Tuesday, October 17, 2023

மாற்றான் தோட்டத்து மல்லிகை -2

 மாற்றான் தோட்டத்து மல்லிகை -2

By N Krishnamurthy 

டாக்டர் சுகுமாரின் வாழ்க்கை படகு, அவருடைய நர்சிங் ஹோமில் டாக்டர் ஜாஸ்மின் வந்து சேரும் வரை, ஒழுங்காகத்தான் போய்க் கொண்டிருந்தது. 

துபாயில் டாக்டராக பணிபுரிந்து கொண்டிருந்த ஜாஸ்மின், கணவனை விட்டு பிரிந்து,சொந்த ஊர் மதுரை அருகில் இருந்ததால்,மதுரையில் சுகுமார் பணியாற்றும் அதே  நர்சிங் ஹோமில் ஒரு  வருடம் முன்பு சேர்ந்தாள்.பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக இருக்கும் டாக்டர் ஜாஸ்மின், பழகுவதற்கும் மிகவும் இனிமையாக இருந்தாள். எம். கே. டி மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ஜாஸ்மினை பார்த்து மீண்டும் ஒருமுறை "வதனமே சந்திர பிம்பமோ" என்று பாடியிருப்பார்.

டாக்டர் சுகுமார் அவளிடம் முதலில் சாதாரணமாகவே பழக தொடங்கினார். இப்படித்தான் எல்லா கூடா நட்பும் ஆரம்பிக்கின்றன.சில மாதங்களில் இருவரும் ஒருவரால் ஒருவர் ஈர்க்கப்பட்டனர்.ஏதோ முன் ஜென்மத்து பந்தம் போல இருவருக்கும் அந்தத் தொடர்பு தோன்றியது. முதலில் டாக்டர் சுகுமார்'இது தவறு.கூடது' என்று, தன்னை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தார்.அழகான மனைவியும்,இரண்டு குழந்தைகளும் இருப்பது அவருக்கு அடிக்கடி ஞாபகம் வந்த போதும், அதையும்  மீறி, அவர் ஜாஸ்மின் பால் ஈர்க்கப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக ஜாஸ்மினிடம் நெருக்கமாக பழகத் தொடங்கினார். முதலில் ஜாஸ்மினுக்கு  அவர் மீது இருந்த மரியாதை, பின்பு காதலாக மலர்ந்தது.இது தவறு என்று அவளுக்கு தெரிந்த போதிலும், அவள் மனமும், பருவமும் அவளை நிலை தடுமாற செய்தது.சுகுமார் அவளிடம் காட்டிய கூடுதல் பரிவும் இதற்கு காரணம்.

முதலில் நர்சிங்ஹோமிலே அடிக்கடி பேசிக் கொண்டிருந்த இருவரும்,  ட்யூட்டி  முடிந்தவுடன் ஜேஸ்மின் வீட்டுக்கு செல்லும் அளவுக்கு உறவு வளர்ந்தது.வெகு நாள் வரை இது நிரஞ்ஜனாவுக்கு தெரியாமலே இருந்தது.

ஒரு நாள் சுகுமாருடைய வெள்ளை கோட்டை அவள் வாஷிங் மெஷினில் எடுத்து போடும் போது, அதிலிருந்து மரிக்கொழுந்து பெர்ஃப்யூம்  வாசனை அவளை திடுக்கிட செய்தது.அவளோ,

சுகுமாரோ அவ்வளவாக அதிகம் பர்ப்யூம் பயன்படுத்துவதில்லை.

அதிலும் மரிக்கொழுந்து  பர்ப்யூம் நிச்சயம் இல்லை. இதை முதலில் ஒரு சாதாரண நிகழ்ச்சி என்று மறந்த நிரஞ்ஜனா, வெகுநாட்கள் சுகுமாரன் வீட்டிற்கு வருவது லேட்டாக வருவதை பார்த்து  அவளுக்கு பொறி தட்டியது. கல்லூரியில் அவளுக்கு ஒரு வருடம் ஜூனியராக இருந்த கமலா, டாக்டர் சுகுமார் நர்சிங் ஹோமில் பார்மசிஸ்டாக பணியாற்றிக் கொண்டிருந்தாள். கமலாவுக்கும், நிரஞ்ஜனாவுக்கும் நல்ல பழக்கம்.ஒரு நாள் கமலாவை  நிரஞ்ஜனா போனில் கூப்பிட்டு சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள். பேச்சை மெதுவாக பெர்ஃப்யூம் பக்கம் திருப்பினாள் நிரஞ்ஜனா." உனக்கு என்ன பெர்ப்யூம் பிடிக்கும். எனக்கு என்ன பிடிக்கும்" என்று எல்லாம் பேசிவிட்டு நர்சிங் ஹோமில் யாராவது மரிக்கொழுந்து பெர்ஃபார்ம் போடுகிறார்களா என்று கேட்டாள். அவள் கேள்வியின் பின்னணியை அறியாத கமலா "ஆமாம்.டாக்டர் ஜாஸ்மின் மரிக்கொழுந்து பெர்ப்யூமை உபயோகிக்கிறாள்" என்றாள் கமலா. பின்பு நிரஞ்ஜனா மெல்ல டாக்டர் ஜாஸ்மினை பற்றிய விவரங்களை கேட்டறிந்தாள்.  ஒரு முறை நர்சிங் ஹோம்  சென்று  சுகுமார் உண்மையிலே நர்சிங் ஹோமில் இரவு வரை டியூட்டியில் இருக்கிறானா  என்று பார்க்க முடிவு செய்தாள். 

ஒரு நாள் இரண்டு குழந்தைகளும் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், அவள்  கிளம்பி நர்சிங் ஹோம் எதிரில் இருந்த ஒரு பஸ் ஸ்டாப்பில்  யாரும் பார்க்காதவாறு  நின்று கொண்டாள் .

15 நிமிடத்தில் டாக்டர் சுகுமாரின் கார் வெளியே வந்தது. எதிரில் ஒரு ஸ்கூட்டர் வந்ததால், சுகுமார் காரை நிறுத்த வேண்டியதாயிற்று .

இது  நிரஞ்ஜனாவுக்கு   சௌகரியமாக போனது. சுகுமாருக்கு அடுத்த சீட்டில்  ஒரு வசீகரமான பெண் அமர்ந்திருந்தாள். இருவரும் ஈஷிக்கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தார்கள். அதுதான் ஜாஸ்மின் ஆக இருக்கும் என்று தீர்மானத்திற்கு வந்தாள் நிரஞ்ஜனா.

பின் வீடு திரும்பினாள்.

அன்று சுகுமார் வீட்டுக்கு வந்ததும் "என்ன இன்றும் லேட்டா வருகிறீர்கள்"என்று கேட்டாள். சுகுமார் "என்ன செய்வது. சீப் டாக்டர் சாயங்காலம் 4:30 மணிக்கு ஒரு ஆபரேஷன் வைத்து விட்டார் .அதை விட்டு விட்டு வர முடியவில்லை" என்று வாய் கூசாமல் பொய் சொன்னான்,இந்த பூனையும் பாலை குடிக்குமா என்று முகத்தை வைத்துக்கொண்டு.

இந்த பதிலைக் கேட்டு நிரஞ்ஜனா திடுக்கிடவில்லை. இப்படித்தான் அவன் பொய் சொல்வான் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தாள்.

இங்கு  நிரஞ்ஜனாவை பற்றி  கொஞ்சம் சொல்லியாக வேண்டும். சிறு வயதிலிருந்தே அவள் அம்மா அவளை மிகவும் கண்டிப்பாக வளர்த்திருந்தாள். அவளுக்கு நிறைய தர்ம சிந்தனைகளை ஊட்டி இருந்தாள்.  அநியாயம் செய்பவருடன் சேர்க்கை கூடாது, தவறு என்றும் முடிந்தால் அதை விலக்கி விட வேண்டும் என்றும் அவளது அம்மா  போதித்திருந்தாள். 

மறுநாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு,அவள் தனியா உட்கார்ந்து யோசித்துப் பார்த்தாள்.சுகுமாரின் புதிய நடவடிக்கையை  காண்பித்து சுலபமாக விவாகரத்து வாங்கிக் கொள்ள முடியும், ஆனால் குழந்தைகள் எதிர்காலத்தை இது  பாழாக்கிவிடும்.எனவே இதை பொறுமையாக தான் கையாள வேண்டும் என்று நினைத்தாள்.

(வழக்கமாக சொல்லும் பழமொழியைத்தான் நான் இங்கு சொல்ல வேண்டி இருக்கிறது. முள்ளின் மேல் சேலை பட்டாலும், சேலையின் மேல் முள் பட்டாலும் சேலைக்கு தானே நஷ்டம்)

கொஞ்ச நாள் கழித்து  சுகமாருக்கே  புது உறவில் சலிப்பு தோன்றிவிடும்  என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

தன் மீது சுகுமாருக்கு ப்ரியம் குறைந்து விட்டதோ என்று எண்ணி, பியூட்டி பார்லருக்கு சென்று தன்னை அழகுபடுத்திக் கொண்டாள்.சுகுமார் தினம் வீட்டுக்கு வரும் பொழுது தலையில் மல்லிகை பூச்சூடி, தன்னை திருத்தமாக வைத்துக் கொண்டாள். எத்தனை செய்தும் சுகுமார் தினமும் லேட்டாக வருவது தொடர்ந்தது. மல்லிகை மணத்தை விட மரிக்கொழுந்திற்குத்தான் எஃபெக்ட் அதிகம் போலும்.அத்தோடு இல்லாமல் அவன்  கோட்டில் மரிக்கொழுந்து வாசம் அதிகமானது. சுகுமாரை எப்படியும்  ஈர்த்து தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரம்ம பிரயத்தனும் செய்து கொண்டிருந்தாள்  நிரஞ்ஜனா. அதே சமயம் நிரஞ்சனாவை எப்படி தன் வாழ்க்கையிலிருந்து

கழட்டி  விட வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தான் சுகுமார்.

(தொடரும்)

No comments:

Post a Comment