ரங்கு சித்தப்பா - 4
அடுத்த நாள் காலை வாசலில் ஏதோ நிழலாடியது. ஹாலில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்த சித்தப்பா எழுந்து போய் கதவை திறந்தார். அயர்ன்கார பையன் சோமு கையில் அயர்ன் பண்ணிய துணியுடன் நின்று கொண்டிருந்தான். சித்தப்பாவை பார்த்தவுடன் கொஞ்சம் நடுங்கினான். பழசெல்லாம் அவனுக்கு ஞாபகம் வந்தது.
ரங்கசாமி போன முறை வந்திருந்த போது அவர் அயர்னுக்கு கொடுத்திருந்த சட்டை கையை கொஞ்சம் பொசுக்கி விட்டு இருந்தார் சோமுவின் அப்பா. சித்தப்பாவுக்கு வந்ததே கோபம். அவரிடம் பயங்கரமாக சண்டை பிடித்து, அந்த சட்டை அயர்ன் பண்ணினத்துக்கு காசும் கொடுக்காமல், சட்டையோட விலையில் பாதி, அதாவது நாற்பது ரூபாயை வேறு அவரிடமிருந்து பிடிங்கிக்கொண்டார்.
"என்ன சோமு, சௌக்கியமா" என்றார் சித்தப்பா .
"நல்லா இருக்கேன்யா நீங்க எப்படி இருக்கீங்க.எப்ப வந்தீங்க"என்று கேட்டான் அவன்
செயற்கையான புன்னகையுடன்."நேத்து தான்டா வந்தேன்" என்று சொல்லிவிட்டு "சரி, துணிய கொடு . மொத்தம் எத்தனை துணி" என்று கேட்டார். "12 துணி சார், 96 ரூபாய்
தரணங்க" என்றான் சோமு.தன் பாக்கெட்டில் இருந்து 200 ரூபாயை நோட்டை எடுத்துக் கொடுத்தார் சித்தப்பா.
"மீதி சில்லறை இல்லைங்க" என்றான் தலையை சொறிந்து கொண்டு சோமு. "உன்னை யார் மீதிய கேட்டா. போன தடவை துணியை பொசுக்கிட்டேன்னு சொல்லி 40 ரூபா உங்ககிட்டேந்து வாங்கிட்டேன் இல்லையா. அதுக்கு வட்டி போட்டு 100 ரூபாய் இப்போ கொடுக்கிறேன். இப்ப தேச்ச துணைக்கு நூறு ரூபா.சந்தோஷமா வாங்கிட்டுட்டு போ" என்றார்.சோமு ஒருமுறை தன்னைத் தானே கிள்ளி பார்த்துக் கொண்டான். மிகவும் சந்தோஷத்துடனும், நன்றியுடனும் "நான் வரேங்க"என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தான்.
இதற்குள் சமையல் அறையிலிருந்து வந்த சுமதி "என்ன சித்தப்பா யார் வாசல்ல" என்று கேட்டாள். "அயர்ன் பண்ண துணி வந்தது. வாங்கி வச்சேன்" என்றார்.அப்படியா" காசு கொடுக்கணமே. எங்க ஓடி போப்போறோம். அடுத்த தரம் வரும்போது சேத்து கொடுத்தா போச்சு"என்றாள் அவள்." அப்படி எல்லாம் செய்ய வேண்டாம்மா. நானே கொடுத்தூட்டேன்"என்றார் சித்தப்பா.
கொஞ்ச நேரம் கழித்து தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு வந்த வினய் "அம்மா நான் கம்பெய்ன்ட் ஸ்டெடி பண்ண என் பிரண்டு சுரேஷ் வீட்டுக்கு போறேன்" என்றான். "சரிடா.ஏதோ ஜெராக்ஸ் எடுக்கணும்னு சொல்லிண்டிருந்தேயே, எடுத்தூட்டயா"என்று கேட்டாள் சுமதி. "இல்லம்மா.ஜெராக்ஸ் முக்கியம்தான் .ஆனால் ஜெராக்ஸ் கடைல கூட்டமா இருக்கு " என்றான்.இதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்தப்பா அவனிடம் "என்னடா ஜெராக்ஸ் பண்ணனும்"என்றார். "ஒருத்தன் கிட்ட நோட்ஸ் கடன் வாங்கிண்டு வந்திருக்கேன் சித்தப்பா. அத தான் ஜெராக்ஸ் எடுக்கணம் . ஜெராக்ஸ் கடைக்கு போக டைமே கிடைக்கலை.டைம் கெடச்சு போனா கூட்டமா இருக்கு." என்றான் வினய். "எங்கே ஜெராக்ஸ் எடுக்க வேண்டியதை கொடு" என்றார்.திரும்பி தன் ரூமுக்கு சென்று வந்த வினய் அந்த நோட்சை சித்தப்பாவிடம் கொடுத்தான். அதை வாங்கி கொண்ட சித்தப்பா "எவ்வளவு காப்பிடா வேணும்" என்றார்."ஒரு காபி போறும் சித்தப்பா" என்றான்.
"சரி,போ. மத்தியானத்துக்குள்ள நான் இதை பண்ணி வைக்கிறேன்" என்றார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த சுமதி "எதுக்கு சித்தப்பா நீங்க இந்த வெயில்ல வெளில போணம். நான் போயிட்டு வரேன்" என்றாள். "நீ சும்மா இரும்மா.உனக்கு மட்டும் நெலா காயற்தாக்கம் " என்று சொன்னவர், காலை டிபனை முடித்துக்கொண்டு,
பத்து மணிக்கு, அருகில் இருந்த ஜெராக்ஸ் கடைக்கு போய் நோட்ஸை ஜெராக்ஸ் எடுத்ததோடு மட்டுமல்லாமல்,
ஸ்பைரல் பைண்டிங்கும் பண்ணச் சொன்னார். மத்தியானம் வினய் வீட்டுக்கு திரும்பியவுடன் தன் ரூமில் டேபிள் மேல் வைத்திருந்த ஸ்பைரல் பண்ணின நோட்ஸை பார்த்து அசந்து விட்டான்.நேரே சித்தப்பாவிடம் வந்தான். "சித்தப்பா, நல்லா பண்ணி இருக்கீங்க.சூபரா இருக்கு" என்றான்.
" நான் என்னடா பண்ணேன். அந்த கடைக்காரன் ஜெராக்ஸ் எடுத்து, ஸ்பைரல் பண்ணி கொடுத்தான். நான் வாங்கிண்டு வந்தேன். அவ்வளவுதான்" என்றார் சித்தப்பா. "இருந்தாலும், ரொம்ப தேங்க்ஸ் சித்தப்பா" என்றான் வினய். "சொந்தத்துக்குள்ள எதுக்குடா தேங்க்ஸ் எல்லாம். போடா, போய் படி" என்றார்.(தொடரும்)
No comments:
Post a Comment