போவோமா பொன்னுலகம் .......
நண்பரொருவர் பாரத தரிசனம் குழு பதிவுகள் அதை மங்கையர்மலர் /ந்ருஸிம்ஹப்ரியா ரேஞ்சுக்குக் கொண்டு சென்றுள்ளது என்று சமீபத்தில் கிண்டலடித்த போது அதில் ஒரு சில மாற்றங்களை செய்யலாம் என்று தோன்றியது.
இந்தப் பதிவில் முகநூல் நண்பர்கள் கண்ட பல்வேறு இடங்களைப் பற்றி (உள்நாடு / வெளிநாடு) எழுதலாம் என்று ஆசை.
நம் குழு அன்பர்கள் இதையும் ரசிப்பார்கள் என்றே நம்புகிறேன்.
# 01: சொர்க்க பூமி: ஹாங்காங்
என்னுடைய ஹாங்காங் பயணம் மிகவும் தற்செயலாக நடந்த ஒன்று. மிகவும் குறுகிய காலத்தில் திட்டமிட்டு, ஹாங்காங் சென்றபோது, நான் சந்தித்த முதல் பிரச்சினை ; சாப்பாடு.
ஹாங்காங்கில் சீனர்கள் அதிகம் என்பதால் அவர்கள் எதையும் தின்பார்கள். இதைப் பற்றி என் நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்லும் ஜோக். "Hong Kong people are on seafood diet. Whatever they see, they eat" என்பதுதான் அது.
ஹாங்காங் சரித்திரம் ஒருவாறு சிக்கலானது. ஆங்கிலேயர் வசம் 1841-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை (156 வருடங்கள்) ஒரு பிரிட்டிஷ் காலனியாக ஹாங்காங் விளங்கியது. அதனால் இங்கே ஆங்கிலம் பேசுபவர்கள் நிறைய என்றாலும், அதைத் தவிர வேறு உபயோகம் எதுவுமில்லை.
1997-ம் ஆண்டு சீனா வசம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டாலும் இன்னுமொரு 50 வருடங்களுக்கு (அதாவது 2047-ம் ஆண்டு வரை) அதற்கு தன்னாட்சி (Autonomy) வேண்டும் என்று சீன அரசிடம் ஒப்பந்தம் செய்துகொண்டது பிரிட்டிஷ் அரசு. இதன்படி, ஹாங்காங் சீனாவோடு இணைந்தது என்றாலும் அதனுடைய தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து நடக்க வேண்டும் (One Country ; Two Systems) என்பதால் ஹாங்காங் கரன்ஸியான டாலரில் (அந்த ஊர் கரன்ஸி) ஆரம்பித்து எல்லாமே தனிப்பட்டே இருக்கிண்டின்றன.
ஹாங்காங்கில் போய் இறங்கிய அன்று ரொட்டி, பழங்கள், ஆம்லெட் என்று சமாளித்துவிட்டேன். இரண்டாம் நாள் காலை ஊர் சுற்றக் கிளம்பும் முன், நான் தங்கியிருந்த ஹோட்டலில் கான்டினென்டல் ப்ரேக்ஃபாஸ்ட் இருந்ததால், மறுபடியும் ரொட்டி, கார்ன் ஃப்ளேக்ஸ், பழங்கள், கேக் போன்ற இனிப்புகள் என்று ஒப்பேற்றிவிட்டு, ஒரு சில இடங்களைப் பார்த்துவிட்டு, மதிய சாப்பாடு TST என்று சுருக்கமாக வழங்கப்படும், சிம் ஷா ஸ்யூய் (Tsim Sha Tsui) - இல் இருந்த இஸ்கான் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று, கிருஷ்ணரை தரிசித்துவிட்டு, அங்கே தரப்படும் அன்னதானத்தை உண்டு ஒரு வழியாக சமாளித்தேன்.
ஹாங்காங்கில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன, அவற்றில் முக்கியமானவை:
• ஹாங்காங் டிஸ்னிலாண்ட் - அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் இருக்கும் டிஸ்னிலாண்டின் உடன்பிறப்பு இது. தவறவிடாமல் பார்க்க வேண்டிய ஒன்று. குழந்தைகளும் மனதளவில் இன்னும் குழந்தைகளாக இருப்பவர்களும் தவறாமல் பார்க்க்க வேண்டிய இடம்.
• விக்டோரியா பீக் - டிராமில் சென்று பார்க்கவேண்டிய அருமையான இடம்.
• டை மோ ஷான் நீர்வீழ்ச்சி - நம் குற்றாலத்திற்கு முன் இதெல்லாம் ஜுஜுபி என்றாலும், குற்றாலமே செல்லாத அபாக்கியசாலிகளுக்கு இங்கு வரும்போது போக வேண்டிய இடம்.
• ரிபல்ஸ் பே (Repels Bay) பீச் - கூட்டம் அதிகமில்லாத அழகான கடற்கரை
• 10,000 புத்தாஸ் மோனஸ்ட்ரீ (10,000 Buddhas Monastery) உட்கார்ந்து கொண்டு, நின்று கொண்டு, படுத்துக்கொண்டு பல்வேறு விதமான 10,000 புத்தர் சிலைகள் - பார்க்கவேண்டிய நல்ல இடம்தான் ஆனால், 400 படிகள் எற வேண்டும். எனவே ஜாக்கிரதை.
• லண்டாவ் புத்தர் (Lantau Buddha) - Lantau என்ற தீவில் Po Lin என்ற பௌத்த சரணாலயம் (Buddhist Monastery) உள்ளது. அங்கே உள்ள Big Buddha என்ற இந்த புத்தர் சிலை 36 மீட்டர் (கிட்டத்தட்ட 112 அடி உயரம்) உள்ளது. குறிப்பிட்ட தூரம் (சுமார் 6 கிலோமீட்டர்) இங்கு கோண்டோலா என்றழைக்கப்படும் கேபிள் காரில் பயணிப்பதும் த்ரில்லான அனுபவம்தான்.
• மேடம் துஸ்ஸாட் (Madame Tussaud) மெழுகு கண்காட்சி - லண்டனில் ஆரம்பித்து - ப்ரியா நாவலில் நம் சுஜாதா விவரிப்பார் - இப்போது பல ஊர்களில் வந்துவிட்டது.
• டெம்பிள் ஸ்ட்ரீட் இரவு மார்கெட் - நம்மூர் ரங்கநாதன் தெரு போல அள்ளிக்கோ அள்ளிக்கோ என்று கூச்சல் போடும் மலிவு விலை கடைத் தெரு. பொழுது போகாவிட்டால் போகலாம்.
• காஸ்வே பே (Causeway Bay) - விலை அதிகமான பொருட்கள் நிறைந்த, சும்மா சுற்றிப்பார்க்கலாம் வகை மால்கள் நிறைந்த அந்த ஊரின் கமர்ஷியல் தெரு.
• Hong Kong Observation Wheel - சிங்கப்பூரின் Singapore Flyer போல ஒரு சுழலும் பொழுதுபோக்கு.
மூன்றாம் நாள் காலை படகு மூலம் அங்கிருந்து கிளம்பி 82 கிமீ தூரத்தில் உள்ள மகாவ்வை (Macau) ஒரு மணி நேரத்தில் அடைந்
டர்போ ஜெட்ஸ் (Turbo Jets) எனப்படும் Hydrofoil வகை அதிநவீன படகுகள் வளைந்து செல்லும் அழகே தனி.
ஹாங்காங் போலவே கிட்டத்தட்ட மக்காவ்வும் (Macau) இது 1557-ம் ஆண்டு முதல் போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்து 1999-ம் ஆண்டு (442 வருடங்கள்) சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதை மதிக்கும் விதமாக, இங்கே இன்னமும் மக்காவ் கரன்ஸி பட்டாக்கா (Pataca -MOP) என்றே வழங்கப்படுகிறது.இங்கே சீனாவின் அதிகாரபூர்வ கரன்ஸியான யுவான் தவிர இரண்டாவது அதிகாரபூர்வ கரன்ஸியாக பட்டாக்கா விளங்குகிறது.
மக்காவ் சூதாட்டக்காரர்களின் சொர்க்க பூமி. இதை லாஸ்வேகாஸ் ஆஃப் தி ஈஸ்ட் என்று சொல்கிறார்கள். இதனால் இங்கு எல்லாமே விலை அதிகமாகவே உள்ளது. சூதாட்டத்தில் ஆர்வமில்லாதவர்கள் பார்ப்பதற்கும் அதிக இடங்கள் இல்லை. சீன அரசு புத்திசாலித்தனமாக இதை பெரும் சூதாட்டக் களமாக மாற்றி, நல்ல வருமானம் வர வழிவகை செய்து விட்டது.
சீனர்கள் சுற்றுலா பயணிகளை ஏமாற்றுவதில் டாக்டரேட் வாங்கியவர்கள். எனவே, இங்கு செல்லும்போது எச்சரிக்கை மிக அவசியம்.
(தன்றி ராம் ஶ்ரீதர்)
No comments:
Post a Comment