Tuesday, October 17, 2023

மாற்றான் தோட்டத்து மல்லிகை - முடிவுரை

 மாற்றான் தோட்டத்து மல்லிகை  - முடிவுரை

இந்தக் கதைக்கு ஏற்கனவே வேறு மாதிரி ஒரு முடிவைத்தான்  நான் எழுதி வைத்திருந்தேன். என் ஒரிஜினல் முடிவின்படி சுகுமாருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தது அவன் காதல் மனைவி நிரஞ்ஜனா தான்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை - 4 ல் ஒரு வியாழக்கிழமை சுகுமார் நர்சிங் ஹோமிலிருந்து வந்து 20 நிமிடம் கழித்து தான் தன்னுடைய ரூமில் இருந்து சாப்பிட வந்தான் என்று எழுதி இருந்தேன். அந்த இருபது நிமிடம் அவன் அங்கே என்ன செய்து கொண்டு இருந்தான்  என்பது அறிய நிரஞ்ஜனா ஆவலாக இருந்தாள். அவன் சாப்பிட்டதும் , அவன் அருந்தும் பாலில் ஸ்லீப்பிங் டேப்லெட் இரண்டை போட்டு விட்டாள் நிரஞ்ஜனா. அவன் நன்றாக உறங்கி விட்டான் என்று தெரிந்ததும், அவனது தனி அறைக்க சென்று, வெகு நேரம் தேடி தேடிப் பார்த்து கடைசியில் பொட்டாசியம் சயனைடு என்று ஓட்டப்பட்டிருந்த பாட்டிலை பார்த்தாள். இதுவரை அது மாதிரி ஒரு பாட்டில் அவள் அங்கு  என்றும் பார்த்ததில்லை.அதைக் கொண்டு வந்து  சுகுமார் பத்திரப்படுத்தி இருக்கிறான்  என்று அவளுக்கு புரிந்தது. அதை அவளுக்காகத்தான் கொண்டு வந்திருக்கிறான் என்றும் அவளுக்கு புரிந்தது. ஏற்கனவே ஃபார்மா படித்திருந்தால் அவளுக்கு பொட்டாசியம் சயனைட் கடும் விஷம் என்று தெரிந்திருந்தது.

உடனடியாக அதில் ஒரு சிட்டிகை எடுத்து தன் வாயில் போட்டு கொண்டு விடலாம் என்று கூட அவள் நினைத்தாள்.  அப்போதுதான் அவள் இரண்டு விஷயங்களைப் பற்றிய யோசித்தாள்.

முதலில் தான் அப்படி தற்கொலை செய்து கொண்டால், அப்பொழுது  சுகுமாருக்கு ஜாஸ்மினை திருமணம் செய்து கொள்வது மிகவும் சுலபமாகிவிடும். ஏற்கனவே ஜாஸ்மின் மோகத்தில் இருக்கும் அவன், தன்னுடைய இரு குழந்தைகளையும் சரியாக கவனித்துக் கொள்ள மாட்டான். குழந்தைகள் இரண்டும் அனாதையாக தான் இருக்க வேண்டி வரும். எனவே தற்கொலை செய்து கொள்வது தவறான முடிவு என்று தீர்மானித்தாள்.

அடுத்ததாக நான் ஏற்கனவே முன்பு ஓரு இடத்தில் கூறியிருந்தபடி, நிரஞ்ஜனாவின் அம்மா அவளிடம் படித்து, படித்து சொல்லி இருக்கிறாள்.தவறு செய்தவர்கள் நமக்கு வேண்டியவர்களாக இருந்தால் கூட அவர்களை நாம் தண்டிக்க  வேண்டும். அப்படி தண்டிக்க முடியாவிட்டால் அவர்களை விட்டு  விலக வேண்டும் . நிரஞ்ஜனாவின் அம்மா  இப்படித்தான் கணவனை விட்டு பிரிந்து இருந்தாள். நிரஞ்ஜனாவின் அப்பா ஒரு குடிகாரன். எவ்வளவு முறை சொல்லிப் பார்த்தாலும், அவன் திருந்துவதாக இல்லை. அவனை கொல்லும் அளவிற்கு அவள் தாயாருக்கு மன வலிமை இல்லை. எனவே அவனை விட்டு பிரிந்து விட்டாள். ஆனால் நிரஞ்ஜனா அப்படி இல்லை. அவள் பாரதி கண்ட புதுமைப்பெண். எனவே அவள் தவறு செய்யும்  சுகுமாரை தீர்த்துக்கட்ட கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை. மறுநாள் வெள்ளி அன்று சுகுமார் நரசிம்ஹோமுக்கு சென்ற பிறகு, நாட்டு மருந்து கடைக்கு போய் ஆமணக்கு கொட்டையை வாங்கி வந்தாள்.அந்தக் கொட்டையில் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து அதை பொடி செய்து வைத்துக் கொண்டாள். அதுதான் ரிசின்(Ricin) இன்னும் விஷம் என்று அவளுக்கு தெரியும்.(Ricin is very toxic. It works by getting inside the cells of a person's body and preventing the cells from making the proteins they need. Without the proteins, cells die. Eventually this is harmful to the whole body, and may cause death)

