Wednesday, October 18, 2023

ரகோபதேஸம்தொடர்ச்சி_11

 #ரகோபதேஸம்தொடர்ச்சி

ரகோபதேஸம்தொடர்ச்சி_11

By பாஸ்கர் சத்யா

உபநிஷத்துகள் பற்றி ஆசான் ஆரம்பித்த விதமும் மேலோட்டமாக அவர் சொன்ன கருத்துக்களும் என்னை அன்று மெய்சிலிர்க்க வைத்ததை சொன்னேன் சென்ற அத்தியாயத்தில்.  அவைகள் எனக்கு அவைகளைபற்றி மேலும் அறிந்து கொள்ள எனக்கு தூண்டுதலை கொடுத்தன.

அதன் காரணமாகவோ என்னவோ மறுநாள் அவர் சொன்ன நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மடத்துக்கு வந்து விடுகிறேன்.  ஆசான் பாண்டுரங்க பூஜையில் லயித்திருந்தார்.  சைகையில் ஒரு ஓரமாக என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவர் பூஜையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

அன்று பூஜையை விட உபநிஷத் பற்றிய விஷயங்களை அறியவே ஆர்வம் என் மனம் துடித்துக் கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.  'சீக்கிரம் முடிங்கோ மாமா பூஜையை' என்று என் மனம் அவருக்கு மானசீகமாக சொல்லிக் கொண்டிருந்தது என்றாலும் மிகையில்லை.

கற்பூர ஹாரத்தி முடிந்தது.  அவசரம் அவசரமாக ஹாரத்தியை கண்ணில் ஒத்திக்கொண்டு இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்கிறேன்.

'நீ முன்னாடி வந்துட்டு என்னை அவசரப்படுத்தறையா?  மேட்ச் ஏதாவது இருக்காக்கும்?'

'இல்ல மாமா.  நேத்திக்கு கிளாஸ் ஏ கிளாஸ்.   உபநிஷத் பத்தி மேலே தெரிஞ்சுக்கணும்னு ஆசை.  அதான் இந்த அவசரம்?'

'அப்படியா?  பேஷ் பேஷ்.  நேக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.  பரவாயில்லை.  ஆர்வமா இருக்கியே.  அதனால மத்த வேலைகளை தள்ளி போட்டுட்டு வகுப்ப ஆரம்பிச்சுடறேன்.'

அவசர நமஸ்காரம்.  அவசர அபிவாதனம்.  அவசரமாகவே அவர் அமர்வதற்குள் என் பலகையில் நான்.  என் அவசரம் அவருக்கு சிரிப்பை தருகிறது.

'எதேது ...  நல்ல வேளை பாஸு கையில பிரம்பு இல்லை.‌ உடனே ஆரம்பிக்கலைனா கம்பால ரெண்டு போடுவ போல இருக்கே.'

'மாஆஆஆமா ....'.

இப்போது இருவரும் சிரிக்கிறோம்.  இடுப்பு இரண்டு ஆட்டத்துடன் என் முதுகை நேராக்குகிறது.  வகுப்பு துவங்குகிறது.

'நேத்திக்கு என்ன சொல்லிக் கொடுத்தேன்?  ஒரு வஸ்துவைப்பத்தி தெரிஞ்சுக்க நான்கு வகைகள் இருக்குன்னு பார்த்தோம்.  பிரத்யக்ஷம், அனுமானம், உவமானம், சப்தம் அல்லது அப்த வாக்யம்.  நாலாவதாக சொன்னது வேதத்திற்கு பொருத்தமானது அப்படின்னு பாத்தோம்.  வழி வழியா வந்த ரிஷிகளும் இதிகாச புராணங்களும் சொல்வதை அப்படியே நம்பிக்கையோடு ஏத்துண்டு வாழ்க்கையிலே முன்னேற்றம் காண்பதுதான் அப்த வாக்கியம்.'

'அங்குமிங்கும் இருந்த வேத ஆதாரங்களை முறைப்படுத்தி சுருக்கமாக எல்லோருக்கும் எளிதில் புரியும்படியாக இருக்கும் நூல்கள் தான் உபநிஷத்துக்கள் அப்படின்னும் பாத்தோம்.  ஏதோ சுருக்கமான விஷயங்கள் அப்படின்னா நாலு வரியில சொல்றது இல்ல.  அவைகளும் பிரம்மாண்டமான நூல்கள் தான்.  வேதம் ஒரு கடல்னா உபநிஷத்துக்கள் அதுலேந்து எடுக்கப்பட்ட முத்துக்கள்.  உபநிஷத்துகளை தாண்டி இன்னும் கூட முத்துக்கள் இருக்கலாம்.  அந்த அளவிற்கு வேதங்கள் தெய்வாம்சம் பொருந்திய பெருங்கடல்.'

