#ரகோபதேஸம்தொடர்ச்சி
ரகோபதேஸம்தொடர்ச்சி_9
by பாஸ்கர் சத்யா
அரை மணிக்குள் தன் வேலைகளை முடித்துக் கொண்டு என்னிடம் வருகிறார்.
'என்ன பாஸு ஆரம்பிக்கலாமா?'
தலையசைக்கிறேன். தொடர்கிறார் வகுப்பை.
'பிரம்ம யக்ஞயத்துல கணேச வந்தனம் பார்த்தோம். பிராணாயாமம் சங்கல்பம் முடிஞ்சது. காயத்ரி மந்திரத்தையும் பிரணாயாமத்தையும் முறைப்படி பிருச்சி பிருச்சி சொன்னோம். அதுக்கப்புறம் நான்கு வேதங்களுடைய ஆரம்ப மந்திரங்களைப் பத்தி பேசினோம். ரித்விக்னா யாரு? ஹோதான்னா யாரு? அக்னியோட அவா எப்படி தொடர்புடையவா? இப்படி எல்லாம் கூட பாத்தோம். அனுதினமும் அனுஷ்டிக்க வேண்டிய பஞ்ச யக்ஞங்கள்ல மூன்று யக்ஞங்களின் தொகுப்பாக அல்லது சுருக்கமாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த பிரம்ம யக்ஞம் அப்படிங்கிறது புரிஞ்சுண்டோம் இல்லையா? இப்ப யக்யங்களுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய அக்னி தேவரையும் கடைசியாக நம் பிரார்த்தனைகள் சேர வேண்டியவரான ப்ரம்மனையும் இணைச்சு ஒரு மந்திர நமஸ்காரத்த இப்ப பாக்க போறோம். எங்கே சொல்லு ஓம் நமோ ப்ரம்ஹணே....'
அவர் ஆரம்பிக்க நான் அந்த மந்திரத்தை தொடர்கிறேன்.
'கடைசி வார்த்தையான கரோமி என்பதற்கு செய்கிறேன் அப்படின்னு பொருள். எதை செய்கிறோம்? நமஸ்காரம் செய்கிறோம். அக்னியைப் போன்ற தேவாந்தரங்களுக்கு நம: பதம் கூறப்பட்டிருப்பது, அந்த தேவர்கள் உம்முடைய விபூதியாவார்கள் என்பது இங்கு இருக்கக்கூடிய தாத்பர்யம்.'
'இந்த ஓம் நமோ ப்ரஹ்மணேன்னு தொடங்கற மந்திரத்த மூணு தடவை சொல்லணும். இந்த மந்திர நமஸ்காரமானது அவா காதுகளில் உன்னுடைய ஜபமாக ஒலிக்கணும் அப்படிங்கறத புரிஞ்சிக்கணும்.'
இதுக்கப்பறம் 'வ்ருஷ்டிரஸி வ்ருச்சமே பாப்மானம் அம்ருதாத் ஸத்யமுபாகாம் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே' அப்படின்னு சொல்லிட்டு தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கணும்.'
'பாஸு, இங்க ஒரு விசேஷத்தை பார்த்தியா? முதன்முதலில் இந்த பிரம்ம யக்ஞத்தை ஆரம்பிக்கும் போது ஜலத்தை தொட்டு கையை அலம்பிண்டு தலைக்கு ப்ரோக்ஷணம் பண்ணும் போது வித்யுதஸி அப்படின்னு ஆரம்பிக்கிறோம். கிட்டத்தட்ட பிரம்மயக்ஞத்த முடிக்கும் போது 'வ்ருஷ்டிரஸி' அப்படிங்கறோம்.
'அந்த வித்யுதஸி அப்படின்னு ஆரம்பிக்கிற மந்திரத்த சொல்லும்போது அதற்கான பொருளை சொன்னேனே ஞாபகம் இருக்கா? 'பரம்பொருளே, நீ மேகத்திடைல பிரகாசிக்கும் மின்வெட்டு போன்றவன். என்னோட பாவத்தை நீ அறிவாய். ருதமாகிய உன்னுடைய லீலா விபூதியினின்று சத்யமாகிய நித்திய விபூதியை நாடுகின்றேன்.'
'இப்ப முடிக்கும்போது 'வ்ருஷ்டி ரஸி' அப்படின்னு ஆரம்பிக்கிற மந்திரத்தை சொல்றோம். இதோட பொருள பார்த்தோமானால், 'பரம்பொருளே நீ மழையாக இருக்கிறாய். என்னுடைய பாவத்தை சேதிப்பாய் அல்லது போக்குவாய். லீலா விபூதியினின்று நித்திய விபூதியை அடைந்தவனாகிறேன்'.
'மேகம் மின்னல் கோடுகள் மழை வருவதற்கான அறிகுறிகளோடு பிரார்த்தனையை பிரம்ம யக்ஞம் ஆரம்பத்துல வெச்ச நாம மழை பெய்து பாவங்கள் தொலைந்து பரிபூரண அனுக்கிரஹம் கிடைத்த உணர்வோட முடிக்கிறோம்.'