அவர்களுடைய திருமண நாள் அன்று அதை சுகுமார் குடிக்கும் காபியில் கலந்து விட்டிருந்தாள். அதைக் குடித்த சுகுமார் நர்சி ஹோமுக்கு சென்று அன்று முழுவதும் உடல் உபாதையை உணர்ந்தான். நிரஞ்ஜனா, அவன் குடித்த காபி கப்பை உடைத்து சாக்கடையில் எறிந்து விட்டாள்.எல்லா இடத்தையும் துடைத்து தடயம் ஏதும் இல்லாதவாறு செய்திருந்தாள்.

இதற்கு முன்னர் சுகுமார் ஐம்பது லக்ஷத்துக்கு இன்ஷுரன்ஸை எடுத்து, அதில் ஜாஸ்மினை பெனிபீஷீயராக கொடுத்திருந்ததை அவனது லேப்டாப்பை பார்த்து தெரிந்து வைத்திருந்தாள்.இது ஜாஸ்மின் சுதாகரை கொலை செய்ய வேண்டிய மோடிவ் என போலீஸ் சுலபமாக புரிந்து கொள்வார்கள் என்று அவளுக்கு தெரியும்.எனவே சுகுமார் இறந்த பின் போலீஸ் விஜாரிக்கும் பட்சத்தில், ஜாஸ்மினை கை காட்டி விடலாம் என்று பிளான் பண்ணியிருந்தாள்.

மறுநாள் அவள் கமலாவிற்குபோன் செய்து, சுகுமார் ஃப்ரியாக இருக்கிறாறா என்று கேட்டது Indirect ஆக சுகுமாருக்கு ஏதேனும் ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ளும் ஆவலால் தான்.(ஆனால் கதை முடிவை நான் மாற்றிய பிறகு கமலாவிற்கு போன் செய்து சுகுமார் ஃப்ரியாக இருக்கிறாறா என்று கேட்டது By chance ஆக சுகுமாருக்கு தங்களுடைய திருமண நாள் நினைவுக்கு வந்து அதை கொண்டாட வீட்டிற்கு கிளம்பி விட்டானா என்று தெரிந்து கொள்ளத்தான்)

நிரஞ்ஜனா தான் கொலை செய்தாள் என்பதை நம்முடைய நிறைய வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ என்ற தயக்கமும்,பயமும் எனக்குள் இருந்தது. எனவே தான் திடீரென்று இந்த பிளாட்டை மாற்றி, ஜோசப் குருவில்லா என்ற ஒரு புது பாத்திரத்தை உண்டாக்கி, அவன் சுகுமாருக்கு விஷத்தை கொடுக்கச் செய்து,அவனையே கடைசியில் இறந்து போகிற மாதிரி செய்ய வேண்டிய ஆகிவிட்டது. ஐ அம் வெரி சாரி குருவில்லா. நான் வேண்டுமென்றே உன்னை கொல்லவில்லை. என் கதைக்காக தான் உன்னை கொல்ல வேண்டி ஆகிவிட்டது.

நீ கர்த்தருடைய சாம்ராஜ்யத்தில் உறங்குவாயாக!

கதைக்கு "மாற்றான் தோட்டத்து மல்லிகை" என்று பெயர் கொடுத்ததால், டாக்டர் ஜாஸ்மின்(பெயர் பொருத்தம்) என்ற பெயரை நான் தேர்ந்தெடுக்கவில்லை.அந்த பெயர் தானகவே அமைந்துவிட்டது.

அம்புடுதே.

இந்த கதையை படிக்கும் எனது நண்பன் செய்த கமெண்ட். 

" ஏண்டா பாவி.இவ்வளவு பேரை கொலை பண்ணிட்டியேடா. " 😀

 *முற்றும்*

No comments:

Post a Comment