'இதை ஏன் சொல்றேன் அப்படின்னா நான்கு வேதங்களுக்கும் சாகைகள் அப்படின்னு சொல்லக்கூடிய பல கிளைகள் இருக்கு.  எல்லா சாகைகளும் தற்காலத்தில இல்லை அப்படின்னு வேணா சொல்லலாம்.   ஒவ்வொரு வேதசாகை முடிவிலும் ஒரு உபநிஷத்து இருந்திருக்கணும் அப்படின்னு நம்பும்படியா இருக்கு. பற்பல சாகைகள் இன்று இல்லாமல் போனாலும் நூத்துக்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் நமக்கு பொக்கிஷமா கெடச்சிருக்கு.'

'வேதங்களில் இருக்கற சடங்குகளைப் பற்றிய விபரங்களும், அவற்றில் எங்கும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் தெய்வ அசுர இனத்தாருடைய பரிமாறல்களும் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்ற ஐயங்களை எல்லாம் ஒரு புறம் தள்ளிட்டு வேதப்பொருளின் ஆழத்தை அறிய முயலும் யாரும், உபநிஷத்துக்களிலுள்ள தத்துவங்களால கவரப்படாமல் இருக்கமுடியாது.  ஏன், இன்னும் உபநிஷதங்கள்ல இருக்கும் விஷயங்கள சொல்லக்கூட இல்லாம இருக்கும்போது நோக்கே அதீத ஆர்வம் உண்டாகி இருக்கு இல்லையா?  இதுவே ஒரு உதாரணம் இல்லையா?'

'அதனாலேயே இந்துசமயத்தின் தத்துவச்செறிவுகள் உபநிஷத்துக்களில்தான் இருக்கறதா மனப்பூர்வமா எல்லோரும் நம்பறா.'

'இந்த உபநிஷத்துக்கள் சில உரைநடைலேயும் இருக்கு.  சில செய்யுள் நடையிலேயும் இருக்கு. ஆனால் எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அலசுபவை தான். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன? அடிப்படை உண்மை எது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா? அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா? இவைகளையும் இன்னும் இவற்றைப் போலுள்ள பல ஆழமான தலையாய பிரச்சினைகளையும் சலிக்காமல் அலசிப் பாக்கும் இலக்கியம் தான் உபநிஷத்துக்கள்.'

'எந்த விஷயத்தையும் முடிஞ்சுபோன முடிவா சொல்லிடாம, கேள்விகள எழுப்பறதும், கேள்விகள்ல‌ உள்ள ஆச்சர்யமூட்டும் விஷயங்களும் மாற்றுத் தத்துவங்களை வெளிக் கொண்டு வந்து பிரச்சினையைப் பற்றிப் பல ஆன்மிகவாதிப் பெரியார்கள் சொந்த அனுபவத்தைக் கொண்டு என்ன சொல்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைப்பதும், உபநிஷத்துகளின் முத்திரை நடை.  இதனாலதான் உலகின் எண்ண செறிவுகளிலேயே உபநிஷத்துக்கள் ஒரு ஒசரமான எடத்துல வைக்கப்பட வேண்டியவை.'

'உபநிஷதங்கள் உருவானதை ஒரு காலகட்டத்திற்குள்ள அடக்கிவிட முடியாது.  வேதங்களும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் வந்தது அல்ல.  அதே மாதிரி தான் வேதங்களின் சுருக்கமான உபநிஷதங்களும் உருவாக பல காலகட்டங்கள் எடுத்துண்டிருக்கு.'

'இந்த உபநிஷதங்கள் நூத்துக்கு மேல இருக்கறதா சொல்றா. இருந்தாலும் இவைகள்ல பதிமூணு உபநிஷதங்கள் பிரசத்தின்னு அவைகளோட காலங்களைக் கொண்டு வகைப்படுத்தலாம்.'

'பழங்கால உபநிடதங்கள்,  இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்,  மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்,

நான்காம் காலகட்ட உபநிடதங்கள் ...  இப்படி வகைப்படுத்திக்கலாம்.'

