம் சூழ்ந்து கொள்கிறது.
'நான் தான் சொன்னேனே. யஜுர் வேதாக்காராள் தான் மெஜாரிட்டியா இருக்கான்னு. அதுல நாம ஒசத்தி இல்லையா பாஸு?'
'சிரிப்புக்காக நான் இப்படி சொன்னாலும் ஸாம வேதம் ஒரு ரம்யமான வேதம். சடங்குகளின் போது இசைப்பதற்காகவே ஸாம வேதம் இயற்றப் பட்டிருக்கு'
'ரிக் வேதத்துல இருக்கற பல மந்திரங்கள பாட்டு அமச்சு இனிமையாக்கி கொடுத்துருக்கு சாம வேதம். உதாரணத்துக்கு சினிமாக்கள்ல கண்ணதாசன் எழுதின வாசகங்களை கவிதைகள மெட்டு போட்டு வாத்திய கருவிகள வெச்சு ம்யூசிக் போட்டு திரைப்படப் பாடலா வரும்போது அதுல மனசு லயிச்சு கேட்கறையோன்னோ? இசைக்கு மயங்காதவா யாராவது லோகத்துல இருக்காளா என்ன? இத வெச்சுத்தான் கிருஷ்ணரே சொல்லி இருப்பார்னு நெனைக்கிறேன் வேதத்துல நான் சாம வேதம் அப்படின்னு. அந்த கிருஷ்ண பரமாத்மாவே தன்னோட புல்லாங்குழல் இசையால லோகத்தையே மயக்கினவர் தானே?'
‘ஏற்கனவே சொன்னத திரும்ப சொல்றேன். 'ஸாமம்’ என்றால் மனஸை சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது என்று அர்த்தம். 'ஸாம-தான-பேத-தண்டம்' அப்படிங்கிறதுல கூட முதலில் எதிரியைக்கூட அன்பினாலே ஸ்நேஹிதமாக்கிக் கொள்வதற்கு ‘ஸாமம்’ முதல்ல இருக்கு. இப்படி தேவ சக்திகளையும் பரமாத்மாவையும் நமக்கு அந்நியோந்நியமாகப் பண்ணித் தருவது ஸாம வேதம். ஒருத்தரை சந்தோஷப்படுத்த என்ன வழி? ஸ்தோத்திரம் செஞ்சா அவர் சந்தோஷம் அடைகிறார். அல்லது பாட்டு பாடினால் சந்தோஷப்படுத்துகிறது அவர் மனசு. ஸ்தோத்திரத்தையே பாட்டாகவும் கானம் செஞ்சுட்டா ரெட்டிப்பு ஸந்தோஷம் கிடச்சுடறதோன்னோ?'
'இந்த மாதிரிதான் ரிக் வேதத்துல ஸ்துதிகளாக இருக்கற பல மந்திரங்கள ஸ்லோகங்கள ஸாம கானமாக ஆக்கித் தந்துருக்கா ஸாம வேதத்துல. ரிக் வேத மந்திரமேதான். ஆனால் ரிக்கில் முன்னே சொன்ன உதாத்தம், அநுதாத்தம் முதலான ஸ்வரங்கள் மட்டுமே இருக்க ஸாமத்திலோ கானமாகவே அவற்றை நீட்டி நீட்டிப் பாட விதிகள் செய்திருக்கிறது.'
'உதாத்தம், அநுதாத்தம் அப்படின்னா என்ன மாமா?'
'ஓ. அத சொல்லிக் கொடுக்காம சொல்லிட்டேனோ? அது வேற ஒண்ணும் இல்லடா. உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் ஆகிய இந்த நாலும் உச்சரிப்பில் கையாளப்படுகிற வித்யாசங்கள்.'
'உதாத்தம்னா சாதாரண ஸ்வரத்தில் உச்சரிப்பது.
அனுதாத்தம்னா சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை இறக்கி உச்சரிக்கறது.
ஸ்வரிதம் அப்படின்னா சாதாரண ஸ்வரத்திலிருந்து ஒரு மாத்திரை ஏத்தி உச்சரிக்கணும்.
