Tuesday, October 10, 2023

ரங்கு சித்தப்பா-3

 ரங்கு சித்தப்பா-3

குளித்துவிட்டு வெளியே வந்த சித்தப்பா, ராமகிருஷ்ணன் டைனிங் சேரில் உட்கார்ந்திருப்பதை பார்த்தார் ."என்ன மாப்ள. எப்படி இருக்கீங்க" என்றார்.

"வாங்கோ சித்தப்பா.நான்  நண்ணா இருக்கேன். ஆபீஸ்ல தான் வேலை கெடுபிடி" என்ற ராமகிருஷ்ணன் ஆன்டிசிபேடரி பெயில் வாங்கற மாதிரி எழுந்திருக்க பார்த்தார். "ஆபீஸ்னா அப்படித்தான் இருக்கும். ஆமாம் இன்னும் ரிட்டயர்மென்ட்டுக்கு  எவ்வளவு வருஷம் இருக்கு" என்றார். "இன்னும் மூணு வருஷம் இருக்கு சித்தப்பா" என்றார் ராமகிருஷ்ணன்.

 "சித்தப்பா,தட்டு வைக்கிறேன்" என்றாள் சுமதி. ரங்கசாமி, ராமகிருஷ்ணன் எதிரில் உட்கார்ந்தார் .சுமதி பயந்து கொண்டே பரிமாறினாள். அன்று பயத்தில் சட்னியில் உப்பு அதிகமாக விழுந்து விட்டிருந்தது.சித்தப்பா எப்படியும்  கண்டுபிடித்து டோஸ் விடுவார் என்ற பயம் அவளுக்கு. சித்தப்பா தன் பாட்டிற்கு சட்னியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "இன்னும் கொஞ்சம் சட்னி போடம்மா" என்ற அவரிடம்  சுமதி "சித்தப்பா சட்னியில் கொஞ்சம் உப்பு கூட இருக்கோ" என்றாள்.

அதற்கு சித்தப்பா " அப்படியெல்லாம் ஒண்ணும்  அதிகமா இல்லம்மா.இருந்தா கூட என்ன? உப்பிலா பண்டம் குப்பையிலேன்னு  சொல்றாளே"என்றார்.

சித்தப்பா சாப்பிட்டு முடித்தவுடன் அவருடைய தட்டை எடுக்க வந்த சுமதியை அவர் தட்டை எடுக்க விடவில்லை. சுமதி "விடுங்க சித்தப்பா. நான் உங்க தட்ட எடுத்து அலம்பிடறேன்" என்றாள் சுமதி.அவர் அவளைத் தடுத்து" நானே எடுத்துக் கொண்டு போய் அலம்பிடறேம்மா.என் தட்ட நான் சுத்தம் பண்ணறதல என்ன பிராப்ளம்" என்றார். இதை கேட்டதும் சுமதிக்கு தலை சுற்றுவது போல இருந்தது. இது  சித்தப்பாவா அல்லது சித்தப்பா ரூபத்தில்  வந்திருக்கும் ஏதாவது யக்ஷனா என்று கூட நினைத்தாள்.

ராமகிருஷ்ணன் ஆபீசுக்கு கிளம்பினார். அவர் கிளம்பி ஐந்து நிமிடம் கழித்து எதிர் பிளாட்டில் இருந்து வனஜா மாமி பரக்க பரக்க ஓடி வந்து "சுமதி மாமாக்கு என்னமோ பண்ணுறது. நர்சிங் ஹோமுக்கு கூட்டிண்டு போணம்.ஓலா ஆட்டோ ட்ரை பண்ணா ஒண்ணும் கிடைக்க மாட்டேன்றது. உங்காத்து மாமாவோ,வினய்யோ ரோட்டுக்கு போய் ஆட்டு கூப்ட்டுண்டு வர முடீயுமா" என்று கேட்டாள். " ஆம்பளை யாரும் ஆத்துல இல்லையே மாமி" என்றாள் சுமதி. இதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்தப்பா சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு மாமியை பார்த்து "நீங்க ரெடியா இருங்க. இன்னும் அஞ்சு நிமிஷத்ல ஆட்டோ கொண்டு வரேன்" என்று கீழே இறங்கினார். ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி கூப்பிட்டு கொண்டு வந்தார்.வனஜா மாமி சித்தப்பாவிடம் "ரொம்ப தேங்க்ஸ் மாமா" என்றாள். "தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும். முதல்ல மாமாவை ஆஸ்பத்திரிக்கு அழச்சிண்டு போங்க" என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுமதி மனதுக்குள் "சித்தப்பாவுக்கு என்னவோ ஆகிவிட்டது. இல்லாவிட்டால் இப்படி ஒரு பெரிய மாற்றம் நடக்குமா" என்று எண்ணிக் கொண்டாள்

(தொடரும்)

No comments:

Post a Comment