பிட்சாடாணார்
இவரது வரலாறு பற்றி ஏற்கனவே நாம் அறிந்த ஒன்றுதான்... அரை நிர்வாண கோலத்துடன்,
குள்ள பூதம் ஒன்று பின்தொடர, திருவோடு கையிலேந்திய இறைவன் பிட்சைக்கு செல்கிறார்.. இவரது அழகில் மயங்கிய ரிஷிமாதர்கள் இறைவனை பின்தொடர்வார்கள்.. இக்காட்சி அனைத்து ஆலய கோஷ்டங்களிலும் சிற்பமாய் செதுக்கப்பட்டிருக்கும்..
அனைத்திற்கும் முன்னோடியாய் காஞ்சி கைலாசநாதர் ஆலய பிச்சாண்டவர் இருக்கிறார்..
தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அழிக்க ஈசன் எடுத்த வடிவம்தான் பிச்சாண்டர் வடிவம்..
வேள்விகள் பல செய்து, அபூர்வ சக்திகள் பல பெற்ற தாருகாவனத்து ரிஷிகளுக்கு அகம்பாவம் உச்சம் தொட்டது..
தங்களுக்கு மிஞ்சிய சக்தி இவ்வுலகில் இல்லை என்பதாக கர்வம் கொண்டனர்.. அகம்பாவத்தில்
ஆடத்தொடங்கினார்கள். அனைத்தையும் கட்டுபடுத்தும் சக்தி பெற்றவர்களாய் இறுமாப்பு கொண்டனர்..
பார்த்தார் பரமன்.. இவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டுமே ...
அதிரூப சுந்தரனாய், கட்டழகு கொண்ட ஆணழகனாய் ஒரு பிச்சைக்காரர் வடிவம் எடுத்தார்.. கையில் திருவோடு ஏந்தி தாருகாவனம் சென்றார். இவரது அழகில் மயங்கிய ரிஷிபத்தினிகள் தங்கள் சித்தம் மறந்து பிச்சாண்டாரை பின்தொடர்ந்தனர்..
பார்த்தீர்களா ரிஷிகளே.. உங்கள் பத்தினிகளையே உங்களால் கட்டுபடுத்த இயலவில்லையே..
ஒரு பிச்சை எடுப்பவரை பின் தொடர்ந்தார்களே..
நீங்களா உலகை கட்டுபடுத்துவது..?
ஆணவம் அகற்றுங்கள்.. உங்களையும் மிஞ்சிய சக்தி ஒன்றுள்ளது என்பதை உணருங்கள்..
இதுதான் பிச்சாண்டவர் நமக்கு உணர்த்தும் செய்தி.
இதைத்தான் நான்காம் திருமுறை. மாதரை மையல் செய்யும் நக்கரையுருவர் போலும் என்கிறது..
இந்த பிச்சாண்டர் வடிவத்தை அநேக கோவில்களில், பல வடிவங்களில் நாம் காணலாம்..
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், காஞ்சி கைலாசநாதர் ஆலய பிச்சாண்டரை தரிசிக்கலாம்..
பிச்சாண்டவராக வடிவம் எடுத்த ஈசனைப் பாருங்கள்...
மன்மதனையே மிஞ்சும் கட்டழகன் இவர்.. உருண்டு திரண்ட சதைபிடிப்புடன் விரிந்த மார்பு கொண்ட ஆணழகன்.. உதட்டில் எதையோ உணர்த்தும் சிரிப்பு.
ஒரு காலை மடித்து இருக்கும் ஒரு ஒய்யாரத் தோற்றம்.. அவரது பாதங்களிலோ அழகான பாதரட்சைகள்.. இன்றைய லேட்டஸ்ட் மாடலை அன்றைக்கே செதுக்கிவிட்டார்களோ..? விரிந்த தோள்களில் ஒரு தண்டம்.. அதில் தொங்கி கொண்டிருக்கும் திருவோடு.. உச்சிமுதல் பாதம் வரை மயக்கும் அழகு பொங்கி வழிகிறது..
இந்த மொத்த அழகில் சித்தம் கலைந்து பித்துப்பிடித்த ரிஷிபத்தினி ஒருவர், அவரது காலடியில் அமர்ந்து கை கூப்பி வணங்குகிறார்..
இதை கண்ட அந்த ரிஷியோ கடும் கோபம் கொண்டு இறைவனைத் தாக்க கை ஓங்குகிறார்..
ஈசனின் முகத்திலோ, ஒரு சாதித்த புன்னகை ..
அவர் நினைத்த காரியம் நடந்தது...
இந்தச் சிற்பம் .. முழுதும் வேலைபாடு அமைந்த சிம்மத்தூண்கள் புடைசூழ அலங்கார மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
பல்லவச் சிற்பியின் இந்தப் படைப்பை கண்ட நாங்களும் மதிமயங்கி நின்றிருந்தோம்..
No comments:
Post a Comment