#ரகோபதேஸம்தொடர்ச்சி
ரகோபதேஸம்தொடர்ச்சி_14
By பாஸ்கர் சத்யா
வேதங்களின் வகைகள் பற்றி அவர் அன்று சொல்லிக் கொடுத்த பாடம் என் மனதை ஆக்ரமித்துக் கொண்டே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அவர் சுருக்கமாக நான்கு வேதங்களை பற்றி சொன்னதிலிருந்து எனக்கு அவைகளைப் பற்றி மேலும் மேலும் அறிய ஆவல் இருந்து கொண்டே இருந்தது.
நான்கு வகை வேதங்கள், நான்கு பாகங்கள், ஆறு வகை வேதாங்கங்கள், ரிக் வேதத்தில் இருக்கும் உண்மை உழைப்பு பற்றிய சாராம்சங்கள், உபநிஷத்துக்கள் பற்றிய புரிதல் ... இப்படி அவர் சொல்லிக் கொடுத்த ஒவ்வொன்றும் என் மனதை அவைகளோடு அசை போட வைத்துக் கொண்டே இருந்தன.
'நான் யஜுர் வேதக்காரன். ஆனா யஜுர் வேதத்தை பத்தி லைட்டா சொல்லிட்டு போயிட்டாரே. அவரை விடக் கூடாது. என்னோட யஜுர் வேதம். அத பத்தியும் தெரிஞ்சுக்க வேண்டாமா? நாளைக்கு கிளாஸ்ல அவர் கிட்ட என்னோட முதல் கேள்வியே யஜுர் வேதத்தை பத்தி தான் இருக்கணும்.'
இப்படிக் கூட மனதோடு அவரிடம் உரிமையோடு சம்பாஷித்துக் கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆர்வம் ஒருவர் மனதை அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்ததால் தேடுதல்களும் முயற்சிகளும் அடிபணிந்து தானே போக வேண்டும்?
'மாமாஆஆஆஆஆஆ .... வந்துட்டேன்.'
பாண்டுரங்க மடத்துக்குள் மறுதினம் இப்படி உரக்க சொல்லிக் கொண்டே தான் நுழைந்தேன்.
'எதேது ... என்னிக்கு இல்லாத திருநாளா சத்தத்தோட வரயே? என்ன ஆச்சு நோக்கு இன்னிக்கு?'
'நீங்க என்ன பண்றேள். நேத்திக்கு ரிக் வேதம் பத்தி சொல்லிக் கொடுத்த மாதிரி யஜுர் வேதத்தை பத்தியும் சொல்லித் தரணும். ஏன்னா அது என்னோட வேதம்?'
அப்பாவித்தனமான கட்டளை என்னிடம் இருந்து அவருக்கு. சிரிக்கிறார்.
'உன்னோட வேதமா யஜுர் வேதம்? நீ எழுதினதாக்கும்?'
'போங்கோ மாமா. விளையாடாதீங்கோ. நீங்கதான சொன்னேள் நான் யஜுர் வேதத்துக்கு கீழ வரேன்னு. அத பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?'
'என்னடா கட்டளை அதிகாரம் எல்லாம் பலமா இருக்கு?'
'ரெண்டு மூணு நாளா நீங்க எடுத்த வகுப்புகள் மனசு பூரா சுத்திண்டே இருக்கு மாமா. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு மனசு சொல்லிண்டே இருக்கு.'
'ஓஓஓஓ. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணுமாக்கும்? நோக்கு ஒண்ணு தெரியுமா? தெரிஞ்சுண்டு என்ன செய்யப்போறதா உத்தேசம்? சமஸ்கிருதத்துல ஒரு வாக்கியம் இருக்கு.
"அனந்தா வை வேதா:”
வேதங்கள் எண்ணற்றவை. அதை கணக்கிடவே முடியாது. அதனாலதான் ரிஷிகள் கொஞ்சமாத்தான் நமக்கு பிடித்துக் கொடுத்திருக்கா.
நம்முடைய இஹ, பர நலனுக்கும் லோக க்ஷேமத்துக்கும் இதுவே போதுங்கற அளவுக்குத்தான் வேத மந்திரங்களே இருக்கு வெளிவராத வேத மந்திரங்களும் ஏகப்பட்டது இருந்தாலும். எல்லாத்தையும் நாம தெரிஞ்சுண்டு பிரம்மா மாதிரி பிரபஞ்சங்களை சிருஷ்டிக்கவா போறோம்? சிருஷ்டியாகிவிட்ட இந்த லோகத்துல நன்னா இருக்கணும் லோகத்தையும் நம்மளால முடிஞ்ச அளவு நன்னா வெச்சுக்கணுங்கற அளவுக்கு நமக்கு வேதங்கள் தெரிந்தாலே போதாதா?.'
'அதெல்லாம் எனக்கு தெரியாது மாமா. நேத்திக்கு ரிக் வேதத்த பத்தி சொன்ன அளவாவது யஜுர் வேதம் பத்தி சொல்லிக் கொடுக்கணும் மாமா. ப்ளீஸ்.'
'விடமாட்ட போல இருக்கே? சரி, ஆரம்பிக்கறேன்.'
முகத்தில் மலர்ச்சி. ஆசனங்கள் தயாராகின்றன. நமஸ்காரங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவருடைய ஆசிகள் பெறப்படுகின்றன. காதுகள் கூர்மையாகின்றன. முதுகு நேராகிறது.
ஆற்றில் நீராடுவதற்கு முன் தண்ணீரில் வைக்கும் முதல் பாதம் ஏற்படுத்தும் குளிர்ச்சி மாதிரி மனம் கூலாகிறது.
'நேத்திக்கு ரிக் என்ற வார்த்தைக்கு வழிபடுதல் அப்படின்னு சொன்னேனா? அப்ப யஜுர் வேதத்தில் வழிபாடு கிடையாதுன்னு அர்த்தம் பண்ணிக்க கூடாது. பொதுவாகவே எல்லா வேதங்களிலுமே வழிபாடுகள் தான் பிரதானம். அப்ப யஜுர் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?'
'யஜ்’ – வழிபடுவது என்கிற தாதுவிலிருந்து யஜுஸ், யக்ஞம் என்ற ரெண்டும் வந்துருக்கு. ‘ரிக்’ என்றாலே எப்படி ஸ்தோத்திரம் என்று அர்த்தமோ, அதே மாதிரி ‘யஜுஸ்’ என்றாலே யக்ஞ ஸம்பந்தமான வழிபாட்டுக் காரியக்ரமத்தை விவரிப்பது என்று அர்த்தம். இதற்கு ஏத்தாப்போலத் தான் ரிக்வேதத்திலுள்ள ஸ்துதி ரூபமான மந்திரங்களை யக்ஞம் அதாவது ஹோமம் யாகம் என்கிற காரியத்தில் பொருத்திக் கொடுப்பதே அதாவது இங்லீஷுல சொல்லுவாளே ப்ராக்டிகல் அப்ளிகேஷன்னு. இதுதான் யஜுர்வேதத்தின் முக்கியமான லக்ஷியம் லக்ஷணம். ரிக்வேதத்தில் இருக்கற பல மந்திரங்கள் இதிலேயும் இருக்கு. அதோடு கூட உரை நடையில் யக்ஞம் முதலான வேத கர்மாநுஷ்டானங்களைச் சொல்கிறது. வாயால் ஸ்தோத்திரம் செய்ய ரிக் வேதம் உபகரிக்கிறது. காரியத்தில் வழிபாடு பண்ண யஜுர்வேதம் முக்கியமாக உபகாரம் செய்கிறது.'
'ஒவ்வொரு வேதத்திலும் பல சாகைகள் இருக்கிற மாதிரி மட்டும் இல்லாமல், யஜுர் வேதம் தனக்குள்ளேயே நிரம்ப மாறுபாடுகள் உள்ள இரண்டு தனி வேதங்களாகவே பிரிக்கப்பட்டிருக்கு. இந்தப் பிரிவுகளுக்கு சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என்று பெயர். ‘சுக்லம்’ என்றால் வெளுப்பு. கிருஷ்ணன் என்றால் கருப்பு. நேத்திக்கு கூட கருப்பு வெள்ளை அப்படின்னு சொல்லி கொடுத்தேனே? ஞாபகம் இரூக்கா?'
சுக்ல யஜுர் வேத ஸம்ஹிதைக்கு “வாஜஸநேயி ஸம்ஹிதா” என்றும் பெயருண்டு. “வாஜஸநி” என்பது சூரியனோட பெயர். சூரியனிடமிருந்தே யாக்ஞவல்கிய ரிஷி இந்த ஸம்ஹிதையை உபதேசிக்கப் பெற்று, லோகத்துக்குக் கொண்டு வந்ததால், இதற்கு வாஜஸநேயி ஸம்ஹிதா என்று பேர் ஏற்பட்டது. இதைப்பற்றி ஒரு பெரிய கதை உண்டு.'
கதை என்றவுடன் என் முகத்தில் சட்டென்று ஒரு மகிழ்ச்சி. 'அய்யா ... கதை வரப்போகறது' மனசு கதையை கவனிக்க ஆர்வம் பெருகிறது.
சுருக்கமா கதைய சொல்றேன் கேட்டுக்கோ.'
'யாக்ஞவல்கியருக்கு முன்னால் யஜுர் வேதம் ஒன்றாகத்தான் லோகத்துல இருந்தது. அந்த யஜுர் வேதத்தை வைசம்பாயனரிடமிருந்து யாக்ஞவல்கியர் கற்றுக்கொண்டார். அப்புறம் வைசம்பாயனருக்கும் யாக்ஞவல்கியருக்கும் மனஸ்தாபம் உண்டான போது, குருவானவர் சிஷ்யரிடம், “நான் கற்றுக் கொடுத்ததை எல்லாம் திரும்பக் கக்கி விடு” என்றார். அவர் சொல்வது நியாயம்தான் என்று அப்படியே யாக்ஞவல்கியர் கக்கிவிட்டு, சூரியனை குருவாக ஏற்றுக்கொண்டு சரணாகதி செய்தார். அனந்தமான வேதங்களில் அதுவரை லோகத்துக்கு வராதிருந்த இன்னொரு வித யஜுர் வேதத்தை சூரிய பகவான் அவருக்கு உபதேசித்தார். அது வாஜஸநேயி என்றும், சுக்ல யஜுஸ் என்றும் பேர் அடைந்தது. இது ‘சுக்லம்’ என்பதால், ஏற்கெனவே வைசம்பாயனர் உபதேசித்தது, இதற்கு மாறாக ‘கிருஷ்ண’ யஜுர்வேதம் என்று பெயர் பெற்றது.'
'அத்தனை தேவதைகளுக்குமான ஸ்தோத்திர மயமாக இருப்பது ரிக்வேதத்தோட பெருமை. அதோடு சமூக வாழ்க்கை முறைகளையும் ரிக் வேதம் நன்னா எடுத்துச் சொல்றது. நேத்திக்கு கூட உண்மை உழைப்பை பத்தி ரிக் வேதம் சொல்ற சில சாராம்சங்களை சொன்னேன் இல்லையா? விவாஹ சடங்குகளுக்கு கூட ரிக் வேதம் தான் ஆதாரம். யஜுர் வேதத்தில் உள்ள கர்மா, ஸாம வேதத்தில் பண்ணப்பட வேண்டிய ஸாம கானம் இவைகளுக்கு கூட தாய்ச் சரக்கு ரிக்வேத ரிக்குகள்தான்.
கர்மயோகத்தை நன்னா அமச்சு கொடுத்திருப்பது யஜுர் வேதத்தோட பெருமை. அது மாத்ரம் இல்ல. ரிக் வேதத்துல இல்லாத சில உயர்ந்த ஸ்தோத்திர பூர்வமான மந்திரங்களும் யஜூர் வேதத்துல இருக்கு. உதாரணமா, இப்ப பெரும்பாலும் வழக்கில் சொல்லப்படும் ஸ்ரீருத்ரம் யஜுர் வேதத்திலிருந்து எடுத்ததுதான். ரிக் வேதமும் பஞ்சருத்ரம் என்று ஐந்து ஸூக்தங்களை கொடுத்திருந்தாலும், இன்று ‘ஸ்ரீருத்ரம்’ என்ற மாத்திரத்தில் யஜுர் வேதத்தில் வருவதைத்தான் எல்லாரும் எடுத்துக்கறா.'
'இன்னிக்கு அதிகம் பேர் அநுஸரிப்பது யஜுர் வேதத்தைத்தான். யஜுர் வேதிகள் தான் மெஜாரிட்டி. வடக்கே இருப்பவர்களில் பெரும்பாலோர் சுக்ல யஜுர் வேதிகளாகவும், தெற்கத்திக்காரர்களில் பெரும்பாலோர் கிருஷ்ண யஜுர் வேதிகளாகவும் இருக்கா. ஸ்கூலுக்கு லீவு விடறது யஜூர் வேத ஆவணி அவிட்டத்துக்குத் தான இல்லையா? அப்ப மெஜாரிடி நாமதான் பாத்துக்கோ'
'எந்த ஸித்தாந்தமானாலும் உதாரணமா த்வைதம், அத்வைதம், அதற்கு ஸூத்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்ற மூன்று இருக்கணுங்கறதை வித்வான்கள் சொல்வார்கள். ஸூத்ரம் என்பது ஸித்தாந்ததத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்வது. பாஷ்யம் என்பது அதற்கு விரிவுரை. இந்த விரிவுரையையும் ஸாங்கோபாங்கமாக விஸ்தரித்து விளக்குவதுதான் வார்த்திகம். வார்த்திகக்காரான்னு அவாள பெருமையா கூறப்படறது கூட வழக்கம் பாத்துக்கோ.'
'யஜுர் வேதத்த பத்தி தெரிந்தது போதுமா இன்னும் வேணுமா?'
'நோ நோ நோ. பத்தாது பத்தவே பத்தாது. நேத்திக்கு நீங்க ரிக் வேதத்துல உழைப்பை பத்தியும் உண்மையைப் பத்தியும் சொல்லி இருக்கிற சாராம்சங்களை சொன்னேளேன்னோ? அது மாதிரி யஜுர் வேதத்துல் இருக்கிறத சொல்லுங்கோ மாமா.'
'சாராம்சங்கள் அப்படின்னு சொல்றத விட உபதேசங்கள் அப்படின்னு சொல்றது தான் சரி. நேத்திக்கு நானே தவறுதலா சாராம்சங்கள்னு சொல்லிட்டேன். அது உன் மனசுல விழுந்துட்டுதுன்னு நெனைக்கிறேன். பரவால்ல இனிமே ரெண்டு பேருமே திருத்திப்போம்.'
'பிரார்த்தனை மந்திர உபதேசங்கள சித்த பாப்போம்.'
'கார்ய நிர்வாஹ சக்தியும், பலமும் எனக்கு உண்டாகட்டும்.'
'யஜ்ஞம் செய்வபவன் மனித இனத்தில் ஒளிமிக்கவனாய் பிரகாசிக்கறான்.'
'பெரிய விண்ணுலகும், பூவலகும் எங்கள் இந்த யஜ்ஞத்தைப் பயனுள்ளதாகச் செய்யட்டும்!'
'ஓ அக்னியே! யோக க்ஷேமம் நன்கு அமையப் பெற்று, தன தான்யங்களால் நாங்கள் மகிழ்ச்சி பெறுவோமாக!'
'அறிவுடையோர், ஜலமும், சூர்யனும் சந்திக்குமிடத்தில் தியானத்தின் மூலமாக ஆத்ம தத்வம் பெறுகிறார்.'
'இந்த உடலாகிய தேரானது புத்தி, ப்ராணன், அபானன் என்பவற்றால் சுமந்து செல்லப்படுகிறது.'
'ஜ்ஞானி எல்லா பிராணிகளிடத்தும் பரமாத்மாவைகாண்கிறான்; அதனால் அவனுக்கு எதிலும் சந்தேகமில்லை.'
'எவர் பரம் பொருளை அறிந்து வைத்துள்ளனரோ அவருக்கு தேவர் வசப்படுகின்றனர்.'
'ஒன்றே தான் என்ற உண்மை அறிந்த பின் மோஹமேது, துக்கமேது? இது அத்வைத சித்தாந்தத்தின் உபதேசம்.'
'எனக்கு விவசாயம் மூலமான உணவும், நல்ல மழையும் கிடைப்பதாக!'
'பெண்கள் தம்பதியினர் தாம்பத்ய வாழ்க்கை இவைகளை பத்தியும் நிறைய உபதேசங்கள யஜுர் வேதம் சொல்லியிருக்கு.'
'ஓ பெண்ணே! உறுதியான எண்ணங்களுடன் முன்னேறுவாயாக'
'மனைவி நற்செயல்களை பாதுகாக்கிறாள்!'
'மனைவி அமைதியாக இருந்து குடும்பத்தை தாங்குவாயாக!'
'தம்பதியர் அன்பு கணிந்தவராய், ஓளிமிக்கவராய் நல்லெண்ணம் கொண்டவராய் இருக்கக்கடவது!'
'மற்றவரின் விருப்பம்போல் இசைந்திருக்கிற தம்பதிகள் பெரும் செல்வம் பெறுவர்'
'எங்கெங்கே நமக்கு குறைவு நேருமோ அங்கெல்லாம் அச்சமின்மையை அளித்திடிவீர். தைர்யலக்ஷ்மி மாத்ரம் பக்கத்துல இருந்துட்டா மனுஷா எதுக்கும் கவலைப்பட வேண்டாம் இல்லையா?'
'நாம் நன்மை பயக்கும் திவ்ய ஞானத்தை எங்கள் விருப்பம் நிறைவேற பிரார்த்திக்கிறோம்.'
'மனிதனை நல்ல செய்தியைச் சொல்லவே கடவுள் அனுப்பியுள்ளார்.'
'பசுவதை செய்யாதே; ஏனெனில், பசு அதிதி தேவதை, எங்கும் வியாபித்தது.'
'நெய், பால் இவற்றை கொடுக்கும் பசுவை துன்புறுத்தாதே!'
'ரொம்ப ரொம்ப குறைந்த எண்ணிக்கையில தான் சொல்லி இருக்கேன். நீதான் இங்க வந்துண்டு போயிண்டு இருக்கியே. அப்பைக்கப்ப யஜுர் வேதத்துல சொல்லப்பட்ட நிறைய உபதேசங்கள சொல்றேன்.'
'சரிடா, யாராவது ரொம்ப நாழி உபதேசம் பண்ணினா பிடிக்காதோன்னோ. இதோட இன்னிக்கு நிறுத்திப்போம்.'
'நாளைக்கு சாம வேதம் பத்தி தான மாமா?'
'பகவத் ஸங்கல்பத்துல சொன்னா போச்சு.'
'தேங்க்ஸ் மாமா.'
'எதுக்கு?'
'நான் கேட்டேங்கறதுக்காக இவ்வளவு சொல்லிக் கொடுத்தேளே. அதுக்காகத்தான் தேங்க்ஸ்.'
'சமத்து.'
தன் அருகில் என்னை அழைக்கிறார். சிரசையும் என் கன்னங்களையும் தடவி விட்டு தன் நெத்தியில் சொடக்கு போட்டு திருஷ்டி எடுக்கிறார்.
என் நமஸ்காரத்தையும் அபிவாதனத்தையும் ஏற்றுக்கொண்டு ஆசி அருளுகிறார்.
தொடரும்