Tuesday, October 10, 2023

நூலறுந்த பட்டம் - 2

 நூலறுந்த பட்டம் - 2

ராதாவும், ஆதித்யாவும் சுகுணாவை பெண் பார்க்கப் போன போது சுகுணா, ஆதித்யாவிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள்.இதை அம்மா மரகதத்தினிடம் தனியாக  கூறினாள். மரகதம் அவளிடம்  " நீ பேச வேண்டும் என்று சொன்னால் நல்லா இருக்காது. அந்தப் பையன் உன்னிடம் பேசுவதற்கு நான் ஏற்பாடு பண்ணுகிறேன்" என்று கூறி  விட்டு ராதாவைப் பார்த்து "அவருக்கு ஏதாவது என் பொண்ணு கிட்ட பேசணும்னா சொல்லுங்க" என்றாள். இதைக் கேட்ட ராதா ஆதித்யாவிடம் "என்னடா,அவ கிட்ட பேசறயா" என்றாள்.

பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் கூச்ச சுபாவம் உள்ள ஆதித்யா " எனக்கு ஒண்ணும் பேசவதற்கில்லை" என்று கூறி விட்டான். இதையெல்லாம் அறைக்குள்ளேயிருந்து  பார்த்துக் கொண்டிருந்த சுகுணா,  மரகதத்திடம்  "சரியான அம்மா கோண்டு போல இருப்பான் போல இருக்கு" என்றாள் தாயிடம். "உஸ்"மெல்ல பேசுடி.அவுங்க காதுல விழுந்தட போகுது" என்று பெண்ணை கண்டித்த  மரகதம்,

அறைக்கு வெளியில் சென்று ராதாவிடம் "என் பொண்ணு உங்கள் பையன் கிட்ட பேசணம்னு  ஆசைப்படறா" என்றாள். ராதா உடனே ஆதித்யாவிடம்   "போய் பேசீட்டு வாடா" என்றாள். வேறு வழியில்லாமல் ஆதித்யா சுகுணா இருக்கும் அறைக்கு சென்றான். அவர்கள் பொதுவான விஷயங்களை பற்றி ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஐந்து நிமிடத்தில் குறைந்தது பத்து முறையாவது அம்மா அம்மா என்று சொல்லி இருப்பான் ஆதித்யா.

இதைக்கண்டு பொறுக்காத  சுகுணா அவனிடம் " எல்லாம் அம்மாவை கேட்டு தான் செய்வீங்க போல " என்றாள்.இது ஆதித்யாவிற்கு பிடிக்கவில்லை.

"ஆமாம்.அதில ஏதாவது தப்பு இருக்கா " என்று அவளை கேட்டான். இதை கேட்டதும் சுகுணாவுக்கு"  நாம் நினைத்தது  சரிதான்" என்று உறுதியானாள்.

மறுநாள் காலை 11 மணிக்கு ராதா  மரகதத்தை மொபைலில் கூப்பிட்டு "என் பையன் ஓகேன்னு சொல்லிட்டான். உங்களுக்கு சம்மதமா" என்று கேட்டாள்.

அதற்கு மரகதம் "எனக்கு சம்மதம் தான். சாயங்காலம்  சுகுணா வந்ததும்  நான் கன்ஃபார்ம் பண்ணி விடுகிறேன்" என்றாள். ஆறரை மணிக்கு சுகுணா வீடு திரும்பினாள்."அவங்க ஓகே சொல்லிட்டாங்க" என்று மகிழ்ச்சியாக மரகதம் அவளிடம் கூறினாள். இதை  கேட்டு சுகுணா முகத்தில் மகிழ்ச்சியை காட்டவில்லை. அவள் அம்மாவிடம்" எனக்கு  நெருடலா இருக்கம்மா. அந்த ஆள் நிச்சயம் அம்மா பிள்ளைதான். அப்படீன்னா  வாழ்க்கை பூராவும்  கஷ்டமாயிடும்"

என்றாள் ."சும்மா இருடி.தங்கமான பையனா இருக்கான். பிக்கல் பிடுங்கல்  இல்லாத குடும்பம். அந்தப் பையன் அம்மாவை  மதிக்கறான்னா,எல்லா பெண்களையும் மதிக்கறான்னு அர்த்தம்.  நீ கல்யாணம் ஆகிப்போனதக்கப்புறம்  உனக்கும் நல்ல மதிப்பு கொடுப்பான்" என்று சொன்ன  மரகதம், எப்படியாவது இந்த  சம்பந்தத்தை விட்டு விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தாள். சுகுணா பின்பு " எனக்கு என்னவோ  அவ்வளவு இஷ்டம் இல்ல மா .வேற வழி இல்லேன்னா ஓ.கே சொல்ல வேண்டியதுதான்" என்றாள்.பத்து நிமிடம் கழித்து மரகதம் ராதாவை கூப்பிட்டு "எங்களுக்கு ஓகே தான்" என்றாள். அதன்பின் ராதா மரகதத்திடம் " அப்ப எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நல்ல முகூர்த்தமா பாருங்க" என்றாள்.அடுத்த  மாதத்தில் ஒரு முகூர்த்தம் கிடைத்தது. மரகதத்தின் தம்பி சிவசாமி கல்யாண வேலைகளை  எல்லாம் எடுத்து போட்டு கொண்டு செய்தார். சுகுணாவை தாரை வார்த்து கொடுத்ததும் அவரும் அவர் மனைவியும் தான்.ரிஷப்ஸனின் போதே  சுகுணாவுக்கு பிடிக்காத ஒரு விஷயம் நடந்தது. சுகுணாவின் ஆபீஸில் இருந்து நண்பர்களும், நண்பிகளும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு ஆதித்யாவை அறிமுகப்படுத்திவிட்டு , ஒரு போட்டோ செஷன்  வைத்துக் கொள்ள வேண்டும் என்று சுகுணா ஆசைப்பட்டாள். இதற்குள் ராதா வந்து ஆதித்யாவிடம்" உங்க சித்தப்பா ஊருக்கு போறார்டா. ஒரு நிமிஷம் வந்து பேசிவிட்டு போ" என்று அழைத்தாள். சுகுணா கூப்பிடுவதை காதில் வாங்காமல், சித்தப்பா சித்தியை பார்க்க ஆதித்யா விரைந்தது சுகுணாவுக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை."சரி. இவனை போக போகத்தான் மாற்ற வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.(தொடரும்)

No comments:

Post a Comment