தீர்க்க ஸ்வரிதம்னா சாதாரண ஸ்வரத்திலிருந்து இரண்டு மாத்திரைகள் அளவுக்கு ஏத்தி உச்சரிக்கறது.'
'சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். ஸாம வேதம் தான் பிற்காலத்தில் உண்டான ஸப்த ஸ்வர ஸங்கீதத்துக்கு மூலம் அதாவது ஆதாரம் அஸ்திவாரம். ஸப்த ஸ்வரங்கள் பத்தி தெரியுமோன்னோ நோக்கு?'
'தெரியும் மாமா. ஸ்கூல்ல ராஜேஸ்வரி டீச்சர் பாட்டு சொல்லித்தரத பார்த்திருக்கேன்.'
'நோக்கு பாட்டு கத்துகறதுல விருப்பம் இல்லையா?'
'ஸ்கூல் விட்டோண்ண தான் சொல்லித் தருவா மாமா. எப்படா ஸ்கூல் விடும் எப்படா விளையாட போகலாம்னு தோண்றதால அந்த ஆசையெல்லாம் இருக்காது.'
'ஆர்வம் அதுலயும் வந்தா கத்துக்க போற? சரி அத விடு. '
'ஸாம கானத்துல ஸகல தேவதைகளும் ப்ரீ்த்தி அடைஞ்சுடறா. யக்ஞங்கள்ல ஆஹூதி கொடுத்து பகவானை சந்தோஷப்படுத்தினாலும் ஸாம வேதக்காரா ஒருத்தர் ஸாம கானம் இசைத்தாலே அந்த இடத்துல தேவதாநுக்கிரஹம் ஸித்திக்கிறது. ரிக்வேத மந்திரங்கள் தான் என்றாலும், ஆத்ம சிரேயஸையும் தேவதா ப்ரீதியையும் விசேஷமாக அளிக்க வல்ல கானரூபத்தில் அமஞ்சுட்டா, யக்ஞமே சிறப்படையறது.
'ஏற்கனவே தான் சொன்னேனே. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே, கீதையில் “வேதானாம் ஸாமவேதோஸ்மி” என்கிறார்: “வேதங்களுக்குள் ஸாமவேதமாக இருக்கிறேன்” என்கிறார். நல்லது, கெட்டது எல்லாமே அவர்தான்னு சொன்னாலும் தன்னுடைய தெய்வீகம் விசேஷமாகப் பிரகாசிக்கிற இடங்களை அர்ஜுனனுக்குச் சொல்லிக் கொண்டு வரும் போது, ஸாம வேதத்தையே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.'
'அம்பாளுக்கு “ஸாம கான ப்ரியா” என்றே லலிதா ஸஹஸ்ர நாமத்தில் ஒரு பேர் இருக்கு. ‘ரிக்வேத ப்ரியா’, ‘யஜுர்வேத ப்ரியா’ என்று இல்லை. பிரபல ஸ்யாமா சாஸ்திரிகளும் “ஸாம கான விநோதினி” என்று மீனாக்ஷியைப் பாடியிருக்கிறார். சிவ அஷ்டோத்திரத்தை எடுத்துக் கொண்டால், அங்கேயும் “ஸாம ப்ரியாய நம: அப்படின்னு வர்றது. ‘சந்தோக சாமம் ஓதும் வாயான்’ என்று தேவாரம் கூட போற்றுகிறது. ஈஸ்வரன், அம்பாள், விஷ்ணு என்று மூன்று – பேரையும் ‘ரத்ன த்ரயம்’ என்பதாக, தேவதைகளின் உச்சஸ்தானத்தில் இருக்கப்பட்டவர்களென்று அப்பய தீக்ஷிதர் நிர்த்தாரணம் பண்ணியிருக்கார் அதாவது நிலை நாட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட மூவருக்கும் ஸாம வேத ஸம்பந்தமே விசேஷமாகச் சொல்லியிருக்கு.'
'கோவில்களிலேயோ யாராவது விசேஷங்களிலேயோ சாம வேதம் படிச்சா அப்படியே ஒரு இடத்துல கண்ண மூடிண்டு உட்காந்து கேளு. அப்ப நீயே புரிஞ்சுப்ப அந்த சாம வேதம் உன் மனச எப்படி சந்தோஷப்படுத்தறதுன்னு.'
