#ரகோபதேஸம்தொடர்ச்சி
#ரகோபதேஸம்தொடர்ச்சி_4
By Bhaskar Satya
மறுநாள் அவர் சொன்ன நேரத்தில் மடத்திற்கு செல்கிறேன்.
'வாடா பாஸு. ஆரம்பிச்சுடலாமா? சமத்து. பலகைகளை ரெடி பண்ணு.'
அவர் சொன்னபடியே செய்து அவரை நமஸ்கரித்து விட்டு எனக்கான பலகையில் உட்காருகிறேன்.
'நேத்திக்கு நோக்கு நான் அக்னியப்பத்தி சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கோன்னோ? அக்னிய மூட்டி பண்ற ஸமிதாதானத்தை பிரம்மச்சாரி ஏன் பண்ணனும் அப்படிங்கறதுக்கு நேத்திக்கு நோக்கு நான் அக்னியைப் பத்தி சொன்ன விஷயங்கள் உபயோகமாக இருக்கும்னு நெனைக்கறேன்.'
'உபநயனம் முடிஞ்சு பாலக வயசுலேந்து அடுத்த கட்டம் செல்லக்கூடிய பருவம் விடலைப் பருவம். பெரும்பாலும் விளையாட்டுல மாத்ரம் ஆர்வம் அதிகமாக இருக்கும் பருவம் ஒருத்தரோட பால பருவம். இந்த பால பருவத்துக்கு அடுத்த பருவமா வற்ரது விடலைப் பருவம். நம்ம மனச பலவிதமான ஆசைகளை நோக்கி ஈர்க்கக் கூடியது இந்த பருவம். பல சமயங்கள்ல இந்தப் பருவம் நமக்கு இனம்புரியாத சந்தோஷங்களை கொடுக்கக் கூடியதாக இருந்தாலும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நமக்குள் இல்லைனா இந்த பருவம் நம் வாழ்க்கையை சீரழித்து நம்மளோட வளர்ச்சிகள தடுக்கக் கூடியதாகவும் இருந்துடும்.'
'அதுக்காக ஆசைகள தவிர்த்து சந்நியாசத்தை ஏத்துக்கணும்னு அவசியமில்லை. அந்த வகையில உன்னோட பிரார்த்தனை இருக்கணுங்கற அவசியமும் இல்லை. இன்னும் சொல்லப் போனா லௌகீக வாழ்க்கையை பக்தியோட இணச்சிண்டு வாழறதுதான் ஒசத்தி. பல தெய்வங்களோட புராணங்களை கேட்கும்போது அவாளுக்கும் லௌகீக வாழ்க்கைகள் இருந்துருக்குன்னு புரியறதே.'
'ஆசைகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்த அல்லது நம் கட்டுப்பாட்டுக்குள்ள வரணும்னா அதற்கு தெய்வ சிந்தனைகளும் பிரார்த்தனைகளும் ஒழுக்கமான சில கோட்பாடுகளும் ரொம்ப உதவியா இருக்கும்.'
'பொதுவாக விவரம் தெரியற வயசு அப்படின்னு இந்த விடலைப் பருவத்தை சொல்லுவா. மேலோட்டமாக இப்படி சொல்லலாம். ஆனா உண்மையில நாம் கிரஹிக்கும் விஷயங்களை பகவான் துணையோட ஒழுங்குபடுத்துகிற காலம் தான் இந்த விடலைப் பருவம்.'
'சரி. இந்த விடலைப்பருவம் முடிஞ்சோண்ண நம் கவனம் மேற்படிப்பு உத்யோயோகம் கல்யாணம் குழந்தை குட்டிகள் இப்படி எல்லாம் லௌகீகமா இல்லறம் சார்ந்து போகும் இல்லையா? ஒரு குடும்பம் அப்படின்னு நமக்கு உருவாகி அதுக்குண்டான கடமைகள், பொறுப்புகள் போன்ற வளையத்துக்குள்ள போகறதுக்கு முன்னாடி உள்ள இந்த விடலை பருவத்துல நாம அஸ்ரத்தையாகவும் திசை மாதிரி போயிடவும் கூடாது இல்லையா?'
'இந்த ஒழுக்க சிந்தனையையும் பிரார்த்தனையையும் மையப்படுத்தி அக்னிய முன்னிலைப்படுத்தி செய்யக்கூடிய பிரம்மச்சர்ய கர்மாவில ஒண்ணு தான் ஸமிதாதானம்.'
'இதுல ரெண்டு விஷயங்களை தெரிஞ்சுக்கணும். ஏற்கனவே சந்தியா வந்தனம் தான் பண்றோமே. அப்படின்னா எக்ஸ்ட்ராவா இது எதுக்கு? பிரார்த்தனை பண்ணத்தான் ஏகப்பட்ட ஸ்வாமிகள் இருக்கே. எதுக்கு ஸ்பெஷலா பிரத்யேகமா அக்னி தேவர பிரார்த்திக்கணும்?'
