ரங்கு சித்தப்பா - 2
சொன்னபடி இரண்டாவது நாள் காலை ரங்கு சித்தப்பா ஆறரை மணிக்கு வந்தே விட்டார். சாதாரணமாக ஸ்ரீரங்கத்தில் ராக்போர்ட்டில் ஏறி, காலை நாலரை மணிக்கு மாம்பலத்தில் இறங்கி, ஐந்தரை மணிக்கே ராமாபுரத்தை அடைந்து, சுமதி வீட்டு கதவை பட படவென தட்டுவார். இன்று ஏனோ ஆறரை மணிக்கு தான் வந்திருக்கிறார்.
"வாங்க சித்தப்பா" என்று அவரை வரவேற்ற சுமதி "என்ன பஸ்ல வந்தேளா" என்று கேட்க " இல்லம்மா, வழக்கமா வற மாறி ராக்போர்ட்ல தான் வந்தேன்" என்றார் சித்தப்பா. " ட்ரெயின் டிலேவா" என்றாள் சுமதி. "நீ வேற ஒண்ணு. பத்து நிமிஷம் முன்னாடியே வந்துட்டான்" என்றார். "அப்ப நீங்க வழக்கமா வர மாதிரி அஞ்சரைக்கு மணிக்கு வரலையே" என்றாள் சுமதி. "எதுக்கம்மா சீக்கிரம் வந்து உங்க தூக்கத்தை கெடுப்பானேன்னு தான் ஸ்டேஷன்லே கொஞ்ச நேரம் உட்கார்ந்தூட்டு வறேன்" என்றார் சித்தப்பா. சுமதிக்கு ஆச்சரியமாக இருந்தது. இது நம்ப ரங்கு சித்தப்பா தானா என்று மறுபடியும் உற்றுப் பார்த்தாள் சுமதி.
கையில் இருந்த பையில் இருந்து திரட்டி பால் பாக்கெட், ஒரு டஜன் வாழைப்பழம், நாலு ஆப்பிளையும் எடுத்து சுமதியிடம் கொடுத்தார் சித்தப்பா. "எதுக்கு சித்தப்பா இதெல்லாம்" என்றாள் சுமதி."ரஞ்சனி பிள்ளையாண்டிருக்காஇல்லையா. அவள வெறும் கையோடு பார்த்தா நண்ணாவா இருக்கும் சொல்லு" என்றார்." காபி கலக்கறேன் சித்தப்பா" என்றாள் சுமதி. "இல்லம்மா. பரவாயில்ல, வேண்டாம். வழீல மெட்ராஸ் கேப்ல காபி சாப்டூட்டேன்" என்றார்.சுமதிக்கு நம்பவே முடியவில்லை. " அவர் குளிச்சிட்டு வந்த உடனே நீங்க குளிச்சிடுங்க.ரெண்டுபேரும் சேந்து டிபன் சாப்படலாம்" என்ற சுமதிக்கு" சரிம்மா அப்படியே செய்றேன்.ரஞ்சனி எங்கே" என்றார். "பெட்ரூம்ல இருக்கா சித்தப்பா" என்ற சுமதி
" செத்த இருங்கோ.அவள பாக்றதாயியிருந்தா அவகிட்ட நீங்களே திரட்டி பாலை கொடுத்துடுங்கோ" என்றாள்.
பெட்ரூம் கதவை தட்டி "ரஞ்சனி" என்று குரல் கொடுத்தார் ரங்கசாமி. "உள்ள வாங்கோ" என்றாள் ரஞ்சனி. சித்தப்பாவை பார்த்தபின்னர் அவள் எழுந்திருக்க யத்தனித்தபோது "வேண்டாம்மா. உக்காந்துக்கோ.எப்படி இருக்க. என்ன சொல்றது உன் குழந்தை" என்றார்.
"நான் நண்ணா இருக்கேன் சித்தப்பா.குழந்தையும் நார்மலா இருக்கறதா டாக்டர் சொல்றா" என்றாள் அவள். "எல்லாம் நல்லபடியா நடக்கும்மா" என்றவர் திரட்டி பாலை அவளிடம் கொடுத்ததுவிட்டு "சரிம்மா நான் போய் குளிச்சூட்டு வந்துடறேன்" என்றார்.
இதற்குள் குளியல் அறை காலியாக இருந்தது. குளியலறைக்கு ஹாலை கடந்து போகும் போது, எதிர்ப்புறம் வினய் வந்தான். "என்னடா வினய், எப்படி இருக்க" என்றார் ரங்கசாமி.
சித்தப்பாவை பார்த்து மனத்தில் பயம் வந்த வினய், பெயருக்கேற்ற மாதிரி மிகவும் வினயமுடன்" ஐ ஏம் ஓகே, சித்தப்பா, நீங்க சௌக்கியமா இருக்கீங்களா.ஸ்ரீரங்கம் எப்படி இருக்கு " என்று கேட்டான் ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக. 'ஸ்ரீரங்கத்துக்கு என்னடா அது பாட்டுக்கு இருக்கு "என்றவர் 'காலேஜ் எப்படி போறது" என்றார்." காலேஜ் நண்ணா போயிண்டிருக்கு சித்தப்பா. செமஸ்டர் எக்ஸாம் நடக்க போறது" என்றான். "அப்படியா அப்ப நீ போய் படிக்க ஆரம்பி" என்று சொன்னவர் பாத்ரூம் உள்ளே சென்றார்.
வினய் சமயல் அறை உள்ளே சென்று சுமதியிடம் "என்னம்மா சித்தப்பா இப்படி இருக்கா.ஏதாவது பிராப்ளமா" என்று கேட்டான்."அது தாண்டா நேக்கும் ஒண்ணும் புரியல. புயலுக்கு முன்னாடி வர அமைதி மாதிரி இல்லாம இருக்கணும்னு பகவானை வேண்டிக்கிறேன்" என்றாள் சுமதி
(தொடரும்)
No comments:
Post a Comment