'மந்திரங்கள்ல இருக்கிற வார்த்தைகள் அனுக்ரஹ உணர்வுகளை கொடுப்பதாக சொல்லப்பட்டிருக்கு அப்படின்னா நாம எவ்வளவு பக்தி ஸ்ரத்தையோடையும் கடமை உணர்ச்சியோடும் இந்த பிரம்ம யக்ஞத்த பண்ணியிருக்கோம் பாரு. ஏதோ எந்திரமா இவைகள சொல்லக்கூடாது பக்தி ரஸத்தோட பண்ணனும் அப்படிங்கறது ஒளிஞ்சிண்டிருக்கிற உள் அர்த்தம். இதையும் நீ புரிஞ்சுக்கணும்.'
'எப்படி நிறைவு செய்கிறோம் பிரம்ம யக்ஞத்த? தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம் கொடுத்து கடைசியாக ஆசமனம் செஞ்சு முடிக்கிறோம்.
'ஏற்கனவே சொல்லியிருக்கேன். தர்ப்பணம் என்பது நன்றி கடன் செலுத்துவது. தேவாதி தேவர்களுக்கும் நம் ஹிந்து மதத்திற்கு ஆதாரமாக இருந்து கொண்டிருக்கிற ரிஷிகளுக்கும், கடும் தபஸ்கள் மூலம் ஒலிகளை அறிந்து அவைகளுக்கு லிபிகளை கொடுத்து நாம் பகவானை அதிக சிரமம் இல்லாமல் அடைவதற்கு உண்டான பாதைகளையும் சூத்திரங்களையும் அமைத்துக் கொடுத்த ரிஷிகள் குடும்பத்திற்கு நாம காலம் காலமா நாமும் நம் சந்ததியினரும் நன்றி தெரிவிப்பது தானே முறை? அவர்கள் படைத்து நமக்கு அருளிய வேதங்களுக்கும், இதிகாசங்களுக்கும் புராணங்களுக்கும் கல்பங்களுக்கும் நம் நன்றியை சொல்லிக் கொண்டே இருக்கணும் இல்லையா? இவைகளை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் பிறப்பதற்கு சாத்தியமாகிய மூதாதையர்களுக்கும் சேர்த்து நன்றி சொல்வது தானே விசேஷம்?'
'எனவே பிரம்ம யக்ஞயத்தை விடாமல் கடைபிடித்து நாம நம்மள முன்னேத்திக்கணும்.'
'நான்கு வேதங்களையும் முழுசா சொல்வது பெரும்பாலும் சாத்தியம் இல்லாத விஷயமாக இருப்பதால் நான்கு வேதங்களின் ஆரம்ப மந்திரங்களை மட்டும் சுருக்கமா ஸிம்பாலிக்கா இந்த பிரம்ம யக்ஞத்தில் சேர்த்திருக்கா. அதேபோலவே எல்லா தேவாதி தேவர்களையும் எல்லா ரிஷிகளையும் எல்லா பிதுர்க்களையும் பெயர்கள் சொல்லி நன்றி சொல்வது சத்தியம் இல்லாத காரணத்தால முக்கியமான ரிஷிகள், குறிப்பாக வியாஸர், காண்டரிஷிகள், திவ்ய பித்ருக்களை குறிப்பாக ஸிம்பாலிக்காக சொல்லி நன்றி தெரிவிக்கிறோம் இந்த பிரம்ம யக்ஞத்துல.'
'ஏற்கனவே நான் சொன்னது போல பிதா ஜீவித்திருக்கும் போதும் பிரம்ம யக் ஞத்தில் வரக்கூடிய பித்ரு தர்ப்பணம் பித்ருமானாகிய ஸோமன், அங்கீரஸ்வான் ஆகிய எமன், கவ்யவாஹனனாகிய அக்னி முதலிய திவ்ய பித்ருக்களை உத்தேசித்து செய்ய வேண்டும்.'
'மந்த்ரத்திலேயே இது ரொம்ப கிளியரா இருக்கு பாரு.'
'ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.......'
எனக்கு இப்போது ஒரு சந்தேகம் வருகிறது.
'மாமா வியாசர் பேரு சொன்னதா சொன்னேளே. மந்திரத்துல இருக்கா என்ன?'
'ஏண்டா இல்ல? 'க்ருஷ்ண த்வைபாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்ப்பயாமி'.
'ஓ. உன் சந்தேகம் வியாசர் அப்படின்னு இல்லையேன்னு தானே? வியாசருக்கு இன்னொரு பெயர் 'க்ருஷ்ண த்வைபாயனர்'. வியாசர் பிறந்த கதை ரொம்ப விசித்திரமானது.'
'அந்த கதையை சொல்லுங்கோ மாமா.... ப்ளீஈஈஈஈஸ்.'
'சொல்றேன். ஆனா இன்னிக்கு இல்ல. இன்னொரு நாள் சாவகாசமா ... சரியா?'
சற்றே வருத்தம். 'சொல்லாம எங்க போயிடப்போறார்? சொல்லலன்னா சும்மா விட்டுடுவோமா?' இது என் மனதில் அப்போது விழுந்த ஹாஸ்யமும் நம்பிக்கையும் சேர்ந்த ஒரு எண்ணம்.
வகுப்பு நிறைவு பெற்றதாக அவர் கூற நானும் நானும் அவரை நமஸ்கரித்து விடைபெறுகிறேன்.
தொடரும்..
No comments:
Post a Comment