போவோமா பொன்னுலகம் :
# 03 - உமன்காட் (UMNGOT) ஆறு, மேகாலயா
மேகாலயா மாநிலத்தில் இருக்கும் Umngot என்று அழைக்கப்படும் ஏரி இருக்கும் டாக்கி (Dawki) நகரப் பகுதி! இந்த ஆறும், ஆற்றின் நீரும் அவ்வளவு சுத்தம் - மேலே இருந்து பார்க்க ஆற்றுப்படுக்கை தெரியும் அளவிற்கு அவ்வளவு தெளிந்த நீர் கொண்ட ஆறு.
நம் நாட்டில் நிரந்தரமாக கழிவுகள் கலந்து, கழிவு நீராக மாறிவிட்ட பல ஆறுகள் / நதிகள் இருக்கும் நிலை கண்டு வேதனை தான் அடைய முடியும். மனிதர்களின் பேராசையும் / பொறுப்பற்ற தன்மையும்தான் அந்த ஆறுகள் இவ்வாறு மாறக் காரணம்.
நல்ல வேளையாக மேகலாயாவில் இருக்கும் இந்த ஆறு இன்னமும் இயற்கை வடித்த அழகிலேயே இன்னமும் இருக்கிறது.
Khasia மற்றும் Jaintia மலைத் தொடர்களுக்கு இடையில் இருக்கும் இந்த ஆறானது இந்தியாவில் தொடங்கி பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்றடைகிறது. இந்த ஆறும் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு எல்லையாகவும் இருக்கிறது. பளிங்கு போன்ற நீர் கொண்ட இந்த ஆற்றில் ஒரு படகுப் பயணம் சென்றால் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், அப்படி ஒரு பயணமும் உங்களால் செய்ய முடியும். நான்கு முதல் ஐந்து பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் நீண்ட கட்டுமரங்கள் போன்ற படகுகளில் இந்த ஆற்றின் எழிலை ரசித்தபடியே நீங்கள் பயணிக்க முடியும். ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு இரும்புப் பாலமும் இருக்கிறது - ஆற்றைக் கடந்தால் பங்களாதேஷ் சென்றுவிடலாம்!
எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அங்கே நிறைய இருக்கிறார்கள்.
படகுப் பயணத்தின் போது உங்களை அவர்கள் ஆற்றின் நடுவே இருக்கும் ஒரு தீவுக்கும் அழைத்துச் செல்வார்கள் - அங்கே நீங்கள் இந்தச் சுத்தமான தண்ணீரில் குளிக்கவும் முடியும். அங்கே சென்று வந்த நண்பர்கள் இந்தப் பகுதியில் மிகவும் சந்தோஷமாக இருந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சுத்தமான தண்ணீரை விட்டு வெளியே வரவே மனமிருக்காது
மேகாலயா சென்று வர நீங்கள் திட்டமிடலாம். சென்னையிலிருந்து கௌஹாத்தி வரை விமானத்திலும், அதன் பிறகு சாலை வழியேயும் மேகாலயா சென்று வரலாம். கௌஹாத்தி நகரிலிருந்து ஷில்லாங் வழி டாக்கி வரை சுமார் 175 கிலோமீட்டர் தொலைவு. ஷில்லாங் நகரிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர். தேசிய நெடுஞ்சாலை எண் 6 மற்றும் 206 வழி பயணித்து இங்கே அடைய முடியும்.
Dawki பகுதியில் ஒன்றிரண்டு தங்குமிடங்கள் உண்டு. ஷில்லாங் (82 கிமீ), (எப்போதும் மழை பொழியும்) சிரபுஞ்சி (85 கிமீ) பகுதிகளிலும் தங்குமிடங்கள் உண்டு. கௌஹாத்தி நகரிலிருந்து ஆரம்பித்து மீண்டும் கௌஹாத்தி நகரில் கொண்டு வந்து விடும்படி பயண ஏற்பாடுகளைச் செய்து கொள்வது நலம்.
(நன்றி: வெங்கட் நாகராஜ் / புது தில்லி)
No comments:
Post a Comment