திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் பகுதி −22
தன்னுடைய குற்றங்களையும் குறைகளையும் தொடர்ந்து கூறிக்கொண்டு,
தனக்குக் குணபூர்த்தி இல்லாததை எண்ணி விசாரமுற்று நிற்கும் திருவல்லிக்கேணி அம்மையாரைச் சற்றே சமாதானம் செய்ய எண்ணியவராய் மாமுனிகள் தற்பொழுது திருவாய் மலர்ந்தார்..
"அம்மணி... ஒன்னோட வருத்தம் எனக்குப் புரியறது...
ஆனா... நீ கொஞ்சம் யோசிச்சுப் பாரு..
எந்த ஒரு சமயத்துலயுமேவா நீ ஒன்கிட்ட தப்பா நடந்துண்டவாள மன்னிச்சதே இல்ல?.."
.... பெரிய ஜீயரின் இந்தக் கேள்வி அம்மையாரை மேலும் சங்கடப்படுத்த, அவள் சற்றும் தாமதியாமல்,
"ஸ்வாமி... அடியேன் என்ன,
#அவனுக்காக அழுதேனோ ஆண்டாளைப் போலே?.."
என்று ஒரு கேள்வியை மாமுனிகளிடம் எழுப்பினாள்...
மாமுனிகள் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டே,
"அம்மணி.... எங்கே.....அந்த வ்ருத்தாந்தத்தையும் ஒன்னோட வாயால சொல்லு பார்க்கலாம்... " என்று நியமித்தார்..
அதற்காகவே காத்திருந்தது போல், திருவல்லிக்கேணி அம்மையாரும் தனது விளக்கத்தைத் தொடர்ந்தாள்..
"பராசர பட்டர் ஶ்ரீரங்கத்துல வைஷ்ணவ பீடத்த நிர்வாஹம் பண்ணிண்டு இருந்த சமயத்துல,
"வீரஸுந்தர ப்ரம்மராயன்"னு ஒரு தனவந்தன் பெருமாள் திருமதிலைச் செப்பனிட்டுக் கட்டும் பொழுது,
"பிள்ளைப் பிள்ளையாழ்வான்"கற ஒரு பாகவோத்தமரோட திருமாளிகை அந்த மதிலுக்குக் குறுக்க வந்தது..
அந்த மாளிகைய வீரஸுந்தரன் இடிக்கணும்னு ஆரம்பிச்சபோது, பட்டர் அவன அழைச்சு,
"முன்னே திருமங்கையாழ்வார் மதிலைக் கட்டச்சே, குறுக்கே இருந்த தொண்டரடிப்பொடியாழ்வாரோட நந்தவனத்த அழிக்கக் கூடாதுன்னு, அத விட்டுட்டு, மதிலக் கட்டினார்..
அதேமாதிரி, நீரும் பிள்ளைப் பிள்ளையாழ்வானோட திருமாளிகைய இடிக்காம, மதிலக் கட்டலாமே.."னு நல்ல வார்த்தை சொன்னார்..
ஆனா, பட்டரோட வார்த்தைய அந்த வீரஸுந்தரன் ஏத்துக்காம, பிள்ளையாழ்வாரோட திருமாளிகைய இடிச்சு, திருக்கோயில் மதிலக் கட்டினான்...
அத்தோட நில்லாம பட்டர் மேல விரோதம் பாராட்ட ஆரம்பிச்சு, அவரக் கோயில்லயே இருக்கவொட்டாம பண்ணினான்..
பட்டரும் அவனோட உபத்திரவங்கள் தாங்காம, கோயிலயும், நம்பெருமாளையும் விட்டுப் பிரிஞ்சு வந்து, திருக்கோட்டியூர்ல வாசம் பண்ணிண்டு இருந்தார்..
பெருமாள பிரிஞ்சு வந்ததுல பட்டரோட ஆரோக்யமும் க்ஷீணமடைய ஆரம்பிச்சது..
இதுக்கிடையில, வீரஸுந்தரன் ஒருநாள் மரணமடைய, பட்டர்மேல அபிமானம் கொண்டவா எல்லாரும் திரண்டு வந்து, வெகு உற்சாகமா வீரஸுந்தரன் மரணித்ததைப் பட்டர்கிட்ட சொல்லி ஆனந்தப் பட்டுண்டுருந்தா..
அப்போ பட்டரோட இருந்த அவரோட திருத்தாயாரான ஆண்டாள், அடக்க முடியாத துக்கத்துடன், திருமாளிகைக்குள்ள போய் கதவைச் சாத்திண்டு உரத்த குரல்ல, "ஹோ"னு அழுதா...
அங்க கூடியிருந்த ஶ்ரீவைஷ்ணவாளுக்கெல்லாம் ஆண்டாளோட இந்த செய்கையப் பார்த்து ரொம்ப ஆச்சர்யமாயிடுத்து..
"அம்மையே!.. அந்தப் பாபி இறந்ததுக்கு, தாம் இப்படி அழுவானேன்?.." என்று ஆண்டாளைப் பார்த்து அவர்கள் கேட்க,
அதற்கு ஆண்டாள்,
"பாகவதர்களே!.. வீரஸுந்தரன் கூரத்தாழ்வானின் நேர் சிஷ்யனாய் இருந்து,ஆசார்யபுத்ரனான பட்டரைத் திண்டாடப் பண்ணினான்..
அதுவுமில்லாம, இப்போ அற்பாயுஸுல மரணமும் அடைஞ்சிருக்கான்..
அவனுக்கு நிச்சயமா நற்கதிக்கு ப்ராப்தமே இல்ல!..
ஆழ்வான் திருவடி சம்பந்தம் உள்ள ஒரு ஆத்மாவுக்கு, இப்படி ஒரு துர்கதி நேர்ந்தத நெனச்சா என்னோட வயிறு எறியறது!..
என்னோட துக்கம் ஒங்களுக்கெல்லாம் புரியாது"னு அருளிச் செய்தாள்...
"...இப்படி குற்றம் செஞ்சவா கிட்டயும் தயைக்காட்டற மனசு ஆழ்வானோட சம்பந்தம் உடையவாளுக்குத்தான் இருக்குமோ?.."னு அந்த ஶ்ரீவைஷ்ணவர்கள்லாம் ஆச்சரியிச்சு, ஆண்டாள வெகுவா கொண்டாடி, அவளோட திருவடி பணிஞ்சா...
இந்த மாதிரி ஸ்வபாவம் அடியேனுக்கு எங்கயாவது வருமோ ஸ்வாமி?..
அடியேன் பக்கல் குற்றம் சொல்றவாள சகிச்சுக்கற பக்குவமும் அடியேனுக்கு இல்ல..
அவாள க்ஷமிக்கற பக்குவமும் அடியேனுக்கு இல்லயே.."
.....என்று கூறி, மாமுனிகளை ஆதங்கத்தோடு ஏறிட்டாள் திருவல்லிக்கேணி அம்மையார்..
(வளரும்..)
No comments:
Post a Comment