'நேத்திக்கு நோக்கு சொன்னேன் இல்லையா .. அக்னி தேவர் நமக்கும் மற்ற தெய்வங்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர். இதனால புரோகிதர்னு கூட அவர சொல்லுவான்னு சொன்னேனே. பக்தியோடு நாம செய்யற கர்மாக்களை அப்படியே ஈஸ்வரன் கிட்டக்க எடுத்துண்டு போகிறவர். அது மாத்திரம் இல்லை நம்முடைய லக்ஷியங்களுக்கு தூண்டுதலாக இருப்பவர். உதாரணமா நமக்கு ஒரு டாக்டரா போகணும் இன்ஜினியரா வரணும் பைலட்டாக போகணும் அப்படி இப்படின்னு லக்ஷியங்கள் இருக்கும். சில பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லக்ஷியங்கள் கூட இருக்கலாம் இல்லையா? இதுவாகணும் அல்லது அதுவாகணும் அது இதுன்னு யோஜிப்போம் இல்லையா அதைச் சொல்றேன். இந்த லக்ஷியங்கள் மனசுல ஜ்வாலை போல அதாவது தீப்பிழம்பாக இருந்துண்டே இருந்தாத்தான் நம்மளுடைய லட்சியத்தை நோக்கிய பயணமும் திசை மாறாமல் இருக்கும். மனசுல உள்ள ஜ்வாலை அக்னி தேவர் இரண்டையும் இப்ப சேர்த்துப் பாரு. அக்னி தேவர் தான ஆப்ட் (apt) ஆனவர் இல்லையா?'
'சந்தியா வந்தனத்துல சூரியன மையப்படுத்தறோம். ஸமிதா தானத்திலே அக்னி தேவர மையப்படுத்தறோம். சூரிய தேவர் தீப்பிழம்புகளால் இயற்கையாகவே இருப்பவர் தானே. அக்னி தேவரை சமித்துக்களை வைத்து நம் பிரார்த்தனைகளுக்காக அழச்சிண்டு வரோம். இயற்கையா நமக்கு இருக்கிற நம் குணங்களையும் நாம நம் அறிவாலையும் அனுபவங்களாலையும் வளர்த்துக்கற குணங்களையும் வெச்சுத்தான நம் வெற்றிகளுக்காகவும் சந்தோஷங்களுக்காகவும் நம் வாழ்க்கைப் பயணத்தை செலுத்தறோம்.'
'நிறைய பேர்கள் ஸமிதாதானம் அப்படின்னா ஸமித்துகள தானம் பண்றதுன்னு நெனச்சிண்டிருக்கா. ஏதோ நாலு சமித்துகள வாங்கி தானமாக கொடுத்துட்டா ஸமிதாதானம் முடிஞ்சதா தப்பா இந்த ஸமிதாதானத்தை புரிஞ்சிண்டு இருக்கா. ஆனா உண்மையான பொருள எப்படி பாக்கணும் அப்படின்னா ஸமித் ப்ளஸ் ஆதானம். இதுதான் ஸமிதாதானம். ஸமித்து நமக்கு தெரியும். ஆதானம் அப்படிங்கறதுக்கு பொருள் சேர்த்து வைப்பது அல்லது ஒன்றில் கொண்டு போய் வைப்பது. ஸமிதாதானத்துல எதைக் கொண்டுபோய் எதோடு சேர்க்கற, சொல்லு பாப்போம்.'
'ஸமித்தை அக்னியில், சரியா மாமா?'
'பிரமாதம்டா. ஸமித்துகளை ஒவ்வொண்ணா அக்னியில் சேர்க்கறதுதான் ஆதானம். இந்த நித்ய கர்மாவுக்குத்தான் ஸமிதாதானம். அதாவது ஸமித் ப்ளஸ் ஆதானம்.'
'வகுப்புக்கு கொஞ்சம் ப்ரேக் கொடுப்போம். நான் நேத்திக்கு நோக்கு சொல்லிக் கொடுத்ததையும் இப்ப சொல்லிக்கொடுத்ததையும் கொஞ்சம் ஞாபகப்படுத்திண்டிரு. அஞ்சு நிமிஷம் கழிச்சு நேரா ஸமிதாதானத்துல வரக்கூடிய முக்கியமான மந்திரங்களோட அர்த்தங்கள நோக்கு சொல்லித்தரேன்.'
இப்படி சொல்லிவிட்டு தோட்டத்து பக்கம் சென்றுவிட்டார். அவர் ஆக்ஞைப்படி நானும் அவர் சொன்னவைகளை நினைவால் அசைபோட ஆரம்பிக்கிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment