#ரகோபதேஸம்தொடர்ச்சி
ரகோபதேஸம்தொடர்ச்சி_12
By பாஸ்கர் சத்யா
இரு தினங்களுக்குப் பிறகு இருவரும் வகுப்பிற்காக ஆயத்தமாகிறோம்.
'பாஸூ, உபநிஷதங்களையை தொடரட்டுமா, இல்லாட்டி வேற ஏதாவது ஆரம்பிக்கட்டுமா?'
'இன்னும் ஏதாவது உபநிஷத்துல தெரிஞ்சுக்க வேண்டி இருக்கா மாமா?'
'நான் தான் சொன்னேனே. உபநிஷதங்களை பத்தி பேச ஆரம்பிச்சா பேசிண்டே போகலாம். எல்லையே இல்லாம தெரிஞ்சிக்கலாம். ஆனா நீ குழந்த. ரெண்டு நாளா நான் சொல்லிக் கொடுத்த அளவே போதும். நீ பெரியவனா ஆனோன்ன உனக்கு இதே ஆர்வம் இருந்ததுன்னா நீயே தேடி தேடி படிச்சு படிச்சு தெரிஞ்சுக்கலாம். இருந்தாலும், இந்த உபநிஷத்துல இன்னும் கொஞ்சம் முக்கியமானதா சொல்லித் தரலாமோன்னு நெனைக்கறேன்.'
என்ன சொல்லி தரப் போகிறார் என்று நான் யோசிக்க ஆரம்பிக்கும் போதே அவர் வகுப்பை துவக்குகிறார்.
'போன கிளாஸ்ல உபநிஷத்துக்கள் பெயர்கள் சிலதுகளை சொல்லிண்டு வந்தேன் இல்லையா? நோக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ தைத்திரிய உபநிஷத் அப்படின்னு ஒண்ண சொன்னேன். அத பத்தி நோக்கு சொல்லித் தரலாம்னு நெனைக்கிறேன்.'
'தைத்திரிய உபநிஷத் அப்படிங்கறது யஜுர் வேதத்துல மூணு அத்தியாயங்கள் கொண்ட ஒரு வேத கால சமஸ்கிருத உரை. இது ஒரு ரொம்ப முக்கியமான உபநிஷதம். இது கிமு ஆறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்னு சொல்றா. கி.மு. கி.பி. ன்னா என்னன்னு தெரியுமோன்னோ?'
'கிறிஸ்து பிறப்பதற்கு முன் கிறிஸ்து பிறப்பதற்கு பின் ... அதானே மாமா?'
'அதே தாண்டா. அப்படி சொல்லப்படுற கிமு ஆறாம் நூற்றாண்டுல இந்த தைத்திரிய உபநிஷதம் வந்ததா சொல்றா.'
'தைத்திரிய உபநிஷதம் யஜுர்வேதத்துல தைத்திரிய பள்ளிகளுடன் தொடர்புடையது, இது முனிவர் வைசம்பாயனரின் மாணவர்களால் கூறப்பட்டது. இது உபநிஷதங்களிலேயே முக்கியமான உபநிஷதங்கள் அப்படின்னு சொல்ற ரேங்க் பட்டியல்ல ஏழாவதா இடம் பிடிச்சிருக்கு.'
'தித்திரி முனிவரோட பேர்ல 'தைத்திரிய ஷாகா' என்ற ஆரண்யக பள்ளி அல்லது கிளை மூலம் பாடம் பயின்றவைகளை உள்ளடக்கியது. ஷாகான்னா பள்ளி, கிளை இப்படி சொல்லலாம்.'. காடுகள்ல ஆஸ்ரமம் அமச்சு முனிவர்கள் தங்களோட சிஷ்யர்களுக்கு கத்துக் கொடுப்பா அந்த காலத்துல. அவைகளத்தான் ஆரண்யக பள்ளிகள்னு சொல்றா.'
'இது தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான உபநிஷத். தித்திரி முனிவர் தன்னுடைய மாணாக்கர்களுக்கு அருளிய யஜுர் வேத உபதேசங்கள் பாடங்கள் தத்துவங்கள் வேத வழிமுறைகள் இவற்றையெல்லாம் பிரதானமா இடம்பெற்றிருக்கும் உபநிஷதம்.'
'குறிப்பா ஆரண்யகத்தின் ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது அத்யாயங்கள் கொண்டவை இது. அந்த ஏழாவது எட்டாவது ஒன்பதாவது அத்தியாயங்கள் முறையே சிக்ஷாவல்லி,
ஆனந்தவல்லி மற்றும் ப்ருகுவல்லி அப்படின்னு அழைக்கப்படறது.'
இந்த உபநிஷத் "கருப்பு" யஜுர்வேதத்தின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது என்ன "கருப்பு?". சொல்றேன். 'கருப்பு' என்ற வார்த்தையானது "வெள்ளை" அதாவது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட யஜுர்வேதத்திற்கு மாறாக, யஜுர் வேதத்தில் உள்ள வசனங்களின் "ஒழுங்கமைக்கப்படாத, வண்ணமயமான தொகுப்பு" என்பதைக் குறிக்கறது.'
'இந்த உபநிஷத்தில் ஓரளவு பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள், ஓரளவு மந்திர ஒலிகள் பத்தின விவரங்கள் மற்றும் ப்ராக்சிஸ் பற்றிய அறிவுறுத்தல்கள், பண்டைய வேத குருகுல பள்ளிகள் மூலம் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கங்கள் பற்றிய ஓரளவு அறிவுரைகள், ஓரளவு உருவகம் பற்றிய கட்டுரை மற்றும் ஓரளவு தத்துவ அறிவுறுத்தல்கள் ஆகியவை இதுல இருக்கறதுதான் சிறப்பு.'
'இப்ப கொஞ்சம் ஆழமா போவோமா தெரிஞ்சுக்கறதுக்கு ... முதல்ல சிக்ஷா வல்லி பத்தி.'
சிக்ஷா வல்லி வேதத்தின் ஆறு அங்கங்களில் முதலாவதானது. எப்படி மந்த்ரத்தை உச்சரிப்பது சப்தம் எப்படி என்றெல்லாம் சொல்லித்தருகிறது.'
'வேதத்துக்கு அங்கங்கள்லாம் இருக்கா மாமா?'
'ஓஓஓஓ ... பேஷா இருக்கே. ஆனா நீ நெனைக்கற மாதிரி கை, கால், மூக்கு, வாய்னு பார்க்கற மாதிரி இருக்காது. அந்த ஆறு அங்கங்கள் என்ன தெரியுமா?'
'முதலாவது சீக்ஷா – உச்சரிப்பு முறைகளை விளக்குவது. ப்ரனன்ஸியேஷன்னு ஸ்கூல்ல நோக்கு சொல்லி கொடுத்துருப்பாளே. வார்த்தைகள எப்படி படிக்கணும் உச்சரிக்கணும்னு.'
'அடுத்த அங்கம் வியாகரணம். அதாவது இலக்கணம்.'
'அப்பறம் சந்தஸ் – செய்யுள் இலக்கணம்'
'அடுத்தாப்பல ந்ருக்தம் - சொல் இலக்கணம்'
'நெக்ஸ்ட் ஜோதிடம் அதாவது வானசாஸ்திரம்.'
'கடைசியா கல்பம். அதாவது செயல்முறை. 'கல்பம் தர்ப்பயாமி' அப்படின்னு பிரம்மயக்ஞம் பண்ணும் போது கூட சொல்வோமே. ஞாபகம் இருக்கா? இந்த மாதிரி செயல்முறைகளுக்கு கூட நன்றி தெரிவிக்கிறதுக்காக தான் இது பிரம்மயக்ஞத்துல வந்திருக்கு. கிரியைகளுக்கு ஏத்த தந்திரம், வேள்வி விளக்கம் அதாவது யாக விளக்கம், வேள்விச்சாலை அமைக்க வேண்டிய க்ஷேத்திரக் கணிதம் இதுபோல உள்ளடக்கியதைதான் கல்பம்னு சொல்றோம்.'
'க்ஷேத்திர கணிதமா!!! புரியலையே மாமா?'
'நோக்கு புரியும்படி சொல்றேன். உதாரணத்துக்கு ஒரு ஹோமம் பண்ணப்போறோம்னு நெனச்சுப்போம். ஹோம குண்டத்துக்கு இத்தன செங்கல்கள், இத்தனை தர்ப்பைகள், வடக்கு பக்கம் எத்தனை எண்ணிக்கையில் தர்ப்பைகள், கிழக்கு பக்கம் எவ்வளவு .... பிரதக்ஷிணமா ஜலத்த எந்த மந்திரம் சொல்லும்போது, அப்ரதக்ஷணமா எந்த மந்திரத்தும் போது, ஹோமத்துல போடக்கூடிய வஸ்துக்கள் தெய்வத்துக்கு ஏத்தா மாதிரி .... இப்படி ஏகப்பட்ட விஷயங்கள். இவைகளை எல்லாம் முறைப்படி செய்யணுமோன்னோ? இந்த செயல்முறைகள் தான் கல்பம்னு சொல்லுவோம். இன்னும் எளிமையான உதாரணமா சொல்லணும்னா ஆசமனம் பண்ணும் போது இப்படி கையை கோச்சுக்கணும் இப்படி தண்ணிய சாப்பிடணும் திருமாலோட நாமங்கள் ஒவ்வொன்னா சொல்லும்போது ஒவ்வொரு அங்கத்தையும் இன்னென்ன விரல்களாலதொடணும்னு ஒரு முறை இருக்கோன்னோ? இந்த மாதிரி செயல்முறை விஷயங்கள்தான் கல்பம். இப்ப புரிஞ்சுதா?'
'நன்னாவே புரியறது மாமா'
'இந்த ஆறும் தான் வேதங்களோட அங்கங்கள். சேத்து சொல்லணும்னா வேதாங்கங்கள். வேத சாஸ்திரங்கள் அப்படின்னும் புரிஞ்சிக்கலாம்.'
'அருமையா இருக்கு மாமா. இவைகள பத்தி நீங்க சொல்ல சொல்ல ரொம்ப ஆச்சர்யமாவும் இருக்கு.'
'சரி பாஸு. மீதிய நாளைக்கு சொல்லி தரட்டுமா? பஞ்சாமிய கடைத்தெருவுக்கு வர சொன்னத சுத்தமா மறந்தே போயிட்டேன். நான் உடனே கிளம்பும்படியா இருக்கு.'
அவர் அவசரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
'சரி மாமா'
நமஸ்காரம்.... அபிவாதனம் ... அவரது ஆசிர்வாதம். இவைகளை வழக்கம்போல முடித்துக் கொண்டு கிளம்புகிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment