#ரகோபதேஸம்தொடர்ச்சி
#ரகோபதேஸம்தொடர்ச்சி_5
By பாஸ்கர் சத்யா
தோட்டத்திலிருந்து திரும்பி வந்த ஆசான், 'என்ன பாஸு, ஆரம்பிச்சுடலாமா? நான் இதுவரைக்கும் சொன்னதெல்லாம் ஞாபகப்படுத்திண்டியா?'
'ஓஓஓ. ஞாபகப்படுத்திண்டேன் மாமா. ஆரம்பிங்கோ.'
'சரி. இப்ப நீ ஸமிதாதானம் பண்ணிண்டு இல்லாம இருந்தாலும் மந்திரங்கள மறக்கலையே?''
'அப்படித்தான் நினைக்கறேன் மாமா.'
'சரி. ஸமிதாதானத்த எப்படி ஆரம்பிப்பே? ஞாபகப்படுத்தி சொல்லு பாப்போம்.'
'விராட்டியில கற்பூரம் ஏத்தி அக்னிய முடி முன்னாடி வச்சுக்கணும். கொஞ்சம் கொஞ்சமா அக்னிய விசிறியால பெரிசாக்கிண்டே வரணும் மாமா. ஸைடுல தேவையான அரசங் குச்சிகள அதாவது சமித்துகள ரெடியா வச்சுப்பேன் மாமா. அப்புறம் பிள்ளையார் குட்டு, பிராணாயாமம் ஸங்கல்பம்.'
'பேஷ் பேஷ். ஸ்மிதாதான ஸங்கல்பம் கார்த்தால சொல்றச்ச 'ப்ராதஸ் ஸ்மிதா தானம் கரிஷ்யே' அதுவே ஸாயரக்ஷையா இருந்தா 'ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே'. சரிதான.'
'எஸ் மாமா'
'அக்னிய பிரதிஷ்டை பண்ணிட்டு ஆரம்பிக்கிற மந்திரம் 'பரித்வாக்னே பரிம்ருஜாம்...'. அந்த மந்திரத்தை உன் வாயால தான் சொல்லேன். காது குளிர கேப்போம்.'
கணீர் குரலில் கைகளை கூப்பிக் கொண்டு சொல்கிறேன்.
பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேனச
ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை:
ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸுபோஷ:போஷை:
ஸுக்ருஹோ
க்ருஹை:ஸுபதி: பத்யா ஸுமேதா மேதயா ஸ¨ப்ரஹ்மா
ப்ரம்ஹசாரிபி :
இப்படி சொல்லிட்டு ப்ரார்த்தித்து மௌனமா அக்னிய பரிஷேசனம் செய்யணும் மாமா.
'பக்தி ஸ்ரத்தையோட பண்ணிண்டு வந்திருக்கேன்னு நன்னா புரியறது. மந்திரங்கள்லாம் ப்ராவாஹமா இருக்கு. இப்ப சொன்னியே அதுக்கு அர்த்தம் தெரியுமா?'
உதட்டை பிதுக்குகிறேன்.
'சரி சொல்றேன் கேட்டுக்கோ.'
'அக்னியே உன்னைச் சுற்றிலும் உள்ள இடத்தை சுத்தமாக்கி பூஜிக்கிறேன். நாளடைவில் உன் ஆராதனையால் ஆயுளும் செல்வமும் கூடியவனாய் மக்கட்பேறு பெற்றவனாகவும் வீரர்களால் நல்ல வீரர்களாகவும் ஞான ஒளியால் ஒளி பொருந்தியவனாகவும் போஷனத்தால் புஷ்டி உள்ளவனாகவும் வீடுகளால் நல்ல வீடு உடையவனாகவும் எஜமானனால் நல்ல எஜமானனை அடைந்தவன் ஆகவும் புத்தியால் நல்ல புத்தியுள்ளவனாகவும் பிரம்மச்சாரிகளால் வேதத்துடன் கூடியவனாகவும் நான் ஆகவேண்டும்.'
'மனுஷனுடைய வாழ்க்கைல நன்னா வரணும்னா அவனுக்கு ஆயுள் வேணும் செல்வம் வேணும் நல்ல மக்கள்பேறு வேணும் நல்ல வீரனா இருக்கணும் ஞானம் பிறந்து தேவனா இருக்கணும் ஆரோக்கியமா இருக்கணும் நல்ல வீடு உடையவனாய் இருக்கணும் நல்ல புத்தி உள்ளவனா இருக்கணும் வேதத்தோடு இருக்கணும். இப்படி எல்லாம் இருந்துட்டா அவனுக்கு வெற்றிகள் கெடச்சிண்டே இருக்குமே. இந்தப் பிரார்த்தனையத் தான் அக்னி கிட்ட முன்வைக்கிறோம் ஸமிதாதானத்துல.'
'பிரார்த்தனை அப்படின்னனாலே எந்திரமா இல்லாம உணர்வு பூர்வமா பக்தி ஸ்ரத்தையா அக்னி மனசுக்குள்ள இருக்கறதா bபாவனையோட பண்ணனும்னு அர்த்தம்.'
'சரி இப்ப அடுத்தது என்ன பண்ணுவன்னு சொல்லு பாப்போம்.'
'ஒவ்வொரு சமித்தா மந்திரம் சொல்லி ஸ்வாஹா ஸ்வாஹான்னு அக்னியில் வைப்பேன் மாமா.'
'பேஷ். அடுத்தாப்புல வர மந்திரங்களை சொல்லு பாப்போம்.'
அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே
யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸாஸன்யா
மேதயா ப்ரஜயா பசுபி:ப்ரஹ்ம வர்ச்சஸேன அன்னாத்யேந ஸமேதய ஸ்வாஹா
2. ஏதோஸி ஏதிஷிமஹி ஸ்வாஹா
3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
4. தேஜோஸி தேஜோமயி தேஹி ஸ்வாஹா
5. அபோ அத்ய அன்வசாரிஷம் ரஸேன ஸமஸ்ருக்ஷ்மஹி
பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா
6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜப்ரஜயாச தநேநச ஸ்வாஹா
7. வித்யுன்மே அஸ்ய தேவா:இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா
8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா
9. த்யாவா ப்ருதிவீப்யாம் ஸ்வாஹா
10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்த்தஸ்வச ஆப்யாயஸ்வச
தயாஹம் வர்தமானோ பூயஸாம் ஆப்யாயமாநஸ்ச ஸ்வாஹா
11. யோமாக்னே பாகினம் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி
அபாகமக்னே தம் குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா
12. ஸமிதம் ஆதாயாக்னே ஸர்வ வ்ரதோ பூயாஸம் ஸ்வாஹா
திரும்ப ஒரு தடவை அக்னிய பரிசேஷணம் பண்ணிட்டு எழுந்து நிண்ணுண்டு கை கூப்பிண்டு
13. ஸ்வாஹா ன்னு சொல்லி ஸமித்தைச் சேர்க்கணும்.
'ஆஹா ஆஹா ... பாஸு, நீ கெட்டிக்காரண்டா. ஒண்ணு ரெண்டுன்னு சொல்லிண்டே ஒண்ணு விடாம ....'
'எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்தது தானே மாமா?'
'இருந்தாலும் ... நீ எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிண்டு சொல்றது தானே விசேஷம்?'
'இப்ப இதற்கான அர்த்தங்களை பார்ப்போமா?'
'முதல் ஸ்டான்ஸா இப்போ.'
'ஜாதவேதஸ் என்று பெயர் பெற்ற பெரிய அக்னி தேவனுக்கு ஸமித்தை கொண்டு வந்துள்ளேன். அக்னியே நீ எப்படி ஸமித்தால் ஓங்கி வளர்ந்து பிரகாசிக்கின்றாயோ அவ்வாறே என்னையும் ஆயுளாலும் சக்தியாலும் லாபத்தாலும் புத்தியாலும் மக்களாலும் பசுக்களாலும் பிரம்ம தேஜஸாலும் உணவு முதலியவற்றாலும் ஓங்கி வளர்ந்து பிரகாசிக்க செய்வாயாக. இந்த ஆஹுதி உனக்கு திருப்தி அளிக்கட்டும்.'
'இப்ப அடுத்து அடுத்து வரக்கூடிய 'ஸ்வாஹா' மந்திரங்கள்.'
'நீ வளர்கின்றாய். நாங்களும் வளர்ச்சியுற வேண்டும்.'
'நீ நன்கு பிரகாசிக்கின்றாய். நாங்களும் நன்கு பிரகாசிக்க வேண்டும்.'
'நீ வீரிய வடிவினனாகின்றாய். எனக்கும் வீரியத்தை அளிப்பாய்.'
'இந்த கர்மாவால் இன்று உன்னை வந்தனம் செய்கிறேன். என்னை ரஸத்துடன் கூட்டி வைப்பாய். ஞானப்பாலை உடையவனாய் நான் உன்னை வந்தடைகின்றேன். அக்னியே அப்படிப்பட்ட என்னை பிரம்ம வர்ச்சஸுடன் கூட்டி வைப்பாயாக.'
'அக்னியே. என்னை ஞான ஒளியுடனும் மக்களுடனும் செல்வத்துடனும் கூட்டி வைத்தருள்வாயாக.'
'இவ்வாறாக ஹோமம் செய்யும் என்னை தேவர்கள் அறிந்து கடாக்ஷிக்க வேண்டும். ரிஷிகளுடன் இந்திரனும் அறிந்து என்னை கடாக்ஷிக்க வேண்டும். நீ அவர்களிடத்தில் என்னை பற்றி எடுத்துரைக்க வேண்டும் அப்படிங்கிற விண்ணப்பம் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் இந்த ஸ்டான்ஸாவுல.'
'வானுலகில் வளரும் பெருமைமிக்க அக்னிக்கு ஹோமம் செய்கிறேன்.'
'வானுலகும் பூவுலகுக்கும் ஹோமம் செய்கிறேன்.'
'அக்னியே உனக்கு இந்த சமித்தை அளிக்கின்றேன். இதனால் நீ வளர்ந்து பரிபூர்ணனாக வேண்டும். அதனால் நானும் வளர்ந்து பரிபூர்ணனாக கடவேன்.'
'பாக்யவானான என்னை எவன் பொறாமையால் அபாக்கியவனாக செய்ய கருதுகிறானோ அவனை அபாக்யவனாக்கு. என்னை பாக்யவனாகவே இருக்க செய்தருள்வாயாக.'
'அக்னியே இந்த ஸமிதா தானத்தால் எல்லா விரதங்களையும் நன்கு அனுஷ்டித்த வனாக நான் ஆகும்படி அருள்வாயாக.'
மௌனமாக அக்னியை நாற்புறமும் சுற்றி பரிசேஷனம் செய்க. அதன் பிறகு ஸ்வாஹான்னு சொல்லி ஒரு சமித்தை முடிவில் ஒரு ஸமித்தை அக்னியில வைக்கணும்.'
'அவ்வளவுதாண்டா. அர்த்தங்கள நன்னா க்ரஹிச்சிண்டையா? ஆரம்பத்துல அக்னி கிட்ட பிரார்த்திச்சிண்டத ஒவ்வொரு ஆஹூதியா பண்றோம். நயத்துக்காக வார்த்தைகள நன்னா ஜோரா போட்டிருக்கா.'
இதுக்கப்பறம் அக்னி உபஸ்தான மந்திரங்களும் ரக்ஷை மந்திரங்களும் தான். அவைகள நாளைக்கு சொல்லித்தரேன். ஒரேடியா மண்டைக்குள்ள எல்லாம் போயிடக் கூடாதோன்னோ? அப்பறம் மண்டை வலிக்குமோன்னோ?'
அவர் இப்படி சொல்லி வகுப்பை முடித்தது சிரிப்பலைகளை இருவரிடமும் ஏற்படுத்தியது.
'ரக்ஷை மந்திரம் நீங்க சொல்றது அக்னிலேந்து இருந்து சாம்பலை எடுத்து உடம்புல பல இடங்கள்ல இட்டுப்போமே அதானே மாமா?'
'அதே தாண்டா. நாளைக்கு விவரமா சொல்லித்தரேன்.'
வழக்கம்போல அவருக்கு நமஸ்கார நன்றிகளை சமர்ப்பித்துவிட்டு கிளம்புகிறேன்.
தொடரும்...
No comments:
Post a Comment