#ரகோபதேஸம்தொடர்ச்சி
ரகோபதேஸம்தொடர்ச்சி_13
by பாஸ்கர் சத்யா
மறுநாள் வகுப்புக்கு நமஸ்காரம் ஆசிர்வாதம் பரிமாற்றங்களுக்கு பிறகு அமர்கிறோம்.
'நேத்திக்கு உபநிஷத்துகள பத்தி தான பேசிண்டிருந்தோம். நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் ஞாபகம் இருக்கா?'
நேற்று உபநிஷதங்களை பற்றி அவர் பாடம் எடுத்தபோதே அவரிடம் ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன்.
'ஞாபகம் இருக்கு மாமா. ஆனா .... ஒரு கேள்வி....'
'எதுக்கு தயக்கம்? தாராளமா கேளு. நீ கேக்கற கேள்விக்கு விடை தெரிஞ்சதுன்னா உடனே சொல்லப்போறேன். இல்லைனா இன்னைக்கு புஸ்தகங்கள புரட்டி பாத்துட்டு நாளைக்கு சொல்லித் தரப் போறேன். தயங்காம கேளு.'
'மாமா வேதங்கள் எல்லாமே மந்திரங்கள் தானே. ஏன் அவைகளை நாலாக பிரிச்சு வெச்சிருக்கா.'
'நல்ல கேள்வி பாஸு. அந்த நாலு வகை வேதங்கள் என்னன்னு தெரியுமோன்னோ?'
எனக்கு தெரியும் என்பதை அவர் உணர்ந்திருந்ததால் சிரித்துக் கொண்டே தான் இந்த கேள்வியை என்னிடம் கேட்டார்.
'ஓ தெரியுமே. ரிக் யஜூர் சாமம் அதர்வணம் ... இவைகள் தானே மாமா?'
'அதேதான். நீ சொல்றது போல இந்த வேதங்கள் எல்லாம் மந்திர வடிவங்கள்ல தான் இருக்கு. அங்கேயும் இங்கேயும் கிடைத்த மந்திரங்களை வகைப்படுத்தி வெச்சதுதான் இந்த நாலு வகை வேதங்கள். ஏன் பிரிச்சா? எப்படி பிரிச்சா? இதற்கான விளக்கங்கள் பெருசா இருந்தாலும் நோக்கு இப்ப புரியும் படியா சொல்றேன். ஸ்கூலுக்கு நீ போற. அங்க கணக்கு பாடங்கள் தனியா இருக்கு. சரித்திர படங்கள் தனியா இருக்கு. விஞ்ஞான பாடங்கள் தனியா இருக்கு. இப்படி வகைப்படுத்தி படிக்கிறதுனால நம்மால சுலபமா கத்துக்க முடியறது. ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு. ஒருவேளை இந்த சரித்திரம் பூகோளம் விஞ்ஞானம் கணக்கு இவைகளையெல்லாம் பிரிக்காம ஒண்ணா படிக்கும்போது நமக்கு சிரமங்களும் இருக்கும். குழப்பங்களும் இருக்கும் இல்லையா?'
'வேதங்களை வகைப்படுத்தியதற்கு பல காரணங்கள் இருக்கு. ஆனா அடிப்படை காரணம் அப்படிங்கறது நான் நோக்கு இப்ப சொன்னது தான். சாப்பாட்டுல கூட இது ரசம் இது குழம்பு ... அப்படி இப்படி தனித்தனியா வகைப்படுத்தி சாப்டும் போது சுவையும் கூடறது இல்லையா? எப்படி சப்பு கொட்டி சாப்பிடுவோம்?'
'சரி இப்ப எந்தந்த அடிப்படைகள்ல வேதம் பிரிக்கப்பட்டிருக்கு அப்படிங்கறதையும் பாப்போம். கால அளவு ஒரு காரணம். சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் ஒரு காரணம். இப்படி சொல்லிண்டே போகலாம்.'
'வேதம் என்பது ஒரு மரம் அப்படின்னா அதன் வகைகள் அந்த மரத்திற்கு உண்டான கிளைகள். அதுலேந்து பிரியற உப கிளைகள் தத்துவங்கள் வாதங்கள் உபநிஷதங்கள் .. இப்படிக் கூட உவமானப் படுத்தி அடுக்கிண்டே போலாம்.'
'வேதம் அப்படிங்கற சொல்லே வித் அப்படிங்கற சமஸ்கிருத சொல்லை வேராக கொண்டதுதான். சமஸ்கிருதத்துல வித் என்ற சொல்லுக்கு அறிதல் என்பது பொருள். வேதங்கள் என்பதற்கு உயர்வான அறிவு அப்படிங்கற பொருளும் வர்றது.'
'ரிக் யஜூர் சாமம் அதர்வணம் அப்படிங்கற வகைகளுக்கு முன்னாடி வேதங்களுக்கு பொதுவா நாலு பாகங்கள் உண்டுங்கறதையும் புரிஞ்சிக்கணும்.'
'முதலாவது பாகம் சம்ஹிதை. இதற்குப் பொருள் தொகுப்பு. "வேத மந்திரங்களானது கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள் செய்யுள்கள் இப்படி.'
'அடுத்து பிராமணம் எனப்படும் உரை அல்லது சாஸ்திர சம்பிரதாய சடங்கு வழிமுறைகள்.
'மூணாவதாக ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழ்ந்த மற்றும் வாழும் முனிவர்களின் உரைகள், அறிவுரைகள், ஒலிகள் மூலமாக அவர்களுடைய கண்டுபிடிப்புகள் இப்படி சொல்லலாம்.'
'கடைசியாக உபநிடதங்கள். அதாவது வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்/வாதங்கள் பிரதிவாதங்கள். இவைகள் வேதத்தின் முடிவில் வருவன. வேத அந்தம் அதாவது முடிவு என்னும் பொருளில் வேதாந்தம் எனப்படுபவை.'
'இந்த நான்கு விஷயங்களையும் பாகங்களாக பாவித்து அதற்கு ஏத்தாப்போலயும் வேதங்கள நாலு வகைகளாக நமக்கு பிருச்சி கொடுத்திருக்கா. அதாவது ரிக் யஜூர் சாமம் அதர்வணம் என்று நான்கு வேதங்களாக.'
'ரிக் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு துதித்தல் என்று பொருள். முதல் வேதமான இந்த ரிக் வேதம் அக்னி, இந்திரன், வருணன் உள்ளிட்ட தேவர்களை போற்றி வணங்குகிறது.'
'இந்த ரிக் வேதத்துல முக்கியமான பிரத்தியேகமான அம்சம் ஒண்ணு இருக்கு. அதுதான் 'ஒற்றுமை பிரார்த்தனை'. எல்லா ஜனங்களும் ஒன்று சேர்ந்து ஏக மனஸாக இணைந்து ஆலோசனை பண்ணட்டும். எல்லோருக்கும் ஒரே லக்ஷ்யமாக இருக்கட்டும். எல்லா ஹ்ருதயங்களும் அன்போடு ஒன்று சேரட்டும். இப்படி ஏகோபித்த எண்ணத்தோடு எல்லாரும் ஆனந்தமாக இருக்கட்டும்” என்று ரிக் வேதத்துல கடைசியாக வருகிற பிரார்த்தனை. நம்ம நேஷனல் ஆன்த்தம் மாதிரி இதை இன்டர்நேஷனல் ஆன்த்தம் அதாவது சர்வதேச ஆன்ந்தம் அப்படின்னு கூட புரியும்படியா எனக்கு என் குருகுல வாத்தியார் சொன்னது இது.'
'இந்த ரிக் வேதத்துல உண்மையைப் பற்றி பேசப்படுகிற மந்திரங்கள் அலாதியானது. திரும்ப திரும்ப உண்மையைப் பற்றிய மந்திரங்கள் நிறைய இருக்கும். உண்மையா இருக்கிற பக்ஷத்துல உனக்கு உயர்வு மாத்திரம் தான் இருக்கும் அப்படிங்கறத வலியுறுத்தும் வேதம் ரிக் வேதம். அதேபோலவே உழைப்பை பற்றிய ஸ்லோகங்களும் நிறைய ரிக் வேதத்தில் இருக்கு.'
'சில ஸ்லோகங்களுடைய அர்த்தங்களை நோக்கு சொல்றேன் கேட்டுக்கோ.'
1. நம்முடைய மேன்மைக்காகவே நாம் உண்மை பேசுகிறோம்.
2. இந்த பரந்த உலகில் நேர்மை வழியினை கடைப்பிடிப்போர் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
3. உண்மையைத் தேடுவோர் அதனை கட்டாயம் கண்டு கொள்வர்.
4. உண்மையை கடைபிடிப்போர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எப்போதும் இனம் கண்டுகொள்வர்.
5. உண்மையைக் காப்பவரையும் நேர்வழி நடப்பவரையும் எவரும் வெற்றிகாண இயலாது.
6. உண்மை பேசுவது இனிமையையும் அன்பையும் உண்டாக்குகிறது.
7. உண்மை ஒரு ஸ்திரமான அஸ்திவாரத்தின் மீது உள்ளது.
8,பாவிகள் உண்மை வழி நடக்க முடியாது.
9,மனித சமுதாயத்தின் எதிரிகள் தீயவழியினை கடைப்பிடிப்பவர்கள்.
10. இடைவிடாது உழைப்பவர் மட்டுமே சுகத்தினை சுவைக்க முடியும்.
11.தர்ம, அர்த்த,காம,மோக்ஷ சதுர்வித புருஷார்த்தங்களைத் தேடுவோர் நிரந்தரமாக உழைப்பவர்கள்.
12,சுறுசுறுப்பானவர்களையே கடவுள் நேசிக்கின்றார். சோம்பேறிகளை அல்ல.
13.மனம் தெளிவாக செயல்படில் வாழ்வில் வெற்றிகிட்டும்.
14. உண்மையும் நேர்மையும் ஆனவருக்கு காற்று சுகத்தையும் நதிகள் சுவையான நீரையும் அளிக்கின்றன.
15. தூய்மையானவர்களைத் தூற்றுவோர் அழிந்து போவார்கள்.
'இதுபோல எக்கச்சக்கமா இருக்கு பாஸு. வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் மறக்காம படிக்கணும் இவை எல்லாத்தையும்.'
'அடுத்தது யஜுர் வேதம். யஜ் என்றால் யாகம். யாகம் செய்து வழிபடும் முறைகள் இந்த யஜூர் வேதத்துல கொட்டிக் கிடக்கு.'
'சாம் என்றால் சந்தோஷப்படுத்துதல். பாடல்களின் தொகுப்பான இது படிப்போருக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. பகவத்கீதையில் கிருஷ்ணர், வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன் என குறிப்பிடுகிறார். சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களால் ஆன சங்கீதத்திற்கு சாமவேதமே அடிப்படை.'
'நான்காவது வேதம் அதர்வணம். அதர்வ மகரிஷியால் உலகிற்கு அளிக்கப்பட்ட இது ஆபத்துக்கள், எதிரி தொல்லையில் இருந்து விடுபட உதவும் மந்திரங்களைக் கொண்டது.'
'ஒவ்வொரு வேதத்தையும் அதோட அர்த்தங்களையும் பொருள்களையும் துளி கூட அலுப்பு தட்டாம கேட்டுண்டே இருக்கலாம் பாத்துக்கோ.'
வேதங்களை வகைப்படுத்தப்பட்ட விதத்தை என் குருநாதர் எனக்கு புரிய வைத்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
'பாஸு, நன்னா புரிஞ்சுதா எல்லாம்? உன்னுடைய சந்தேகம் தீர்ந்துதா? ஆத்துக்கு போய் அமைதியா ஒரு இடத்துல உக்காந்து நான் இப்ப சொன்னதெல்லாம் ஞாபகப்படுத்திப் பார்க்கணும். அப்பத்தான் இன்னும் கொஞ்சம் ஆணித்தரமா மனசுல பதியும்.'
'கண்டிப்பா மாமா. உங்ககிட்ட நிறைய கத்துக்கணும் போல தோணிண்டே இருக்கு. இவ்வளவு விஷயங்கள் இருக்காங்கறத நினைக்கும்போது பிரமிப்பாவே இருக்கு.'
'நீ நல்ல கொழந்த. இதெல்லாம் தெரிஞ்சுக்கிறதுல ஆர்வமும் நோக்கு இருக்கு. பிரமிப்பு இல்லாம இருக்குமா? சரி, இதோட இன்னைக்கு நிறுத்திப்போம்.'
அவர் முன் சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரத்தை செலுத்துகிறேன். என்னையும் அறியாமல் ஒரு சொட்டு கண்ணீர் பூமியில் விழுகிறது.
தொடரும்
No comments:
Post a Comment