'ஸாம வேதத்த பத்தி ஒரு சின்ன குறிப்பும் சொல்றேன் கேட்டுக்கோ. இந்த ஸாம வேதம் கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு செய்யுள்கள கொண்டது. அதுல சுமார் எழுவத்தஞ்சு செய்யுள்கள தவிர மீதி எல்லாம் ரிக் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்ட மந்திரங்கள் தான்.
இந்த வேதத்தின் திருத்திய மூல பதிப்புகள் மூணு மட்டுமே கிடைக்கப்பெற்றதா சொல்றா.
இவ்வேதம் ரிக் வேத காலத்தில் குறிப்பா ரிக் வேத காலத்தோட இறுதி பகுதியில் அதாவது கி.மு.1200 அல்லது 1000 தோற்றம் பெற்று யஜுர் வேதம் மற்றும் அதர்வண வேத காலத்தில் முழுமையடைந்திருக்கலாம்னு சொல்றா. இந்த வேதம் உள்ளடக்கியிருக்கும் சாந்தோக்ய உபநிஷதம் மற்றும் கேன உபநிஷதம் பகுதிகள்லேந்து மெய்யியலில் குறிப்பாக வேதாந்தத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் ஆகியவை கூட சாம வேதத்திலேந்துதான் தோற்றம் பெற்றன என பொதுவாக சொலலப்படறது.'
'இந்த அளவுக்கு ஸாம வேதத்தை பத்தி சொல்லிக் கொடுத்தது போதும்னு நினைக்கிறேன். ஃப்ரீயா இன்னொரு நாள் ரிக் வேத ஸ்லோகங்கள் ஒண்ணு ரெண்ட எடுத்து அத ஸாம வேதத்துல எப்படி கொறச்சி நீட்டி சொல்லுவாங்குறத நோக்கு புரிய வைக்கிறேன். அப்ப இன்னும் நன்னாவே புரியும்.'
'அடுத்ததாக அதர்வண வேதத்த பாக்கலாம். அதர்வன் என்றால் புரோஹிதர் அப்படின்னு அர்த்தம். அந்தப் பேரிலேயே ஒரு ரிஷி இருந்தார். அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது தான் அதர்வ வேதம்.'
'இந்த வேதத்துல என்ன விசேஷம் அப்படின்னு பார்த்தோமானா இதுல பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்ள, சத்ருக்களை அழிக்க மந்திரங்கள் இருக்கு. ப்ரோஸ், பொயட்ரி ரெண்டும் கலந்து இருக்கு. மற்ற வேத மந்திரங்களிலும் இப்படி இருந்தாலும் மற்ற வேதங்களில் இல்லாத அநேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில் தான் இருக்கு. மாந்திரீகம்னு இப்ப சொல்றாளோன்னோ ... அத பத்தின அநேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.'
'ரொம்ப உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன. லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்ரத்தை எல்லாம் கொண்டாடுகிற ‘ப்ருத்வீ ஸூக்தம்’ இந்த வேதத்தின் கீழ தான் இருக்கு.'
'யக்ஞத்தை மேற்பார்வை பாக்கற பிரம்மாவை அதர்வ வேதத்துக்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை. இதன் ஸம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய் தெற்கே அடியோடு இல்லாமல் போயிட்டாலும் பிரஸித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள், ‘பிரச்னம்’, ‘முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தவைதான். ஞானத்தை தேடிப் போகிற சாதகன் மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒண்ணே போதும்னு வசனமே இருக்கு.
பிற்காலத்தில் அதர்வ அத்யயனம் விட்டுப் போனாலும், நீண்ட காலம் அது வழக்கில் இருந்திருக்கிறது என்று கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. திண்டிவனத்திற்குப் பக்கத்தில் பேரணிக்குக் கிட்டே எண்ணாயிரம் அப்படிங்கற ஊரிலும், காஞ்சீபுரத்திற்குப் பக்கத்திலுள்ள வாலாஜாபாத் ஸமீபத்திலேயும் கிடைத்திருக்கிற கல்வெட்டுக்கள்ல ஆங்காங்கே இருந்த பெரிய வித்யாசாலைகளைப் பற்றித் தகவல்கள் இருக்காம். இதையெல்லாம் பார்த்தா, பிற்காலச் சோழர் ஆட்சி காலத்திலுங்கூடத் தமிழ் தேசத்தில் அதர்வ வேத அத்யயனம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
வடக்கே ஒரிஸாவில் இருக்கும் பிராமணர்களில் பதினெட்டுப் பிரிவுகள் உள்ளன. அவர்களில் ‘ஆதர்வணிகர்’ என்று ஒரு பிரிவு. அதர்வ வேதிகள் என்பதே இதற்கு அர்த்தம். இப்போதும் குஜராத், ஸெளராஷ்டிரம், கோசலம் முதலான தேசங்கள்ல, ரொம்பவும் அபூர்வமாக அதர்வ வேதிகள் இருக்கா.'
மந்திரங்களுக்குள் மஹா மந்திரமாக விளங்கும் காயத்ரி மூன்று வேத ஸாரம் என்று கருதப்படுகிறது. அதர்வம் அந்த மூணுல சேர்க்கவில்லை. இதனால் அதர்வ வேதத்தை அத்யயனம் பண்றதுக்கு முன்னாடி புனருபனயனம் அதாவது இரண்டாம் முறை பூணூல் கல்யாணம் பண்ணவேண்டும் என்ற அபிப்பிராயமும் கூட இருக்கு. அதர்வ வேதத்துக்கு தனியா காயத்ரி மந்திரம் உண்டு. வேறு வேதக்காரா இப்போது அதர்வ வேதிகள் என்று யாரும் இல்லாதபோது, அந்த வேதத்தை மற்ற வேதக்காரன் அத்யயனம் பண்ணணும்னு ஆசப்பட்டா ஏற்கனவே சொன்னபடி இன்னொரு முறை உபநயனம் செஞ்சுண்டு அதர்வ காயத்ரியை உபதேசம் வாங்கிகண்ட பிறகுதான் அந்த வேதத்தைக் கத்துக்கணும். இது ஒரு விதியாவே சொல்லப்பட்டிருக்கு.'
அதர்வண வேதத்த பிரம்மவேதம்னு சொல்லுவா. இது எழுநூத்தி முப்பத்தொண்ணு பாடல்களைக் கொண்டது. அவைகள் இருபது பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கு. சிற்பக்கலைக்கு ஆதாரமா இருக்கிற சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதுல கட்டடக் கலையும் அடக்கம்.'
'இதோட போதும்னு நினைக்கிறைன். இப்ப நான் சொல்லி கொடுத்ததுல எந்த அளவுக்கு ஞாபகம் உன்னால வெச்சிக்க முடியும்னு நேக்கு தெரியல. உன்னோட ஆர்வத்துக்கு தடை போடக்கூடாதுங்கற அடிப்படையில வேதங்கள பத்தின முக்கியமான விஷயங்கள் மாத்திரம் சொன்னேன். நோக்கு bபோர் அடிக்காம இருந்துதோன்னோ?'
'ரொம்ப நன்னா புரிஞ்சுது மாமா. bபோரெல்லாம் அடிக்கல. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது மாமா. நீங்க சொல்லிக் கொடுக்க சொல்லிக் கொடுக்க நிறைய கத்துக்கணும்னு தோணிண்டே இருக்கு.'
'ஆர்வத்தை மட்டும் விட்டுடாதே. நான் நோக்கு இப்போ சொன்னதெல்லாம் வெறும் கடுகளவு தான்.'
வழக்கமான நமஸ்கார ஆசிர்வாத பரிமாற்றங்கள் முடிந்து இல்லம் திரும்புகிறேன்.
'ஸ்கூல்ல இதெல்லாம் ஒரு பாடமாகவே வைக்கலாம். எவ்வளவு விஷயங்கள்?'
மனதில் உதித்த ஆதங்கம்.
தொடரும்
No comments:
Post a Comment