'பழங்கால உபநிஷதங்கள் வகையில ஈசா, சாந்தோக்யம்,

பிரகதாரண்யகம் ... இந்த மூணையும் சொல்றா.'

இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் அப்படின்னு பார்த்தோமானா

ஐதரேயம்

தைத்திரீயம்

மூன்றாம் காலகட்ட உபநிஷதங்கள் வகையில

பிரச்னம், கேனம், கடம், முண்டகம், மாண்டூக்யம் இவைகள் வர்றது.

நான்காம் காலகட்ட உபநிஷதங்கள்....

கவுஷீதகி

மைத்ரீ

ஸ்வேதாசுவதரம் ... இப்படி சொல்லலாம்.'

'ஓரளவு இந்த நான்கு வகையான உபநிஷத்துகள் உருவான கால அளவுகள் கூட குறிப்பிட்டு சொல்லியிருக்கா. 

'இவைகளையும் தாண்டி ஆதிசங்கரர் அருளிய பதினெட்டு உபநிஷதங்களும் சேர்க்கப்பட்டிருக்கு.  அந்த பதினெட்டுல கேன உபநிஷதம், ஈஸாவாஸ்ய உபநிஷதம், தைத்ரீய உபநிஷதம், நாராயண உபநிஷதம் இவைகளையெல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம்.'

'எப்படி மாமா இவ்வளவையும் ஞாபகத்துல வச்சுண்டுருக்கேள்?  எனக்கு ஆச்சர்யமா இருக்கு?'

'இதுல ஒரு கம்ப சூத்திரமும் இல்ல.  ஒரு விஷயத்துல ஆர்வம் இருந்தா மனசு மேல மேல அதப்பத்தின விவரங்களை கத்துக்கச் சொல்லும்.  சில சமயங்கள்ல தேடித் தேடி படிக்கத் தோணும்.  தெரிஞ்சவா மூலமா அறிஞ்சுக்க சொல்லும்.  நீ ஸ்கூல்ல படிக்கிற மாதிரி தான்.  உனக்கு ஒரு கணக்கு பாடம் சரியா வரலைனா தெரிஞ்சவா கிட்ட சொல்லித்தர சொல்லுவியோன்னோ?  கத்துண்ட விஷயத்தை மறக்காமல் அடிக்கடி ஞாபகப்படித்துண்டு இருப்பியோன்னோ?  கத்துக்கறதுக்கு ஆதாரமா இருக்கிறது உன்னோட ஆர்வம் தான்.  வைதீகம்தான் ஜீவனம் அப்படின்னு எனக்கு ஆனதுக்கு பிறகு கேட்கறவாளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு என்னை உயர்த்திக்கணுமோன்னோ?  அப்புறம் எல்லாரும் என்னை என்ன சொல்லுவா?  இந்த மாமாக்கு ஒண்ணுமே தெரியாது, அசமஞ்சம் அப்படிம்பாளோன்னோ?'

அவர் இப்படி யதார்த்தமாக சொன்னது என்னை பல வழிகளில் சிந்திக்க வைத்தது.  ஆர்வம் முக்கியம்.  கேட்டுத் தெளிவது முக்கியம்.  அறிந்ததை மறக்காமல் இருக்க திரும்பத் திரும்ப நினைவூட்டல்கள் முக்கியம்.

'வேதப் பொருள்கள்ல மூணு வகை உண்டு.   அவை கர்ம காண்டம், உபாசன காண்டம், ஞான காண்டம் ...  இவைகள்தான் அந்த மூணு.  இதுல ஞான காண்டம் தான் 'உபநிஷத்'.  ஆன்மாவை பரம் பொருள் அருகே வைக்கறது இதோட பெருமை.  அதாவது வேதத்தின் உட்பொருள் அப்படின்னும் கொள்ளலாம்.'

'காலடில பிறந்த ஆதி சங்கரர் மெட்ராஸுக்கு பக்கத்துல உள்ள ஸ்ரீபெரும்புதூர்ல அவதரிச்ச ஸ்ரீராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாச்சாரியார் ...  இந்த நாலு சமயாச்சாரியாளும் அத்வைதம் விசிஷ்டாத் வைதம், த்வைதம், சித்தாந்தம் போன்ற கொள்கைகளுக்கு ஒட்டி பத்து முக்கிய உபநிஷத்துகளுக்கு விரிவுரை கொடுத்திருக்கா.'

'பதினெட்டாவது நூற்றாண்டுல உபநிஷத் பிரம்மேந்திரர் அப்படின்னு சொல்லக்கூடிய துறவி நூறு உபநிஷத்துகளுக்கும் மேல உரை எழுதி இருக்கார்.   நம்ம பாரத தேசத்துல தோன்றிய மெய்யியல் பெரியோர் ஒவ்வொருத்தரும்  உபநிஷத்துக்களில் உள்ள கருத்துக்களைப் பத்தி ஏதாவது விரிவாக்கமோ விளக்கமோ ஒரு சில உபநிஷத்துக்களுக்காவது கொடுக்க தவறியதே இல்லை.'

'உபநிஷத்துகள வகைப்படுத்தி பகுத்து வெச்சுருக்கா.

'ஐதரேய சாகைனு சொல்லக்கூடியது ரிக் வேதத்திற்கானது.

'ஈஸாவாஸ்ய உபநிஷதம் யஜுர் வேதத்திற்கானது.  இதைத் தவிர இன்னும் சில கூட யஜுர் வேதத்துக்கு உபநிஷதங்களா இருக்கு.

கேன உபநிஷதம் சாம வேதத்திற்கானது.  சாந்தோக்ய உபநிஷம் அப்படின்னு கூட சாம வேதத்துக்கானது தான்.'

'ப்ரச்ன, முண்டக, மற்றும் மாண்டூக்ய  உபநிஷதங்கள் அதர்வண வேதத்திற்கானது.

'இப்படி சொல்லிண்டே போனா ஆச்சரியமா இருக்கும்.

இருபத்து நாலு சாமான்ய வேதாந்த உபநிஷதங்கள்

இருபது யோக உபநிஷதங்கள்

பதினேழு சன்னியாச உபநிஷதங்கள்

பதினாலு வைணவ உபநிஷதங்கள்

பதினாலு சைவ உபநிஷதங்கள்

ஒம்பது சாக்த உபநிஷதங்கள்

இவைகளில்,

பத்து ரிக்வேதத்தைச் சார்ந்தவை

முப்பத்து ரெண்டு கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை

பத்தொம்பது சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை

பதினாறு சாம வேதத்தைச் சார்ந்தவை

முப்பத்தொண்ணு அதர்வணவேதத்தை சார்ந்தவை.'

'சுக்ல யஜூர் வேதம் கிருஷ்ண யஜுர் வேதம்னு சொன்னேனே கேட்டியோ?  இந்த ரெண்டு வகை யஜுர் வேதங்கள பத்தி அடுத்த அடுத்த வகுப்புகள்ல சொல்லிக் கொடுக்கறேன்.  சரியா?'

'இப்படி உபநிஷதங்கள் பத்தி பேச ஆரம்பிச்சா பேசிண்டே போகலாம் எல்லையே இல்லாம'

'வைதீகாளும் கிழங்கட்டைகளும் தான் இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு இல்ல.  மத்தவாளும் அப்பைக்கப்ப இந்த நூல்களை எல்லாம் படிக்க முயற்சிக்கணும்.  நம்முடைய ஹிந்துமதம் ஏதோ நாலு மடாதிபதிகளாலும் வைதீகளாலும் மாத்திரம் தான் காப்பாத்தப்படணும்னு இல்ல.  நம்ம மதத்தோட பெருமைகள் எல்லாம் வேதங்களாலும் இதிகாசங்களாலும் புராணங்களாலும் கடலளவுக்கு மேலேயே சொல்லப்பட்டு இருக்கு.  நாம இவைகள பத்தி தெரிஞ்சிண்டு மத்தவாளுக்கும் தூண்டுதலா இருக்கணும்.'

'சரிடா பாஸு.  இதோட இன்னிக்கு நிறுத்திக்கலாம்.'

வகுப்பு முடிந்தாலும் என் மனம் அன்று ஏனோ இனம் புரியாத சந்தோஷத்தில் இருந்தது.

'அடுக்கிண்டே போறாரே மாமா உபநிஷத்துக்குகள பத்தி?'

நமஸ்கரிக்கிறேன்.  ஆசீர்வதிக்கிறார்.

நிறைய புது விஷயங்கள் அறிந்த பெருமை மடத்தை விட்டு கிளம்பியபோது நடந்த நடையிலேயே தெரிந்தது.

தொடரும்

No comments:

Post a Comment